செம்மண்ணில் ஓர் பழமுதிர்சோலை - இளைப்பாறிய அதிபர் கந்தையா சண்முகம்

 

ஆசிரியர் கந்தையா சண்முகம் அவர்களின் இளமைக்கால தோற்றம் 

"எங்கள் குப்பிழான் செம்மண்ணின் சிறப்புப் பற்றி கனடாவில் வசித்து 2014 இல் அமரத்துவம்  அடைந்த பேரன்புக்குரிய இளைப்பாறிய அதிபர் கந்தையா சண்முகம் ஐயா அவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவர்களது குடும்பத்தின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்வதில் நாம் பெருமை கொள்கிறோம்."

-Kuppilan.org இணையம் 

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் பல குறிச்சிகளைத் தன்னகத்தடக்கியுள்ள ஓர் ஊர் குப்பிழான். கிராம மட்டத்திற்கு வராத காலம். அயல் கிராமங்கள் தத்தமக்குள் எம் ஊரைச் சேர்த்துக் கொண்டன. தாய் இல்லாப்பிள்ளை மாதிரித் தள்ளாடியது எங்கள் ஊர். ஏழாலை, குரும்பசிட்டி, கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் என்னும் நாலு தாய்மார் இருந்தும் ஒரு தாயாலும் சுகம் இல்லை. நாலு தாய்க்கு ஒரு குழந்தை என்ற ஆச்சரியம் வையகத்தில் எங்குமே கேட்டதில்லை. காலம் ஓடிக்கொண்டே போயிற்று.

'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' என்று நம் மக்கள் பெரும் கோஷம் எழுப்பினர். எமக்கென்று ஊர் வேண்டும் பேர் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டங்கள் கிளம்பின. அந்நாள் எம்.பி மறைந்த தலைவர் தந்தை செல்வா மற்றும் தருமலிங்கம் எம்.பி இவர்களின் தலையீட்டினாலும் பெருமக்களின் தீவிர முயற்சியாலும் 'குப்பிழான்' ஒரு தனிக்கிராமம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.

எங்கள் கிராமம் செம்மண் செறிந்த பூமி. மண்ணின் சிறப்பை வளங்காட்டும் என்பது எங்கள் கிராமத்திற்குப் பொருத்தமானது. கொடுக்க கொடுக்கக் குறையாத செல்வம் போல இறைக்க இறைக்க வற்றாத கிணற்று நீர் ஊற்று. நல்ல தண்ணீர். பெரும்பாலானோர் விவசாயிகள். விடாமுயற்சி உடையவர்கள். திடமானவர்கள். கிராமத்தைப் பொன்விளையும் பூமியாக்க மண்ணை வெட்டிக் கல்லை உடைத்துப் படாதபாடெல்லாம் படுவர். மா, பலா, வாழை, தோடை, எலுமிச்சை, பப்பாசி எனப் பல்வகைக் கனிதரும் மரங்களை உண்டாக்குவர். அவை பூத்துக் காய்த்துப் பழங்களுடன் பார்த்தவர் பழமுதிர் சோலை இதுதானோ என மயங்குவர். தித்திப்பான பழங்களை சுவைக்க விரும்புவோர் நண்ணுவர். வருகின்றவர்களை வாழையும் தென்னையும் கமுகும் இலைகளை நீட்டி ஆடி அசைந்து வரவேற்கும். 

விவசாயி காலையில் தோட்டம் சென்று மாலை வரை தங்கிடுவான். முற்றிய தினையும் சாமையும் குரக்கனும் கதிர்க் குலைகளை நீட்டி தங்கக் கம்பளம் விரித்தாற் போல் சாய்ந்து படுத்துறங்கும் காட்சியைப் பார்க்கப் பார்க்கப் பசியையே அவன் மறந்து போவான். அது மட்டுமல்ல பயற்றங்கொடிகள் தோரணம் போட்டது போலக் காய்களை அசைக்க மிளகாய்ச்செடிகள் பச்சைக் கம்பளம் விரித்தாற் போற் பரந்து விரிந்து வெள்ளைச் சிவப்பு வெளிச்சம் போல் பழங்களைத் தூக்க சோடினைக்குத் தூக்கிய பலூன்கள் போலக் கன்றுகள் முட்டிக்காய்களைத் தாங்கக் கண்ட கமக்காரன் தன்னையே மறந்து விடுவான்.

குப்பிழான் ஒரு தனிக்கிராமம் ஆனதும் பொன் மயமான நான்கு கிராமங்களுக்கு மத்தியில் வைரக்கல் பதித்தாற் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பார்த்த இடமெல்லாம் ஆலயங்கள். ஆலய மணியின் மங்கல ஓசை மக்கள் மனதின் மாசினை மாற்றும். கற்கரைக் கற்பக விநாயகன் ஆதீனகர்த்தா தருமவள்ளல் அமரர் கா.நல்லையா அவர்களின் தலைமையில் பூசைகள் திருவிழாக்கள் மிக மிகச் சிறப்பாக அங்கு நடைபெறும். ஆரா அன்பால் விநாயகப் பெருமானிற் கொண்ட காதலால் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம், விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம், விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் என எல்லாவற்றிற்கும் இறைவன் பெயரையே சூட்டினர். முற்றுமுழுதாகச் சைவ மக்களே வாழுகின்றனர். சைவ மணம் கமழும் குப்பிழான் கிராமத்தில் சைவ சித்தாந்த சிகாமணி காசிவாசி செந்திநாதையா அவதரித்தார். 

சைவம் என்றால் பெரும் சுகத்தை அளிப்பது (சிவம்). சித்தம் என்றால் நினைவில் உழலும் விகற்பங்கள். அந்தம் என்றால் முடிபு. அவர் பெயரைச் சொல்லச் சொல்லச் சமயம் வளரும், தமிழ் வளரும். நாவலர் பெருமானுக்குப் பின்னர் சைவ சித்தாந்தப் பேரொளியாய் விளங்கியவர் செந்திநாதையாவே. அவர் மறைவுக்குப் பின்னர் அவருக்கு நிகராவார் இன்னும் இலர். ஐயா அவர்களின் ஞாபகார்த்தமாகச் சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான் முன்றலில் உருவச்சிலை வைக்கப்பட்டு தினமும் ஆராதனைகள் நிகழுகின்றன. அது மட்டும் அல்ல. மகான் செந்திநாதையா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. அத்தருணம் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.சு.வித்தியானந்தன் அவர்கள் மங்கள விளக்கேற்றி திறந்து வைத்து பேருரை நிகழ்த்தினார். மகானின் திருவுருவப் படம் யாழ். பல்கலைக்கழக மண்டபத்தில் நிலைகொள்ள பெருமுயற்சி செய்தவர் கவிஞர் க.கணேசலிங்கம் அவர்களே. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் இதுவாகும். அந்நாளில் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய அதிபராக இருந்து தலைமை தாங்கியது நான் செய்த புண்ணியமே.

மகான் பிறந்த ஊரில் சரவணைச் சுவாமிகள் சமாதி அடைந்தது ஒரு பெரும் அற்புதம். அம்மன் கோயிலில் அடியவனாகி அஞ்ஞானம் அகற்றி இந்திரியங்களை அடக்கி மெய்ஞ்ஞானத்தை வேண்டித் தவக்கோலம் பூண்ட பெருஞானி அவர். "அருள் ஜோதி தெய்வம் எமையாண்டு கொண்ட தெய்வம்" என்ற நாம ஜபம் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன. சமாதி அடைந்த இடத்தில் குடிலாக இருந்த அம்மன் ஆலயம் பெருங்கோவிலாக வளர்ந்தது. சமாதி கொண்ட கோயில்களே மூர்த்திகரம் கூடியவை. சிதம்பரம் பழனி கோவில்கள் இன்றும் சிறப்புடன் விளங்குவதற்குக் காரணம் சமாதிகளே.

திரு கந்தையா சண்முகம் அவர்கள் வாழ்ந்த வீட்டின் இன்றைய தோற்றம்

நாம் அறியாத காலத்தில், இருந்து எமது வீட்டுக்கு அண்மையில் அரசும், வேம்பும், பின்னிப் பிணைந்த அடிமரத்தின் கீழே அமர்ந்திருந்தாள் காளிதேவி. எங்கள் குலதெய்வம். அவள் பெயரைச் சொல்ல மயிர்கூச்செறியும். காளி ஆச்சி நம்பினோரை வாழவைப்பாள். தீராத வினைகளைத் தீர்த்து வைப்பாள். காளித்தாய் ஆலயத்தில் தொண்டு செய்து வந்தாள் ஓர் இல்லத்தரசி. நாளடைவில் வாய் பேசும் காளியாக உருவகம் செய்தனர் இல்லத்தரசி இராசம்மாவைப் பக்தர்கள். அந்த அம்மாவிடம் அபார அற்புதங்களை காளிதேவி கொடுத்து விட்டாளோ என்னவோ புரியாத புதிராக இருக்கிறது. கை தொட்ட நோய் நொடிகள் பறந்து விடும் என்பர்.

ஆலயங்களில் சைவத்திருமுறைகளில் இருந்து எடுத்த பக்திப் பாடல்களைக் கோர்த்துப் பேசும் சிவ.மகாலிங்கம் அவர்களின் சொற்பொழிவுகளே தமிழ் இனத்தின் சஞ்சலத்தைத் தீர்க்கும் சஞ்சீவியாக அமைகின்றன. பக்திப் பாடல்களை இசைவல்லார் வித்துவான் குப்பிழான் செல்லத்துரை பாட பக்திப் பரவசம் கொண்டு துள்ளாத மனமும் துள்ளும். கரையாத மனமும் கரையும். இது வெறும் புகழ்ச்சி அல்ல. அவருக்குப் பின் பக்திப் பாடல்களை இன்றும் பாடி வருபவர் கதிர் சுந்தரலிங்கம். அவரும் எமது கிராமத்தவரே.

நாடகத்துறையில் பல நாடகங்களை நடித்தும் மேடையேற்றியும் யாழ் குடாநாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் திரு.வேலையன் திரு.பீதாம்பரன் அவர்களே. நாடகம் எங்கள் நாட்டுச் சொத்து. பட்டிமன்றங்களிலும் கவியரங்கங்களிலும் பங்கு கொண்டு பல பாராட்டுக்களைப் பெற்றவர்கள் கவிஞர் பொறியியலாளர் திரு.கணேசலிங்கம் அவர்களும் ஆசிரியரும் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான திரு.ஐ.சண்முகலிங்கம் அவர்களும் ஆவர்.

எங்கள் கிராமத்திற்கு மாத்திரம் அல்ல தமிழ் மக்களுக்கே உரித்தானவர்கள் திரு.தம்பு தருமலிங்கம், திரு.அ.மகாலிங்கம் A.O போன்றோர். இன்றும் அவர்கள் தமிழரின் கண்ணீரை இன்னல்களைத் துடைப்பது கண்கூடு.

இறுதியாக மாணிக்கவாசகப் பெருமான் இறைவன் ஆட்கொண்ட போதும் குருந்த மரத்தடியில் கண்ட போதும் இவர் என்ன என்று அவர் பெருமை அறியாதவனாக இருந்தேன் என்று வெதும்புவது போல - "மழக்கையிலங்க பொற்கிண்ணம் என்றலால் அரியை என்றுன்னைக் கருதுகின்றிலேன்" - (பொருள்) குழந்தையின் கையில் கிடைத்த பொன் கிண்ணம் போல உன்னை எளிமையாக நினைத்து உன் அருமையை நினைய மாட்டேன் என்ப நானும் இத்துணைப் பெருமையுள்ள கிராமத்தையும் அறிவுடையோருடன் கூடிய கூட்டத்தையும் கைவிட்டு வந்த என் சின்னப் பிள்ளைத்தனத்தை என்னென்பது. கனடா எம்மை ஏற்று வாழ வழிகாட்டி நிம்மதியைத் தந்ததே என்ற நன்றியைக் கூடச் சிந்திக்க முடியவில்லை. பொன்னும் பொருளும் வேண்டாம். நான்கு முழத் துண்டும் படுக்க நல்ல பாயும் நாலு பேரும் போதும். விடிவுக்காய் இறைவனை வேண்டுவோம். விடிந்ததும் எம் பதி நோக்கி விரைவோம்.

குப்பிழான் கந்தையா சண்முகம்

இளைப்பாறிய அதிபர்


கந்தையா சண்முகம் ஐயா அவர்களின் கல்விப்பயணம் மிகச் சுருக்கமாக -

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேசத்தின் Dicwela S.T School இல் ஆசிரியராக 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது கல்விப்பயணம். மலையகத்தின் பல்வேறு பாடசாலைகளையும் தொடர்ந்து பின் வடக்கின் பல பாடசாலைகளிலும் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி பின் ஏழாலை, குப்பிழான் பாடசாலைகளையும் தொடர்ந்து இறுதியாக 1978 இல் Punnalaikkadduvan North AMS பாடசாலையில் அதிபராக பணியாற்றி மொத்தமாக 32 ஆண்டுகளாக கல்விப்பணியில் அரும்பெரும் சேவையாற்றி ஓய்வுபெற்றார். 




Post a Comment

Previous Post Next Post