குப்பிழானில் பிறந்த எழுத்தாளர் காண்டீபனின் அமெரிக்க விருந்தாளி நூல் அறிமுக விழா

 


எழுத்தாளர் தியா திரு. காண்டீபன் அவர்களின் அமெரிக்க விருந்தாளி நூல் அறிமுக விழா 16/3/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு 18/2 திருவடிநிழல், அம்மன் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெறும். 

தலைமை உரையினை சட்டத்தரணி சி.அ யோதிலிங்கம் நிகழ்த்துவார்.  நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளரும், கவிஞருமான தீபச்செல்வனும், விமர்சன உரைகளினை புலோலியூர் வேல்நந்தன், குலசிங்கம் வசீகரன் ஆகியோர் நிகழ்த்துவர். முதற்பிரதியினை நடமாடும் நூலகரான சண்முகலிங்கம் சஜீலன் பெற்றுக்கொள்வார். 


அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருக்கும் நூலாசிரியர் தியா திரு. காண்டீபன் அவர்கள் ஏற்புரையினை வழங்குவார். 

சுயாதீன ஊடகவியலாளரான சுகுணரஞ்சன் பிரஜீவன்ராம், தமிழ்த் தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் கிருஷ்ணன் அலெக்ஷன் ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளனர். 

இந்நிகழ்வுக்கு படைப்பாளிகள், வாசகர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

வெளியீட்டு அரங்கில் புத்தக விலை - 600 ரூபாய்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சனியன்று அமெரிக்க விருந்தாளி நூல் வெளியீடு 


குறித்த நூலின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை 15/3/2025 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

நூலாசிரியரைப் பற்றிய சிறு அறிமுகம் 

இராசையா காண்டீபன் 1978 ஆவது வருடம்  யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமனை - குப்பிழான் கிராமத்தில் இராசையா - இந்திராதேவிக்கு மகனாகப் பிறந்தார். யா/குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும். பின்னர் சாதாரண தர O/L கல்வியை யா/மட்டுவில் அ.மி.த.க பாடசாலையிலும் படித்தார். உயர்தரக் A/L கல்வியை யா/வயாவிளான் மத்திய கல்லூரியில் தொடங்கி பின்னர் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நிறைவு செய்தார்.

தனது பல்கலைக்கழக படிப்பின் முதலாம் ஆண்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலை முடித்து இளமாணிப் பட்டம் பெற்று 2005 ஆம் வருடம் வெளியேறினார். 



பின்னர் இந்தியா சென்று தமிழ்நாட்டிலும் பல படிப்புக்களை முடித்துள்ளார்.  தஞ்சாவூர் PRIST University பொன்னையா ராமயெயம் அறிவியல் தொழிநுட்பப் பல்கலைக் கழகத்தில் “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொடர்பாக ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றுள்ளார்.

பின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று பின் அமெரிக்காவின் புகழ் பெற்ற செயிண்ட் தோமஸ் பல்கலைக்கழகத்தில் (University of St. Thomas)  பொறியியல் முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். 

மேலும் 2001 - 2005 வரை குப்பிழான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய தலைவராகவும், விளையாட்டுக் கழக தலைவராகவும், 2005 - 2006 இல் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும்,  2003 - 2004 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் எழுத்தாளராகவும் (Editor) இருந்து சமூகப்பணி ஆற்றியுள்ளார். 

1999 - 2006 வரை தனியார் கல்வி நிறுவன ஆசிரியராகவும், 2006 இல் வவுனியா விபுலானந்தக் கல்லூரியின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பின் தமிழ்நாட்டின் சென்னையில் Web Designer & Graphic Designer ஆகவும் பணிபுரிந்துள்ளார். 

2006 இல் ஈழத்தில் தமிழ் இலக்கியம் தோற்றமும் தொடர்ச்சியும் என்ற புத்தகத்தையும், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர் கதைகள் எனப் பல ஆக்கங்களை     ஆர்.கே – குப்பிளான், தியா என்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவை ஈழத்தின் பல முன்னோடி நாளிதழ்கள், வாரமலர்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தன.

2021 இல் "எறிகணை" என்கிற நாவலும், 2023 இல் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தியாவின் பேனா பேசுகிறது… www.theyaa.com என்ற வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

நூலாசிரியர் தொடர்புகளுக்கு,

மின்னஞ்சல் - akshpoems@gmail.com 

Post a Comment

Previous Post Next Post