கிராமத்தின் கதைகள் 27 - மகான் காசிவாசி செந்திநாதையரின் சிலை உருவான வரலாறு


"காசிவாசி செந்திநாதையருக்கு குப்பிழான் கிராமத்தில் ஓர் சிலை வைத்தால் எப்படியிருக்கும்?"

இப்படியொரு எண்ணம் அந்த இரு கிராமத்து மைந்தர்களுக்கு மட்டும் திடீர் என அன்றொரு நாள் உருவாகியிருந்தது.

யார் அந்த இரு கிராமத்து மைந்தர்கள்? தொடர்ந்து படியுங்கள்.

அவர்கள் யார்? என்பதனை கதையின் முடிவில் அறிந்து கொள்ளலாம்..

 பொதுவாக எந்தவொரு பொதுப்பணிகளிலும், கூட்டம் கூடி தீர்மானம் எடுப்பது, தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான திட்டங்களினை சரியாக உருவாக்குவது, அதன் பின்பே அதனை நிறைவேற்ற களத்தில் இறங்குவது என ஓர் ஒழுங்கு முறைகள் இருக்கும்.

ஆனால் சும்மாய் சொல்லக்கூடாது. இவ் இருவரும் இப்படியான விடயங்களில் கொஞ்சம் மாறுபட்டவர்கள். வேகமானவர்கள். தன்னிச்சையாக களத்தில் இறங்கியவர்கள்.

சிலை வைக்கும் விடயத்தில் அதனை நிரூபித்தும் காட்டியவர்கள்.

இருவரும் களத்தில் இறங்கி வேகமாக செயல்பட தொடங்கிய பின்பே,மெல்ல மெல்ல ஏனைய  நம்மூர் உறவுகளையும் அரவணைத்து, செய்யத் தொடங்கியிருக்கும் திருப்பணி பற்றி கிராமத்தவர்களுக்கு அறிமுகம் செய்து, வெற்றிகரமாக குறுகிய காலத்தினுள் முடித்திருந்தார்கள்..

குறுக்கிடும் குழப்பவியளார்களையும் குறுக்கு கட்டைகள் போடாதளவுக்கு சாமர்த்தியமாக கையாண்டவர்கள்.

1983 ஆம் ஆண்டின் ஆரம்ப காலம்.

அந்த இனிய மாலை பொழுதில் இருவரும் சைக்கிள் ஒன்றில் கிளம்பி விட்டனர்.

எங்கே கிளம்பி சென்றார்கள்?

யாழ் நகருக்கு அருகில் நல்லூர் பகுதியில், கருங்கல்லில் சிலைகள் வடிக்கும் "சிற்ப கலைஞர்" சிவப்பிரகாசம் என ஒருவர் வசிக்கின்றார் என அறிந்து அவர் இல்லம் எங்கு உள்ளது என விசாரித்து,தேடி அவர்களின் பயணம் ஆரம்பித்து விட்டது.

"சிற்ப கலைஞர்" திரு.சிவப்பிரகாசம் அவர்கள் ஓவிய துறை ஆசிரியராக யாழ் மத்திய கல்லூரியில் பல வருடங்களாக பணியாற்றியவர் ஆவார்.

சிற்ப கலையினை மனமுவந்து திருப்பணியாக எடுத்து செய்பவர்,ஓவிய துறை ஆசிரியர், என்பவற்றுக்கு அப்பால் நற்பண்புகள் நிறைந்த ஓர் மாமனிதன் என்றும் அவரை சொல்லவேண்டும்.

பொதுவாக எவரும் தங்களின் கடின முயற்சியால்,பயிற்சியால் துறை சார்ந்த நிபுணர்களாக வரலாம். அப்படி வந்தவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம்..

ஆனால் சிற்பக்கலை துறை சார்ந்த நிபுணத்துவம் என்பது பிறப்போடு சேர்ந்த திருவருளின்  கொடையாகும். ஓர் அசைக்க முடியாத பாரிய கருங்கல்லை கொண்டு வந்து  நாளுக்கு நாள் இருந்து மெல்ல மெல்ல கவனமாக கலை ரசனையோடு செதுக்கி எடுத்து  நிஜமான ஓர் மானிடனின் தோற்றத்தில் உருவாக்கம் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்கள் கோடானு கோடியில் ஒருவராகவே இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரே திரு.சிவபிரகாசம் ஆசிரியர் ஆவார்.

 குப்பிழான் கிராமத்தில் இல்லறம் புகுந்த, யாழ்-மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.கமலாகரன் அவர்கள் கனடாவில் வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் (Monsoon Journal) "சிற்ப கலைஞர்" சிவப்பிரகாசம் நினைவாக  ஓர் நீண்ட சிறப்பு கட்டுரை ஒன்றினை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

1983 ஆம் ஆண்டு அரசின் இன அழிப்பு போராட்டங்களும், அதனை எதிர்த்து போராடும் புரட்சிகளும் துளிர் விட்டுக்கொண்டிருக்கும் நேரம். கொடிய இனக்கலவரமும் ஈழ தமிழர்களை ஆட்டி படைத்ததொரு துன்பவியல் காலமாகும்.

யாழ் நகர பகுதிகளில் பூட்டியிருக்கும் கேற்றுகளினையோ, கதவுகளினையோ முன் பின் தெரியாத முகங்களுக்கு திறப்பதற்கு எவரும் அச்சப்படும் ஒரு காலகட்டமாகும். 

:"சிவபிரகாசம் சேர்" . "சிவபிரகாசம் சேர்"

"ஒருக்கால் கேற்றினை திறக்கின்றீர்களா?"  "உங்களோடை ஒருக்கால் கதைக்க வேணும்"

"சிற்பக்கலை நிபுணர்" திரு.சிவப்பிரகாசம் ஆசிரியரின் திறக்கப்படாத கேற் வாசலிலிருந்து இவர்கள் இருவரும் பல நிமிடங்களாக நின்று கூப்பிடுகின்றனர்.

சத்தமாக கூப்பிடும் குரல் உள்ளே இருக்கும் அவர்களுக்கு கேட்டபோதும் யன்னலுக்கால் மறைந்து நின்று பார்க்கின்றார்களே தவிர கதவினை திறந்து எவரும் வெளியில் வருவதாக தெரியவில்லை..

இவர்கள் இருவரும் அங்கு சென்றது மாலை மங்கும் நேரம். அவை தவிர முகம் தெரியாத நபர்களை வீட்டு வளவு எல்லைக்குள் அனுமதிக்க எவரும் அஞ்சும் காலம். 

"சேர்" ---- --"நான் உங்களோட சென்றல் கொலியில் படிப்பித்த நடராஜா மாஸ்டரின் மருமகன் சார். ஒருக்கால் உங்களோட கதைக்கவேணும் சார்".

அவர்கள் இருவரில் ஒருவர் அந்த பெயரையும் உறவு முறையினையும் சொல்ல, கொஞ்சம் அச்சம் தளர்ந்த நிலையில் சிற்ப கலைஞர் வீட்டு கதவு, வளவு கேற்றினை திறந்துகொண்டு வெளியில் வந்தார்.

அவர்கள் இருவரின் ஆரம்ப முயற்சி திருவினையாக்கும் சைகை காட்டியது.

சிற்ப கலைஞர் சிலை உருவாக்கி கொடுப்பதற்கு ஒப்பு கொண்டு விட்டார். அவரது வீட்டோடு சேர்ந்திருந்த  சிற்ப கலை கூடத்துக்கு இவர்கள் இருவரையும் அழைத்து சென்று காட்டினார்.

வாய்மொழி ஆரம்ப ஒப்பந்தங்கள் மேலோட்டமாக பேசப்பட்டு விட்டது.

ஆனால் செலவு என்பது அதிகம். அதற்குரிய பணத்தினை  சேகரிப்பது, திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி முடிப்பது  என்பதும் அந்த காலங்களில் இவ் இருவரும் இருந்த நிலைமையில் சாதாரணமான விடயமல்ல. இன்றைய காலங்களில் இருப்பதுபோல் வெளிநாட்டு பண வசூல்களுக்கும் சந்தர்ப்பமில்லை. சில்லறை சில்லறையாகத்தான் அந்த காலங்களில் பணம் சேர்க்கலாம்.

சிற்ப கலைஞருக்கும், வேலையினை தொடங்குவதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் முற்பணம் கொடுக்கவேண்டும்.

குப்பிழான் கிராம மண்ணில் சிலையினை எங்கே வைப்பது ?

இது அடுத்த கேள்வி.

மகான் காசிவாசி  செந்திநாதையர் வட இந்தியாவில் உள்ள உத்தர காசியில் பல வருடங்கள் தவவாழ்வு வாழ்ந்திருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்த இடம், அவர்கள் சந்ததியினர் பூஜித்த ஆலயம் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயம். எனவே அந்த ஆலய முன்றலே சிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். 

அந்த நேரம் பெரிதும் எதிர்பார்த்திராத, மகிழ்வான விடயத்தினையும் குறிப்பிடாமல் இந்த கிராமத்தின் பழைய கதையினை இங்கு தொடரக்கூடாது.

தங்கள் குல தெய்வ ஆலய முன்றலில் மகான் காசிவாசி செந்திநாதையருக்கு சிலை வைப்பது என்பது சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தோடு சேர்ந்த கிராமத்தவர்கள் யாவருக்கும் மிகப் பெரிய ஆனந்தமயமான விடயமாக அந்த காலம் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

அவர்களில் பலர் நிதி உதவிகளை மனமுவந்து மகிழ்வுடன் வழங்கியதுடன் சிலர் பெரும் நிதியும் வழங்கியிருந்தார்கள். பெரும் நிதி வழங்கிய சிலர் திருப்பணியின் இறுதியில் நிதிப் பற்றாகுறை ஏற்பட்டால் எங்களுக்கு தெரிவியுங்கள். நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என உற்சாகம் வழங்கியவர்களும் உண்டு. 

சிறுக சிறுக இவர்கள் சேகரிக்கும் நிதியில் சிலை செதுக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 

நாளுக்கு நாள் ஓர் சிற்ப கலைஞனின் படைப்பில் எங்கள் கிராமத்தின் ஞானப் பெருந்தகை ஒருவரின் ஓர் உருவம் உருவாக்கப்பட்டு வருவதனை கிராமத்தின் இவ்விரு மைந்தர்களும் அடிக்கடி அவரது கலைக்கூடம் மிதி வண்டியில் சென்று பார்த்து கொள்வார்கள். வெளியூர்களில் வாழும் பல சைவ தமிழ் அறிஞர்களை சந்தித்து, காசிவாசி செந்திநாதையர் பற்றி அவர்களிடம் இருக்கும் தகவல்கள், நூல்களை பெற்று சேகரிப்பார்கள்.  

அறநெறி, சிவநெறி தவநெறி வாழ்ந்த எங்கள் கிராமத்தின் அறிஞர் தவ நிலையில் உட்கார்ந்திருக்கும் ஓர் அற்புதமான உருவ சிலை சில மாதங்களின் பின்பு அந்த வருட இறுதியில் உருவாக்கப்பட்டு விட்டது.

உருவ சிலை ஓன்று வைத்து, அதன் திறப்பு விழா ஓன்று விமர்சையாக செய்ய வேண்டுமானால் அவை தனி மனிதர்களால் செய்வதென்பது மரபுமுறைக்குள் இருப்பதில்லை. அதற்கு ஓர் பொது நிறுவனம் வேண்டும்.

உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

"குப்பிழான் - சைவ மகாசபை".

சும்மாய் சொல்லக்கூடாது. 

"சைவ மகா சபை" என்ற சங்கம் கிராமத்தில் ஆரம்பிப்பதிலும் ஒரு வேகம் காட்டப்பட்டது என்பதனை  எவரும் மறுக்க முடியாது. தொடங்கிய வேகத்தில் தொடர்ந்து, சங்கமும் காணாமல் போய் விட்டது என்பதும் காலத்தின் நிர்பந்தமாகும்.

இந்த கதையில் இடை செருகலாக ஒரு விடயத்தினை சொல்லிவிட்டு எடுக்கப்பட்ட விடயத்தினை தொடர்வோம்.


"காசிவாசி செந்திநாதையர் ஞாபகார்த்த சபை" 

என ஓர் அமைப்பு மின் பொறியிலாளர் திரு.க.கணேசலிங்கம் அவர்களின் முயற்சியால் ஏற்கனவே கிராமத்தில் ஆரம்பித்து அவை தொடர்பான சகல விழாக்களும் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தினை மையமாக வைத்து, அந்த ஆலயத்தில் நடைபெறுவது வழமையாகும். 

காசிவாசி செந்திநாதையர் பற்றிய அறிமுகங்கள், ஆவணங்கள், நூல்கள், பெருமைகள் யாவற்றினையும் தேடி ஆய்வு செய்து  கிரமத்துக்குள் மட்டுமல்ல வெளியுலகமெங்கும் அறிமுகம் செய்த முதன்மையானவர்களில் ஒருவர்   திரு.க.கணேசலிங்கம் அவர்களே ஆவர்.

1983 ஆம் ஆண்டு, வெகு விரைவாக சிலை வைப்பு பணிகள் நடந்த போது, தமது தொழில் நிமிர்த்தமாக அவர் தென் அரேபியாவில் நின்றபடியால் இந்த நிகழ்வுகளில் பங்குபற்ற முடியவில்லை.

திடீர் என வேகமாக ஆரம்பிக்கப்பட்ட, குப்பிழான் - சைவ மகா சபையின்  தலைவர் சட்டதரணி க.வைரவநாதன், செயலாளர் சிவ.மகாலிங்கம் என என சிலரை கொண்ட ஓர் நிர்வாகசபை  உருவாகி, சிலை திறப்பு விழாவுக்கு நாளும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ஆலய முன்றலில் சிலை அமைக்கப்படுவதற்குரிய பீடமும் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. 

உருவாக்கப்பட்ட சிலையினை எங்கள் கிராமத்துக்கு எடுத்து வரவேண்டும்.

திறப்பு விழாவுக்கு முதல் நாள் அதற்குரிய நாளாக நிர்ணயிக்கப்பட்டது.

மனோவின் லொறியில் சில இளைஞர்கள் குழு சென்று அதனை கவனமாக நம்மூருக்கு ஏற்றி கொண்டு வந்து, ஆலய முன்றலில் நிர்மாணிக்கப்பட்ட பீடத்தில் வைத்து விட்டனர்.

(இப்படியான சில பணிகளில் மனோவும் அவரது அன்னையும் வழங்கும் இலவச கைகொடுப்புகள் கிராமத்தில் பல சந்தர்ப்பங்களில் பெரும் உதவியாக இருந்துள்ளது என்பதனையும் மறுக்கக்கூடாது.) 

அந்த கருங்கல் சிலையின் பாரம் என்பது சொற்களால் வர்ணிக்க முடியாதது.

நம்மூர் வலிமை மிக்க வாலிப கூட்டங்கள் களத்தில் நின்று, கூட்டாக சேர்ந்து கரங்கள் கொடுத்து தூக்கியபடியால் தான் சாத்தியமாக்க முடிந்தது.

"சிற்ப கலைஞர்" திரு.சிவப்பிரகாசம் அவர்களும் சேர்ந்து வந்து, உள்ளூர் மேசன்மார் மற்றும் கிராமத்தவர்களுடன் சேர்ந்து அதனை ஆலய முன்றலில் உள்ள பீடத்தில் நிறுவும் பணியினை செய்து முடித்து விட்டனர்.

மறுநாள் சிலை திறப்பு விழா.

குப்பிழான்- சைவ மகாசபையின் தலைவர் சட்டத்தரணி க.வைரவநாதன் தலைமையில் அன்று மாலை நேரம் திறப்பு விழா இனிதே நடைபெறுகின்றது.

யாழ் பல்கலைக்கழக்தின் இந்துமத பீடத்தின் தலைவர் பேராசிரியர் கைலாசநாத குருக்கள் அவர்கள் சிலையினை திறந்து வைக்கின்றார். யாழ்ப்பாணத்தின் பல சைவ தமிழ் அறிஞர்கள் விழாவிற்கு சமூகம் அளித்திருந்தனர்.

"மில்க் வைற் சோப்" நிறுவனத்தின் தொழில் அதிபர் திரு.க.கனகராஜா அவர்களின் ஆதரவில், க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய மகான் காசிவாசி செந்திநாதையர் பற்றிய நூல் அந்த விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவர்களும் விழாவிற்கு வருகை தந்து பங்குபற்றியிருந்தனர்.


காசியில் பல வருடங்கள் தவவாழ்வு வாழ்ந்து, இன்றும் சைவ சித்தாந்தங்களில்  பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு பல அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு சைவ உலகமெங்கும் பெருமையுடன் போற்றப்படும் மகான் காசிவாசி செந்திநாதையரின்  உருவச்சிலை குப்பிழான் - சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய முன்றலில் கம்பீரமாக தென்படும் காட்சி, ஆலயத்துக்கு மட்டுமல்ல முழு கிராமத்துக்கும் பெருமை சேர்க்கின்றது.

இந்த சிலை வைப்பினால் அகில இந்தியா உட்பட சைவ தமிழ் உலகில் பிரசித்திபெற்ற மகான் காசிவாசி செந்திநாதையரின் பிறப்பிடம் எங்கள் குப்பிழான் மண்ணில் இந்த ஆலயத்தினை சார்ந்த இடம் என்ற உரிமையும் வரலாற்றில் நிரந்தரமாக பதியப்படுகின்றது.

இங்கு இன்னொரு தமாஷ் செய்தி.

"ஏழாலை" என்னும் பெயரில், அந்த ஊரின் சிறப்புகளை குறிப்பிட்டு 1977 ஆம் ஆண்டு ஓர் நூல் வெளி வந்திருந்தது. அதன் ஆசிரியர் "ஆத்மஜோதி" திரு.நா.முத்தையா ஆவார்.

"ஏழாலை மண்ணில் பிறந்த மகான், காசிவாசி செந்திநாதையர்" என படத்துடன் ஓர் சிறப்பு கட்டுரை அந்த நூலில் வெளி வந்திருந்தது.

குப்பிழான் தரப்பிலிருந்து அதற்கு அந்த நேரம் ஆட்சேபனைகள், விமர்சனங்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு அவர்களிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?

"1964 ஆம் ஆண்டுக்கு முன்பு ஏழாலைக்குள் "குப்பிழான்" என்பது ஓர் குறிச்சியாக இருந்தது. எனவே அப்படி குறிப்பிட்டதில் தவறில்லை."  இதுதான் அவர்களின் பதில்.

ஆனால் குப்பிழான் தனிக் கிராமமாக உருவாக்கப்பட்டு,13 வருடங்களின் பின்பு,1977 ஆம் ஆண்டு இந்நூல் முதன் முதலில் பிரபல்யமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

எப்படி நியாயப்படுத்துகின்றார்கள் என பாருங்கள்?

ஆத்மீக இணையத்தள கட்டுரை பிரிவிலும் இதே மாதிரி ஏழாலையினை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து அறிஞர் காசிவாசி செந்திநாதையர் என ஓர் பதிவு இருந்தது. உடனடியாக அதனை நாம் அவர்களுக்கு முறைப்பாடாக தெரிவித்து அண்மையில் மாற்றிக் கொண்டதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். 

சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய நிர்வாக சபையினர், ஆலயத்தோடு சேர்ந்த பக்தர்கள் மற்றும் கிராமத்தவர்களால் இன்று ஆலயத்தின் முன்னால் இருக்கும் சிலை புனிதமாக பராமரித்து பூஜிக்கப்படுகின்றது.  

சரி. இனி விடயத்துக்கு வருவோம்.

இச்சிலை வைக்கும் பணியினை களத்தில் இறங்கிய பின்பு அதி வேகமாக திட்டமிட்டு செயல்படுத்திய அவ்விரு கிராமத்து மைந்தர்களும் யார் என்பதனையும் குறிப்பிட வேண்டுமல்லவா?

(1)  திருவாளர். சிவசுப்பிரமணியம் - முத்துலிங்கம் (கனடாவில் வசிப்பவர்)

(2)  திருவாளர். கணபதி - பாலகிருஷ்ணன் (டென்மார்க்கில் வசிப்பவர்) 

இவர்கள் இருவரும் களத்தில் வேகமாக இறங்கியபடியால் சிலை வைக்கும் திருப்பணி சிறப்பாக முடிந்தது.

அதேநேரம், சொக்கர்வளவு பிள்ளையார் கோயிலோடு சேர்ந்த பல பக்தர்களின் நிதி வழங்கல்கள், கிராமத்து ஏனையவர்களின் ஆதரவுகள், கைகொடுப்புகள், அனுசரணைகள், ஒத்துழைப்புகள்  இல்லையேல் அவர்களால் வெற்றியும் கண்டிருக்க முடியாது என்பதனையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

என்னவோ? கிராமத்து மண்ணில் நல்ல பணிகள் செய்வோரினை பாராட்டுவோம்.

குப்பிழான் றஞ்சன்- 

Post a Comment

Previous Post Next Post