"1958 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஈழத் தமிழர்களுக்கு ஓர் மாநில அதிகாரப் பகிர்வு என தீர்வுத் திட்டம் ஒன்று வழங்கும் தருணத்தில் அதனைக் குழப்புவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து கண்டி வரை புத்த பிக்குகளை ஓன்று திரட்டி பாத யாத்திரை நடாத்தி, சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிராக இனத்துவேசத்தினை பிரச்சாரம் செய்து வளர்த்து, இறுதியில் அந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த விடாமல் குழப்பியவர் இன்று தாங்கள் போற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா."
ஐக்கிய தேசிய கட்சியும், அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் தமிழினத்துக்கு எதிரான கேடு கெட்ட இனத்துவேசிகள். கேடு கெட்ட இன துரோகிகள். அவர்களுக்கு நம்ம கிராமத்து மக்கள் எப்படி ஆதரவு வழங்குவது?"
1977 ஆம் ஆண்டில் ஓர் நாள்.
குப்பிழான் - விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்றலில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார விழாவில், பலமான அதிர்வொலியில் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களினை நோக்கி குரல் எழுப்பி கிராமத்தின் துடிப்பான இளைஞர் ஒருவர் பகிரங்கமாக கேள்வி கேட்கின்றார்.
அவர் தான் "Banker" திரு சண்முகம்- கணேசலிங்கம்"
(முன்னொரு காலம் சுன்னாகம் மக்கள் வங்கியில் உயர் அதிகாரியாக பதவி வகித்ததால் "Banker" என்ற ஒரு சொல் பதத்தினுள் அழைக்கப்படுபவராக அவரது பெயர் மாறி விட்டது.)
அவரின் நெற்றிக்கு நேரே பலமான குரலில் ஓங்கி அடிக்கும் கேள்விக்கு அந்த இரவு நேரம் கரகோஷங்களுடன் கிராமத்தின் இளைஞர்கள் பட்டாளம் விசில் அடித்து ஆதரவு வழங்கி கொண்டிருந்தனர்.
தொடர்ந்து அந்த பிரச்சார விழா கொஞ்ச நேரம் ஸ்தம்பிக்கின்றது.
ஒலி வாங்கியினை கையில் பிடித்து, விழாவிற்கு தலைமை வகித்து நடாத்தும் கட்சியின் பிரதிநிதியாகவுள்ள நம்மூரவர் ஏதோ வழிகளில் கொந்தளிக்கும் மக்கள் கூட்டங்களை சமாளிக்க முயல்கின்றார்.
("Banker" கணேசலிங்கம் என்பவர் தமிழரசு கட்சி / தமிழர் விடுதலை கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளன். எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர். அவரது தந்தையார் திரு.சண்முகம் என்பவர் அந்த காலங்களில் குப்பிழான் கிராமமும் இணைந்த மல்லாகம் கிராம சபை தேர்தலில் மக்கள் செல்வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட ஓர் பிரதிநிதியாக கிராமசபையில் பதவி வகித்தவர்.)
குப்பிழான் கிராமமும் உள்ளடங்கிய மானிப்பாய் தொகுதியில் 1977 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் ஏற்கனவே தமிழர் விடுதலை கூட்டணியின் எம்.பி யாக மிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறப்போகும் திரு.வி.தர்மலிங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக களமிறங்க பட்டுள்ளவர் திரு.ஆர் .எஸ்.அலோஷியஸ் என்பவர்.
(திரு.ஆர் .எஸ்.அலோஷியஸ் மானிப்பாய் / நவாலி ஊரினை பிறப்பிடமாக கொண்டவர் என்பது ஒரு செய்தி).
அன்றைய தினம் வாசிகசாலைக்கு முன்பாக நடந்த பிரச்சார கூட்டத்தில் அவரோடு காங்கேசன்துறைத் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பளராக போட்டியிடப்போகும் திரு.சிவராஜா என்பவரும் பங்கு பற்றியிருந்தார். ஆனால் எந்தவொரு தேர்தலிலும் அவர் போட்டியிட்டதாக தெரியவில்லை.
(திரு.சிவராஜா என்பவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பதற்காக பிரவேசித்தவர் என்பது ஒரு செய்தி. ஆனால் பின்னைய காலங்களில் அநேகமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு முன் தொடர்ந்து ஊதிக் கொண்டிருக்கும் சிகரெட்டுடன் நின்று பொலிஸ் நிலைய வழக்குகள் முறைப்பாடுகளினை தாம் கையாள்வதாக சொல்லிக்கொண்டு காட்சி தருவதனை காணமுடிந்தது.)
வேற்று ஊரினை சேர்ந்த இவ்விரு வேட்பாளர்கள் இருவருக்கும் குப்பிழான் கிராமத்தின் அரசியல் அதிர்வொலிகள் எப்படி இருக்கும் என்ற புரிந்துணர்வுகள் அந்த இடத்தில் தெளிவாகியிருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது.
இங்கு தொடர்ந்து நடந்த பிரதிபலிப்பு என்ன தெரியுமா?
பிரச்சார கூட்டத்தில் கேட்கப்பட்ட இந்த கேள்வியில், பொங்கி எழுந்த ஆக்கிரோஷத்தின் மத்தியில் நியாயமான பதில் சொல்ல முடியாது திரு.சிவராஜாவின் கண்களின் விழிகள் பிதுங்குகின்றது. திரு.ஆர் .எஸ் அலோஷியஸ் காரணமில்லாமல் சற்று அச்சத்தில் அங்குமிங்கும் சுழல்கின்றார்.
"பழைய வரலாறுகளினை விட்டிடுவோம். இனி மேல் காலங்களில் அப்படி ஒன்றும் நடக்காது. அப்படி நடந்தால் நாங்கள் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு விலகி விடுவோம்"
என இறுதியாக சொல்லி அந்த நேரம் சமாளித்து விட்டனர்.
வீறு கொண்டெழும் கிராமத்து இளைஞர்களின் குழப்ப நிலைமைகளினால் அன்றைய அவர்களின் பிரச்சார கூட்டம் இறுதி முடிவு வரை முறையாக தொடரமுடியவில்லை..
ஆனால் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இன ஒடுக்குமுறை எங்கே எல்லாம் சென்றது என்பது பற்றி இங்கு சொல்லத் தேவையில்லாததொரு வரலாற்று பாடம்.
இறுதியாக 1977 ஆம் ஆண்டு நடந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் திரு,தர்மலிங்கம் அவர்கள் 27,550 வாக்குகளினை பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் திரு ஆர்.எஸ் .அலோஷியஸ் அவர்கள் தொகுதி முழுவதுமாக 3300 வாக்குகளினை பெற்று இருந்தார். குப்பிழான் கிராமத்திலிருந்து எத்தனை வாக்குகள் அவருக்கு கிடைத்தது என்ற தகவலைப் பெறமுடியவில்லை.
ஆனால் மூன்று வாக்குகளுக்கு குறையாது நம்ம கிராமத்திலிருந்து அவருக்கு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.
அது என்ன மூன்று வாக்குகள்?
சத்தியமாக அதன் மர்மம் எது என்பதனை சொல்ல கூடாது.
இதனை படிப்பவர்கள் தாமாக புரிந்து கொள்ள வேண்டும்.
சரி இனி விடயத்துக்கு வருவோம்.
1977 ஆம் ஆண்டு.
அகில இலங்கை பாராளுமன்ற தேர்தல் வரப்போகின்றது.
இன்றைய காலங்களில் "ஐக்கிய தேசிய மக்கள் சக்தி" என்ற கட்சியும் "திரு.அனுர குமார திஸாநாயக்க" என்ற பெயரும் எவ்வளவு தூரம் வெற்றி கொடி நாட்டப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளதோ அதே மாதிரியே 1977 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைவர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் அதி உச்ச செல்வாக்குகளுடன் அகில இலங்கை முழுவதும் காட்சி தந்தனர். இறுதியில் அதன்படியே வெற்றிவாகையும் சூடி, நாட்டையே கொஞ்ச காலங்கள் "சிங்கள இனவாதம்" என்ற சூலத்தினால் ஆட்டி படைத்தார்கள் என்பது வரலாற்று செய்தி.
ஐக்கிய தேசிய கட்சியினர், 1977 ஆம் ஆண்டு தேர்தல் காலங்களில் தமிழர்கள் பகுதிகளில் உள்ள தேர்தல் தொகுதிகளிலும் வழமை போல் வேட்பாளர்களினை நியமித்தார்கள். அந்த கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளினை உருவாக்க முயற்சித்து தங்கள் பிரச்சாரங்களினை ஆரம்பிக்க தொடங்கியிருந்தனர்.
வீறு கொண்டெழும் தமிழ் இன உணர்வாளர்களின் ஓர் கோட்டையாக மிளிரும் நம்ம கிராமத்தினுள்ளும் கிராமத்தில் வசிக்கும் மும்மூர்த்திகள் என மூவர் ஊடாக உள்ளே கால் வைக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிக்கின்றனர். அந்த மும்மூர்த்திகளுமே தலைவர், செயலாளர், பொருளாளர் என தங்களின் மூன்று பதவிகளையும் ஐக்கிய தேசிய கட்சியின் குப்பிழான் கிளை என்ற அமைப்பினுள் தெரிவு செய்துகொண்டனர். அதற்கு மேல் அங்கத்தவர்கள் என எவரும் இருந்ததாக பகிரங்கத்துக்கு காண்பிக்கப்படவில்லை.
ஆனால் கிராமத்தில் எந்த இடத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் கிளை அலுவலகங்கள் என எவையும் திறக்கப்படவுமில்லை. கட்சியின் பெயர் பலகை என்ற பதாகைகள் என எவையும் வைக்கப்படவுமில்லை. அப்படியெல்லாம் செய்யாமல் விட்டது அவர்களின் பெருந்தன்மை என சொல்லவேண்டும்.
ஏற்கனவே சிங்கள இனவாத கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நம்ம குப்பிழான் கிராமத்தினுள் உட்புகுந்து தடம்புரண்ட சம்பவங்கள் இன்னொரு தமாஷ் வரலாற்று நிகழ்வுகள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தடம் பதிப்புகளால் ஏற்பட்ட தீச்சுவாலைகள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக ஏறி இறங்கிய நிகழ்வுகள், கல்லெறிகள், மோதல்கள், கொந்தளிப்புகள் என பிரளயங்கள் எல்லாம் கிராமத்தினுள் தடம் பிரண்டு முடித்து, இப்போது புதிதாக ஐக்கிய தேசிய கட்சி கிராமத்தின் மும்மூர்த்திகளூடாக தடம் பதித்து, பிரள வந்துள்ளது என்பது கிராமத்தவர்கள் நாவில் அந்த நேரம் உதிரும் திரு வாக்காகும்.
தமிழின உணர்வுகளை அரவணைத்துக் கொண்டு இருப்பதனை விட அரசாளப் போகின்றவர்களுடன் சேர்ந்து, நாமும் அரச தொழில்கள், பதவிகளில் உட்புகுந்து கிராமத்துக்கும் பல நன்மைகள் செய்யலாம் என்ற நோக்கமே இக்கிராமத்தின் மூவருக்கும் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்தக் காலங்களில் அரச தொழில் வாய்ப்புகள் கிடைக்காதா? என எல்லோரும் ஏங்கித் தவித்ததொரு காலமாகும்.
ஆனால் இன்றைய காலங்களிலும் அரசோடு ஒட்டியிருந்து நேரடியாக அவர்களின் கட்சிகளிலும், முகவர்களாகவும் எம்மண்ணில் வாக்கு கேட்பவர்கள் சொல்வதும் அன்று அவர்கள் சொன்ன "அரச தொழில்கள், பதவிகளில் உட்புகுந்து கிராமத்துக்கும் பல நன்மைகள் செய்யலாம்" போன்ற அதே வசனங்களைத் தான். ஆனால் கடைசியில் நடந்தது என்னவென்றால் அரசோடு ஒட்டியிருந்தவர்கள் தாங்களும் தங்களின் குடும்பமும் சுகபோக வாழ்க்கையை பெற்றதே ஒழிய வேறொன்றுமில்லை.
பின்னைய காலங்களில் சர்வதேசம் எல்லாம் பறந்து தொழில் வாய்ப்புகளை பெற்று இன்று கொடி கட்டி பறப்போம் என எவரும் சிந்தித்து தெரியாத காலமாகும்.
அது தவிர ஒரு ஜனநாயக நாட்டில் அவரவருக்குள்ள இறைமைகள், உரிமைகளினை எவரும் தடை செய்யவும் முடியாது. அத்தகைய இறைமைகள் (Legal Sovereignty) அடிப்படை மனித உரிமைகள் (Fundermental rights) என்ற சட்ட மூலங்கள் எல்லாம் என்ன தலைவிதியோ தெரியாது. குப்பிழான் மண்ணில் அந்த காலங்களில் வேகாது.
ஆனால் அரசாளும் கட்சிகளோடு சேர்ந்து அவர்களோ அல்லது கிராமமோ ஏதாவது நன்மைகள், சலுகைகளினை என்றாவது பெற்றார்களோ? என்பது புரியாததொரு புதிர்.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் வீறு கொண்டு ஆட்சியினை கைப்பற்றியது.
ஆனால் நம்ம குப்பிழான் கிராமத்தில் உருவாக முயற்சித்த அந்த கட்சியின் கிளை என்பதின் அடிச்சுவடும் தெரியாமல் எப்படி மறைந்து போயிருந்தது என்பது இப்போதும் மர்மமமாகவே உள்ளது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment