சற்று நகைச்சுவை ரசனைக்காக கிராமத்தில் நடந்த ஒரு பழைய சின்ன கதை சொல்லப் போகின்றேன்.
கதை சொல்வதற்கு முன்பு, சொல்லப் போகும் கதையின் கருப்பொருளை மேலோட்டமாக சொல்லி விட்டு கதைக்கு வருகிறேன்.
இலங்கையில் அரச நிர்வாகங்களில் உள்ள தொழில்களில் இருந்த நம்மூரவர்கள் சிலர் தாம் செய்யும் தப்புகள், தவறுகள் காரணமாக மேலதிகாரிகளிடம் பிடிபடும் நிலைமைகள் வரும்போது தப்பிக்கொண்ட தந்திரோபாய நிகழ்வுகள், ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை வழங்கி சமாளித்து முன்கூட்டியே யாக்கிரதையாக நின்று எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருந்து கொள்ளும் சம்பவங்களின் நினைவுகளினை பகிரும்போது அதில் கண்ட நகைச்சுவை என்பது மறக்கமுடியாத ரசனையாகவே என்றும் இருக்கும்.
1965 -1971 ஆம் ஆண்டு காலங்களின் நிகழ்வுகளினை அடிப்படையாக வைத்து அதில் ஒன்றுதான் இன்று இங்கு இப்போது சொல்லப்போகும் ஒரு பழைய கதையாகும்.
தொடர்ந்து படியுங்கள்.
நம்ம ஊர் பாடசாலை.
குப்பிழான் - விக்கினேஸ்வரா வித்தியாசாலை.
(இப்போது அது விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் )
திடீர் என்று அந்த பாடசாலைக்கு இன்ஸ்பெக்டர் வந்து இறங்குவார். அவர் எப்போது எந்த நேரம் வருவார் என்பது தலைமையாசிரியர் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் எவருக்கும் தெரியாததொரு திகில் நிகழ்வாகும்.
"இன்ஸ்பெக்டர்" என அந்த காலங்களில் சொல்லப்படும் வார்த்தை கல்வி திணைக்களத்திலிருந்து ஒவ்வொரு பாடசாலையின் செயல்பாடுகளையும் பரிசோதித்து கண்காணிக்க வரும் கல்வி பரிசோதகரையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
கல்வி பரிசோதகர் அந்த காலங்களில் தமது காரில் தான் வருவார். பாடசாலை கேற்றினை கடந்து அவரது கார் பாடசாலை உள்ளே திரும்பிய அடுத்த நிமிடமே பாடசாலை முழுவதும் ஓர் குண்டூசி விழுந்தாலே கேட்குமளவுக்கு நிசப்தத்தில் அமைதியாகிவிடும்.
"இன்ஸ்பெக்டர் வந்தால் சத்தம் போடக்கூடாது. ஓடி திரிந்து குழப்படி ஒன்றும் செய்யக்கூடாது. எல்லாரும் நல்ல பிள்ளைகளாக அவரவர் வகுப்புகளில் இருந்திட வேணும்"
என அடிக்கடி பாடசாலை தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லி சொல்லி அந்த போதனைகள் என்பது மாணவர்களை திகிலுடன் அடக்கி வைக்கும் மந்திர உபதேசங்களாகும்.அதன் காரண காரிய தொடர்புகளை என்னவென்று புரிந்து கொள்ளத் தெரியாது, கிராமத்தின் எல்லையினை கடந்தறிந்து தெரியாத மாணவர்களும் ஏதோ அந்த கணம் பயத்தோடு அடங்கி அமைதியாகி விடுவார்கள்.
சகல ஆசிரியர்களும் வழமையாக அடுத்த வகுப்பில் நிற்கும் இன்னொரு ஆசிரியருடன் போய் நின்று கதைகள் அளக்கும் நிலைமைக்கு போகாமல் கடமை உணர்வோடு நிற்கும் ஆசிரியர்களாக காட்டிக்கொண்டு அந்த நேரம் மாணவர்களுக்கு முன்னால் வகுப்பில் நிற்பார்கள். மாணவர்களும் அந்த நேரம் புத்தகங்களினை திறந்து வைத்திருந்து படிப்பில் மூழ்குவது போல் இருப்பார்கள்.
"உஷ். சத்தம் போடக்கூடாது. இன்ஸ்பெக்டர் நிற்கிறார்"
இந்த வார்த்தை ஒவ்வொரு ஆசிரியரின் வாய்களிலிருந்தும் அந்த நேரம் மெதுவான குரலில் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். எல்லா மாணவர்களும் இன்ஸ்பெக்டர் பாடசாலையினை விட்டு போகும்வரை பெட்டி பாம்பு போல் அடங்கியிருப்பார்கள்.
தலைமையாசிரியர் மட்டும் இன்ஸ்பெக்டரை வரவேற்று தமது அலுவலகத்துக்கு பயபக்தியுடன் அழைத்து செல்வார். அந்த காலங்களில் தலைமையாசிரியரின் அலுவலகம் என்பது நம்மூர் பாடசாலையில் பிரதான மண்டபத்தின் விழா மேடையே அங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தலைமையாசிரியர் தமது ஆசனத்தினை அவருக்கு வழங்கி விட்டு மேலதிகாரிக்கு முன்னால் அடங்கி நிற்கும் முறையில் நின்று அவரின் பரிசோதனைகளுக்கு உதவுவார்.
மாணவர்களின் எண்ணிக்கைகள், அறிக்கைகள், பெறுபேறுகளின் குறிப்பேடுகள், ஒவ்வொரு ஆசிரியர்களின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கைகள், கற்பித்தல் முறைகளின் தயாரிப்புகள் என கல்வி திணைக்கள ஒழுங்கு நிரல்களில் சொல்லப்படும் பரிசோதனைகள் எல்லாம் நடக்கும். வகுப்புகள் ஒவ்வொன்றினையும் மேலோட்டமாக சுற்றி பார்ப்பார். தலைமையாசிரியர் அவருக்கு அருகில் நின்று ஒத்தாசை வழங்கிக்கொண்டிருப்பார். ஏதாவது தவறுகள்,குறைபாடுகள், முறைப்பாடுகள் என இருந்தால் அவற்றினை குறிப்பு எடுத்து கல்வித் திணைக்களத்தின் கவனத்துக்கு எடுத்து செல்வார்.
இவை எல்லாம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி,பாடசாலைகளினை நிர்வகிக்கும் இலங்கை அரசின் கல்வி திணைக்களத்தின் வழமையான செயல்பாடாகும். எப்போதும் எந்த தொழிலில் இருப்பவர்களும் மேலதிகாரிகளை எதிர்கொள்ளும் போது இப்படியான நிகழ்வுகள் வழமையாக நடக்கும் நிகழ்வுகள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.
சரி. இனிதான் இங்கு சொல்ல வந்த கதை என்ன? என்பதற்கு வரப் போகின்றேன்.
நாம் ஊரிலிருந்து வடக்கு புன்னாலைக்கட்டுவன் நோக்கி போனால் நாச்சிமார் கோவிலடி. அந்த கோயில் அமைந்த கல் ஒழுங்கை ஊடாகப் போனால் 5 ஆம் வகுப்பு வரை நடைபெறும் ஓர் சிறு பாடசாலை. அந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் அங்கு கல்வி கற்பார்கள். பாடசாலை பற்றிய நிறைவு, குறைவுகளை எடுத்தியம்பும் அளவுக்கு பரிபக்குவநிலையில் அந்த பகுதி பெற்றோர்கள் எவரும் அந்த காலத்தில் இருந்ததாக தெரியவில்லை. அரச கல்வி திணைக்களத்தின் மேற்பார்வைகளும் அங்கு பெரிதாக இல்லை.
செய்யும் ஆசிரிய தொழிலை அவரவர் செய்கின்றாரோ? செய்யவில்லையா? என கேள்வி கேட்க, கண்காணிக்க என எவருமில்லாதொரு சிறு பாடசாலை.
"அப்பை பாடசாலை" என குறிப்பிடப்படும் அந்த பாடசாலையின் அந்த நேர தலைமையாசிரியரும் நம்மூரவர் ஆவர். உதவி ஆசிரியைகள் என அங்கு கற்பித்த சிலரும் நம்மூரவர்கள்.
அன்றொரு நாள்.
சுமார் பகல் 11 மணியளவில் திடீர் என்று கல்வி திணைக்களத்தின் கல்வி பரிசோதகர் அங்கு வந்திட்டார்.
தலைமையாசிரியர் எங்கே? என்றால் அவரை அங்கு காணவேயில்லை. அதாவது பாடசாலைக்கு இன்னும் அவர் வந்து சேரவில்லை.
அந்த தலைமையாசிரியர் எப்போதும் காலதாமதமாகவே பள்ளிக்கூடம் வந்து வந்து சேரும் அவரது வழமையான சுபாவம் பாரதூரமான தவறாகவும் அங்கு ஒருவருக்கும் தோன்றுவதில்லை.
காலை 8.30 மணிக்கு தொடங்கும் பாடசாலையினை அந்த நேரம் வந்து சேரும் உதவி ஆசிரியர்களான பவளம் டீச்சர், நீலா டீச்சர் போன்றோர் தலைமையாசிரியர் அந்த நேரம் இல்லையாயினும் ஏதோ வகுப்புகளை தொடங்கி அந்த நேரங்களில் இயக்கிக் கொண்டிருப்பார்கள்.
"தலைமையாசிரியர் இன்று ஏதோ அவசரமாக லீவு எடுத்திருக்க வேணும்"
என்று சாட்டு சொல்லி சமாளித்துக் கொண்டு கல்வி பரிசோதகரின் பரிசோதனைகளுக்கு எப்படியோ அந்த நேரம் நின்ற இவ் ஆசிரியைகள் ஏதோ வழியில் ஒத்தாசைகள் வழங்கி கொண்டிருக்கும் நேரம்--------------
விபூதி குறியிட்டு அழகான ஆசிரியருக்குரிய வேட்டி, நஷனல் அணிந்து சுதந்திரமான முறையில் அன்னநடை போட்டு பாடசாலை மண்டபத்தினுள் காலை 11 மணி கடந்த பின்பு பிரவேசிக்கின்றார் தலைமையாசிரியர்.
வழமைபோல் காலதாமதமாக தலைமையாசிரியர் பாடசாலைக்கு வந்து இன்று கையும் மெய்யுமாக பிடிபட போகின்றராரே என்ற கலக்கத்தில் கண் விழிகள் பிதுங்கஅங்கு நின்ற உதவி ஆசிரியர்கள்.
"தலையை காட்டாதே. அவசர லீவு எடுத்ததாக இருக்கட்டும். திரும்பிப் போ"
என தூரத்தில் வரும் தலைமையாசிரியருக்கு இரகசியமாக மற்ற ஆசிரியர்கள் கண்களாலும் சைகைகளாலும் தெரிவித்தும் அவர் அதனை புரிந்துகொள்ளாமல் புலன்களை எங்கேயோ சுழன்றடிக்க விட்டபடி பாடசாலைக்குள் பிரவேசிக்கின்றார்.
உள்ளே நுழைந்தவர் அந்த கணம் நிமிர்ந்து பார்த்தால் அங்கு பாடசாலையில் கல்வி பரிசோதகர். தப்பிக்கவே முடியாது. அங்கு நிற்கும் கல்வி பரிசோதகரிடம் காலதாமதமாக வந்து கையும் மெய்யுமாக பிடிபட்டுவிட்டார்.
"ஐயா"
அவர் மிக வேகமாக தொடங்கி விட்டார்.
"இண்டைக்கு நீங்கள் நேரே வந்தது நல்லாய் போச்சுது. ஏனெண்டால் நான் பள்ளிக்கூடத்துக்கு நேரம் போச்சென்று அவசரமாய் வந்து கொண்டிருக்க உந்த பொன்னம்பிள்ளையின் குடும்பங்கள், கந்தப்பிள்ளையின் ஆட்கள் என கொஞ்ச கூட்டம் சேர்ந்து என்னை நகரவிடாது மறிச்சு ஒரே முறைப்பாடு"
"ஐயோ கடவுளே. என்னை விடுங்கோட அப்பனவை.
பள்ளிக்கூடத்துக்கு நேரம் போச்சென்று நானும் மன்றாடி பார்த்தேன்"
"அவை என்னெண்டால் அஞ்சாம் வகுப்பு வரை இருக்கின்ற இந்த அப்பை பள்ளிக்கூடத்தையும், மற்ற பள்ளிக்கூடத்தையும் ஒன்றிணைத்து பத்தாம் வகுப்பு வரை நடாத்த வேணுமாம்"
"மேல் படிப்புக்கு தங்கடை பிள்ளையள் பஸ் எடுத்து பயணம் செய்யமுடியதாம்"
"விஞ்ஞான பாடத்துக்கு தரமான வாத்தியார் இல்லையென்று இன்னொரு தொல்லை"
மக்கள் திரள் கொண்ட மறியல் போராட்டத்திலிருந்து விடுதலையான கைதி போல் களைச்சு களைச்சு கதையினை மிக வேகமாக ஆரம்பித்து தொடர்கின்றார் அந்த அப்பை பள்ளிக்கூடத்தின் அன்றைய தலைமையாசிரியர்.
அவர் வேறு யாருமல்ல.
நம்ம ஊர் சந்திக்கு அருகில் இருக்கும் சுப்பிரமணிய வாத்தியார்.
பாடசாலையினுள் புகுந்த தலைமையாசிரியர், எதிர்பாராமல் அங்கு வந்து நின்ற கல்வி திணைக்களத்தின் பரிசோதகரை நேருக்கு நேரே எதிர்கொண்டதும் தாம் மாட்டுப்படாமல் இருக்க முன் தயாரிப்பு என எதுவுமில்லாத நாடக பாணியில் அமைந்த தமது மிக நடிப்பாற்றல் நிறைந்த கதை வசனங்களினை பிரேக் பிடிக்காது தொடர்கின்றார்.
அந்த மனிதனுக்கு இப்படியான சிக்கல்களில் மாட்டுப்படும் போது இதே மாதிரியான ராஜதந்திர நடிப்புகளால் தப்புவது எப்படி என்பது கைவந்த கலை என அவர் வயதினை ஒத்த ஏனைய ஆசிரியர்கள் என்றும் சொல்லி சிரித்து ரசிப்பார்கள்.
கல்வி பரிசோதகரும் அவரது முறைப்பாடுகளையும், கருத்துகளையும் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கின்றார். எப்படியோ கிராமத்து பொது மக்களின் கோரிக்கைகளினை கல்வி திணைக்களத்துக்கு எடுத்து செல்கின்றேன் என உறுதி மொழியும் வழங்குகின்றார்.
கல்வி பரிசோதகர் தமது வேலையினை முடித்து விட்டு சென்று விட்டார்.
தலைமை வாத்தியாரும் சிறு ஆபத்திலிருந்து தப்பி விட்டார்.
அந்த ராஜதந்திர நடிப்பினை நேரே பார்த்த நம்மூர் ஆசிரியைகள் கொஞ்சக் காலமாக அந்த சம்பவத்தினை ஊரவர்களோடு பரிமாறி நகைச்சுவையோடு ரசிப்பதை நிறுத்தியதாக தெரியவில்லை.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment