அளவெட்டி அருணோதயாக் கல்லூரி விளையாட்டு மைதானம் |
அன்றொரு நாள்.
1977 ஆம் ஆண்டின் மாலை பொழுதில் ஒரு நாள்..
குப்பிழான் - விக்கினேஸ்வரா விளையாட்டு கழக வீரர்கள் குப்பிழான் சந்தியிலிருந்து உதைபந்தாட்ட விளையாட்டுப்போட்டி ஒன்றில் பங்குபற்றுவதற்காக கிளம்புகின்றனர். கூடவே ரசிகர்கள், ஆதரவாளர்கள் என கிராமத்தின் ஆண்கள் பட்டாளங்கள் வழமை போல் சேர்ந்து போக ஆயத்தமாகின்றனர்.
மழுவரின் அச்சாம்பியின் லொறி நிரம்பிய கிராமத்து ஆண்கள் கூட்டங்கள்.
அதனை தொடர்ந்து ஏராளமான கிராமத்து இளைஞர்கள் சைக்கிள்களில் மைதானத்தினை நோக்கி அதி உச்ச ஆர்வத்தோடு பிரயாணிக்கின்றனர்.
இப்படியான உதைபந்தாட்ட போட்டிகள் பொதுவாக ஏனைய ஊர்களின் விளையாட்டு மைதானங்கள் அல்லது ஏதாவது கல்லூரி மைதானங்களில் நடைபெறுவது வழமையாகும். உதைபந்தாட்டப் போட்டி நடக்கும் அன்றைய மாலைப் பொழுதுகளில் பெரும்பான்மையான குப்பிழான் கிராமத்து ஆண் வர்க்கங்கள் எப்போதும் உதைபந்தாட்டத்தினை பார்த்து ரசிக்க அந்த மைதானத்துக்கு போகாமல் இருக்கமாட்டார்கள்.
அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மைதானத்தில் உதைபந்தாட்டப் போட்டி அன்றைய தினம் நடைபெறப் போகின்றது.
காலம் காலமாக உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கும், அதனை ரசிப்பதற்கும் மட்டுமே கிராமத்தின் படை திரண்டு போகும்.
வெற்றியோ? தோல்வியோ? அதனை சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொண்டு மாலை மங்கி, இருட்டு தொடங்கும் நேரம் சகலரும் ஊருக்கு திரும்பி வந்து விடுவார்கள். அவை வழமையாக நடக்கும் ரசனைகள் மிகுந்த நிகழ்வாகும். .
ஆனால் அன்றைய நாள் என்ன நடந்தது என்பது தெரியுமா?
அது மிகப்பெரிய திகில் நிறைந்த நிகழ்வு.
பாரிய சண்டை ஒன்றுக்கு தயாராக கட்டைகள், கம்பிகள், கத்திகள் என கொஞ்சம் அந்த லொறிக்குள் இரகசியமாக ஏற்றப்படுகின்றது.
அங்கு செல்வது விளையாடுவதற்கும், அதனை பார்த்து ரசிப்பதற்குமல்ல. ஒரு போருக்கான தயார் நிலை என்பது எல்லோருக்கும் அந்த நேரம் புரியாமலில்லை.
ஏன் இந்த வழமைக்கு மாறான ஓர் நிகழ்வு ?
இப்படியொரு ஆச்சரியமான வியப்புக்குரிய கேள்வி இதனை படிப்பவர்களுக்கு எழலாம்.
இனிதான் கதையினை தொடரப் போகின்றேன்.
தொடர்ந்து படியுங்கள்.
குரும்பசிட்டி - உதயதாரகை விளையாட்டுக் கழகம் ஒவ்வொரு வருடமும் பல ஊர்களில் உள்ள விளையாட்டு கழகங்களினை ஒன்றிணைத்து உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை பல காலமாக வருடம் தோறும் நடாத்தி வருவது வழமையாகும். அவர்களது உதைபந்தாட்ட விளையாட்டு சுற்று போட்டியில் குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டு கழக வீரர்கள் வசாவிளான் விளையாட்டுக் கழகம் ஒன்றுடன் அன்றைய மாலை நேரம் போட்டி போடவுள்ளனர்.
ஆனால் மாறுபட்ட கோலம் ஓன்று அங்கு அரங்கேறப் போகின்றது.
என்ன பிரளயம் நடக்குமோ தெரியாது என்ற கேள்விக்குறி எழுந்த போதும் அதில் சேர்ந்து போகாமல் இப்படியான விடயங்களில் நழுவி கொள்வோம் என்ற எண்ணப்பாடுகள் சத்தியமாய் குப்பிழான் ஊரவர்கள் எவருக்கும் அந்த காலங்களில் வருவதில்லை..
அந்த காலங்களில் சகலரும் "கிராமியம்" என்றதொரு சூழலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்ததால் நழுவாமல் உணர்வுகளோடு உணர்வாக ஓன்று சேர்வது அவர்களின் குருதியுடன் ஊறியதொரு சுபாவமாகும்.
இரு கிழமைகளுக்கு முன்பு குரும்பசிட்டியில் உள்ள மைதானம் ஒன்றில் அதே சுற்று போட்டிகளின் தொடர்ச்சியாக குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தினருக்கும் இதே வசாவிளான் ஊரவர்களின் விளையாட்டு கழகத்துக்கும் இடையில் உதைபந்தாட்ட போட்டி ஓர் மாலை நேரம் நடைபெறுகின்றது. வழமைபோல் நம்ம கிராமத்து ரசிகர்களும் சூழ நிற்கின்றார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீர் என விளையாட்டினை நிறுத்தி விட்டு வசாவிளான் ஊரின் விளையாட்டு வீரர்கள் எதிரணியில் விளையாடிய நம்மூரவர்கள் மீது தாக்குதல்களில் இறங்கினார்கள். மறைவாக தயார் நிலையில் வைத்திருந்த
கட்டைகள், தடிகள், பொல்லுகளை ஓடி போய் எடுத்து வந்து விளையாடியவர்கள், பார்வையாளாக நின்ற எம்மூரவர்கள் பலரையும் தாக்க தொடங்கினார்கள். அவர்கள் அவ்வாறு தாக்குவார்கள் என்பதனை எவரும் எதிர்பார்க்கவில்லை.
சகல குப்பிழானாரும் எதிர்பாராமல் நின்றபடியால் அங்குள்ள தோட்டங்கள், வளவுகளுக்கால் அடிகள் வாங்கிக் கொண்டு எங்கள் ஊருக்குள் தப்பி ஓடி வருவதனை தவிர வேறு வழியில்லை.
அயலூரவரான அவர்கள் அந்த நேரம் எதற்காக அப்படி அடி, பிடிக்கு தயார் நிலையில் ஓர் உதைபந்தாட்ட போட்டிக்கு வந்தார்கள்? எதற்காக அடி பிடியாளர்களாக களத்தில் இறங்க வேணும் என்பது நம்மூரவர்களுக்கு உண்மையை சொல்லப் போனால் அந்த நேரம் அது ஓர் புரியாத புதிர்.
போட்டியின் வெற்றியை தொடர்ந்து அவ்வாறு வெற்றி பெறும்போது வழமையான கிராமத்து ரசிகர்களின் கை தட்டல்கள், விசிலடிப்புகள் போன்ற ஆரவாரங்கள் யாவற்றினையும் அவர்களால் அந்த இடத்தில் ஜீரணிக்க முடியாத ஜென்ம பிறவிகளாக இருந்தார்களோ? என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
இப்போது அதே வசாவிளான் ஊரவர்களின் விளையாட்டுக் கழகத்துடன் மீண்டும் ஒரு போட்டிக்கு, சுற்றுப்போட்டியினை நடத்துபவர்கள் அளவெட்டி- அருணோதயாக் கல்லூரி மைதானத்தில் ஒழுங்கு செய்துள்ளனர்.
எனவேதான் உதைபந்தாட்ட போட்டியோடு போர்க்களத்துக்கு தயாராக நம்மூரவர்கள் வீறுநடை போடுகின்றனர். போர்க் குணங்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தாலும் சில நேரங்களில் அவை தவிர்க்க முடியாத ஒன்றாக அந்த நேரம் இருந்தது.
இனிதான் மிக திகில்கள் நிறைந்த போர் களத்தின் செய்திக்கு வரப் போகின்றேன்.
வழமை போல் நடுவரின் விசிலுடன் உதைபந்தாட்ட போட்டி ஆரம்பமாகி விட்டது.
மைதானத்துக்கு வெளியே நின்று ஆராவரிக்கும் நம்மூர் விளையாட்டு ரசிகர்கள் என்ன சும்மாய் இருப்பார்களா?
அங்கு போட்டியின் வெற்றிகளில் மட்டும் ஆரவாரம் இருக்கவில்லை.
பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என எவை எல்லாம் இருக்கின்றதோ அவை எல்லாவற்றினையும் ஆராவாரத்துடன் சேர்த்து பயன்படுத்தி நம்மூரவர்கள் யாவரும் உரத்த குரலில் சண்டைக்கு அறைகூவல் விடுவது போல் குரல்கள் விடுகின்றனர்.
இரு வாரங்களுக்கு முன்பு நிராயுத பாணியான நிலையில் எதிர்பாராத விதமாக குரும்பசிட்டி மைதானத்தில் ஓட ஓட அடிகள் வாங்கிய தாக்கங்களின் எதிரொலிகள் இங்கு பலமாக ஒலிக்கின்றது என்பதும் நம்மூரவர்கள் பதிலுக்கு பதில் கொடுக்காமல் போவதில்லை என நிற்கின்றார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகின்றது.
அங்கு பார்வையாளராக நின்ற வசாவிளானை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் சமாதான நீதவானாக உருவெடுத்து சண்டைக்கு அறை கூவல்கள் கூட்டாக ஒலி விடும் நம்மவர்கள் குழுவுக்கு அருகில் வந்தார்.
"ஏன் பாருங்கோ. இப்ப தேவையில்லாமல் சண்டைக்கு அறை கூவல் விடுகிறியள்"
இது உதைபந்தாட்ட போட்டி. சண்டை பிடிக்கும் இடமல்ல."
அந்த மனிதன் பண்பாகவே கதை தொடங்கினார்.
ஏற்கனவே ஓட ஓட அடி வாங்கிய நம்மூரவர்கள் சில நிமிட நேர வாய் வாக்குவாதம். அடுத்து பாஞ்சு போட்டு காலால் எட்டி நியாயம் கதைக்க வந்தவருக்கு விழுந்தது முதல் தொடக்க உதை.
நம்மூரவரான "கட்டவாணி கணேசன்" என்பவரே சங்கு ஊதி போரை ஆரம்பிப்பது போல் முதல் உதையில் ஆரம்பித்து வைத்து விட்டவர் ஆவார்.
கட்டவாணி கணேசன் கிராமத்தின் அதி உச்ச பற்று கொண்டதொரு அபிமானி. ஊர் சண்டைகளில் ஊருக்காக பின் வாங்காமல் நின்று எப்போதும் களமாடுபவர் ஆவார்.
"உதைபந்தாட்டம்" நின்று, அது "உதை மனிதர்களாட்டம்" என்ற நிலைமைக்கு கல்லூரி மைதானம் உருவாகி விட்டது..
மகாபாரதப் போரில் வரும் குருஷேத்திர போர் களமாக மைதானம் மாறி விட்டது.
அதே பாரத போரில் எழுந்த, பகவத்கீதையில் சொல்லப்பட்ட மாதிரியாக ஏற்கனவே நடந்த அதர்மத்துக்கு எதிராக குப்பிழானார் கொடுக்கும் பதிலடி என்பது அங்கு சிறப்பாகவே நடைபெற தொடங்கியது.
இதில் இன்னொரு தமாஷ் கிளைமாக்ஸ் ஓன்று.
சண்டையில் நம்மூரவர் எவரும் அச்சத்தில் பின் வாங்கி ஓடக்கூடாது என ஏசிக் கொண்டு ஓரிருவர் ஓடிப் போய் அருணோதயா கல்லூரியின் முன்பக்க கேற்றினை இழுத்து மூடி விட்டனர்.
சண்டையில் களமாட லொறிக்குள் மறைத்து கொண்டு போன கட்டைகள், கம்புகள் மட்டுமல்லாது அந்த பள்ளிக்கூடத்தின் கதிரை மேசைகள் பல உடைக்கப்பட்டு ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு வீரக்கோல் ஆயுதம்.
அன்று அந்த மைதானத்தில் நின்ற ஒவ்வொரு குப்பிழானூரவனும் சண்டையில் பங்கு பற்றுகிறானோ இல்லையோ தெரியாது. ஆனால் ஒரு சின்ன சண்டியன் மாதிரி கைகளில் ஆளுக்கொரு கட்டை வைத்திருந்து தம்மையொரு வீரனாக காண்பிக்காமல் அங்கு எவரும் நிற்கவில்லை. .
நம்மூரவர்களின் ஆட்கள் தொகை, வேகம், தயார் நிலைமைகள் அவர்களை விட அதிகமானது. அவர்களில் விளையாட்டில் பங்கு பற்றியவர்களை தவிர மேலதிகமாக படைகள் இருந்ததாக தெரியவில்லை
விளையாட்டினை நிறுத்திய வசாவிளான் வீரர்களும் தயார் நிலைமையில் வராமல் இருந்ததில்லை என்பதனை வேகமாக நிரூபித்து விட்டனர்.
என்ன நடந்தது தெரியுமா?
மைதானத்துக்கு பக்கத்து வளவுக்குள் ஓடினார்கள்.
ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கட்டைகள் கம்புகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.
மைதானத்தில் தொடங்கிய சண்டை, ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி அடிக்க, மோசமான வார்த்தை பிரயோகங்களுடன் நகர்ந்து நகர்ந்து முன் கேற்றினை கடந்து வீதிக்கு வந்து விட்டது.
இதற்கிடையில் இன்னொரு விடயத்தினையும் இங்கு குறிப்பிடாமல் போகமுடியாது.
நம்மூரவன் ஒருவன் எதிரிக்கு என வீசிய கல் ஓன்று தவறுதலாக எம்மூரவரான மெக்கானிக் தங்கனின் தலையினை பதம் பார்த்து விட்டது. அந்தக் கணம் உடனடியாக அங்கு நின்ற சண்முக வாத்தியார் வேட்டி கட்டியவராக நின்றபடியால் தமது உடுத்திருந்த வேட்டியின் கீழ் பக்கத்தால் கிழித்து எடுத்து ஓர் முதலுதவி சிகிச்சையாக அவரின் இரத்த பெருக்கினை நிறுத்துவதற்கு கட்டு போட்டு விட்டார்.
அளவெட்டி மக்கள் பலர் வீதியில் நின்று புதினமாக பார்க்கின்றனர். அவர்களில் சிலர் களத்தில் இறங்கி எப்படியோ பலமான சத்தத்தில் குரல் எழுப்பி சண்டைகளை பிடிச்சு விட்டு வசாவிளான் ஊரவர்களை முதலில் அவர்கள் வந்த லொறியில் ஏற்றி அங்கு நிற்க விடாமல் வலு கட்டாயமாக அனுப்பி விட்டனர். அவர்களில் பலருக்கு காயங்கள். இனி வலிமையாக நிற்கும் குப்பிழானாருடன் அங்கு சமர் செய்யமுடியாது என்பதனை புரிந்தோ என்னவோ அவர்களும் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர்.
தொடர்ந்து சூரன் போரில் அசுரர்களை அழித்த பின்பு முருகப் பெருமான் தலைமையில் தேவர் படைகள் திரும்பி வருவதுபோல் குப்பிழான் படைகள் ஊருக்கு திரும்பி வருகின்றனர். அச்சாம்பியின் லொறி ஊர்ந்து நகர்ந்து கொண்டுள்ளது. அந்த லொறியினை சுற்றி சைக்கிள்களில் படைகள். அந்த மாலைப் பொழுது மங்கும் நேரம் மல்லாகம், ஏழாலை வீதியால் திரும்பி வரும்போது இது "குப்பிழான் படை" உதைபந்தாட்ட விளையாட்டு மைதானத்தில் "வென்ற படை" என பறை சாற்றுகின்ற மாதிரி அந்த வீதி வழி நகர்வு அந்த நேரம் தென்பட்டது..
அவர்களின் தேவையற்ற, அதர்மம் நிறைந்ததொரு தாக்குதல்.
அதற்கொரு மறு தாக்குதல் என எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
இவை எல்லாம் வீரச் செயல் என மணி மகுடம் எவருக்கும் எவருமே சூட்ட முடியாது. அந்த வயதுகளில் ஏற்பட்ட மனித பலவீனங்களின் ஓர் எல்லை மீறல் என்பது காலம் கடந்ததொரு ஞானமாக எல்லோருக்கும் வந்திருக்கும்.
தொடர்ந்து இவ் ஊரவர்களுக்கிடையில் ஜென்ம பகை, வன்முறைகள், தொடர் தாக்குதல்கள் என்ற பிரளயங்கள் தொடரலாம் என்ற யூகம் பலருக்கும் இருந்தது. ஆனால் சில சமாதான பேச்சுவார்த்தைகளினை தொடர்ந்து எல்லாமே மறந்து மன்னிக்கப்பட்டு விட்டது.
தாம் தேவையில்லாமல் அதர்மத்துடன் முன் எடுத்த அடாவடித்தனத்துக்கு கிடைத்த மறு தாக்கம் என்ற சில குற்ற உணர்வில் அவர்கள் அமைதியாகினார்கள் என எடுத்துக் கொண்டாலும் தொடர்ந்து எதுவிதமான பழி வாங்கல்களையும் எம்மூரவர்கள் மீது என்றுமே காண்பிக்காது அவர்கள் இருந்தமை என்பது போற்றப்பட வேண்டிய விடயமேயாகும்.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment