கிராமத்தின் கதைகள் 23 - தமிழ் இன உணர்வாளர்களின் கல்லெறிகள்

 


"கடந்த வருடம் இதே ஊரில் உள்ள வாசிகசாலை விழா மேடையில் நான் உரையாற்றி விட்டு, இதே வீதியால் இரவு நேரம் எமது காரில் சென்று கொண்டிருக்கின்றேன்"

"இதே சங்கக்கடை மதிலுக்கு பின்னால் எமது வாகனத்தினை நோக்கி கல்லெறிகள் வந்து விழுகின்றது. நாம் அந்த இடத்திலிருந்து அந்த இரவு நேரம் தப்பி சென்று விட்டோம். எவர் எறிந்தாரோ எமக்கு தெரியாது. ஆனால் எமக்கு கல்லெறி விழுந்த அதே இடத்தில் குப்பிழான் கிராம மக்களுக்காக கிராமிய வங்கி ஒன்று எனது முயற்சியால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது."

நம்ம கிராமத்து சந்திக்கு அருகில், மல்லாகம் வீதியில் இருக்கும் சங்கக் கடை கட்டிடத்தில் பகல் நேரம் நடந்த கிராமிய வங்கி ஒன்றின் திறப்பு விழாவில் உரையாற்றும் போது அன்றைய கால அரசாட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுவில் தொகுதி அமைப்பாளர் திரு.கு.விநோதன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தமது உரையில் தெரிவிக்கும் போது,

"கடந்த கிழமை சண்டிலிப்பாயில் எனது இல்லத்தில் வைத்து என் மீது துப்பாக்கி பிரயோகமும் செய்யப்பட்டு, அதிலிருந்து தெய்வாதீனமாக தப்பிய நான், இன்று தான் வெளியே வந்து முதன் முதலாக உங்கள் கிராமத்து மண்ணில், உங்கள் முன்னால் நின்று உரையாற்றுகின்றேன். மரணத்துக்கும் கல்லெறிகளுக்கும் அஞ்சுபவனாக நான் இருந்திருந்தால் இந்த அரசியலுக்கும் பொது வாழ்வுக்கும் வந்திருக்கவே மாட்டேன்".

"ஆனால் ஒன்று மாத்திரம் உண்மை. இன்று எங்களுக்கு எதிராக தூண்டிவிடும் துப்பாக்கி குண்டுகளும் கல்லெறிகளும் நாளை உங்களுக்கு எதிராக (தமிழர் விடுதலை கூட்டணி) நிச்சயம் திரும்பும்".

இவ்வாறு நம்ம கிராமத்தவர்கள் மத்தியில் நடந்த அன்றைய விழாவில் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1975 - 1977 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஒரு நாள். சரியான திகதி நினைவில் இல்லை.

குப்பிழானில் "கிராமிய வங்கி" ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. 

அன்று அரசில் தபால் தந்தி தொடர்பு அமைச்சராக இருந்த திரு செல்லையா - குமாரசூரியர், திரு. அனுரா பண்டாரநாயக்க உட்பட சில சிங்கள அரசியல்வாதிகள், அரசு நிர்வாகத்தினர் என விழாவில் பலர் பங்கு பற்றியிருந்தனர். அன்றைய தினம் இவர்களின் பாதுகாப்புக்காக குப்பிழான் சந்தியினை அண்மித்த வீதிகள் எங்கும் பொலிஸ் படைகளும் குவிக்கப்பட்டிருந்தது. 

கூட்டுறவு நிர்வாக துறைகளில் தொழில் அனுபவமுள்ள நம்மூரவர் திரு.சோமர் - சிவப்பிரகாசம் (விதானையார் - பரமநாதனின் அண்ணர்)  அவர்களை மனேஜராக நியமித்து ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமிய வங்கி, பாதுகாப்பின்மை என்ற காரணங்களுக்காக கொஞ்ச காலங்களின் பின்பு மூடப்பட்டு விட்டது. 

குப்பிழானுக்குள் பல கல் எறிகளை எதிர்கொண்ட  திரு.குமாரசாமி - விநோதன் என்ற சிங்கள இனவாத அரசில் தமிழர்கள் பிரதிநிதியாக நிற்கும் இவ் அரசியல்வாதி யார்? 

என்ற விடயத்தினை மேலோட்டமாக குறிப்பிட்டு விட்டு அவர் சம்பந்தப்பட்ட எங்கள் கிராமத்தின் பழைய கதையின் நினைவுகளினை தொடர்வோம்.

சண்டிலிப்பாய் என்ற இடம் அவரது பூர்வீக கிராமமாகும். யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர். அரசியலுக்குள் வந்த பின்பு சட்டக் கல்லூரி சென்று சட்டத்தரணி ஆனவர். அவரது தந்தையார் ஒரு தனவந்தர். அவருக்கு இவர் ஒரேயொரு மகன் ஆவார்.

"ஒரு மண்ணின் மைந்தனின் ஜீவகதை இது" என்ற விநோதனின் நினைவு நூலில் இருந்து... 

தமது மகனை அரசியலில் பிரபல்யம் அடைய செய்ய வேண்டும் என்பது தந்தையின் கனவு. மகனுக்கும் அது ஒரு இலட்சியமாக இருந்திருக்கலாம்.

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாராளுமன்ற தேர்தலில் அவரது முதல் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகியது.

1970 ஆம் ஆண்டு,தேர்தல் காலங்களில் ஒரு நாள் எங்கள் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்துக்கு முன்னால் உள்ள இடத்தில் இரவு நேரம் மேடை அமைத்து எந்தக் கட்சி சார்புமில்லாத சுயேட்சை வேட்பாளராக அவரது தேர்தல் பிரசார விழா பெரிய சலசலப்புகள் என எவையுமில்லாது அமைதியாக  நடைபெறுகின்றது. எவர் எவரோ என பலர் பேச்சாளராக மேடையில் உட்கார்ந்து இருக்கின்றனர். அதில் நம்ம கிராமத்தவர்கள் என எவருமில்லை.

 சுமார் 21- 22 வயது நிரம்பியதொரு அழகான இளைஞன். மாலைகள் அணிந்தபடி வேட்பாளராக மேடையில் உட்கார்ந்திருக்கின்றார். அவர் தான் திரு.கு.விநோதன்.

அன்று தான் கிராமத்தவர்கள் முதன் முதலாக அவர் முகத்தினை பார்க்கின்றனர்.

தேர்தல் முடிவில் குப்பிழான் கிராமமும்  உள்ளடங்கிய தொகுதியான உடுவில் தேர்தல் தொகுதியில்  சுயேட்சையில் போட்டியிட்டு 1362 வாக்குகளினை மட்டும் எப்படியோ பெற்றிருந்தார். அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் வேட்பாளர் திரு.வி.தர்மலிங்கம் அவர்கள் 14,120 வாக்குகளினை பெற்று வெற்றிவாகை சூடி  மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். .

1970 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கை ரீதியாக சிறிலங்கா சுதந்திர கட்சி பெரும்பான்மையினை பெற்று ஆட்சியினை அமைத்துக் கொண்டது. 

தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு திட்டத்தினை அரசு உருவாக்கி, தமிழ் இனத்தினையே நசுக்கி அழிக்கும் அநியாயங்களினை பல கோணங்களிலிருந்தும் விஸ்தரிக்கின்றது. அதனை எதிர்த்து ஈழ தமிழர் கட்சிகள் கூட்டு தலைமையின் கீழ் ஓன்று சேர்ந்து பல விதமான போராட்டங்களினை நடத்துகின்றனர். சாத்வீக வழிகளில் போராடிய பல தமிழ் இளைஞர்களினை கால வரையின்றி சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்யும் படலத்தினை அரசு ஆரம்பித்துள்ளது. அதாவது ஈழ தமிழர்களின் ஆயுத கிளர்ச்சிக்கு அத்திவாரம் போட்டு கொடுத்த அரசின் காலம் என சொல்லலாம்.

இந்த கொடுமையான காலகட்ட நிலைமையில்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில், இனவாத அரசினால்  திரு.கு.விநோதனுக்கு அவர் அரசியல் வாழ்வில் புதிய அத்தியாயம் ஓன்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுவில் தொகுதி அமைப்பாளர்.

 வட மாகாணத்தில் கட்சியின் கொள்கை பரப்பாளர். 

"ஒரு மண்ணின் மைந்தனின் ஜீவகதை இது" என்ற விநோதனின் நினைவு நூலில் இருந்து... 

தொடர்ந்து சில வருடங்களின் பின்பு, சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின்  தலைவர். அரசோடு செல்வாக்குடன் தொடர்பில் இருப்பவர்.

 தமிழர் விடுதலை கூட்டணியின் கோட்டையாக, தமிழின உணர்வுகள் பொங்கி எழும்  நம்ம ஊருக்குள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அவர் மூலம் தாவி கால் பதிக்க தொடங்கி விட்டது. 

 தொடர்ந்து, பொங்கி எழும் கிராமியத்தின் இன உணர்வுகள் குழப்பங்களாகவும், கல் எறிகளாகவும் அந்த நேரம் எப்படி பரிணமித்தது என்பதுவே இனி நாம் தொடரப் போகும் கதையின் அடுத்த கிளைமாக்ஸ்.

அவரது பிரச்சார வேகத்தின் தீவிரமாக, குப்பிழான் வாசிகசாலைக்கு அருகில் உள்ள பாணர் பொன்னம்பலத்தின் கட்டிடத்தில் கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அங்கு கிராமத்தவர்கள் சிலரினை உறுப்பினராக கொண்ட ஓர் நிர்வாகசபை.

பொங்கு தமிழினத்தின் கிராமிய உணர்வுகள் என்ன சும்மாய் இருக்கும் என நினைத்தீர்களா?  

அது அடுத்ததொரு தமாஷ்..

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குப்பிழான் கிளை அலுவலகம் இரவோடு இரவாக மர்மமான முறையில் தீக்கிரையானது. தொடர்ந்து நிர்வாகத்தையும் காணவில்லை. 

தீக்கிரையாக்கியவர்கள் எவரோ ஊரவர்களில் சிலர் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதொரு விடயமாகும். ஆனால் அதன் மர்மம் பல தசாப்தங்களாக  ஊரில் எவருக்கும்  துப்பு துலக்கப்படாமல் இருந்தது என்பது இன்னொரு  பெரிய "கிளைமாக்ஸ்".

இரவோடு இரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளையினை பூண்டோடு அந்தக் காலம் அகற்றியவர்களில் ஒருவர் இப்போது கனடாவில் கிராமத்தவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கின்றார். அந்த மர்மக் கதைகளினை இப்போது கிராமத்தவர்கள் மத்தியில் ரசனையோடு அவர் சொல்ல தொடங்கினால் பிரேக் பிடிக்கவே மாட்டார்.

அவர் யார்? அது பரம இரகசியம். 

இரகசியத்தினை கசிய விட்டால் இனிமேல் காலங்களில் கிராமத்தின் பல பழைய  மர்மக் கதைகளை அவரிடமிருந்து கேட்கமுடியாத நிலைமை வந்துவிடும். ஆனபடியால் அந்த விடயத்தில் நாம்  மௌனம் காப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியில் இருந்த  காலங்களில் (1970 -1977) அவர்களின் கட்சி, திரு.மயில்வாகனம் - சடாற்சரம் அவர்களின் தலைமையில் ஊரில் கொஞ்ச காலங்களின் பின்பு  மீண்டும் சற்று துளிர் விட ஆரம்பித்தது.

அன்றொரு நாள். இன்றும் நினைவில் உள்ளது.

கற்கரை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் மேடை அமைத்து அவர்களின் சிறிலங்கா சுதந்திரக்  கட்சியின் கொள்கை பரப்பு விழா நடக்கின்றது. அரசின் இனவாத ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தும் வகையில் அவர்களின் மேடைப் பேச்சுக்கள் தொடர்கின்றன. தூரத்திலிருந்து கல்லெறிகள் மேடைக்கு வந்து விழுந்து, விழா இடை நிறுத்தப்பட்டு ஏதோ கலகங்கள் நடக்கின்றது.

 ஆனால் அந்த மனுஷன் --------- "விநோதன்" 

கல்லெறிகள் பக்கங்களில் வந்து விழுந்து கொண்டிருக்கும் நேரம், தமது இரு கைகளினையும் கட்டிக் கொண்டு கதிரையினை விட்டு எழும்பாமல் மேடையில் இருந்த அந்த காட்சி உள்ளதே ---------"கலங்காத ஒரு விநோதமான அரசியல்வாதி" என்பதனை குப்பிழான் கிராமத்தவர்களுக்கு காட்டிக் கொண்டார்.

"அரசியலில் நான் கருங்கற்களால் எறி வேண்டியவன். இந்த கிராமத்துக் கற்கள் என்னை ஒன்றும் சலசலப்புக்கு உள்ளாக்காது". என ஒலிவாங்கியில் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டார். 

மறைந்து நின்று கல் எறிவது, அலுவலகத்துக்கு தீ வைப்பது போன்ற அந்த கால செயல்கள் யாவும் சரியா? பிழையா? அல்லது இதில் எவ்வளவு நியாயத்தன்மை உள்ளது? என எந்தவொரு அரசியல் ஆய்வாளர்கள், நடுநிலை விமர்சகராலும் அன்றைய கால கட்டத்தில் கருத்துச் சொல்வதென்பது மிகவும் சிரமமான விடயமாகும்.

எனவே அதில் நியாயம் சொல்வதனை நிறுத்தி விட்டு, நடந்த பழைய கதைகளை மட்டும் கொஞ்ச நேர ரசனைக்காக நாம் நினைவு கூர்வோம்.

இன்னொரு சம்பவம் .

 1970 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலங்களில் ஒரு நாள் இரவு நேரம்.

 குப்பிழான் - பலநோக்கு கூட்டுறவு சங்கக்கடையின் மேல் கூரையில் கல்லெறிகள் வந்து டமார் டமார் என்று விழுகின்றது. 

பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தின் உள்ளே கிராமத்து விவசாயிகளை ஒன்றிணைத்த கருத்தரங்கு ஓன்று நடக்கின்றது. கருத்தரங்கின் பிரதம பேச்சாளர் திரு.விநோதன் ஆவார். அவர் அந்த நேரம் சுன்னாகம் - பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவராக இருந்த காலமாகும். அதனை ஒழுங்கு செய்த திரு.தம்பு - தர்மலிங்கம் அவர்கள் கருத்தரங்குக்கு தலைமை வகிக்கின்றார்.

(திரு.தம்பு - தர்மலிங்கம் அவர்கள் தமது வீட்டு படலையினை கடந்து சைக்கிளில் வெள்ளை வேஷ்டி கட்டி வெள்ளை சேட்டும் அணிந்து கொண்டு வீதியில் கிளம்பினால் அது அநேகமாக அவரின் சொந்த வீட்டு வேலைக்காக வெளியில் கிளம்பும் நோக்கமாக இருக்க மாட்டாது. அது  ஏதாவதொரு கிராமத்து பணியாகவே இருக்கும் என்பது அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு புரியும். விவசாயிகளுக்கு ஏதோ பயன்பாடான பணிகள் செய்யலாம் என்பது அவர் மனத்திரையில் தெரிந்து விட்டது. களத்தில் இறங்கி விட்டார்.)   

கூட்டுறவு சங்கங்களின் கோட்பாடுகளும் அதன் செயல்பாடுகளும் கிராமத்து விவசாயிகளை எப்படி கைகொடுத்து உயர்த்திவிடும் என்றதொரு சிறு பாடத்தினை மேலோட்டமாக இங்கு குறிப்பிட்டு விட்டு விடயத்தினை தொடர்வோம்.

விவசாயிகளின் உற்பத்திகளை இடைத் தரகர்கள், மொத்த வியாபாரிகள் என எவரிடமும் சுரண்டப்படுவதில் ஏமாறாமல் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக சந்தைப்படுத்தும் வசதிகள் முன்னைய காலங்களில் விவசாயிகளுக்கு இலகுவாக கிடைத்தது. தேவையானால் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன்களும் வழங்கும். கூட்டுறவு சங்கத்தின் சேவையினால் வியர்வை சிந்தி உழைக்கும் பல கிராமத்து விவசாயிகள் சின்னக் காசுக்காரர்களாகவும் உருவாகியுள்ளனர். 

குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட வெங்காய குவியல்கள் யாவற்றினையும் பலநோக்கு கூட்டுறவு சங்கம் நியாயமான விலை கொடுத்து வாங்கி அதனை நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக அனுப்பி சந்தைப் படுத்திக்கொள்ளும்.

1960 ஆம் ஆண்டின் இறுதிக் காலங்கள் மற்றும் 1970 ஆம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் குப்பிழான்-பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக கொள்வனவு செய்வது, பணங்களினை பரிமாற்றம் செய்வது, சந்தைப்படுத்துவது போன்ற  நிர்வாகத்தினை நம்மூரவரான திரு.சோமர்- சிவப்பிரகாசம் அவர்கள் மிக திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தி வந்தார்.

இனி அந்தக் கருத்தரங்கில் நடந்த கல்லெறி வீர்களின் கதையினை தொடர்வோம்.

அன்று நடந்தது  விவசாயிகளுக்கு வழி காட்டும் கருத்தரங்கு ஆகும். அது திரு.வினோதனின் அரசியல் கொள்கை பிரச்சாரமல்ல. கூட்டுறவு சங்கங்களின் தலைவர் என்ற ரீதியில் விவசாயிகளுக்கு எந்த வழியில் நன்மைகள், பயன்பாடுகளினை பெற்றுக் கொடுக்கலாம் என்ற தகவல்களினை வழங்கி அதற்கான வழிகாட்டல்களினையும், உதவிகளையும் தொடங்கி ஆரம்ப வேலைகளை முன்னெடுப்பதற்காக அழைக்கப்பட்டவர் ஆவார். 

மண்டபத்தின் மேல் கூரைக்கு கல்லெறிகள் இடைக்கிடை வந்து விழுந்து கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருக்கும் கருத்தரங்கினை   குழப்பமில்லாது நடாத்தி முடித்து திரு.விநோதன் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு வெளியில் வந்த விழாவின் ஒழுங்கமைப்பாளர்  தம்பு - தர்மலிங்கம் பலமான சத்தமாக பயங்கரமான கடுப்பில் கல் எறிந்தவர்களை, கல் எறிந்தவர்கள் யார் என்பது பூரணமாக தெரியாத நிலையில் கண்டித்து ஏசத் தொடங்கினார். ஏச்சுகளுக்கு ஆதரவாக அவருடன் பலர் கோரஸ்கான கீதத்தில் தங்கள் குரல்களாலும் ஒத்தாசை  வழங்கியிருந்தார்கள்.  

சங்கக்கடையிலிருந்து தமது வீடு வரை இன்னொரு கிராமத்தவர் அதி உச்ச கடுப்போடு மந்திரோபாய கீதத்தில் பலமான சத்தத்தில் ஏசிக் கொண்டு நடக்கின்றார்.

"எளிய மூதேவிகள். எளிய மூதேவிகள்"

"வாழ்க்கையில திருந்தாதுகள்"

 அவர் தான் "நமசிவாய வாத்தியார்"

வாத்தியாரின் கடுப்பான வார்த்தைகள்  முழுக்க முழுக்க நியாயமானது என்பது எல்லாரும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதனை அந்த குப்பிழான் வீதியில் அந்த இரவு நேரம் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது..

ஆனால் ஓன்று.

 "வாழ்க்கையில திருந்தாதுகள்" என்ற வாத்தியார் பயங்கரக் கடுப்பில் மந்திரமாக  கொட்டித் தீர்த்தார்.

 அங்கு மாறித்தான் நடந்தது என்பதை வாத்தியார் புரிந்து கொண்டாரோ? என்பது தெரியாது. 

நமசிவாய வாத்தியாரின் அபிஷேகத்தோடை கல்லெறியும் பையன்கள் திருந்தியே விட்டாங்களோ? என்றதொரு சந்தேக கேள்வி.

ஏனெனில் அதன் பிறகு இப்படியான கல்லெறிகள் நடந்ததாக தெரியவில்லை. 

குப்பிழான் றஞ்சன்- 

Post a Comment

Previous Post Next Post