கிராமத்தின் கதைகள் 22 - ஆலய வாசலில் எம்பெருமானால் அழைக்கப்பட்ட ஜீவாத்மா

 


எங்கள் குப்பிழான் கிராம மக்கள் பலரின் குல தெய்வம் கற்கரை கற்பக விநாயக பெருமான். 

அந்த ஆலய வாசலில் அன்றொரு நாள்.

இனிய மாலை பொழுது கடந்து இருட்டினை தொடும் நேரம்.

பக்தன் ஒருவரின் ஆத்மா ஆண்டவனால் அழைக்கப்பட்டது. 

அல்லது இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லப்போனால் எம்பெருமான் கற்பக விநாயகர் ஆலய வாசலில் அவர் ஜீவ சமாதியடைந்தார் என்று சொல்லலாம்.

இப்படியொரு நிகழ்வு  05 ஆம் திகதி மார்கழி மாதம் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இனி அந்த கதையினை சொல்லப்போகின்றேன்.

தொடர்ந்து படியுங்கள்.

பிறப்பும் இறப்பும் காலம் காலமாக ஊர், உலகங்களில்  நடந்து கொண்டிருக்கின்றது. அவை யாவற்றினையும் ஓர் இயற்கையின் நியதியாக சர்வ சாதாரணமாகவே பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு நடந்தது அசாதாரணமானது. எவரின் வாழ்விலும்  குறிப்பாக தமது குல தெய்வமான எம்பெருமான் சந்நிதானத்தில் இந்த மாதிரி நடந்ததாக கேள்விப்படவில்லை.

இந்த நிகழ்வு கிராமத்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஓர் 16 வயது பையனாக  அந்த நேரம் நானும் கிராம மண்ணில் நின்றேன்.

ஆனால் அவரின் ஜீவாத்மா அந்த பூதவுடலினை விட்டு பிரிந்த விதத்தினை ஆத்மீக, தெய்வீக தத்துவங்களுடன் அறிவியல் ரீதியாக இணைத்து பார்த்தவர்கள் என இன்று வரை எவராவது இருந்திருப்பார்களா? என்பது கொஞ்சம் சந்தேகமான விடயமாகும்.

சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள், நாயன்மார்கள் என பலர் நோய் நொடிகள், மரணத்தின் அறிகுறிகள் என எவையுமே தெரியாது அவர்களின் ஆத்மா உடலினை விட்டு அகன்று போனது என்பதனை வரலாற்று குறிப்புகளில் படித்திருப்போம். உதாரணமாக சுவாமி ஸ்ரீ ராகவேந்தர், சுவாமிகளின் வாழ்வும் இறுதியில் சமாதியடையும் காட்சிகளையும் ரஜனி நடித்த திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. "மகா சமாதி" என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம்.

தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது "மரணமல்ல - சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு".  அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. அவ்வளவுதான்.

யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும் பொழுது, அவர் முன் 700 பேர் இருந்தனர்.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த அவர், அமெரிக்காவில், லொஸ்ஆங்கில்ஸ் (Los Angles) நகரில், மார்ச்/07/1952 ஆம் ஆண்டு அவர் மஹாசமாதி அடைந்தார்.

தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர்.

வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப் போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார்.

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது.

ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார்.

உடலில் தேவையான அளவிற்கு *வியானப் பிராணா* வை அவர் தக்கவைத்துச் சென்றதால், இத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் சரவணை சாமியார் என்ற எங்கள் கிராமத்து சித்தர் ஒருவர் குப்பிழானில் இதே வடிவில் சமாதியானார் என்பது எங்கள்  மூதாதையர்களிடமிருந்து அறிந்து கொண்டதொரு செய்தியாகும். சரவணை சாமியார் பூஜித்து வழிபட்டு, இறுதியில் சமாதி அடைந்த ஆலயமே இன்று குப்பிழான் வடக்கில் இருக்கும் சமாதி அம்மன் ஆலயமாகும். 

இவற்றினை அடிப்படையாக வைத்தே மின் பொறியியலாளர், கவிஞர் க.கணேசலிங்கம் அவர்கள் உருவாக்கிய குப்பிழான் கிராமிய கீதத்தில் சில வரிகள் பின்வருமாறு வருகின்றது.

"அறநெறி சிவநெறி தவநெறி நின்றவர் 

அறிஞர் புலவர் நல்லாசிரியர் 

நிறைதொழில் உழவினைக் கொண்டவர் வாழ்ந்திட 

நீள்புகழ் கொண்டதும் எம் நிலமே"

என இலக்கண தமிழில் கவிநயத்துடன் குறிப்பிடுகின்றார்.

இனி குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் 1976ம் ஆண்டில் என்ன நடந்தது? என்ற விடயத்துக்கு வருவோம்.

ஆலய வாசல் கதவுகள் வழமைபோல் திறந்திருக்கின்றது. ஆதி மூல எம்பெருமானின் விக்கிரகத்தின் நெய் விளக்கு வழமைபோல் எரிந்து கொண்டிருக்கின்றது. பக்தர்கள் திரள் என எவருமில்லை. ஆலய முன் மண்டபத்தில் ஆலய பரிபாலனசபையினரின் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. வழமைபோல் நிர்வாக சபை உறுப்பினர்கள் யாவரும் கால் மடித்து நிலத்தில் விரித்திருந்த பாயில் இருந்தபடியே கூட்ட நிகழ்வில் அவர்கள் யாவரின் கவனங்களும் நிற்கின்றது.

ஆலய பரிபாலன சபையில் பொருளாளராக தொடர்ந்து பல வருடங்கள் பதவி வகித்து, ஆலயத்துடன் ஒன்றிப்போன அந்த பக்தனும்  எண்ணெய் விளக்கின் தீப ஒளியில் ஆதி மூலத்தில் காட்சி தரும் எம்பெருமானின் பக்கமாக பார்வையினை வைத்துக்கொண்டு அந்த கூட்டத்தில் காலை மடித்து கொண்டு மௌனமாக நிலத்தில்  உட்கார்ந்து இருக்கின்றார். அவர் அநேகமாக மௌனமாகவே வாழும் ஒரு கிராமத்தவர். 

என்ன அற்புதம்.?

தலைவர் திரு.கா.நல்லையா அவர்களின் தலைமையில் நடந்து கொண்டிருந்த நிர்வாகசபை கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் அருகிலிருந்து பார்த்து கொண்டிருக்க இருந்தபடியே மெல்ல மெல்ல நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சரிகின்றார். அடுத்த நிமிடமே  அவர் உயிர் பிரிந்துவிட்டது. 

இந்த காட்சி எல்லோர் வாழ்விலும் நடப்பதுபோல் இருக்கும் சாதாரணமான மரணம் என கருத்தில் கொள்வதா? அல்லது அவர் ஆத்மா உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு, எம்பெருமான் வாசலில் வைத்து அரவணைக்கப்பட்டு விட்டது என சொல்வதா?

மரணத்தினை எதிர்கொள்ளும் எதுவிதமான நோய்கள், உபாதைகள் அல்லது அவை தொடர்பான அறிகுறிகளோ என எவையும் அந்த நேரமில்லாது நிர்வாகசபை கூட்டத்துக்கு அன்றய தினம் அவர் வருகை தந்திருந்தார். . 

சிந்தனையால், வாக்கால், செயல்களினால் தன் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் தீங்கில்லாது செயல்பட்டு நல்லதொரு பண்புகள் நிறைந்த மனிதனாக வாழ்ந்து, தமது பிறப்பின் கடமைப்பாடுகள் யாவற்றினையும் முடித்து, "வானப்பிரஸ்தம்" என்ற வர்ணாசிரம தர்மத்தின் மூன்றாம் நிலை படியில் எம்பெருமான் பணிகளோடு  வாழ்ந்து வந்து கொண்டிருந்த காலத்தினிலையே அவருக்கு இந்த மாதிரியானதொரு பேறு கிடைத்தது. 

அவர் அன்னையின் மடியிலிருந்து சுவாசத்தினை ஆரம்பித்தது 07 ஆம் திகதி தை மாதம் 1911 ஆம் ஆண்டு.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆண்டவன் சன்னிதானத்தில், ஆண்டவனுடன் அரவணைக்கப்பட்டு அதுவே அவரின் இறுதி சுவாசமாக 05 ஆம் திகதி மார்கழி மாதம் 1976 ஆம் ஆண்டு,கார்த்திகை 3 ஆம் சோமவாரத்தில் முடிவடைந்திருந்தது..

அவர் யார்?

"விசுவலிங்க வாத்தியார் "

இன்றைய இளைய தலைமுறைக்கு அவரை இலகுவாக அறிமுகப்படுத்தலாம் .

சைவப்புலவர், கலாநிதி ஏ.அனுஷாந்தனின் பேரனார். அதாவது அவரின் தாயின் தந்தையார். 

"ஜீவ காருண்யமே மோட்சத்தின் திறவுகோல்"

என்ற சுவாமி வள்ளலார் பெருமானின் இலக்கணத்துக்கு ஏற்றவாறு, எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் ஓர் துளி அளவேனும் நோகடிக்காது, நேர்மையான வழியில் கற்கரை கற்பக விநாயக பெருமானின் இறை பணிகளினை எதுவிதமான புகழ், விருதுகள் என எதிர்பாராது தமது பிறந்த காலம் தொட்டு செய்து வந்த நல்ல மனிதன் - "விசுவலிங்க வாத்தியார்". அந்த நேரம் தமது ஆசிரிய தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதொரு ஆசிரியர்.

அவர் மரணம் அழுவதற்குரிய மரணமல்ல.

போற்றி துதிப்பதற்குரியதொரு வாழ்வின் முடிவு.

இந்த நிகழ்வினையும் கருத்தில் கொண்டு, பிறப்பு என்ற தொடக்க புள்ளிக்கு முன்பு நாம் யார் ? இறப்பு என்ற முடிவு புள்ளிக்கு பின்பு நாம் எங்கு செல்கின்றோம்?  என்ற ஆய்வுக்கு வருவோம்.

"உடல் அழிகின்றது. ஆத்மா அழியாது தொடர்கின்றது" 

என கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் போதனை செய்கின்றார். இதனையே யோக சாஸ்திரமும் குறிப்பிடுகின்றது.

"ஒரு வருடத்தின் பின்பு அவரவர் கர்மாவின் அடிப்படையில் ஆத்மா மறுபிறப்புக்கு செல்கின்றது" என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவரவர் கர்மாவுக்கு பிரதிபலனாக அவர்களின் சிந்தனையும் வாழ்வும் அமைந்து விடுகின்றது"

என இந்து சமய உபநிடதங்கள் குறிப்பிடுகின்றன.

இவைகளின் யதார்தத்தினை எந்தவொரு விஞ்ஞானியும் நூற்றுக்கு நூறு வீதம் உறுதியாக மறுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் சூரியனை சுற்றி ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றது என்பதனை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதற்கு முன்பு, இவை பற்றி "சோதிட கலை" என்னும் கர்மாவின் நியதிகளை இந்து சமய ஞானிகள் தங்களின் ஆத்மீக,தெய்வீக பார்வையில் கண்டுபிடித்து கணித்து அதனை ஓர் கோட்பாடாக உருவாக்கப்பட்டு அவை இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.. 

எனவே எது உண்மை ?

ஏதோ எங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இயற்கையின் சக்தி (Super natural power) சில கர்மா என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எல்லோரையும் வழி நடாத்துகின்றது என்ற முடிவுக்கு வந்தேயாக வேண்டியுள்ளது.

ஏனனில் ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.

குப்பிழான் றஞ்சன்- 

(குறித்த கட்டுரைக்கு பிரசுரிக்க விசுவலிங்க வாத்தியார் அவர்களின் ஒளிப்படம் தேவைப்படுகிறது. யாராவது வைத்திருந்தால் அனுப்பி உதவவும். kuppilanorg@gmail.com 

நன்றி- 

குப்பிழான் இணையத்தினர்)




 

Post a Comment

Previous Post Next Post