"இது குப்பிழான்".
"எங்கடை ஊர்".
"தமிழரசு கட்சியின் ஒரு கோட்டை."
"இன்றைக்கு இரவு எங்கடை தமிழரசு கட்சியின் கோட்டைக்குளே வந்து நீங்கள் விழா நடத்துவதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்."
"எங்கடை ஊர் மண்ணிலே மேடை போட்டு தேவையில்லாமல் தமிழரசு கட்சியினை பற்றியோ அல்லது எங்கடை எம்.பி தர்மலிங்கம் பற்றியோ தாக்கி பேச வெளிக்கிட்டால் நாங்கள் எல்லாரும் பொறுத்து கொண்டிருக்கமாட்டோம்"
காங்கிரஸ் கட்சியின் உடுவில் தொகுதி வேட்பாளர் திரு.சிவநேசனை நோக்கி கொஞ்சம் எட்டத்தில் நின்று, கார்கார வல்லிபுரம் சுட்டு விரலை மேலே உயர்த்தி காட்டி போட்ட சத்தம் அந்த வீதியால் போனவர்கள்,வந்தவர்கள் எல்லாரையும் அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கூட்டம் கூட பண்ணிப்போட்டு விட்டது.
அவருக்கு பின்னால் அவருக்கு ஆதரவாக முசுப்பாத்தியாக சேர்ந்து குரல் கொடுக்க கொஞ்ச கிராமத்து அபிமானிகள்.
ஏனென்றால் இப்படியான நேரங்களில் ஊரில் ஆதரவு குழுவினர் சேர்ந்து நிற்பதற்கு எப்போதும் பின்வாங்குவதில்லை.
கார் ஓன்று சொந்தமாக வைத்திருந்து பிரயாணிகளை ஏற்றி இறக்கும் தொழிலை செய்பவர் என்பதால் "கார்கார வல்லிபுரம்" என்ற அந்த பெயரில் அவரை எல்லோரும் அடையாளப்படுத்தி கொள்வார்கள். அவர் தமிழரசு கட்சியின் ஆதரவாளர் என்று சொல்வதனை விட தலை சிறந்த கட்சியின் ஒரு பக்தன் என்று சொல்ல வேண்டும். தமிழரசு கட்சியின் எம்.பி மார்களுடன் மிக நெருக்கமான உறவில் இருப்பவர். வெளி ஊர்களிலும் பலருக்கும் அறிமுமாகி கொஞ்சம் செல்வாக்குடன் இருந்து வந்தவர். ஏழாலை கிராமசபையில் குப்பிழானுக்குள் இருக்கும் வட்டாரம் ஒன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்
"நாங்க வந்து விழா நடத்தினால் நீ என்னடா மயிரா பிடுங்குவாய்"
தேர்தல் பிரசாரத்துக்காக வெள்ளை வேஷ்டி கட்டி கொண்டு தமது கட்சி கொடி பறக்கும் காரில் தென் இந்திய சினிமா படங்களில் வரும் அரசியல்வாதிகள் மாதிரி பரிவாரங்கள் சிலருடன் ஊருக்குள் வந்திறங்கிய சிவநேசனும் பதிலுக்கு விட்டபாடில்லை.
குப்பிழான் ஊரவன் வாய் திறந்து மோத தொடங்கினால் நயாகரா நீர் வீழ்ச்சியில நீர் கொட்டின மாதிரி இருக்கும் என்பது சொல்ல தேவையில்லை. .
சும்மாய் சொல்லக்கூடாது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.சிவநேசனும் வேட்டியை கொஞ்சம் மேலே உயர்த்தி மடிச்சு கட்டிப்போட்டார். அது நம்ம ஊரவனை மிஞ்சி விட்டுது. வாய் தர்க்க மோதலில் அந்த மனுஷனுக்குத்தான் அந்த இடத்தில முதல் பரிசு கொடுக்கவேணும் போல் தெரிந்தது.
இப்படியான வாய்களின் மோதல்கள் பொதுவாக ஊரின் வீதிகளில் தொடங்கினால் சண்டையினை வளர்க்காமல் இருவரையும் கட்டி பிடித்து இழுத்துக் கொண்டு போகவும் எப்பவும் தயார் நிலைமையில் எவரோ ஒருவரேனும் அந்த இடங்களில் இருப்பார்கள். அந்தக் காட்சிகள் பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும்.
இங்கு வல்லிபுரத்தாரையும் ஊரவர்கள் சிலர் அந்த இடத்திலிருந்து அணைத்து இழுத்துக்கொண்டு நகர்ந்து விட்டனர். அந்த பகல் நேரம் அந்த வாய் மொழி மூல அபிஷேகங்கள் எல்லாம் சில நிமிடங்களில் முடிந்து விட்டது.
எல்லோரும் தொடர்ந்து, அன்றைய இரவு விழாவில் ஏதாவது பெரிய பிரளயம் நடக்கும் எனத்தான் நினைத்திருந்தார்கள்.
ஆனால் நடந்தது வேறு மாதிரி.
அதுவே மிக பெரிய கிளைமாக்ஸ்.
அங்கு என்ன நடந்தது என்பதற்கு அப்புறம் வருவோம்.
இந்த வாக்குவாதம் 1970 ஆம் ஆண்டு இலங்கை பாரளுமன்ற தேர்தல் காலத்தில் நம்ம ஊர் வாசிகசாலைக்கு முன்பு வீதியில் நடந்தது.
இலங்கை பாரளுமன்ற தேர்தல் 1970 ஆம் ஆண்டு நடந்த போது, அந்த தேர்தல் காலங்களில் நாடு முழுவதும் உருவான தேர்தல் பரபரப்பும், அதனை தொடர்ந்து ஈழத் தமிழர்கள் மத்தியில் இரு பெரும் கட்சிகளாக அந்த காலங்களில் மோதிக் கொண்டிருந்த தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தாக்கங்கள், அதிர்வலைகள் நம்ம கிராமத்தினையும் சுற்றி பிடித்திருந்தது.
வாசிகசாலைக்கு தெற்கு பக்கமாக இருக்கும் கடைக்கார தம்பிப்பிள்ளையின் கட்டிடத்தில் அகில இலங்கை தமிழரசு கட்சியின் குப்பிழான் கிளை அலுவலகம்.
அந்த இடங்களில் தமிழரசு கட்சியின் கொடிகள், பதாகைகள், ஆதரவு கோரும் பிரசுரங்கள், ஆதரவாளர்களின் அட்டகாசங்கள் என தேர்தல் முடியும் வரை தூள் பரப்பி கொண்டிருக்கும். தமிழரசு கட்சியின் சின்னம் வீடு ஆகும். கார்ட் போர்ட் பெட்டியில் வீடு மாதிரி ஒரு வடிவம் உருவாக்கப்பட்டு, அதற்கு நேரே புள்ளடி போடுங்கள் என்ற பதாகை முன் பக்கமாக சற்று உயரத்தில் வைத்திருக்கப்படும். கலர் வடிவத்தில் இருக்கும் அந்த கட் அவுட் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
ஓன்று மாத்திரம் உண்மை. இன்றும் எவரும் மறுக்க மாட்டார்கள்.
குப்பிழான் கிராமம் அந்த காலங்களில் தமிழரசு கட்சியின் ஒரு கோட்டை மாதிரி இருந்தது. ஏனென்றால் 95% வீதமானோர் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள்.
என்ன ஆச்சரியம்?
போட்டி கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர், தமிழரசு கட்சியின் இந்த கிராமகோட்டைக்குள் புகுந்து சில கிராமத்தவர்களினை பிடித்து, அவர்களை பயன்படுத்தி அவர்களை கட்சி தாவ பண்ணி, தங்கள் அரசியல் பிரசார பணிகளில் நாசுக்காக கால் ஊன்றி மும்மரமாக முன்னெடுக்க தொடங்கி விட்டனர். .
வாசிகசாலைக்கு வடக்கு பக்கமாக உள்ள பாணர் பொன்னம்பலத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் ஒரு அறையில் போட்டி கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கிளை அலுவலகம் ஓன்று திறக்கப்பட்டு அதே மாதிரியாக அழகு மயமான நிலைமையில் தேர்தல் பிரச்சார மும்மரங்கள் நடக்கின்றது.
அவர்களின் தேர்தல் சின்னம் சைக்கிள்.
தேர்தல் கட்சிகளினை ஆதரிக்கும் துண்டு பிரசுரங்கள் மட்டுமல்ல ஒருவரினை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்யும் துண்டு பிரசுரங்களும் வீதிகள் தோறும் இரகசியமாக விநியோகிக்கப்படும் சலசலப்புகள் இன்னொரு திரில் நகர்வுகளாகயிருக்கும்..
இங்கு "சுப்பர் தமாஷ்" என்ன என்பதனை புரிந்து கொண்டீர்களா ?
தமிழர்கள் மத்தியில் போட்டி போடும் இரு கட்சிகளின் பிரசார அலுவலக கிளைகளும் பக்கத்துக்கு பக்கம் இருந்து, அவர்களுக்குள் அடிக்கடி பொங்கி பின்பு தணியும் அதிர்வலைகள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. இரு கட்சிகளின் வேட்பாளர்களும் கட்சியின் கொடியினை தங்கள் வாகனத்தில் பறக்கவிட்டுக் கொண்டு கிளை அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்து போவார்கள்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தினை மட்டும் மறக்காமல் சொல்ல வேண்டும் போல் உள்ளது.
அங்கு கைகலப்புகளோ அல்லது மோதல்களோ ஒரு போதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. வாய்களினால் வடைகள் சுட்டு, பார்வைகளினால் எள்ளு கொள்ளு பறக்கும் அதிர்வலைகள் மட்டும் அங்கு சிதறியடிக்கும். அதனையும் பூதாகரமாக பெருப்பித்து உடைக்காமல் ஏதோ வழியில் சமாளித்து தணியப் பண்ணிப் போடுவார்கள். அதற்கு ஏதோ வழிகளில் ஒருவருக்கு ஒருவர் சொந்த காரர்களாகவும் மற்றும் நட்பு வட்டங்கள் என்ற உறவுகளுக்குள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சுதந்திரத்துக்கு முன்பே, தமிழர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்கள் மத்தியில் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களினால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிலிருந்து, பிரிந்த தமிழரசு கட்சி மிக வேகமாக வளர்ந்து தமிழர்கள் மத்தியில் செல்வாக்கின் உச்சத்துக்கு வந்து விட்டது.
1970 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் குப்பிழான் கிராமம் உடுவில் தேர்தல் தொகுதியில் அமைந்திருந்தது.
தமிழரசு கட்சியின் சார்பில் ஏற்கனேவே எம்.பி ஆக இருந்த திரு. வி.தர்மலிங்கம் வீட்டு சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகின்றார்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு.சிவநேசன் என்பவர் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவர் மானிப்பாய் இந்து கல்லூரியின் அதிபராக இருந்தவர், பொருளாதாரத்தில் பல்கலைகழக பட்டம் பெற்றவர் என ஒரு செய்தி இருந்தது.
உடுவில் தொகுதியில் இவர்கள் இருவருக்குமிடையிலேயே மிக கடும் போட்டி. இவர்கள் இருவரும் தவிர சுயேட்சையில் திரு.கு.விநோதன், திரு.முதலியார்,உட்பட லங்கா சமசமாஜ கட்சியில் திரு.காராளசிங்கம் என மூவர் போட்டியிட்டனர். இந்த மிகுதி மூவரும் கருத்தில் கொள்ளமுடியாத போட்டியாளர்கள்.
குப்பிழானில் அந்த நேரம் 95% வீதமானோர் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களின் சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே தென்பட்டது.
"கடுகு சிறிது.ஆனால் காரம் கடுமையானது" என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களின் தொகை அண்ணளவாக சுமார் ஒரு 5% வீதமாகியிருந்தாலும் அவர்களின் சலசலப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த நேரம் கிராமத்துக்கு மத்தியில் கடுமையான காரமாகவே அவர்களும் இருந்தார்கள் என்பதற்கும் ஏராளமான பழைய சம்பவங்களை இங்கு நினைவு கூரலாம்.
பாடசாலைக்கு முன்பாக உள்ள கரப்பந்தாட்டம் விளையாடும் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு, மின்னொளியில் தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார விழா ஏற்கனவே இரு கிழமைகளின் முன்பு இனிதே நடந்து முடிந்து விட்டது. அன்றய காலம் தமிழரசு கட்சியின் குப்பிழான் கிளைத் தலைவர் திரு. த. ஐயாத்துரை ஆவார்.
(சங்கிலிகார ஐயாத்துரையர் என அழைக்கப்படும் இவர் அண்மையில் அமரத்துவமடைந்த "குப்பிழான் ஐ.சண்முகன்" அவர்களின் தந்தையாவார். சிங்கப்பூரில் துறைமுகத்துக்கு அருகில் அந்த காலங்களில் கடை நடத்தி, சிறு தனவந்தராக 1945 ஆம் ஆண்டு நிரந்தரமாக குப்பிழானுக்கு வந்து விட்டார். அன்றைய காலங்களில் தமது பணங்களை செலவழித்து கூட கிராமத்தில் பல சமூக பணிகளில், ஈடுபாடு கொண்டவராகயிருந்து பின்னைய காலங்களில் ஏனோ தெரியவில்லை அவராக அமைதியான நிலையில் ஒதுங்கி கொண்டார்.)
அன்று இரவு அதே கிராமத்தின் மைதானத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார விழாவும் இதேமாதிரி மிக சிறப்பாக நடைபெறப் போகின்றது. விழா இரவு நடைபெறுவதற்குரிய மேடைகள் அமைக்கும் வேலைப்பாடுகள் பகல் நடந்து கொண்டுள்ளது. தமிழ் காங்கிரஸ் கட்சியின் குப்பிழான் கிளை தலைவராக சட்டதரணி க.வைரவநாதன் இருந்தார்.
இனி மேல்தான் ஒரு திரிலான கிராமத்தின் பழைய கதையின் தொடர்ச்சிக்கு வருவோம்.
அன்று பொழுதுபட்டு இருட்டு ஆரம்பிக்கும் நேரம்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெரும் திரளான மக்களை கொண்ட ஊர்வலம் ஓன்று அவர்களின் கட்சி கொடிகளுடன் ஏழாலை பக்கத்திலிருந்து குப்பிழானில் அமைக்கப்பட்ட விழா மேடையினை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
"போடு புள்ளடி" " சைக்கிளுக்கு நேரே"
"எங்கள் நேசன்" - "சிவநேசன்" என்ற கோஷங்கள் ஏதோ என எல்லா பாணிகளிலும் வானைப் பிளக்கின்றது.
ஊர்வலத்தில் நடுவே அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் வண்டி. சினிமா படத்தில் வரும் அரசியல்வாதிகள் மாதிரி திரு.சிவநேசன் அவர்கள் கழுத்து முட்டிய பூமாலைகளுடன் கையினை உயர்த்தி கூப்பியபடி வீதியோரம் இரு பக்கமும் நிற்கும் குப்பிழான் கிராமத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபடி, கை காட்டியபடி நிலையில் ஊர்வலம் நகருகின்றது.
இது தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் நிறைந்த ஊர் என்று தெரிந்தோ என்னவோ அங்கு பொலிஸ் பாதுகாப்புகள்.
(அந்த காலங்களில் காக்கி உடை அணிந்த பொலிஸார் கிராமங்களில் நடக்கும் விழாக்களில் சாதாரணமாக நின்றால் எதிரணியினர் மற்றும் குழப்பவியலாளர்கள் என எவரின் அட்டாகாசங்கள் எவையும் எடுபடாது அவர்கள் யாவரும் அடங்கி போவது என்பது சர்வசாதாரணமான விடயமாகும்)
டிராக்டர் வண்டியிலிருந்து பலத்த கோஷங்களுடன் வேட்பாளரை மேடைக்கு தூக்கி செல்ல ஒரு கூட்டம்.
கட்சி காரர்களின் மேடைப் பேச்சுகள் நடைபெறும்போது வானை பிளக்குமளவுக்கு ஓசையுடன் பலமாக கோஷம் எழுப்பி, விசில் அடித்து கை தட்ட ஒரு கூட்டம்.
இப்படி பெரிய ஆராவாரங்களுடன் விழா நடக்கின்றது. பார்த்தால் அவர்தான் வெற்றி பெறப்போகும் நாயகன் மாதிரி ஒரு தோற்றம். ஒன்றும் புரியாதவர்கள் பார்த்தால் குப்பிழான் கிராமத்தினுள் இவருக்கு இப்படியும் பெரும் ஆதரவுகள், செல்வாக்குகள், இருக்கின்றதா? என வியப்புடன் பார்க்க பண்ணும்.
அட கடவுளே----- சொன்னால் நம்புவீர்களா ?
நம்ம மண்ணில் அந்த இரவு மின்னொளியில் நடக்கும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திரண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோரும் மற்றும் வானை பிளக்கும் அளவுக்கு விசில் அடித்து கரகோஷம் எழுப்புவர்கள் என தென்படுபவர்கள் ஒருவரும் நம்ம ஊரவர்கள் அல்ல.
அப்படியென்றால் அவர்கள் யார்?
வேறு ஊர்களிலிருந்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நம்ம கிராமத்துக்கு அந்த ஊர்வலத்தில் ஆரவாரங்களுடன் பங்கு பற்றுவதற்கும், விழாவில் கரகோஷம் போடுவதற்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெட்ட தெளிவாக தெரிகின்றது.
அன்றைய இரவு தேர்தல் பிரசார விழாவும் கரகோஷங்களுடன் முடிந்து விட்டது. தொடர்ந்து தேர்தலும் முடிந்து விட்டது.
சவாலான போட்டியாக இருந்தாலும் 95% வீதமான குப்பிழான் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மாறி வாக்கு அளிக்கவில்லை.
தமிழரசு கட்சியின் வேட்பாளர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களே வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். குப்பிழான் கிராமத்து வாக்காளர்களின் ஆதரவு அவரின் வெற்றிக்கு கை கொடுத்தது என்றால் அதுவே இறுதியில் உண்மையாகியது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment