"தம்பி"
"நான் நிக்கிறேன் எண்டு பதறி கீழை விழுந்து கையை காலை உடைச்சு சாகாதை. நீ யாரென்று நான் பார்க்கவும் போறேல்லை. ஒருவருக்கும் உன்னை காட்டியும் கொடுக்கப் போறதுமில்லை. நான் இந்த இடத்தினை விட்டு வீட்டை போய் சேருறேன்".
"நீ கவனமாய் மரத்தாலை இறங்கு"
"கவனமாய் இறங்கி போய் சேர்ந்தால் காணும்."
தனது தோட்டத்து கிணத்தடி மரத்தில் அந்த கும்மிருட்டு நேரம் திருட்டுத்தனமாக இளநீர் பிடுங்குவதற்கு தென்னை மரத்தில் ஏறி மேல் வட்டுக்குள் பயத்தோடு ஒழித்து நின்ற பாலிய வயது நிரம்பிய அந்த இளைஞனை (Teen age boy) நோக்கி அண்ணாந்து மேலே பார்த்து சற்று கடுப்போடு சத்தமாக நம்ம கிராமத்தவர் ஒருவர் சொன்ன எச்சரிக்கை வார்த்தையே இதுவாகும்.
இந்த பழைய கிராமத்து கதையினை சொல்லும்போது இப்படியும் மனித நேயமுள்ள மனிதர்கள் நம்ம கிராமத்தில் முன்னொரு காலம் வாழ்ந்தார்களா? என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும்.
இந்த சம்பவம் 1970ம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் ஓர் நாள் நடந்தது.
அவர் யார் என்பதனை கதையின் முடிவில் சொன்னால்தான் சொல்லுவதும் ரசனையாக இருக்கும்.
இப்போது கதையினை தொடர்வோம்.
குப்பிழான் - மைலங்காடு வீதியில் அவரது பயிர் செய்கை தோட்டம். அந்த விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் ஓர் கிணறு. அந்த கிணற்றினை சுற்றி கொஞ்ச தென்னை மரங்கள். அந்த மரத்தில் இளநீர் குலைகள் தொங்கும்.
அந்த இரவு நேரம் இளநீர் பிடுங்கி குடிக்கவென வந்த மூன்று பாலிய வயது பெடியன்கள். ஒருவன் மர உச்சியில் உள்ள வட்டுக்குள் நிற்கின்றான். மற்றவர்கள் கீழே நிற்கின்றார்கள்.
இருட்டிலும் அடையாளம் காணமுடியாத கறுத்த மெல்லிய உருவம் கொண்ட அந்த தென்னை மர உரிமையாளர் அந்த நேரம் எதிர்பாராத நிலையில் அந்த இடத்துக்கு திடீர் என வந்திட்டார்.
கீழே நின்ற இருவரும் அந்த கும்மிருட்டுள் மாயமாக மறைந்து கொண்டனர். மரத்தின் மேலே நின்றவன் தப்ப முடியாது மாட்டிக்கொண்டான்.
எல்லோரும் அந்நியர்கள் அல்ல. நம்ம கிராமத்துப் பெடியன்கள்.
தனது கையிலிருந்த பிரகாசமாக ஒளி பாய்ச்சும் அந்த டார்ச் லைற்றின் ஒளி கதிர்களை கீழே நின்று தென்னை மர உச்சியினை நோக்கி பிரயோகித்தபோது, இக்கட்டான நிலைமையில் மாட்டுப்பட்டு எவனோ ஒரு நம்ம கிராமத்து பையன் தவிர்க்கின்றான் என்பதும் அந்த தென்னை மர உரிமையாளருக்கு அந்த கண நேரத்தில் புரிந்துவிட்டது.
"நான் இந்த இடத்தில நிக்கேல்லை. நான் போறேன்"
மீண்டும் ஒரு முறை இறுதி வார்த்தையாக சற்று உரத்த கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு அந்த கருமையான மெல்லிய உருவ மனிதன் கையிலிருந்த தமது டோர்ச் லைட் வெளிச்சத்தினை பிடித்தபடி அந்த கும்மிருட்டில் அந்த வீதியால் விறு விரென்று தனது வீட்டினை நோக்கி போய் கொண்டிருப்பதனை இந்த இளநீர்கள் பிடுங்கிய நம்ம கிராமத்து மைந்தர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
இந்த செயல் ஒரு மனிதனின் "மனித நேயம்" என்பதின் அதி உச்ச நிலை.
இளநீர் பிடுங்கிய மைந்தர்களுக்கு அந்த இளநீர்களை வெட்டி குடிக்க முடியாதளவுக்கு மனச்சாட்சியின் குற்ற உணர்வுகள் அந்த வயதிலும் அந்த கணத்தில் கொஞ்சம் உறுத்தியிருந்தது என்பதனையும் இரகசியமாக இங்கு சொல்லத்தான் வேண்டும்.
அந்த காலங்களில் ஊரில் பாலிய வயது இளைஞர்கள் (Teen age boys) அவர்களுடைய வயதுக்குரிய சுபாவங்களில் செய்யும் இதே மாதிரியான விளையாட்டுத்தனமான திருட்டு சம்பவங்களினை இப்படியான வழியில் கையும் மெய்யுமாக பிடித்துவிட்டால் சில கிராமத்தவர்கள் ஊரையே கூட்டி பறை சாற்றுவதனை பார்த்த அனுபவங்கள் பல உண்டு.
ஏதோ கொடூரமான சர்வதேச குற்றவாளியினை பிடித்து பகிரங்கப்படுத்தும் துப்பறிந்த நிபுணர்கள் மாதிரி நிற்பார்கள். அந்த நிகழ்வினை பரபரப்பான செய்தியாக ஊரெங்கும் பரப்பிட பலரும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆவலில் நிற்பார்கள்.
அனேகமாக இன்றைய காலங்களில் இருப்பது போல் அந்த காலங்களில் விளையாட்டு தனமான இளநீர் திருடும் இளைஞர்கள் இப்படியான நிலைமையில் பிடிபடும்போது தப்பிக்கொள்வதற்கு வன்முறைகளினை பிரயோகிப்பவர்களுமல்ல. அவர்கள் வன்முறைகளினை பிரயோகிப்பார்கள் என கிராமத்தவர்களும் சந்தேகங்கள் எழுப்பி தங்களுக்குள் அச்சபடுவதுமில்லை.
"இஞ்சை இளநீர் பிடுங்கிறவங்களை பிடிச்சுப் போட்டேன்"
என்று ஓர் குரல் எழுப்பினாலேயே போதும். அயலவர்கள் எல்லாம் எந்த சாமத்திலும் கூடிவிடுவார்கள். அப்படித்தான் அன்றய கிராமிய சூழல் இருந்தது.
ஆனால் கொஞ்சம் கடுப்பு உள்ளுக்குள் இருந்தாலும் இந்த மனிதன் அந்த சம்பவம் பற்றி தொடர்ந்தும் எவருக்கும் பறை சாற்றவுமில்லை.
அமைதியாகவே என்றும் ஊரில் வாழும் அந்த மனிதனும் இந்த விடயத்திலும் அமைதியாகவே இருந்து விட்டார்.
அவர் யார்?
"சிவஞான வாத்தியார்"
அவர் இறந்து விட்டார்.
ஆனால் இறந்தும் அவரின் சுபாவங்களினால் பலர் மனதில் இறவாமை பெறுகின்றார்.
சில நேரங்களில், சில மனிதர்கள் காட்டும் மனிதாபிமானமும், அமைதியும் அவர்களை என்றும் இறவாமை பெறும் பாக்கியத்தினை உருவாக்கி கொடுக்கின்றது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment