தாயக மண்ணின் யுத்த காலங்களின் முன்பு நம்ம ஊர் சந்தி எப்போதும் வேறு எந்த ஊர்களிலும் இல்லாதளவுக்கு ஓர் விசித்திரமாகவே எப்போதும் இருக்கும். அது விடுகாலிகள், காவாலிகள் கூடும் இடம் என்ற திருநாமங்களும் இல்லாமலும் இல்லை.
சந்தியின் நான்கு பக்கமும் உள்ள ஊர் காட்டி சிறு மதிலில் ஏறி குந்தியிருப்பவர்களும் அவர்களினை சுற்றி ஒரு கூட்டங்கள், மற்றும் ஆங்காங்கே வீதியோரமாக, தேநீர் கடைகளுக்கு முன்பாக சைக்கிளில் வந்து கால் ஊன்றிய நிலைமைகளில் நின்று அரட்டையடிக்கும் கூட்டங்கள், என்பவை ஊரில் சர்வசாதாரணமாக தினமும் நேரகாலமில்லாது தொடரும் விடயங்களாகும்.
சில சந்தர்ப்பங்களில் வீதியால் கடந்து செல்பவர்களுக்கே இந்த கூட்டங்களின் குவியல்கள் தடையாகயிருக்கும்.
இருட்டிய பின்பு இருட்டுக்குள் நின்று வீதியால் போகின்றவர்களை குரலை மாற்றி வீண் வம்புக்கு அழைக்கும் அதி உச்ச விடுகாலிகள், காவாலிகள் என்ற பெயர் பெற்ற கூட்டங்களும் அந்த மதவுகளில் இருப்பார்கள்.
இவர்களின் தொல்லைகள் எல்லை தாண்டி போகும் போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அடிக்கடி போகும். சந்திக்கு அருகில் குடியிருக்கும் தலைமையாசிரியர், பிரகிரஸியர் போன்றவர்களினால் தான் முறைப்பாடு பொலிசுக்கு போவது என்பது பரம இரகசியமான விடயமாகும்.
சுன்னாகம் பொலிஸ் ஸ்டேஷனிலிருந்து பொலிஸ் குழு இடைக்கிடை குப்பிழான் சந்திக்கு அவர்களின் ஜீப்பில் வந்து இறங்குவார்கள்.
அடுத்து என்ன நடக்கும் ? இனிதான் கதையின் கிளைமாக்ஸ்.
பொலிஸ் ஜீப்பினை கண்டதும் விசில் அடித்துக்கொண்டு நம்ம சந்தியில் நிற்கும் பையன்கள் ஓட தொடங்கினால் அவர்களை துரத்தி பிடிப்பது என்பது இயலாத காரியமாகும் . இது பொலிசாருக்கு எப்போதும் ஒரு கடுப்பாகவே இருக்கும்.
ஒருவனையாவது துரத்தி பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் ஓட்டங்களில் திறமையான பொலிஸ்காரன் ஒருவரை தயார் நிலையில் ஏற்றிக்கொண்டு குப்பிழான் சந்தியில் ஒருநாள் பொலிஸ் ஜீப் வந்து நின்றது.
பொலிஸ் ஜீப்பினை கண்டதும் உடுத்திருந்த சாரங்களினை கழரவிடாமல் அதனையும் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள பனம் காணிகள் ஊடாக பையன்கள் பாய்ந்தடித்து ஓட தொடங்கினார்கள்.
அந்த ஓட்ட வல்லுரனான பொலிஸ்காரன் நம்ம கிராமத்தவன் ஒருவனை இலக்கு வைத்து துரத்தி ஓடி கொஞ்ச தூரத்தின் பின்பு அந்த பையனின் பின் பக்க சேர்ட்டு கொலரில் பிடிக்க கை நீட்டியதும் இனி தப்பமுடியாது என்ற நிலையில் அந்த பையன் என்ன செய்தான் தெரியுமா ?
படார் என்று கீழே இருந்தான்.
பின்னால் துரத்தி வந்த பொலிஸ்காரன் அவன் மேல் இடறி விழுந்து பக்கத்திலிருந்த பனை மரத்தோடு மோதி சுழன்றடித்து விழுந்தான். அந்த கணப்பொழுதில் நம்ம ஊர் பையன் பக்கத்துக்கு வளவுகளுக்கால் பாய்ந்து ஓடி தப்பிவிட்டான்.
இந்த தற்பாதுகாப்பு நுட்பத்தினை அந்த கணப்பொழுதில் பயன்படுத்திய குப்பிழான் கிராமத்து வீரன் யார் தெரியுமா ?
குட்டியரின் மகேஸ்வரன். CTB சாரதியாக பின்நாட்களில் பணிபுரிந்தவர்.
இங்கு இன்னுமோர் நகைச்சுவையான செய்தி உண்டு.
கனடாவுக்கு வந்த முதல் நம்ம ஊரவர் என எங்கள் கிராமத்து நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவரின் நெற்றியில் ஒரு வெட்டு காயம் எப்போதும் அழியாது காட்சி தரும்.
அது எப்படி ஏற்பட்டது என வினவினால் சொல்ல கொஞ்சம் சிரமப்படுவார்.
அது வேறு ஒன்றுமல்ல.
சந்தியில் நின்றபோது பொலிசாரை கண்டதும் பக்கத்துக்கு பனம் காணியூடாக விழுந்தடித்து ஓடி சும்மா நின்ற பனை மரத்தோடு மோதி,விழுந்து ஏற்படுத்திய காயம்.
நான் அறிய சந்தி மதவில் இருந்தவனை பொலிசார் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்ற பரபரப்பான செய்திகளும் சில நேரங்கள் ஊரில் தீயாக பரவும். பொலிஸ் சிறை கூட்டுனுள் இருந்துவிட்டு எப்படியோ ஒரு நாளில் சிறை மீண்ட செம்மலாக வெளிவருவார்கள்.
ஆனால் சிறை மீண்ட அந்த செம்மல்களோ அல்லது பொலிஸாரால் துரத்தப்பட்டு தப்பிய சந்தியில் நிற்கும் பையன்களோ வாழ்வில் திருந்தி தொடர்ந்து சந்தியில் நிற்காமல் விட்டார்கள் என்ற சரித்திரமும் ஒருநாளும் இல்லை.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment