கிராமத்தின் கதைகள் 07 - தமிழ் காங்கிரஸ் கட்சி கிளை திறக்க வந்த ஜி.ஜி.பொன்னம்பலம்

 

"கேடு கெட்ட ஊர்.

ஒரு நாளும் இனிமேல் இந்த பக்கம் வரக்கூடாது"

என அன்றொரு நாள், அந்த இரவு நேரம், நம்ம ஊர் மண்ணை விட்டு காருக்குள் ஏறி கிளம்பும்போது முன்னாள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்  தலைவர், பிரபல சட்டமேதை, திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் சற்று கடுப்போடு வாயுக்குள் புறுபுறுத்துக் கொண்டு சொன்ன அந்த வார்த்தை அந்த காலம் தொட்டு கிராமத்து இளைஞர்களுக்கு நகைசுவையாகத்தான் தென்பட்டு வந்தது.

இது நடந்தது 1969 ஆம் ஆண்டு. 

நம்ம ஊர் வாசிகசாலை சந்திக்கு அருகிலிருந்த பாணர் பொன்னம்பலம் அவர்களின் கட்டிடத்து அறை ஒன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கிளை ஓன்று திறக்கப்படுகின்றது. அதனை திறந்து வைப்பதற்காக தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஊருக்கு வருகின்றார்.

அந்த காலத்தில் "கிராமிய சூழல்" என்பது எப்படியிருந்திருக்கும் ? என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது..

மின்சார வெளிச்சம் என்பதனை கண்டிராத காலம். எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணையில் எரியும் விளக்குகளில் மட்டுமே இரவு நேர வாழ்வு ஓடும்.

இப்படியாக சிறு விழா நடக்கும் இடங்களில் மட்டும் சற்று ஒளி விடும் "பெட்ரோல்மாக்ஸ்" என்ற ஒளி விளக்கு சாதுவாக பிரகாசிக்கும்.  

ஊருக்குள் திரிவது என்றால் சேட்டு அணிய தேவையில்லை என்ற பழக்கத்தில் சாரத்தினை மடிச்சு கட்டிக்கொண்டு புகையிலை சுருட்டினை வாயில் வைத்து புகை விட்டுக்கொண்டு வருவோர் உட்பட  சற்று நாகரிகமாக சாரத்துக்கு மேல் சேட்டினை அணிந்து பொழுது போக்குக்காக சந்திக்கு, வீதிக்கு வரும் இளைஞர் கூட்டங்கள் விழா நடக்கும் இடங்களில் கூடியிருப்பார்கள். 

கதை, பேச்சுகளில் கிராமத்தின் வாசனை வந்து கொண்டேயிருக்கும்.

கள்ளு மாதம் என்றால் அதன் சோமபானத்தின் பரவசம் சொல்ல தேவையில்லை. இடைக்கிடை இரவு நேரங்களில் கள்ள சாராயம் விற்போரிடம்  இரகசியமாக வாங்கி ஒரு "பெக்" வாய்க்குள் விட்டுட்டு வீதிக்கு வருவோர் என இன்னொரு கூட்டம் இருக்கும்.

இதுவே தென் இந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சொல்லும் அற்புதமான  "கிராமியம்".

இதே கிராமியத்தின் விழுமியங்களோடு அந்த கட்டிடத்துக்கு முன்பு கிராமத்தவர்கள் கூடியிருக்கின்றனர்.

அன்றைய இரவு திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அங்கு வந்து சேர இரவு 10 மணியாகிவிட்டது.

அதற்கிடையில் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் என்று வேட்டி கட்டி வெள்ளை சேட்டு, சால்வையுடன் அங்கு சுறுசுறுப்பாக நின்றவர்கள் உட்பட மற்றும் சிலர் இடைக்கிடை அங்கிருந்து நகர்ந்து போய் சில்லறைகளினை கொடுத்து இரகசியமாக ஏதோ வாய்க்குள் விட்டு நனைத்துக் கொண்டு சற்று கணகணப்புடன்  வருவதும் மர்மமாகவே இருந்தது. 

இங்கு இன்னுமோர் விடயத்தினை தவறாது சொல்லியேயாக வேண்டும்.

முன்னர் இலங்கையில் தமிழர்களிடையே "தமிழரசு கட்சி" , "தமிழ் காங்கிரஸ் கட்சி" என இரு கட்சிகளும் மோதிக் கொண்டிருந்த காலம்.

இங்கு "குப்பிழான்" என்ற நம்ம ஊர் தீவிரமான தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களினை கொண்ட ஓர் ஊர். அந்த ஊரினுள் தமிழ் காங்கிரஸ் கட்சியின் கிளை ஓன்று திறப்பது என்பது எதிரியின் கோட்டைக்குள் ஆட்சி செய்ய காலடி வைக்க முயற்சிப்பது மாதிரி இருந்தது.  

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இரவு காலதாமதமாக வந்து சேர்ந்து விட்டார்.

குமார் ஐயரின் வாயிலிருந்து ஒலித்த மந்திரங்கள், பூஜைகளுடன் கிளை திறப்பு முடிவடைந்து, ஒலி பெருக்கி எவையுமில்லாது அவரின் உரை தொடங்கிவிட்டது.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அவரோடு சேர்ந்த விழா ஒருங்கமைப்பாளர்களும் மட்டும் இருப்பதற்கு நான்கு கதிரைகள் மட்டும் அங்கு இருந்தது. பார்வையாளர்கள் எல்லோரும் நெருக்கமாக நிலத்தில் இருந்தனர். 

கதிரையில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்கு அருகில் வேட்டி நாஷனல் அணிந்து இருக்கும் ஒரு சிலரில் முக்கியமானதொரு வி.ஐ.பி  "சேர்மன் சிவகுருவர்".

வழமையான அரசியல் கருத்தரங்குகளில் நடப்பது போல் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தினை நோக்கி கேள்வி கேட்கும் படலங்களும் என தொடர்கின்றது.

அங்கு ஒவ்வொருவரின் கேள்வியிலும் மறைமுகமான சின்ன குதர்க்கம் இருக்கும். கிராமிய பாணியில் தமாஷ்களும் இருந்தது.

அந்த இடத்தில் நம்ம கிராமத்தவர் ஒருவரின் சிறு குதர்க்கம்.

ஆனால் அதிலும் ரசிக்கக்கூடிய ஓர் நகைசுவை.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஓர் சொல்லை ஆங்கிலத்தில் சொல்லி முடிப்பதற்குள் நம்மவர் ஒருவர் அவரது உரையினை பணிவான முறையில் வேகமாக இடை மறித்தார்.  

"ஐயா, மன்னிக்க வேணும்.

நீங்கள் சொன்ன ஆங்கில வார்த்தை உங்களுக்கும் விளங்கும். எனக்கும் விளங்கும்.

ஆனால் தமிழிலையும் சொல்லுங்கோ. சிவகுரு ஐயாவும் இருக்கின்றார்" 

அந்த கிராமத்தவருக்கும் அதில் சிவகுருவரோடை  ஒரு லொள்ளு சேட்டை.

பெரிய மனிதனாக கதிரையில் இருந்த சிவகுரு ஐயா எதுவித பிரதிபலிப்பினையும் காட்டி கொள்ளாதமாதிரி இருந்தேயாகவேண்டிய நிலைமையில் இருந்திருந்தார்.

கட்டிடத்துக்கு வெளியே வீதியில் ஏன் என்று காரணமில்லாது பலமான சத்தத்தில் ஒருவருக்கொருவர் நிறுத்துகை என்பதே இல்லாது  கோஷ்டியாக தூஷண பூஷண வார்த்தைகளில் மோதல் நடந்து கொண்டிருப்பதும் சர்வ சாதாரணமாக காற்றொலியில் பறந்து கொண்டிருக்கின்றது.

அந்த நேரம் பார்த்து இடைக்கிடை படார் படார் என்று கட்டிடத்தின் மேல் கூரைக்கு கல்லெறிகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றது. 

எந்த வேகத்தில் கருத்தரங்கு உரையினை முடித்துவிட்டு  ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அந்த இடத்தினை விட்டு கிளம்பினார் என சொல்ல முடியாது. ஆனால் காரில்  ஏறி போகும்போது சொன்ன வார்த்தை நகைச்சுவையாக கருதலாமா ? என்பதனை இன்றைய காலங்களில் சிந்திக்க பண்ணுகின்றது.

அதன் பிறகு எத்தனையோ அரசியல் தலைவர்கள் நம்ம ஊரில் உள்ள விழாக்களுக்கு வருகை தந்திருந்த போதும்  திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் மட்டும் என்றுமே தலைகாட்டவேயில்லை.  

குப்பிழான் றஞ்சன்- 


Post a Comment

Previous Post Next Post