கிராமத்தின் கதைகள் 20 - குப்பிழான் எதிர் மயிலிட்டி உதைபந்தாட்ட விளையாட்டு மைதானத்தில் மோதல்

(கோப்புப்படம்)


அந்தக் காலத்தில் நம்ம கிராமத்தவர்களில் ஓர் புதிரான சுபாவம் ஒன்று இருந்தது.

கிராமத்தவர்களில் எவனாவது ஒருவன் மீது வேற்று ஊரவர்கள் எவராவது தேவையில்லாமல் மோதினால் தென்னிந்திய தமிழ் சினிமா படங்களில் வருவது போல் உடனடியாக கிராமமே ஒன்று திரண்டு எதிர்த்து மோதும்  சம்பவங்கள் பல தரம், பல இடங்களில் நடந்துள்ளது.

உதாரணமாக பின்வரும் சண்டைகள், மோதல்களினை இங்கு குறிப்பிடலாம்.

(1) குப்பிழான் எதிர் மயிலிட்டி. 

(2) குப்பிழான் எதிர் வசாவிளான். 

(3) குப்பிழான் எதிர் சுன்னாகம்.

(மேல் குறிப்பிட்ட மூன்று சண்டைகளும் வெவ்வேறு காலங்களில்  உதைபந்தாட்ட விளையாட்டுப்போட்டி மைதானத்திலிருந்து ஆரம்பித்தது.)

(4) குப்பிழான் எதிர் ஏழாலை 

(5) குப்பிழான் எதிர் புன்னாலைக்கட்டுவன்.

இப்படி சில சண்டைகளினை இங்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சண்டையிலும் விதம் விதமான ரசனைகள். அனுபவங்கள்.

ஆனால் ஓன்று.

அவைகள் உருவாக்கிய வேகம், மோதிய வேகத்தில் அடுத்த கட்டமாக அதே வேகத்தில் எப்படியோ தணிந்து விடும். எந்தச் சந்தர்ப்பத்திலும் வருடம் வருடமாக பகைமைகள் தொடர்வதில்லை. பல இடங்களில் சமாதானமாகவே தீர்த்து வைக்கப்படுவது வழமையாக நடந்துள்ளது..

இங்கு உதாரணத்துக்கு இப்படியான சண்டைகளில் ஒன்றினை கொஞ்சம் விபரமாக சொல்லப் போகின்றேன். தொடர்ந்து படியுங்கள். 

இன்று 2024 ஆம் ஆண்டில், நம்மூரவர்களில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்தச் சம்பவத்தின் நேரடி சாட்சிகள். ஏனையோர் யாவரும் வாய்மொழி மூலம் அறிந்து வைத்திருப்பவர்கள்.

1950 ஆம் ஆண்டுகளில் ஓர் நாள்.

காங்கேசன்துறை விளையாட்டு மைதானத்தில் குப்பிழான் - விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்துக்கும் மயிலிட்டி ஊரவர்களின் விளையாட்டுக்கழகம் ஒன்றுக்கும் இடையில் மிக உக்கிரமாக உதைபந்தாட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. .

வாய்மொழி மூலம் நம்ம மூதாதையர்களிடமிருந்து அறிந்து கொண்ட இந்த பழைய கதையினை சொல்ல முன்பு அந்த காலத்தில் குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் எப்படிருந்தது? என்றதொரு விடயத்தினை முதலில் சொல்லிவிட்டு கதையினை தொடர்வோம்.

"மிகத் திறமையான உதைபந்தாட்ட வீரர்கள். அவர்கள் விளையாட்டு பாதணிகள் என எவையுமே அணியாது வெற்று கால்களுடன் விளையாடுவார்கள். எதிரணியில் விளையாட்டு பாதணிகள் அணிந்து விளையாடும் எங்கள் கால்களில் பயிர்ச்செய்கை தோட்டங்களில் வேலை செய்து பழக்கப்பட்ட அவர்களின் வெற்று கால்கள் தடுமாறி தட்டுப்பட்டாலே போதும். கால்களின் வலி தாங்க முடியாதிருக்கும். எங்களால் எதிர்த்து விளையாடி வெற்றி பெறமுடியாத நிலைமை  பல இடங்களில் இருந்ததுண்டு"

இப்படியான வார்த்தைகளினை பல எதிரணி விளையாட்டு வீரர்கள் சொல்லியதனை பல இடங்களில் பலரும் கேள்விப்படுவதுண்டு.

அந்தக் காலங்களில் குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தில் வெவ்வேறு  நிலையிலும் நின்று விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் மிக சிறந்த வீரன் என என நம்ம கிராமத்து மூதாதையர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

சரி. அப்படியென்றால் அவர்களிடம் இளைய தலைமுறையினர் முன் வைத்த ஓர் கேள்வி?

எல்லோரும் மிக சிறந்த விளையாட்டு வீரர்கள் என்றால் அன்று தொடக்கம் இன்று வரை கிராமத்தின் உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களில் மிகவும் தலைசிறந்த வீரன் என ஒருவரை தெரிவு செய்து சொல்லுங்கள் பார்ப்போம் என்ற கேள்வியினை எழுப்பும் போது அவர்கள் யாவராலும் ஏகமனதாக குறிப்பிடப்படுபவர்  எவர் தெரியுமா?

நம்மூரவர் "திரு .சீனியர் தங்கராசா".

20 ஆம் நூற்றாண்டின் உலக புகழ்பெற்ற தலைசிறந்த உதைபந்தாட்ட விளையாட்டு வீரன், பிரேஸில் நாட்டினை சேர்ந்த திரு.பிலே (Pile- professional foot baller)  என்ற விளையாட்டு வீரனின் பாணியில் விளையாடுபவர் என இவரின் விளையாட்டு திறமையினை பார்த்தவர்கள் சொல்லுவார்கள்.

இதில் இன்னொரு விடயத்தினையும் சொல்லாமல் நகரக்கூடாது.

குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டு வீரர்கள் யாழ் குடாநாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் அதனை பார்க்கும் ரசிகர்களாக மைதானத்தினை சுற்றி  கைதட்டி, விசில் அடித்து உற்சாகப்படுத்தவென மிக திரளான கிராமத்தவர்களின் கூட்டம் எப்போதும் படை திரண்டு நிற்கும்.  

ஒரு விடயம் தெரியுமா?

உதைபந்தாட்டப் போட்டிகள் நடக்கும் அந்த மாலை நேரங்களில்  கிராமத்து ஆண்கள் ஒருவரையும் வீடுகளில் பார்க்க முடியாது. உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி எந்த ஊர் மைதானத்தில் நடக்கின்றதோ அந்த மைதானத்தினை சுற்றி ரசிகர் பட்டாளங்களாக நிற்பார்கள்.

அந்த தீவிர ரசிகர்கள் தான் கிராமிய அபிமானம் அதி உச்சமாக கொண்ட சண்டைகளின் ஆரம்ப கர்த்தாக்கள்.

முக்கியமாக குணசம்பந்தர், சீனியர் - அம்பலம், கட்டவாணி கணேசன்   என பலரின் பெயர்களினை சொல்லிக் கொண்டே போகலாம்.

விளையாட்டு மைதானத்தில் மோதல் தொடங்கினால் இவர்கள் சண்டைகளின் ஹீரோக்கள்.  சண்டையின் ஹீரோக்களுக்கு அந்த இடங்களில் பல கிராமத்தின் துணை சண்டியர்கள் துணையாக நிற்க என்றுமே தவறுவதில்லை என்பதும்  ஒரு ரசனைக்குரிய தகவல்.  .

இதில் "சீனியர் - அம்பலம்" என்பவர் பற்றி ஒரு ரசனையான   விடயத்தினை மட்டும் சொல்லிவிட்டு கதையினை தொடருவோம்.

வேட்டியினை மடித்து கட்டிக்கொண்டு, சேட்டு அணிவதற்கு பதிலாக ஒரு சால்வையினை மட்டும்  தோளில் போட்டுக் கொண்டு வெளிக்கு வரும் கிராமத்தவர்.

தோளில் போட்டிருக்கும் சால்வைக்குள் கல் ஒன்றை எடுத்து மறைத்து வைத்து ஊர் சண்டைகளில் எதிரியினை நோக்கி  சால்வையினைத் தான் அவர் உதறுவார். கல் எதிரியினை போய் தாக்கும். எவர் கல் எறிந்தவர் என்பதனை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அவரின் யுத்தநுட்பம்.

சரி இனி விடயத்தினை தொடர்வோம்.

அன்றொரு நாள் காங்கேசன்துறை விளையாட்டு மைதானத்தில் மிக உக்கிரமாக உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எதிரணியினரின் வெற்றியினை தடுக்கும் இறுதி இலக்கில் பந்து பிடிப்பவராக 

(Goal keeper)  திரு.சின்னத்தம்பி - நடராஜா அவர்கள் திறமையாக  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

(திரு. சின்னத்தம்பி - நடராஜா அவர்கள் யார் என்பதையும் கிராமத்தின் இளைய தலைமுறைக்கு தெரிவித்தேயாக வேண்டும். சட்டதரணி/அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் அவர்களின் தாய் மாமன். அவர் வாழ்ந்த அவரின் வீட்டு அலுவலகத்திலேயே இப்போது யோதிலிங்கம் தனது சட்ட அலுவலகத்தினையும் நடாத்தி வருகின்றார். திரு. சின்னத்தம்பி - நடராஜா அவர்கள் தமது 92 வயதான நிலையில் தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். கூடைப்பந்தாட்ட விளையாட்டில் (Basket ball) தேசிய ரீதியான அணியில் ஒருவராக அந்தக் காலங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்களின் அணியோடு கடல் மார்க்கமாக பிரயாணம் செய்து அங்கு சென்று விளையாடிய கிராமத்தவர். விஞ்ஞான பட்டதாரியாகிய இவர் யாழ் - மத்திய கல்லூரியில் ஆசிரியராக அந்தக் காலங்களில் பணி புரிந்தவர்).

பந்தோடு துரத்தி வந்த எதிரணியினரில் ஒருவன் எதிரணியினரின் வெற்றியினை தடுக்கும் இலக்கில் பந்து பிடிப்பவராக நின்ற இவருக்கு ஏதோ தெரிந்தோ தெரியாமலோ காலால் தட்டி விட்டான்.

இதுதான் சண்டையின் ஆரம்பம்.

தொடர்ந்து நம்ம கிராமத்தின் அதி உச்ச அபிமானம் கொண்ட மைந்தர்கள் என்ன சும்மாய் விடுவார்களா ?

விளையாட்டு அணியில் பின் பக்கமாக நின்று விளையாடிக் கொண்டிருந்த திரு.நடனசிகாமணி என்பவர் முதலில்  திருப்பி பாய்ந்து அடித்து சண்டையினை தொடக்கி வைக்க அந்த மைதானமே போர்க் களமாக மாறிவிட்டது. அங்கு பார்வையாளராக நின்ற ஏழாலை ஊரவர்களும் அயல் கிராமத்தவர்கள் என்ற அபிமானத்தில்  குப்பிழானாருக்கு ஆதரவாக நின்று மோதினார்கள். 

 உதைபந்தாட்ட விளையாட்டில் மட்டும் நம்மவர்கள் வீரர்கள் அல்ல.

சண்டையிலும் சளைக்கமால் கூட்டாக நின்று மோதும் வீரர்கள் என்பதனை விளையாட்டு மைதானத்தில் நடந்த போர் களத்தில் காட்டி விட்டார்கள்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தின் தமிழ் பத்திரிகைகளில் முக்கியமான செய்தி.

"உதைபந்தாட்ட மைதானத்தில் பெரும் போர்.

யாழ்- மத்திய கல்லூரி ஆசிரியர் திரு.நடராஜா அவர்கள் தாக்கப்பட்டத்திலிருந்து மோதல் ஆரம்பமாகியது".

பரவாயில்லை.

"குப்பிழான்" என்ற கிராமம் தனி கிராமமாகவும் உருவாக்கப்பட்டது, அது  எங்கே இருக்கின்றது என்றால் பல இடங்களில் பல வேற்று ஊரவர்களுக்கு தெரியாமல் இருந்த காலங்களில், இந்த சண்டையினை தொடர்ந்து கிராமம் கொஞ்சம் பலருக்கும் அறிமுகமாகிவிட்டது.   

குப்பிழான்- விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகமும்  மேலும் பலருக்கும் பிரபல்யமாக   அறிமுகமாகியது.

(கிராமத்தின் எல்லைக்குள் வாழ்ந்த நாம் இன்று சிதறுபட்டு, பரந்து பட்ட நிலையில் வாழும் நிலைமையில் ஓர் சிறு ரசனைக்காக அந்த ரசனையில் கொஞ்ச நேரம் தேடும் சில நகைசுவைக்களுக்காக  பழைய கதைகளினை பகிர்ந்து கொள்கின்றோமோ தவிர எவரையும் நோகடிக்கவல்ல என்பதனை சகலரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம்)

குப்பிழான் றஞ்சன்- 


Post a Comment

Previous Post Next Post