"கற்கரை பிள்ளையார் கோயிலுக்குள்ள மற்ற சாதிக்காரர் வந்து இறங்கிட்டாங்களாம். தெரியுமோ?"
"எப்ப நடந்தது" ?
"இண்டைக்கு மத்தியானம். அவங்கடை திமிரை பாரேன். வெள்ளை வேட்டி, சால்வை கட்டி அர்ச்சனை தட்டங்களோடை கோயிலுக்குள்ள சாமி கும்பிட வந்துட்டினம். குமாரையா ஒன்றும் செய்யேலாது என்று பார்த்துட்டு அர்ச்சனையினை செய்து கொடுத்துட்டாராம்".
"அவன் தம்பன்ரை ராசன்ரை துணிச்சலை பாரேன். விபூதி குறியிட்டு கையிலை பழங்களோடை அர்ச்சனை தட்டம்"
"உவங்கள் குணசிங்கம் ..............., .......... எல்லாரும் புது வேட்டி கட்டி கழுத்தில ஒரு உருத்திராக்க மாலை. எல்லாரும் விட்ட இடம். எவ்வளவு துணிச்சல் பாருங்கோவேன்"
அட தெய்வமே ---------------அவர்கள் அப்படி வந்தால் உங்களுக்கு என்ன செய்யுது?
அவர்களும் எங்களை போன்ற ஓர் மனித பிறவிகள் அல்லவா?
உள்ளம் கால் தொட்டு உச்சம் தலை வரை சூடேறி மிளகாய் தண்ணி குடிச்ச
குட்டி நாய்கள் மாதிரி கத்திக்கொண்டு திரிஞ்ச கூட்டங்கள் ஒரு பக்கம். அதற்கு பக்கவாத்தியங்கள் வாசிப்பவர்கள் இன்னொரு பக்கம்.
ஆழமாக பார்த்தால் அங்கு ஒன்றுமில்லை. ஆனால் மக்கள் பார்வையில் குப்பிழான் கிராமத்தினையே கலங்க வைத்த ஓர் சமூகப் புரட்சி நடந்த நாள் மாதிரி என்றே சொல்ல வேண்டும்.
1979 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை தின நாள்.
அன்றைய மதிய நேரம்.
நம்ம ஊர் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மனித ஜென்மங்களும் ஆலய பிரவேசம் செய்து, சமனாக நின்று சாமி கும்பிட்டு எம்பெருமான் பிள்ளையாரின் திருவருளினை பெற்றுப் போட்டார்கள் என பலருக்கும் இரத்த அழுத்தம் (Blood pressure) உச்சத்திலை ஏறியிட்டுது. ஊரே தலை கீழாக பிரண்டு விட்டது போன்று பெரும்பான்மையான சனங்களின் சித்த சுவாதீனமற்ற பார்வைகள்.
"ஏன் அவர்கள் உள்ளே வந்து சாமி கும்பிடக்கூடாது? (What do you so mean ? Why this crual discrimanation?)
வெளிநாடுகளில் பிறந்து, உலகம் எங்கும் பரந்துபட்ட அடிப்படையில் சிந்திக்கும் நம்ம புதிய தலைமுறையினர் ஆச்சரியத்தோடு இப்போது கேட்கும் கேள்வி.? எப்படி பதில் சொல்வது?
அது ஒரு அறியாமை என்றதொரு எண்ணங்கள் அந்த காலங்களில் அழித்து, துடைத்தெறிய முடியாதளவுக்கு சிந்தனையில் ஊறி விட்டது என்பதனை எல்லோரும் இன்றைய காலங்களில் தலை குனிவோடு ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
இந்த இடத்தில் இன்னொரு நகைச்சுவையான விடயத்தினையும் இரகசியமாக சொல்லத்தான் வேண்டும்.
"கோயிலுக்குள்ளை அவங்கள் வந்தால் நாங்கள் கொஞ்சப்பேர் கோபத்திலை அடித்து நொறுக்கி கொல்பவன் போல் பாய்வோம். நீங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து எங்களை விடாமல் கட்டி பிடியுங்கோ. அவங்களை எனக்கு தெரியும். நடுக்கத்திலை ஓடி பறந்திடுவாங்கள்"
இப்படியெல்லாம் கொஞ்சம் நகைச்சுவையாக, நிற்கும் இடத்தில் ஒரு வெடி சிரிப்பினை உருவாக்கும் இரகசிய ஐடியா கொடுக்கக் கூடியவர் யார் என்று நினைகின்றீர்கள் ? சொல்லத் தேவையில்லை.
அவர் தான் "பரியாரி ராசப்பா"
"இது உங்கடை பழைய காலமல்ல. உந்த நாடக விளையாட்டுகள் வேண்டாம். அறவழியில் ஆலய பிரவேசம் என்று சொல்லிக் கொண்டு இரவோடு இரவாக இரகசியமாக தியாகியாக்கும் குழுவும் எங்கே நிற்கிறாங்கள் என தெரியாது பின்னாலை நிற்பதாக ஒரு செய்தி."
அவரின் குறுக்கு மூளையிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கு இடைமறித்து மெத்த இரகசியமாக காதுக்குள் புத்திமதி சொன்னார் அவரோடே சேர்ந்தவர் ஒருவர்.
பரியாரியார் பகிடி நாடகங்கள் விளையாட்டுகளினை கோயிலுக்குள் போட்டடிக்கும் கதைகள், அடுத்தவர்களினை நாசுக்காக தூண்டிவிடும் குறுக்கு மூளைகள் எல்லாவற்றினையும் உடனடியாக நிறுத்திவிட்டு பக்கத்தில நின்றவனை "தம்பி சுகமாய் இருக்கிறியோடா" என்று கேட்டுக் கொண்டு அந்த இடத்திலேயே கையை பிடித்து கைநாடி பார்க்க தொடங்கி விட்டார்.
வாழத் தெரிந்த புத்திசாலித்தனமான மனிதன்.
தன்னுடைய தொழிலை கோயில் வாசலிலும் வைத்து செய்யும் கிராமத்து மருத்துவராக (Indegenous village medical professional ) மாறி விட்டார்.
ஈழத் தமிழர்கள் மத்தியில் நடக்கும் இப்படியான சமூக ஒடுக்குமுறை என்ற மனித துன்புறுத்தல்கள் நடப்பது நம்மூரில் மட்டுமல்ல. எல்லா ஊர்களிலும் நடக்கின்றது.
அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிள்ளைகள் பாடசாலைகளில் படிக்க முடியாது. ஆண்டவன் முன்னிலையில் சமனாக தரிசனம் செய்யக்கூடாது. தேநீர் கடைகளில் சமனாக தேநீர் அருந்த முடியாது. விளையாட்டு மைதானங்களில் சேர்ந்து விளையாட முடியாது.
அட தெய்வமே ----------------- சொன்னால் நம்புவீர்களா? சில ஊர்களில் ஒன்றாக சாகவே விடமாட்டார்கள். மரணித்து பூதவுடல்களினை விறகுக் கட்டையில் எரிக்கும் போதும் கூட ஒரே மயானத்தில் தகனம் செய்ய விடாமல் அவர்களின் மரணித்த பிரேதத்தினையே தூக்கி எறிந்து போடுவார்கள். அந்த ஒடுக்கப்பட்ட சமூக மக்களினை அடித்து துன்புறுத்தினாலும் அவர்களுக்கு எதுவிதமான சட்டங்களின் பாதுகாப்புகளுமில்லை.
(1966 - 1968 ஆம் ஆண்டுகளில் ஒரு நாள் என்று நினைக்கின்றேன்."ஜாக்கன்" என்ற பெயரில் ஊரில் அழைக்கப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூலி தொழிலாளியினை அவனது குடிசையிலிருந்து நாசுக்காக அழைத்து வந்து நல்லாய் மதுவேற்றி விட்டு, மரத்தில கட்டிப்போட்டு ஊசி குல்லானால் ஒரு காதுக்குள் ஏற்றி மறு காதால் இழுத்து கொலை செய்தும் அவர்கள் யாவரும் சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பிக் கொண்டது நம்ம ஊரில் நடந்த இன்னொரு கொடுமை. அதனை இங்கு கிளறாமல் விட்டுடுவோம். ஏனனில் செய்தவர்களில் ஒரு சிலர் தங்களின் அந்திம காலத்தில் எமதர்மராஜனுக்கு அஞ்சி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். அதனை நினைவு படுத்தினால் இன்று அவர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்.)
கோப்புப்படம் |
இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும் என அன்று ஈழ தமிழர்களுக்கு தலைமை வகித்த தமிழர் விடுதலை கூட்டணியினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், என பல அமைப்புகள் ஓன்று சேர்ந்து "அறவழி போராட்ட குழு" என்னும் அமைப்பின் பெயரில் பல்கலைக்கழக விலங்கியல் துறை விரிவுரையாளர் திரு. சச்சிதானந்தம் அவர்களின் தலைமையில் தத்துவார்த்த ரீதியாக தெளிவான தலைமை குழு, அதன் கீழ் கொள்கைகளில் உறுதியான பல கிளைக் குழுக்கள் என உருவாக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் அறவழியில் நின்று பிரசாரம் செய்து அவர்களின் சாத்வீக போராட்டங்கள் மூலம் சமூக மாற்றங்கள் கிராமங்கள் தோறும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரத் தொடங்கியிருந்தனர்.
கோப்பாய் தொகுதி எம்.பி திரு.கதிரவேற்பிள்ளை, யாழ்ப்பாணம் எம்.பி திரு.யோகேஸ்வரன், விலங்கியல்துறை விரிவுரையாளர் திரு.சச்சிதானந்தம் ஆகியோர் ஓன்று சேர்ந்து கோயிலடிக்கு வந்து அன்றைய பரிபாலனசபை தலைவர் திரு.நல்லையா அவர்களுடன் இந்த சமூக பிரச்சனையினை எங்கள் ஆலயத்திலும், கிராமத்திலும் அமைதி வழிகளில் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார்கள்.
அந்த "அறவழி போராட்ட குழுவில்" அந்த நேரம் தீவிரமாக இயங்கிய நம்மூரை சேர்ந்த ஓர் 23 வயது இளைஞனின் மனதில் எழுந்த ஓர் புரட்சித் தீயே குப்பிழான் கற்கரை பிள்ளையார் கோயிலிலும் சமூக அடக்கு முறைக்குள் மரபு ரீதியாக இருந்த ஒடுக்குமுறைகளினை உடைத்தெறிந்து ஆலய பிரவேசத்தினை செய்ய வைத்தது. கிராமத்தில் காலம் காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டிருந்த சமூகத்தினை ஓன்று சேர்த்து, மைலங்காடு பகுதியில் உள்ள அவர்களின் சனசமூக நிலையத்தில் வைத்து அந்த இளைஞன் தனி மனிதனாக நின்று செய்த புரட்சியுரை அந்த நேரம் ஒடுக்கப்பட்ட மக்களினை சிந்திக்கப் பண்ணியது. அவர்களின் பிள்ளைகளின் கல்வியில், பொருளாதார வளர்ச்சிகளில் ஆர்வத்தினை தூண்டிவிட்டது. பயத்தினால் அடிமையாய் கால்களுக்குள் மிதிபட்டு வாழும் நிலைமையிலிருந்து மீண்டு அறவழியில் காலடி எடுத்து வைத்து தலை நிமிர்ந்து நிற்க அவர்களினை களத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.
இன்று அந்த இளைஞன் அரசியல் விஞ்ஞானத்துறையில் (Political Science) சிறப்புப் பட்டம் பெற்ற பல்கலைக்கழக பட்டதாரி. கிராம மண்ணிலிருந்து கிராமத்தவர்களுக்கு பணிபுரியும் ஒரு சட்டதரணி. தமிழுலகம் அறிந்த அரசியல் ஆய்வாளர். (Attorney at law & Political analysist)
இதில் ஆதரவு வழங்குவோம் என்று சொல்லி தட்டிக் கொடுத்த பலர், ஊராரின் கொந்தளிப்புகளுக்கு அஞ்சி நெங்சுரமற்று பதுங்கியது இன்னொரு தந்திரோமயமான கிளைமாக்ஸ். அவை பற்றி சொல்லப் போனால் நிறைய நகைச்சுவைகள். அதனை விட்டுவோம்.
அதில் ஒருவர் எங்கள் கிராமத்து மின் பொறியியலாளர். ஏனெனில் அந்த அச்சத்தினை இன்றும் தமது கிராமம் தொடர்பான கட்டுரைகள், மற்றும் பேட்டிகளில் அவர் வெளிக்காட்டுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"ஆண்டவனின் அருளைப்பெற சமனாக வந்து தரிசனம் செய்யவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சில நேரங்களில் பக்தி பரவசத்தில் சுவாமியினை தாமும் சேர்ந்து தோளில் காவி செல்கின்றோம் என்றால் என்ன செய்வது" ?
அந்த நேரம் ஆலயத்தினுள் ஏகபோக உரிமை பக்தர்கள் என நினைப்பவர்கள் மனதில் எழுந்து செயல்படுத்திய மதிநுட்ப ஐடியா ஒன்றினையும் இங்கு சொல்லாமல் கதையினை தொடரக்கூடாது.
எம்பெருமான் எழுந்தருளும் நேரம் அவசரமாக சுவாமி காவுபவர்கள் கைகளில் ஓர் மஞ்சள் சால்வைகளினை சுற்றி கட்டிவிட்டு, அவர்கள் மட்டுமே சாமி தூக்க அனுமதிக்கபட்டவர்கள் என அந்த நேரங்களில் பிரகடனம் செய்யும் திட்டம்.
இந்த நகைசுவை கூத்து, திருவிழாக் காலங்களில் தினமும் நடக்கின்றது.
அந்த நேரம் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தினுள் அதனை அவர்கள் அவசரமாக அமுல்படுத்தும் அந்தக் காட்சிகள், கூத்துகள், யாவும் பெரிய "தமாஷ்".
கிராமங்களில் நடக்கும் சாதி ஒடுக்குமுறைகளின் கொடுமைகள் என சொல்லிக் கொண்டு போகும் போது மனதினை கொல்லும் இன்னுமோர் விடயத்தினை இங்கு குறிப்பிட வேண்டும் போல் உள்ளது.
1959 ஆம் ஆண்டு/ யூலை மாதம்.
இலங்கை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த, 21 வயது நிரம்பிய நம்ம கிராமத்து மாணவன் ஒருவன் ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக வைத்து தமது இளமைக் கால பருவத்தில் எழுதிய சிறுகதை ஓன்று அந்த காலங்களில் தமிழ் பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி பிரபல்யமாகியிருந்தது.
அந்த சிறுகதையின் தலைப்பு "அந்த முகம்"
மனதினை தொடும் அந்த கதையினை சுருக்கமாக சொல்கின்றேன். படியுங்கள்.
அந்த கிராமத்து ஆலயம் ஒன்றில் மிக சிறப்பாக அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்கள், இளைஞர்கள் என அந்த அன்னதானத்தில் போட்டி போட்டுக் கொண்டு சோறு வாங்கி சாப்பிடுகின்றார்கள். பசி கொடுமையால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினை சேர்ந்த ஓர் நான்கு வயது சிறுவனும் அந்த சாப்பிடும் குழுவில் பதுங்கிக் கொண்டு இருந்து விட்டான்.
பட்டு வேஷ்டி கட்டி, பெரிய தங்க சங்கிலியும் அணிந்து அந்த அன்னதானத்தில் முதலாளியாக நின்ற கிராமத்தின் பெரிய மனிதனாகிய, அந்த அன்னதான நிகழ்வின் உபயக்காரர், அந்த சிறுவனை அந்த சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினுள் கண்டவுடன், அதி உச்ச கோபத்துடன் தலை மயிரில் பிடித்து இழுத்து அடித்து "எளிய கீழ் சாதி நாயே" சமனாக வந்து இருந்துட்டியோ என ஏசி கொண்டு இழுத்து வந்து வேலி கரையோரமாக ஓர் ஓலை பெட்டியுடன் ஒதுங்கியிருந்த அந்த தாயின் காலடியில் போட்டு விட்டார்.
இந்தக் கொடிய சம்பவம் அன்றய பகல் நேரம் ஆலயத்தில் நடந்த அன்னதான நிகழ்வில் நடந்து முடிந்து விட்டது. அடுத்து சொல்லப் போவது வயது வந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டிய மிக இரகசியமான கிளைமாக்ஸ்.
அன்றிரவு நடுநிசி நேரம். ஊரே தூங்கி விட்டது.
அதே பெரிய சாதி திமிர் பிடித்த கிராமத்து மனிதன், அதே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் வசிக்கும் குடிசைக்குள் வழமைபோல் மது வெறியில் சாரத்தினை சற்று தூக்கிக் கொண்டு பதுங்கி பதுங்கி போய் சமூக அடக்குமுறை என்ற ஆயுத்தத்தினை வைத்து உள்ளே நுழைகின்றார். அடக்குமுறைக்குள் வாழும் அந்த பெண்ணும் அடிமையாக கூனி குறுகி நின்று அவரின் காம இச்சைக்கு இணங்காமல் போக முடியாத கொடுமையான சமூக அமைப்பு முறைகள்.
அரைத் தூக்கத்தில் கிழிந்த ஓலை பாயில் அந்த குடிசையில் படுத்திருந்த பாலகனின் "அந்த முகம்" பகலில் ஆலயத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தையும், இப்போது நிற்கும் நிலைமையினையும் பார்த்து என்ன நடக்கின்றது என்று தெரியாமல் பரிதாபமாக பார்க்கின்றது.
அதுவே அந்த சிறுகதையின் தலைப்பு ------- "அந்த முகம்".
அந்த பாலகனின் புரிந்து கொள்ள முடியாத பரிதாபத்துக்குரிய முகம்.
(அந்த சிறுகதையின் எழுத்தாளர் திரு.எம்.எஸ். கனகரத்தினம் (ஞானம்) என்பவர் எங்கள் கிராம மண்ணில் பிறந்து, இதே மாதிரியான சமூகத்தின் கொடுமைகளினை பார்த்து வளர்ந்த, ஓய்வு பெற்ற பொறியியலாளர். தமது வயது முதிர்ந்த 86 வயதில் தற்போது கனடாவில் வசிக்கின்றார். கனடாவில் குடியேறிய முதல் குப்பிழான் கிராமத்தவர் என்ற ரீதியில் 2002 ஆம் ஆண்டு கனடாவில் நடந்த முதல் "செம்மண்ணிரவு" நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைத்து, அறிமுகப்படுத்தி கௌரவிக்கப்பட்டவர்.)
இப்போது காலம் மாறி விட்டது. ஈழ தமிழர்களின் விடுதலைப் போராட்டங்கள் சமூக அமைப்பினையே மாற்றி விட்டது. அடக்கியவர்கள், அடங்கி கிராமங்களில் நடக்கின்றனர். காலம் காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த சமூகம் இப்போது கல்வியிலும், பொருளாதாரத்திலும் வேகமாக வளர்ந்து வருகின்றனர். ஆண்டவனை தரிசனம் செய்வதில், கிராமத்து பாடசாலையில் சேர்ந்து படிப்பதில், அடக்கு முறைகள் என எவற்றினையும் காட்ட முடியாது. .
இந்த இடத்தில் ஒரேயொரு கேள்வியினை பகிரங்கமாக கேட்போம்.
இப்போது உலகமெங்கும் பரந்து பட்டு, வாழ்வில் பல இடங்களில் கலங்கி தெளிந்து, பரிபக்குவ நிலைமைகளில் வாழும் நம்ம ஊரவர்களினை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி ?
மனிதருக்குள் மனிதர்களினை ஒடுக்கி, அடக்கும் இந்த கொடிய பாரம்பரியம் நியாயமானதா?
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment