திரு தம்பு தர்மலிங்கம் |
"இருட்டினால் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் என்றுமே வாழ்வு".
"அயல் கிராமங்களில் உள்ளவர்கள் அனுபவிப்பது போல் எங்கள் வீடுகளில் மின்சார ஒளிகளின் பிரகாசத்தில் வாழும் வாழ்வு இந்த பிறவியிலேனும் கிடைக்காதா? ------கிடைக்காதா?--------------
அந்த சந்தர்ப்பம் வாழ்வில் கிடைக்காதா?"
இப்படியொரு தீராததொரு ஏக்கம் முன்னொரு காலம் கிராமத்தவர்கள் மனங்களில் முடங்கியிருந்தது. அதுவே தொடர்ந்தது.
இதற்கொரு தீர்வு அன்றொரு நாள் கண்ணுக்கு தெரிந்தது. அந்த தீர்வு கிடைத்தும் விட்டது.
1974 ஆம் ஆண்டு.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையில் உள்ள கிராமங்களுக்கு மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் அன்றைய காலத்திலிருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் அமுல்படுத்தவுள்ளனர் என்ற செய்தியினை இலங்கை மின்சார திணைக்களத்தில் பொறியியலாளராக அந்த நேரம் பதவி வகித்த நம்மூரவர், திரு க.கணேசலிங்கம் அவர்களால் கிராமத்தில் தெரிய வந்தது.
பொதுவாக அன்றைய இலங்கை அரசாங்கங்கள் இப்படியான சர்வதேச அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் வாய்ப்புகளினை சிங்கள கிராமங்களுக்கு வழங்கிவிட்டு ஓர் கொஞ்ச தொகை நிதியினை மட்டும் தமிழ் பிரதேசங்களுக்கு கையில் ஐயர் குடிப்பதற்கு கோயில் தீர்த்தம் வழங்குவது போல் ஒதுக்கி அதனை சிறிய அளவில் மேலோட்டமாக அமுல்படுத்துவார்கள். .
இப்படியான செயல்கள் அந்தக் காலத்தில் இலங்கை இனவாத அரசுகளின் மாற்றத்துக்குள்ளாகாத சர்வ சாதாரணமானதொரு செயல்பாடாகும்.
எப்படியிருந்த போதிலும் இந்தச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நம்ம கிராமத்துக்கு மின்சார இணைப்பினை எப்படி ஏற்படுத்தலாம்? என்பதற்கு நம்ம மின் பொறியியலாளர் முதல் ஐடியா வழங்கினார்.
"நம்ம தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களினை இறுக்கமாக பிடித்து அவரின் அதிகாரம், அவருக்குள்ள அரசின் தொடர்புகளினை பயன்படுத்தி எங்கள் கிராமத்துக்கும் மின்சார இணைப்பினை வழங்கும் அங்கீகாரத்தினை முதலில் பெற முயலுங்கள்".
இதுவே வழங்கப்பட்ட ஐடியா. உடனே களத்தில் இறங்கினார் நம்ம ஊரவர் ஒருவர்.
அவர் வீட்டிலிருந்து வெள்ளை வேஷ்டி கட்டி, வெள்ளை சேட்டும் அணிந்து கொண்டு கிளம்பினால் எப்போதும் அது அநேகமாக எங்கேயோதொரு கிராம பணிகளோடு உள்ள வேலையாகவே இருக்கும்.
அவர் யார் என்பதனை கதையின் முடிவில் சொன்னால் தான் கதையில் ஒரு கிளைமாக்ஸ் இருக்கும். தொடர்ந்து படியுங்கள். சொல்லுகின்றேன்.
ஏனெனில் அந்த மனிதன் சிறு வயதிலிருந்தே கிராமத்தின் சமூகப் பணி ஒன்றினை எடுத்துவிட்டால் தூங்கவே மாட்டார் என்பது அவரோடு நெருக்கமாக பழகியவர்களுக்கு நன்கு தெரியும். சமூகப் பணிகளில் தம்மோடு சேர்ந்து நிற்பவர்களினையும் தூங்க விடமாட்டார். கிராமத்தின் பொது வாழ்வில் அவருக்கும் இரவும் பகலும் ஒன்று தான். பொதுப்பணிகள் எனத் தொடங்கிவிட்டால் தனக்கென ஒரு குடும்பம் உள்ளது என்பதும் அவரின் கண்களுக்கு தெரியாது.
இப்படியெல்லாம் ஒரு கிராமத்தவரை மட்டும் சமூக சேவையாளன் என்று போற்றப்பட்டால் ஏன் நாங்கள் ஒருவரும் ஊரில் சேவைகள் செய்யவில்லையா? என்ற ஆதங்கள் பலருக்கும் எழலாம்.
அதில் நியாயமும் இல்லை என்றும் சொல்ல முடியாது.
கிராமத்தில் உள்ள பெரும்பான்மையானோர் ஒவ்வொருவரும் ஏதோ வழிகளில், பல தரப்பட்ட இடங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்கள், தங்களினை சமூக சேவைகளில் அர்ப்பணித்தவர்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.
வாசிகசாலையில் செயலாளராக பணி புரிந்து, A/L வகுப்புகளுக்கும் போகாது நின்று தினமும் வாசிகசாலை திறந்து கூட்டுவது போன்ற பணிகளினை செய்தவன் நான் என்று சமூக ஊடகங்களில் சொல்லும் போது கூட அவரும் சமூகப் பணியாளன் என போற்றப்பட வேண்டியவர் என்பது உண்மை.
ஆனால் இந்த குறிப்பிடப்பட்ட மனிதன் மட்டும் கிராமத்தின் பொதுப் பணிகளுக்கு அடிமையானதொரு வித்தியாசமான மானிட பிறவி என்ற வகையில் கிராமத்திலுள்ள ஏனைய சமூகப் பணிகள் செய்தவர்கள் எல்லோரையும் விட இந்த விஷயங்களில் தனித்துவமானவர் என்றே சொல்ல வேண்டும். கிராமத்தின் பணியாளன் என்றதொரு நற்சான்றிதழினையும் எதிர்பார்க்கும் சுபாவமும் அவரில் இருப்பதில்லை. (Mentally addicted person for village social works.)
மின் இணைப்பு என்ற விடயத்தினை மனதில் போட்டுக் கொண்டு, அந்த மனிதன் சில நேரங்களில் அதிகாலை முதல் பஸ்ஸினை பிடித்து, பத்திரங்கள் யாவற்றினையும் ஒரு பாக்கினுள் போட்டுக் கொண்டு தனியொருவராக கிளம்பி விடுவார்.
எங்கே கிளம்பி போய் நிற்பார்?
கந்தரோடையில் உள்ள எங்கள் தொகுதி எம்.பி அவர்களின் வீட்டு அலுவலகத்தில் போய் நிற்பார்.
அது ஒரு முறையா? இரண்டு முறையா? அதற்கு எண்ணுக் கணக்கிருக்காது.
எங்கள் தொகுதி எம்.பி பாராளுமன்ற கூட்ட தொடருக்காக கொழும்பு சென்று நின்ற போதும் அங்கும் பிரயாணம் செய்து ஓடிப்போய் அவரை சந்தித்து, அவரோடு அங்கு நின்று கையோடு அவரை பயன்படுத்தி கிராமத்துக்கு மின்சாரம் வழங்கும் அரசின் அங்கீகாரத்தினை இலங்கை அமைச்சில் எப்படியோ காலங்கள் கடந்தேனும் உருவாக்கிப் போட்டார்.
அங்கீகாரம் மின்சார சபைக்கு அனுப்பப்பட்டு விட்டது. தொடர்ந்து இலங்கை மின்சார சபை மின் இணைப்புக்கான பணிகளினை கிராமத்தில் தொடங்கி விட்டார்கள். இணைப்பு பணிகள் நடந்த போது பல ஊரவர்கள், அந்த நேரங்களில் தங்கள் தங்கள் பாணிகளில், பல இடங்களில் ஏற்பட்ட தடைகளினையும் ஏதோ வழிகளில் சமாளித்து பலரும் ஒத்தாசை வழங்கியிருந்தார்கள் என்பதனையும் மறுக்கக்கூடாது.
ஏனெனில் குப்பிழானில் பொதுவாக "குழப்பலாளர்கள்" என்று உள்ள ஜென்ம பிறவிகளினையும் கடந்துதான் எந்தவொரு சமூக பணியினையும் முடிக்க வேண்டியதொரு துரதிர்ஷ்ட நிலைமைகள் எப்போதுமிருக்கும் எவருக்கும் சொல்லத் தேவையில்லை.
இந்த மின் இணைப்பு விடயத்தில் தமக்கு ஏற்பட்ட சில மனக்கசப்புகளினை துயரத்துடன் மின் பொறியியலாளரரும் ஓர் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
ஏனெனில் மின்னொளியில் இனிமேல் காலங்களில் வாழப் போகின்றோம் என்ற கனவு எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பதால் வழமையான சமூக சேவையில் இருப்பது போன்று குழப்பவியலினை உருவாக்குபவர்களும் குறைவிலா துணை கொண்டு நடந்தது மகிழ்ச்சியான விடயமாகயிருந்தது.
எப்படியிருந்த போதிலும் மின் இணைப்பு வேலைகள் ஊரில் நடந்து கொண்டிருந்த போது 98% வீதமானோர் பலமான ஒத்தாசையாகவே இருந்தார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
உதாரணமாக சுருளி கந்தையா அம்மான் இணைப்பு வழங்கும் துரித வேலைகள் நடக்கும் நாட்களில் கிராமத்து வீதிகளில் அவரின் சுறு சுறுப்பு கொஞ்சம் அதிகமாகவேயிருக்கும்
பொதுவாக கிராமங்களுக்கான மின்சார இணைப்புகளில் பிரதான வீதிகளுக்கு மட்டும் இணைப்பினை வழங்கிவிட்டு நிறுத்தி விடுவார்கள்.
அந்த மனிதன் என்ன சும்மாயிருப்பாரா?
அந்த மனிதன் என இங்கு சொல்வது கிராமத்தின் சமூக பணியினை தமது உயிர் மூச்சாக பிடித்துக்கொண்டு ஓடி திரியும் நபரினை சொல்கின்றேன்.
யாழ் நகரில் குடியிருக்கும் நம்ம கிராமத்து மின் பொறியியலாளர் அவர்களை தனி நபராக துரத்தி பிடித்து பலமுறைகள் அவரையும் அழைத்துக் கொண்டு போய் சந்திக்க வேண்டிய உயர் அதிகாரிகளினை சந்தித்து கிராமத்தின் ஒவ்வொரு ஒழுங்கைகளுக்கும் மின் இணைப்பினை ஏற்படுத்தும் செயல்பாட்டினை செய்து முடித்தார்.
இதில் இன்னொரு விசயத்தினையும் சொல்ல வேண்டும்.
"ஏழாலை - கிராமசபை என்றதொரு எங்கள் சிற்றரசு நிர்வாகசபை இருக்கும் போது, அந்த கிராமசபை என்ற அதிகாரத்தினுள் உள்ள ஒரு ஊருக்கு வழமைபோல் கிராமசபை ஊடாக மின் இணைப்பு வழங்காமல் எப்படி நேராக மின்சார சபை மின் இணைப்புகளினை வழங்க முடியும்? "
இவ்வாறு சொல்லிக் கொண்டு முறைப்பாடுகளினை முன் எடுக்கத் தொடங்கி, வேறு வழியில் சிறு இடைஞ்சல் வழங்க ஆரம்பித்து விட்டார் அன்றைய ஏழாலை - கிராமசபை தலைவர் திரு.சிவகுரு அவர்கள் என்பதும் ஒரு இடைச் செய்தி அந்த காலங்களில் கசிந்திருந்தது.
அவருக்கு அந்தக் காலங்களில் குப்பிழானோடு எப்போதும் ஒரு வில்லன் பார்வையாகவே இருப்பது, அவரது சுபாவம் என்பது ஓர் இரகசியமான அபிப்பிராயம். தேர்தல்களில் எப்போதும் தமிழரசு கட்சிக்கும், எங்கள் கிராமத்தின் மின் இணைப்புக்கு அரச அங்கீகாரம் பெற்று தந்த எங்கள் தேர்தல் தொகுதி எம்.பி தர்மலிங்கத்துக்கும் எதிராகவே பிரச்சாரங்கள் செய்து அதி தீவிரமாக அவர் செயல்படுவார் என்பது மட்டும் ஒரு இரகசிய செய்தியல்ல.
என்னவோ? அவை எதுவும் நாம் அறியோம் பராபரனே. அதனை விட்டு விடுவோம்.
"அந்த மாதிரியான அவரின் தொல்லைகளை இலங்கை மின்சார இலாகாவினுள் நான் பார்த்துக் கொள்கின்றேன்"
சாதாரணமாக சொல்லிவிட்டார் மின்சார சபையின் உயர் அதிகாரத்திலுள்ள நம்மூர் மின் பொறியியலாளர். எப்படி அந்த மனிதனின் முறைப்பாடு தொல்லைகளினை அவர் பார்த்துக் கொண்டார் என்பது மர்மம்.
ஆனால் ஓன்று மட்டும் எவராலும் மறுக்க முடியாது.
குப்பி விளக்கிலிருந்து படித்து இலங்கை - மின்சார சபையில் பொறியியல் துறையில் உயர் பதவியில் நம்மூரவர் ஒருவர் அந்த நேரம் இருந்தது கிராமத்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக இருந்து விட்டது.
சரி. பொதுப் பணியினையே மூச்சாக கொண்டு ஊரில் அந்த காலங்களில் ஓடித்திரியும் அந்த கிராமத்தின் சமூக பணியாளன் யார்? அமரராகி விட்ட அந்த சேவையாளனையும் ஒரு முறை நினைவு கூர்வோம்.
அவர்தான் "தம்பு - தர்மலிங்கம்"
கிராமத்தில் இது மட்டுமல்ல இவரின் பணி. அவரின் பங்களிப்புகள் ஏராளம்.
அன்று நடந்த மின்சார விநியோக திறப்பு விழாவின் போது மின்சார சபை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர், கிராமசபை தலைவர் என எல்லோரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய முன்றலில் நடந்த விழாவில் நம்மூர் இளைஞர்கள் குழு வரிசையாக சென்று ஆளுக்கொரு பூ மாலை என மின் பொறியியலாளர் திரு.கணேசலிங்கம் அவர்களுக்கு அணிவித்து கௌரவித்த அந்த காட்சி. மிக பெரியதொரு சேவைக்கான விருது.
மின்சார விளக்குகள் எங்கள் கிராமத்து வீடுகளில் எரிந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது எல்லையற்றதொரு மகிழ்ச்சி.
மின் விளக்குகள் எங்கள் கிராமத்து இல்லங்களில் பிரகாசித்த அந்த ஆரம்ப காலங்கள் -------- அது கனவா ? அல்லது நனவா ? எனவே தெரிந்தது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment