1967 ஆம் ஆண்டில், தொடர்ந்து கொஞ்சக் காலம் நடந்த அந்தக் காலத்து சண்டைகளின் நினைவுகள் பலருக்கும் ஞாபகம் வரலாம்.
பொதுவாக முன்னைய காலங்களில் நம்ம கிராமத்தவர்கள், படை திரண்டு ஏனைய ஊரவர்களோடு மோதிய பழைய சண்டைகளினை நினைவு கூரும் போது அதில் நம்மூரவர்கள் நியாயம் மீறாமல் அநேகமாக நடந்து கொண்டிருப்பார்கள். அதனை அன்றும், இன்றும் ஓர் ரசனையாகவே ஒருவருக்கொருவர் கதைத்திருப்போம். அவற்றுள் சில நகைசுவைகளினையும் உருவாக்கி கதைகளினை பகிர்ந்தும் இருப்போம்..
ஆனால் 1967 ஆம் ஆண்டு, ஏழாலை ஊரவர்களோடு மோதிய அந்த சண்டைகள் நம்மூரவர்களுக்கே மிக பெரும் நிரந்தர துயரமாக அமைந்துவிட்டது.
எதிரிகளுக்கு எறியவென தயார் நிலைமையில் செய்து வளவு ஒன்றுக்குள் பதுக்கி வைத்திருந்த வெடி குண்டுகளை ஓர் 12 வயது சிறுவன் விளையாடும் பந்து என கையில் எடுத்து, அந்த நேரம் விளையாடிய போது அது வெடித்து சிதறியதனால் அந்த சிறுவனின் இடது கை துண்டிக்கப்பட்டது.
அந்த துயரத்தினுள் அப்பாவித்தனமாக சிக்குபட்டவர் "கந்தவனம் - பாலன்".
பாலன் என்பவர் Proctor பரமநாதனின் தம்பியாவார்.
(இங்கு 1979 ஆம் ஆண்டு நடந்த இன்னொரு சம்பவத்தினையும் இடைச்செருகலாக இந்த இடத்தில் சொல்லிப்போட்டு கதையினை தொடர்வோம்.
ஏழாலையினை சேர்ந்த வாடகை கார்/லொரி வைத்திருந்து ஓட்டும் சிவலிங்கம் என்பவர், குரும்பசிட்டி சந்தியில் வைத்து ஏதோ அந்தக் கணம் உருவான வாய்த் தர்க்கத்தினை தொடர்ந்து, திடீர் என தனது லொறியினை பின்னோக்கி இழுத்து கொடூரமாக மோதி, விளையாட்டுத் துறை ஆசிரியரான நம்மூரவர் திரு.வயித்திப்பிள்ளை - இரத்தினசிங்கம் என்பவரை பலியாக்கியிருந்தார். இன்றும் அதனை நினைத்தாலே மனதினைக் கொல்லும். அந்தக் கொடுமையினை செய்தவனின் ஆத்மா இப்போது எந்த பிறவியில்? எங்கு நின்று தவிக்குதோ? என்பது தெரியாது.)
மதுபான மயக்கத்தில் வீதிகளில் திரியும் ஏழாலையின் தெரு சண்டியர்களான பூச்சி தர்மன், யப்பான், கிட்டினன், குலம், முனியப்பர் கோவிலடி குட்டிமணி போன்றவர்களால் அத்து மீறி ஆரம்பிக்கப்பட்டதே 1967 ஆம் ஆண்டு நடந்த அந்த சண்டையாகும். அதில் "பூச்சி தர்மன்" என்பவர் தான் மிகப் பிரபல்யமான தெரு சண்டியன்.
ஏற்கனவே நடந்த ஓர் தகராறின் தொடர்ச்சியாக, குப்பிழான்- காளி கோயிலடியில் வசிக்கும் நம்மூர் இளைஞன் ஒருவனுக்கு அவர்கள் எதிர்பாராத நிலைமையில் நிற்கும் போது வீடு தேடி வந்து தாக்கியிருந்தார்கள் என்றால் அவர்களின் அத்து மீறல்கள் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதனை பார்க்கலாம்.
அவர்களுக்கு குரும்பசிட்டி வீதியில் உள்ள குப்பிழான் பழைய சங்கக்கடைக்கு முன்னால் நடந்தது அடுத்த மறுதாக்கம்.
நம்மூரவர்வர்கள் தங்களுடன் மோதும் இத்தெரு சண்டியர்களை மட்டுமே தாக்கினார்களே தவிர அப்பாவித்தனமான ஏழாலை ஊரவர்கள் எவரையும் தாக்குவதில்லை.
ஆனால் ஏழாலையின் இத்தெரு சண்டியர்கள் கண்ணில் அகப்படும் நம்மூரவர்கள் எவராக இருந்தாலும் காணும் இடங்களில் தாக்குவார்கள். ஏழாலையூடாக செல்லும் 770 பேருந்து பஸ்ஸில் நம்மூரவர்கள் பிரயாணம் செய்யவே பயந்த காலமாக ஓடியது.
இங்கு சில சம்பவங்கள் தான் நினைவில் மீட்டு எடுத்து சொல்லக் கூடியதாகவுள்ளது.
சிலரிடம் கேட்டும் அறிய முடிந்தது.
ஊரங்குனையில் வைத்து நம்மூர் இளைஞன் ஒருவனுக்கு ஒரு நாள் கொடூரமாக தாக்கினார்கள்.
அதில் தாக்குபட்டவர் திரு.சிவக்கொழுந்து - இராஜதுரை.
இன்னொரு நாள். பகல் மதியநேரம்.
குப்பிழான் - சந்திக்கு அருகே பிரதான வீதியில் அமைந்துள்ள சங்கக்கடைக்கு சாமான் வாங்க வந்த நம்மூர் இளைஞன் ஒருவனுக்கு அந்த இடத்தில் வைத்து ஏழாலை தெரு சண்டியர்கள் இருவர் திடீர் என கையால் விளாசிப் போட்டு தலைமறைவாகி விட்டனர்.
அதில் தாக்குப்பட்டவர் திரு. துரையப்பா - மணியம் (நில அளவையாளர்).
அதே நாள் மாலை நேரம். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உட்பட, கிராமத்தவர்கள் பலர் வழமைபோல் குப்பிழான் சந்தியில் கோபக்கனல்கள் பொங்க இவர்களை என்ன செய்யலாம்? என்ற நிலைமையில் நின்ற நேரம்.
ஏற்கனவே தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் அந்த கணம், சற்றுத் தூரமாக சிவபூமியின் சிவஞான ஆச்சிரமம் இருக்கும் இடத்துக்கு முன்பாக சற்று மது வெறியில் வருவதனைக் கண்டு விட்டார்கள். சந்தியில் நின்ற பட்டாளங்கள் உட்பட எல்லோரும் படையாக சேர்ந்து அவனை துரத்தத் தொடங்கினார்கள்.
துரத்தப்பட்டவன் "பூச்சி தர்மன்" என்ற ஏழாலையின் தெரு சண்டியன்.
அவர்கள் அந்த நேரம் கூட்டாக ஓட்டத்தில் துரத்திய அந்த காட்சி இருக்கின்றதே ------------------ தென் இந்திய தமிழ் சினிமாக்களில் கூட இப்படியொரு காட்சியினை பாத்திருக்க மாட்டோம்.
ஓன்று சேர்ந்து கூட்டாக துரத்தும் வேட்டை நாய்களுக்கு பயந்தோடும் முயல் போல பக்கத்துக்கு வளவுகளுக்கால் பாய்ந்தோடிய பூச்சி தர்மன் என்பவன் தப்பிக் கொள்ள வழி தெரியாது கணேசனின் தந்தை நாகமணியப்பாவின் மண் வீட்டு குடிசைக்குள் ஒழிப்பதற்காக உட்புகுந்து விட்டான். அவனால் தப்பிக் கொள்ள முடியவில்லை.
அந்த வளவுக்குள் வைத்து கும்முகை எவ்வளவு என சொல்லத் தேவையில்லை.
அந்த கும்முகை அந்த நேரம், தவிர்க்க முடியாததொன்று.
அந்த நேரம் ஏழாலையின் தெரு சண்டியர்களோடு மோதுவதற்காக படை திரண்ட நம்மூர் இளைஞர்கள் கூட்டங்கள் நியாயம், மனிதாபிமானம் என்ற நிலைப்பாடுகளை சில இடங்களில் மீறிய சம்பவங்களினையும் கிராமத்தவன் என்ற நிலையில் தலைக் குனிவோடு சொல்லாமல் இங்கு கதையினை தொடர முடியாமல் உள்ளது.
கள்ளு விற்பனை செய்யும் நம்மூர் சீவல் தொழிலாளிகளிடம் கள்ளுக் குடிக்க வரும் ஏழாலையாருக்கு கள்ளு வழங்கப்படாது என்பது இவர்கள் போட்ட நிபந்தனை.
அதனை மீறி கள்ளு கொடுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்த ஏழை சீவல் தொழிலாளியின் குடிசை வீடுகளினை நெருப்பு கொளுத்தி எரித்தார்கள் நம்ம கிராமத்து கோழைத்தனமான சண்டியர்கள். .
கள்ளுக் கொடுக்கவில்லையானால் ஏழாலையார்கள் அடித்து நொறுக்குவார்கள். நெருப்பு வைப்பார்கள். தாங்கள் சொன்ன நிபந்தனையினை மீறி கள்ளு வழங்கினால் குப்பிழானார் அந்த ஏழை தொழிலாளிகளின் குடிசையினை நெருப்பு வைத்துக் கொளுத்துவார்கள்.
இடையில் நின்று இடி வாங்கியது அன்றாடம் தன் வயிற்று பசிக்காக தொழில் செய்யும் அப்பாவி சீவல் தொழிலாளிகள்.
இதில் ஜீரணிக்கவே முடியாத இன்னொரு மனிதாபிமானத்தினை மீறிய சம்பவம் ஒன்றினையும் சொல்கின்றேன் படியுங்கள் .
"ஏழாலையார் வந்தால் கள்ளு குடிக்கக் கொடுக்கக்கூடாது. தெரியும்தானே"
"சரி. நான் கொடுக்கேல்லை. நீங்க போங்கோ. போங்கோ."
வேலைக் களையோடு, சற்று மதுபானமும் உட்புகுந்த சோர்வோடு தனது அந்த குடிசை வீட்டு வெளி மண் திண்ணையில் அரை தூக்கத்தில் படுத்திருந்தபடி ஏதோ வேண்டா வெறுப்பு பாணியில் பதில் சொல்லிருந்தார் அந்த வயதான ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பனை மரம் சீவும் தொழிலாளி.
"எளிய ----------------- நாயே ஒரு மரியாதையில்லாமல் படுத்துக் கொண்டு பதில் சொல்லுறியோடா"
அந்த சீவல் தொழிலாளியின் இரு கால்களினையும் நம்மூரவர் ஒருவர் இழுத்துப் போட்டு அந்த இடத்தில ஈன இரக்கமில்லாத அடி. அடிப்பவரோடு சேர்ந்து மற்றவர்களும் அதற்கு ஆதரவு.
அந்த நேரம் இரத்த மிடுக்கோடு இளைஞனாக இருந்து அப்பாவி சீவல் தொழிலாளியில் சண்டியன், கோபக்காரன் என காட்டியவர் பென்ஷன் எடுத்த வாத்தியார் என்ற பெயரில் முதுமையில் இப்போதும் ஊரில் வசிக்கின்றார்.
"அவங்களோடை இப்ப வாய் கொடுத்தால் தொலைச்சு போடுவாங்கள்"
"யாரோடை -------------? . "அவங்களோடை". " அதுதான் நாங்கள் அவங்களோடை கனக்க கதை வைக்கிறேல்லை".
இப்படியே காதோடு காதில் ஒருவருக்கு ஒருவர் இரகசியமாக சொல்லிக் கொண்டு முன்னொரு காலம் மனித நேயத்தினை தொலைத்து அடக்கியவர்கள் எல்லோரும் இப்போது எல்லா ஊரிலும் அடங்கி நடக்கின்றனர்.
இதனையே பூமி சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றது என தத்துவ ஞானிகள் சொல்வார்கள். இதுவே சுழன்று சுத்தியடித்து கொண்டிருக்கும் இவ் புவியில் காலம் செய்யும் கோலம்.
"ஆத்மாவின் தொடர்ச்சியில் தெய்வம் நின்றறுக்கும்"
என 1973 ஆம் ஆண்டு யாழ் நகரில் 4 ஆவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டு அத்துமீறல் தாக்குதலில், மகாநாட்டு தலைவர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் சொல்லிய அதே வசனத்தினையே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் போல் தெரிகின்றது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment