கோப்புப் படம் |
"வி.சி. எலெக்சன்" (V.C Election - Village Council Election) என கிராமத்தவர்கள் வாய்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் அந்த கால "கிராமசபை தேர்தல்" என்பதில் கிராமத்தவர்கள் பலர் தங்கள் வட்டாரங்களில் போட்டியிடுவதும், அதில் உருவாகும் போட்டிகள், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், துண்டு பிரசுர விநியோகங்கள், மதில்களில் எழுதப்படும் சுலோகங்கள், வெற்றி களிப்புகள், அந்தந்த நேரங்களில் கடல் அலைகள் போல் மேலெழுந்து பின்பு அமைதியாக தணிந்து கொள்ளும் சச்சரவுகள் என அந்த பழைய கதைகளினை சொல்லப்போனால் அவைகள் யாவும் நீண்டதொரு நகைச்சுவைகள் கலந்த "கிளைமாக்ஸ்".
சில கதைகளில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களினை தணிக்கை செய்தே கதைகளினை தொடர வேண்டிய நிலைமை. ஆனால் சில இடங்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களினை குறிப்பிடவில்லையானால் கதைகளில் ரசனை ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
எனவே இந்த பழைய கதைகளின் பகிர்வில் எல்லாவற்றினையும் வழமையான கிராமத்து வாழ்வில் எடுப்பது போல் நகைச்சுவையின் ரசனைகளாக எடுத்துக் கொண்டு கதைகளினை தொடர்வோம்.
வட்டாரங்களாக பிரிக்கப்பட்ட கிராம சபைகளின் தேர்தல் இறுதியாக 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்பு இன்று வரை தேர்தல் முறைகள், அரசின் அதிகார பகிர்வுகள் என்பது பல பல கோணங்களில் மாற்றமடைந்து நடைபெற்றாலும் அந்த கால தேர்தலிகளில் சந்தித்த ரசனைகள் மாதிரி இன்றய காலங்களில் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் இப்போது இறுதியாக 1969 ஆம் ஆண்டு நடந்த கிராமசபை தேர்தல் கதைகளினை இங்கு பகிர்ந்து கொள்வோம்.
1969 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் "ஏழாலை கிராமசபை" என்ற ஜனநாயக, சமஷ்டி அரச அதிகாரத்தின் கீழ் ஏழாலை, குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை ஆகிய நான்கு கிராமங்களும் உள்ளடங்கியிருந்தன.
இதில் ஏழாலையில் பத்து வட்டாரங்கள், குப்பிழானில் நான்கு வட்டாரங்கள், புன்னாலைக்கட்டுவன் & ஈவினை என இரண்டிலும் சேர்த்து ஐந்து வட்டாரங்களாக பிரித்து மொத்தம் பத்தொன்பது வட்டாரங்களிலும் தேர்தல்கள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் சேர்ந்து கிராமசபை தலைவரை (Chairman) தெரிவு செய்கின்றனர்.
அந்த தலைவர் என்ற பதவியினை "ஏழாலை சிவகுரு" என்ற மனிதன் எவருக்குமே விட்டு கொடுத்ததாக தெரியவில்லை.
ஏழாலை சிவகுருவர் மோகத்துடன் இருந்த கிராமசபை தலைவர் பதவி முன்னொரு காலத்தில் எங்கள் கிராமத்தவரான "மருத்துவர்" திரு.செல்வநாயகம் அவர்களுக்கு கிடைத்து விட்டது. குப்பிழான் சந்திக்கு அருகில், பிரதான வீதியில் அமைந்திருந்த அவரது வீட்டுக்கு, இரவு நேரங்களில் சிவகுருவரின் கையாட்கள் சிறு சிறு வன்முறைகளினால் சிரமங்கள் கொடுத்ததை தொடர்ந்து அவர் தொல்லைகளிலிருந்து ஒதுங்கும் நோக்கில் அந்த பதவியினை ராஜினாமா செய்திருந்தார்.
"குப்பிழான் சந்தியினை மையப்புள்ளியாக கருத்தில் கொண்டு நான்கு பக்கமும் செல்லும் வீதிகளினை எல்லைகளாக கொண்டு நான்கு வட்டாரங்களாக கிராமம் பிரிக்கப்படுகின்றது.
(1964 ஆம் ஆண்டு "குப்பிழான்" தனிக் கிராமமாக பிரிய முன்பு வேறு வகையில் இவ் தேர்தல் வட்டாரங்கள் அமைய பெற்றிருந்தன.)
வட - கிழக்காக உள்ள காளி கோவிலடி, வீரபத்திரர் கோவிலடி, முத்தர்வளவு பிள்ளையார் கோவிலடி பிரதேசங்கள் உள்ளடக்கிய பகுதி 14 ஆம் வட்டாரம். அதில் வெற்றி பெற்றவர் திரு. கா.வல்லிபுரம் அவர்கள்.
(ஊரில் அந்தக் காலங்களில் வாடகை கார் வைத்து ஓட்டும் தொழில் செய்தபடியால் "கார் கார வல்லிபுரம்" என்ற பெயரில் அறியப்பட்டவர். தேர்தல் பிரசார பதாகைகளுடன் அவரது வாகனம் தேர்தல் காலங்களில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி என்பது பிரமாதமான இன்னொரு அழகான காட்சி. )
வட - மேற்காக உள்ள பள்ளிமால், கோட்டார்மனை, பத்தகல் பகுதிகளினை உள்ளடக்கிய பிரதேசம் 12 ஆம் வட்டாரம். அங்கு வெற்றி பெற்றவர் திரு. நாகநாதர் - பாலசிங்கம் என்பவராகும்.("போர்மன்" என்ற கிராமத்தில் அழைக்கப்படுபவர்)
தென் - கிழக்கு வீரமனை, தைலங்கடவை பிரதேசங்களினை உள்ளடக்கிய பகுதி 13 ஆம் வட்டாரம். அங்கு திரு.கந்தையா என்பவர் வெற்றி பெற்றார். இவர் குப்பிழான் தெற்கு எல்லைப் பகுதியில் வசிப்பவராவார்.
இந்த தொகுதியில் இவரோடு முத்துகுட்டியர் என்பவர் போட்டியிட்டார். முத்துகுட்டியரை விழுத்த வேண்டும் என்ற பந்தயத்தில் அந்த நேரம் 20 வயதான கந்தலிங்கம் என்ற இளைஞன் போட்டி போட்டார். இருவரும் சேர்ந்து வாக்குகளினை பிரித்ததால் மூன்றாம் நபரான கந்தையா என்பவர் வெற்றி வாய்ப்பினை தட்டிச் சென்றார் என்பதுதான் இறுதியில் நடந்தது.
தென் - மேற்கு, காசிவாசி செந்திநாதையர் வீதி உள்ள பிரதேசம் 11 ஆம் வட்டாரம். அங்கு திரு.வேலுப்பிள்ளை என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.
இனிதான் "கிராமசபை தேர்தல்" என்ற கிளைமாக்சுக்கு வருவோம்.
18 வயதினை அடைந்து விட்டால் அவர்களுக்கு வாக்குரிமை உண்டு. தேர்தலில் போட்டியிடும் உரிமையும் உண்டு.
எனவே "தேர்தலில் நானும் போட்டி போடுகின்றேன்". என சொல்லிக் கொண்டு ஊரில் திரிவதும் வட்டாரங்களில் பிரசாரங்கள் செய்வதும் அந்த காலத்தில் பலருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு சிறு தமாஷ் பொழுதுபோக்கு.
கிராமம் முழுவதும் உள்ள மதில்கள், சுவர்கள் என எங்கெல்லாம் எழுதலாமோ அந்த இடங்களில் எல்லாம் சுலோகங்கள் இருக்கும். நோட்டீசுகள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
உதாரணத்துக்கு 1969 ஆம் ஆண்டு இறுதியாக நடந்த தேர்தலில் சுவர்கள், மதில்களில் எழுதப்பட்ட சில சுலோகங்களினை குறிப்பிடுகின்றேன்.
"சேவல் சின்னத்துக்கு நேரே புள்ளடி போட்டு 14 ஆம் வட்டார வேட்பாளர் திரு கா.வல்லிபுரம் அவர்களினை ஆதரியுங்கள்."
"கதிரை சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டு 13 ஆம் வட்டார வேட்பாளர் திரு.ஐயாத்துரை - கந்தலிங்கம் அவர்களினை ஆதரியுங்கள்.
"11 ஆம் வட்டார வேட்பாளர் திரு.சங்கரப்பிள்ளை - பரமகுருநாதன் அவர்களினை ஆதரியுங்கள்."
"12 ஆம் வட்டார வேட்பாளர் திரு.தி.பஞ்சாட்ஷரதேவன் அவர்களை ஆதரியுங்கள்"
"12 ஆம் வட்டார வேட்பாளர் திரு.கதிர் சுந்தரலிங்கம் அவர்களினை ஆதரியுங்கள்".
"14 ஆம் வட்டார வேட்பாளர் திரு.அருளம்பலம் அவர்களை ஆதரியுங்கள்."
"13 ஆம் வட்டார வேட்பாளர் திரு.தம்பிமுத்து (முத்து குட்டியர் ) அவர்களை ஆதரியுங்கள்."
இப்படியே ஓன்று இரண்டல்ல. குப்பிழான் கிராமத்தின் நான்கு வட்டாரங்களிலும் பிரசாரங்கள் மற்றும் சுவர்கள், மதில்களில் எழுதும் சுலோகங்கள் என ஏராளம் நடக்கும்.
இதற்குள் இன்னொரு சுலோகம் 1969 ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் நடந்த தேர்தலில், பிரசார சுலோகமாக மதில்களில் இப்படியும் எழுதப்பட்டிருந்தது.
"பொன்னி புருஷனை ஆதரியுங்கள்"
"பொன்னி" என்ற பெயரில் உள்ள ஒருத்தியை முறைதவறிய உறவில் வைத்திருப்பவர் என்ற கிசுகிசுப்பினை தொடர்ந்து அவர் மீது மறைவாக ஒழித்து நின்று கொண்டு விடும் ஒரு நொள்ளு சேட்டை.
மதில்களில் எழுதப்படும் தேர்தல் சுலோகங்களில் இந்த மாதிரியான பாணிகளிலும் பல எழுதப்பட்டிருக்கும்.
இதில் இன்னொரு "தமாஷ் செய்தி" ஒன்றினையும் சொல்லிப்போட்டு கதையினை தொடர்வோம்.
திரு.மாப்பாணி - திருநாவுக்கரசு (திருநா) என்பவர் சந்திக்கு அருகில் மைலங்காடு செல்லும் வீதியில் கடை வைத்து நடாத்தி, அந்தக் காலத்தில் ஊரில் பிரபல்யமான ஒரு சின்ன காசுக்கார முதலாளி என்று பெயர் எடுத்தவர்.1969 ஆம் ஆண்டுக்கு முன்னைய காலங்களில் ஒருமுறை அவரும் தேர்லில் போட்டியிடுகின்றார்.
அவர், தனது வெற்றி நிச்சயம் என முழுமையாக நம்பி "என்னை வெற்றி பெற வைத்த எம்மினிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி. நன்றி."
என தாம் மாலை மரியாதைகளுடன் நிற்கும் படத்துடன், வெற்றி விழாக் கொண்டாடும் துண்டுப் பிரசுரங்களினை முடிவுகள் வெளி வந்தவுடன் காலதாமதமில்லாது விநியோகிக்க ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாகவே தயாராக வைத்திருந்தார்.
"எட்டு வாக்குகளினால் அவர் வெற்றி வாய்ப்பினை இழந்து விட்டார்." என வெளிவந்த உடனடி செய்தினை அவர் தப்பாக, "எட்டு வாக்குகளினால் வெற்றி" என புரிந்து கொண்டு வெடி கொளுத்தி, விசில் அடித்து கிராமத்து வீதி எங்கும் துண்டு பிரசுரங்களினை அவசரப்பட்டு விநியோகித்து முடித்து விட்டார். இறுதியில் நிலைமை தெரிந்ததும் தனது தலைக் கறுப்பினையும் காட்டாது ஊரில் ஒழுங்கைகளுக்கால் பாய்ந்தோடி ஒழித்தார் என்பதும் ஒரு நொள்ளு செய்தி.
தேர்தல் இறுதி நேரத்தில் மதுபானங்களின் பிரியர்களாகயிருக்கும் சில வாக்காளர்களுக்கு நிச்சயம் வாக்குப் போட வேண்டும் என்ற உடன்படிக்கையில் இரகசியமாக மதுபானம் என்ற சோமபானங்களும் வாய்க்குள் நனைப்பதற்கு பரிமாறும் ராஜதந்திர நகர்வுகளும் நடக்கும். .
அங்கு தாராளமாக பரிமாறப்படுவது கிராமத்தின் உள்ளூர் "காய்ச்சி சாராயம்". விலையுயர்ந்த சோமபானங்கள் இனாமாக வழங்குவது என்பது கட்டுப்படியாகாத ஒரு விடயம்.
தேர்தல் காலங்களில் கடைசி நேரத்தில் வழங்கும் "மதுபான பரிமாற்றம்" என்ற இரகசியமான செய்தி ஒன்றினை குறிப்பிடும் போது அது சம்பந்தப்பட்ட இன்னொரு பழைய தமாஷ் கதை ஒன்றினையும் சொல்லாமல் கதையினை தொடரக்கூடாது.
13 ஆம் வட்டாரத்தில், தைலங்கடவை பகுதியில் வசிப்பவர் இராமனின் கணபதி என்னும் கூலி தொழிலாளி.
தேர்தலுக்கு முதல் நாள் அந்த வட்டாரத்தில் போட்டி போட்ட மூன்று வேட்பாளர்களும் தங்களுக்கு வாக்கு போட வேண்டும் என்ற உடன்படிக்கையில் தனி தனியாக இரகசியமாக அவருக்கு மதுபானம், போத்தலுக்குள் நிரப்பி வழங்கியிருந்தனர்.
தேர்தல் நாளன்று ஒவ்வொரு வேட்பாளர் மற்றும் அவரவர் கையாட்கள் எல்லோரும் இதுவரை வாக்குச் சாவடியாகயிருக்கும் நம்மூர் பாடசாலை மண்டபத்துக்கு வந்து வாக்கு செலுத்தாமல் இருப்பவர்களினை தேடி அழைத்துவர முயற்சிப்பது வழமையாக நடக்கும் துரித கதி செயல்பாடாகும்.
இராமனின் கணபதி இதுவரை வாக்குச்சாவடிக்கு வராத காரணத்தினால் அவரை தேடி தைலங்கடவை பகுதியில் பனை மரங்கள் நிறைந்த காணிக்குள் இருக்கும் அவரின் குடிசைக்கும் ஓடினார்கள்.
அங்கு பெரிய தமாஷ்.
முதல் நாள் இரவு மூன்று பக்கத்தாலும் வழங்கிய மதுபான மயக்கத்தில் மகிழ்ந்து தூங்கியவர் மறுநாள் தேர்தல் நாளன்று அந்த சொர்க்கலோக மயக்கத்திலிருந்து எழும்பாமல், தேர்தல் முடிவடைந்து, முடிவுகளும் அன்று மாலை அறிவித்த பின்பு இரவு நடுநிசிக்கு எழும்பி வாக்குப் போட வேண்டும் என கிளம்பியிருந்தாராம்.
இன்னொரு கதையும் இங்கு சொல்ல வேண்டும்.
1969 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தல் எப்போது நடக்குமோ? நடக்காதோ? என்பது தெரியவில்லை. ஆனால் 14 ஆம் வட்டாரத்தில் இருவர் காலம் தாழ்த்தாது அடுத்த தேர்தலுக்காக தங்கள் பிரசாரங்களினை முழு மூச்சாக, அசுர வேகத்தில் பகிரங்கமாக தொடங்கி விட்டார்கள்.
அந்த கிராமத்தவர் ஒருவர்.
அடிக்கடி 14 ஆம் வட்டார பிரதேசமான காளி கோவிலடி, வீரபத்திரர் கோவிலடி, முத்தர் வளவு பகுதி ஒழுங்கைகள் எல்லாம் சைக்கிளில் ஓடிக் கொண்டிருப்பார். காண்போரை நட்போடு நிறுத்தி அடுத்த வி.சி. எலெக்சனில் தான் போட்டியிடப் போவதாக முன் கூட்டியே சொல்லி வைப்பதில் அந்த தொகுதியில் அவர் ஒருவரையும் தவறவிடவில்லை. எப்படியோ ஒரு முறையேனும் "வி.சி மெம்பெர்" ஆக வேண்டும் என்ற அந்த ஆசையில் அவரின் மோகம் கொஞ்சம் வேகமாகவே எப்போதுமிருக்கும்.
" நீ எனக்கு ஒரு சொந்தக்காரனடா தம்பி"
"உம்மடை ஆற்றல், திறமைக்கு ஒரு பிள்ளை கிட்டவே நிற்கேலாது"
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பாணியில் தோற்றமளிக்கும் அந்த மனிதன், கொஞ்ச காலம் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள எந்தவொரு இளைஞர்களினை எதிர் கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் சந்தோஷத்தினை காட்டிக்கொண்டு கட்டியே பிடிச்சுப்போடுவார்.
இனிமேல் காலங்களில் எப்போது நடைபெறும் என தெரியாத கிராமசபை தேர்தலில் போட்டி போடுபவர்களுக்கு முதல் ஆளாக ஆதரவாளர்களினை சேர்ப்பதில் அவர் கையாளும் வழமையான அவரது கலகலப்பு, நையாண்டிகள், நகைச்சுவைகள் கிராமத்து வீதிகளில் அந்த நேரம் கொஞ்சம் சுறுசுறுப்பாகவே காணப்பட்டது.
ஏனெனில் சொந்தங்களும் இரத்த உறவுகளும் கிராமசபை தேர்தலில் வேட்பாளர்களுக்கு அந்த காலங்களில் தவறாது வலுச் சேர்க்கும்.
அவர் தான் கே.பி.நடனசிகாமணி.
திரு.நடனசிகாமணிக்கு போட்டியாக இன்னொருவர்.
"அடுத்த எலெக்சனிலை 14 ஆம் வட்டாரத்தில் போட்டி போட போகின்றேன் என்பதனை முதல் அறிவிச்சது நான் தான்".
"எந்த சிகாமணி வந்து இறங்கினாலும், எந்த கொம்பன் வந்து களமிறங்கினாலும் எனக்குதான் வெற்றி. ஒரு மயிரும் இஞ்ச ஒண்டும் பிடுங்க முடியாது.".
இது அவர் கூறும் தாரக மந்திரம்.
அவர் ஊரில் ஒரு கமக்காரன்.
ஊரில் உள்ள பல விடயங்களில் தலை கொடுக்கும் சந்தர்ப்பங்களை அவரே உருவாக்குவதோடு, அந்த நேரங்களில் கமக்காரன் என்ற ஆடைகளின் தோற்றத்தினை மாற்றி, அழகான வேட்டி, சேட்டு, நாரியில் ஓர் சால்வை வரிந்து கட்டி, பாதணி அணிந்து விறு விறு என வேகமாக 14 ஆம் வட்டார ஒழுங்கைகளினூடாக நடந்து வருவார். அந்த ஆடையில், முதுமையான நிலைமையில் இருந்தாலும், அவர் நடையில் ஓர் கம்பீரம் இருக்கும் என்பதனை எவரும் மறுக்க மாட்டார்கள்.
அவர் தான் எங்கள் "சுருளி கந்தையா அம்மான்"
"மகாத்மா காந்தியும் சிறை இருந்தார். ஜவகர்லால் நேருவும் சிறை இருந்தார். இந்த சுருளி கந்தையனும் கிராமத்துக்காக, பொதுப் பணிக்காக சிறை சென்று வந்தவன்".
அவர் இப்படி சொல்வதில் நியாயம் இல்லையென்றுமல்ல. அவர் அப்படியெல்லாம் சொல்லும் போது அதிலும் ஓர் ரசனையும் இருக்கும். அதனை ரசித்து கேட்பதற்கும் கொஞ்ச ரசிகர்களும் இருப்பார்கள்.
கிராமத்தின் 14 ஆம் வட்டார ஒழுங்கையினுள் நின்று சுட்டு விரலை சற்று மேலே உயர்த்திக் காட்டி, அவரது வழமையான பாணியில் கதை சொல்லும் இந்த மனிதன் இந்த இடத்தில் என்ன "சிறை மீண்ட செம்மல்" என்ற புதிய கதை ஓன்று சொல்லுகின்றார்? என்பது கேட்பவர்களுக்கு பூரணமாக விஷயம் அறியும் வரை ஒன்றுமாக முதலில் புரிந்திருக்கவில்லை.
அவர் சொல்வது கிராம பணிகளில் குறிப்பாக 14 ஆம் வட்டாரத்தில், 1974 ஆம் ஆண்டு மின் இணைப்பு ஏற்படுத்தியபோது, மக்கள் நலன் கருதி வலிமையான தனது வழமையான பாணியில் குரல் எழுப்பி, அதன் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், சச்சரவுகள் காரணமாக சுன்னாகம் பொலிஸ் சிறை கூண்டினுள் சில மணி நேரம் சிறையிலிருந்து மீண்ட செம்மல் என்றதொரு "தியாகச் சான்றிதழ்".
"ஆனால் இறுதியில் என்ன நடந்தது?
ஏழாலை - கிராமசபை தேர்தலே (Village Council Election)1969 ஆம் ஆண்டின் பின்பு நடக்கவுமில்லை. வி.சி. மெம்பெர் ஆகும் அவர்களின் கனவுகளும் அப்படியே கனவாகவே போய்விட்டிருந்தது.
இறுதியில் வி.சி. மெம்பெர் ஆகும் கனவுகளுடனேயே அவர்கள் காலமாகி விட்டார்கள்.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment