கிராமத்தின் கதைகள் 15 - குப்பிழான் - மைலங்காடு புனரமைக்கப்பட்ட பின்பு நடந்த வீதி திருவிழா

 

விஸ்வநாதர் தர்மலிங்கம் 

1970 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குப்பிழான் வாக்காளர்களால் வென்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் 

அன்றொரு காலம்.

கிராமத்தவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கிய இரு நினைவுகளினை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் உள்ளது.

(1) மண்ணெண்ணெய் விளக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கழித்த எங்கள் வீடுகளில் முதன் முதலில் 1974 ஆம் ஆண்டு  மின்சார வெளிச்சங்கள் பிரகாசித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி. அது எல்லையற்றதொரு மகிழ்ச்சி.

(2) குப்பிழான் சந்தியிலிருந்து தெற்கு நோக்கி மைலங்காடு சந்தி வரை போகும் அந்த வீதி, புனரமைக்கப்பட்டு, தார் போடப்பட்ட பின்பு 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற அதன் திறப்பு விழா.

பசுமரத்தாணி போல் இன்றும் மறவாத ஓர் நிகழ்வாகவே கிராமத்தவர்கள் பலருக்கும் அந்த நிகழ்வுகள்  இருக்கலாம். ஏனனில் பிரபல்யமான முறையில் மக்கள் எழுச்சியோடு  கிராமத்தில் நடந்த ஓர் "வீதி திறப்பு விழா" என்பது இது ஒன்றேயாகும். 

கிராமத்தின் அந்த வீதியினை பின்வரும் இரு காரணங்களுக்காக முக்கியத்துவப்படுத்தலாம்.

*  பரலோகமடையும் பூதவுடல்களினை பறை மேள, தாளத்துடன் கிராமத்தின் தெற்கு எல்லைப் பகுதியில் இருக்கும் காடாகடம்பை இந்து மயானத்துக்கு கிராமத்து ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்து  செல்லும் வீதி.

*  வீதியின் இரு மருங்கிலும் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை பச்சை பசேல் என காணப்படும் அழகிய, அற்புதமான விளை நிலங்கள். அந்த வீதியால் செல்லும் போதெல்லாம் கண்ணுக்கினிய பரந்துபட்ட பயிர்ச்செய்கை நில வெளிகளினூடாக பயணிக்கும் உல்லாச உணர்வுகளினை தோற்றுவிக்கும் வீதி.

அந்த வீதியின் புனரமைப்புக்கான அரச அங்கீகாரத்தினை தமது அதிகாரத்தினை பயன்படுத்தி பெற்று தந்தவர் திரு.வி.தர்மலிங்கம் அவர்கள்.

அந்த காலத்தில் அவர் எங்கள் கிராமமும் ஒன்றாக  உள்ளடங்கிய உடுவில் தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினர்.

வீதி திறப்பு விழா நடந்த அன்றைய இனிமையான மாலை நேரம்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக  வீதியின் மறுபக்க எல்லையான மைலங்காட்டு சந்தியிலிருந்து அவ் நீண்ட வீதி வழியாக நடைபவனியில் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் கிராமத்தவர்கள் புடை சூழ, விழா நடந்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மண்டபம் வரை ஊர்வலமாக அவர் அழைத்து வரப்படுகின்றார்.

வீதியோரமெங்கும் பல இடங்களில் நிறைகுடம் வைக்கப்பட்டு, மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்படுகின்றார். தொடர்ந்து அன்றிரவு பாடசாலை மண்டபத்தில் மிக பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெறுகின்றது.

நம்ம கிராமத்தவர்கள் என்றும் நன்றி மறக்காதவர்கள் என்பதற்கு இந்த மாபெரும் ஊர்வலம், பாராட்டு விழா போன்றவை எடுத்துகாட்டாக அமைந்ததுடன் எம்.பி யும் தொடர்ந்து நம்ம கிராமத்தோடு அன்றிலிருந்து நன்கு பிணைக்கப்பட்டார் எனத்தான் சொல்ல வேண்டும். 

1971 ஆம் ஆண்டு காலத்தில் கிராமத்துக்கென ஓர் உப - தபால் கந்தோர் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் 1974 ஆம் ஆண்டு கிராமத்துக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது போன்ற பல பணிகளுக்கு எங்கள் தொகுதி பாரளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களே காரணமாகும். 

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் இடையே சொல்ல வேண்டும் போல் உள்ளது.

27-05-1970 ஆம் ஆண்டு அகில இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து, அன்றிரவு யாழ்ப்பாண அரச செயலகத்தில் வைத்து யாழ் மாவட்ட தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை முடிவுகளினையும் ஒலிபெருக்கியில் அந்த இடத்தில் வைத்து உடனடியாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து இறுதி வெற்றியாளர் யார்? என்ற முடிவினை இரவிரவாக வானொலி மூலமும் பரபரப்பாக நாடு முழுவதும்  அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உடுவில் தொகுதியில் உள்ள கிராமங்களான  சண்டிலிப்பாய், கந்தரோடை, சுன்னாகம், உடுவில், மானிப்பாய், இணுவில், மருதனார்மடம்  என ஒவ்வொன்றிலும் கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்ததும் ஒவ்வொரு கிராமத்தின் முடிவுகளும் அறிவிக்கப்படும் போதும் அன்று தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட திரு.சிவநேசன் அவர்கள் முன்னணியில் நிற்பது அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்த கட்சியின் ஆதரவாளர்களின் ஆராவாரங்கள் அந்த இடத்தில் ஒலிக்கின்றது.

உடுவில் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் வாக்குகளும் எண்ணப்பட்டு இறுதியாக ஏழாலையும் குப்பிழானுமே எஞ்சியுள்ளது.

ஏழாலை கிராமம் முழுவதுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைகள் முடிவடைந்த போது அண்ணளவாக  இரு பக்கமும் சமனாக உருவாகியிருந்தது.

இறுதியாக சிறிது நேர இடைவெளி விட்டுட்டு குப்பிழான் கிராமத்தின் வாக்குகள் எண்ணப் போகின்றார்கள் என அறிவித்தபோது தமிழரசு கட்சியில் போட்டியிடும் திரு. தர்மலிங்கம் அவர்கள் சுமார் 2000 மேலதிக வாக்குகளினால் நிச்சயம் வெற்றி பெறப்போகின்றார் என்பது மனக்கண் முன் தெரிவதால் ஏற்கனேவே வாக்கு எண்ணிக்கைகளின் அறிவிப்பினால் சோர்வடைந்திருந்த  தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் இறுதி முடிவுகள் முடிவாக வரமுன்பே விசில் அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

 ஏனெனில் குப்பிழான் கிராமத்தவர்களின் 95% வீதமான வாக்குகள் தமிழரசு கட்சியில் போட்டியிடும் திரு.தர்மலிங்கத்தினை விட்டு அகலாது என்பது அன்று தொகுதி முழுதும் தெரிந்த அசைக்கமுடியாததொரு நம்பிக்கையாகும்.

இங்கு இன்னொரு நகைச்சுவையான விடயம்  ஒன்றினையும் சொல்லாமல் போனால் கதை ரசனையாக இருக்க மாட்டாது.

எவர் வெல்வார் என்பதில் எழுத்து மூலம் கைச்சாத்திட்டு ஊரில் இருவரிடம் ஒரு பந்தயம். ------------?

வெல்லப்போவது தமிழரசு கட்சியில் போட்டியிடும் திரு.வி.தர்மலிங்கமா--------? அல்லது தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் திரு. சிவநேசனா ----------? 

பந்தயத்தில் சவாலினை எதிர்கொண்டு நின்றவர்கள் 

"கார் கார வல்லிபுரம்"  எதிர் "திருமேனி - பஞ்சாட்ஷரதேவன்" 

பந்தயத்தில்  தோற்றவருக்குரிய தண்டனை ?????--------"தலை மொட்டை அடிப்பது."

சும்மாயே அவர்கள் இருவரின் தலையும் ஹெல்மெட் போட தேவையில்லாத தலை.

அங்கு அவர்கள் தெரிவு செய்த இப்படியொரு  பந்தயம் என்பது இன்னொரு தமாஷ். 

சரி. இனி எங்கள் கிராமத்தின் பழைய கதைகள் என்ற தொடருக்கு வருவோம்.

கல்லு வீதியால் காலம் காலமாக சலிப்புடன் உலாவிய அந்த வீதி, புது பொலிவுடன் புனரமைக்கப்பட்ட பின்பு  மீண்டும் மீண்டும் அடிக்கடி அந்த புது வீதியால் நடந்தும், சைக்கிளில் ஓடியும்  திரிய வேண்டும் போல் ஓர் ஆனந்த மயமாகவே அந்த நேரம் இருத்திருந்தது என்பதனையும் சொல்லியேயாக வேண்டும்.

"தார் போட்ட வீதிகளினையும், அதில் ஓடும் வாகனங்களினையும் பார்க்க வேண்டுமானால் முன்னைய காலங்களில் கிராமத்திலிருந்து ஒற்றையடி பாதைகளினூடாக சில மைல் தூரங்கள் கிராம எல்லைகளினை கடந்து சென்று ஆவலுடன் பார்த்தோம்." 

 "மல்லாகத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தி வரை குப்பிழான் சந்தியினை ஊடறுத்து செல்லும் பிரதான வீதி முதன் முதலில் தார் போடப்பட்டு வாகனங்கள் ஓடும் வீதியாக 1950 ஆம் ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டது."

"தொடர்ந்து யாழ் நகரிலிருந்து சுன்னாகம் , மல்லாகம் ஊடக 770 இலக்க அரச பேரூந்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டு, கிராமத்தினூடாக பேரூந்து சேவைகள் ஆரம்பித்தபோது அந்த காலம் நாம்  அடைந்த மகிழ்ச்சியும் அளப்பரியது"

என கிராமத்து மூதாதையர்கள் அந்த காலங்களில் சொல்வார்கள்.

தொடர்ந்து சில வருடங்களின் பின்பு குப்பிழான் - குரும்பசிட்டி வீதியும் தார் போட்ட வீதியாக புனரமைக்கப்பட்டது . 

ஆனால் இன்று கிராமம் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றது.?

முன்னொரு காலம் இப்படித்தான் கிராமம் மிகவும் பின் தங்கிய நிலைமையில் கிராமம் இருந்தது. அங்கு உருவான சிறு சிறு மாற்றங்கள் எங்களை மகிழ்ச்சி என்னும் கடலுள் மூழ்க பண்ணியது என இன்றைய புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்லும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.

குப்பிழான் றஞ்சன்- 


Post a Comment

Previous Post Next Post