(கோப்புப்படம்) |
"செல்லப்பன்"
அந்த பெயரை சொல்லிக் கூப்பிடும் போது அங்கு சமூக அடக்குமுறையின் கீர்த்தனையுடன் பப்பாசி மரத்தில் ஏத்தும் குரலாகவே அந்த குரல் ஒலிக்கும்.
"செல்லப்பன்ரை திருவிழா என்றால் அதுதான் திருவிழா"
"மற்ற திருவிழாக்காரர் யாராயிருந்தாலும் செல்லபன்ரை திருவிழாவோடை கிட்ட நிண்டு பிடிக்க முடியாதென ஊருக்குள்ளே எங்கும் ஒரே கதைதான்."
திருவிழா செய்யும் செல்லப்பனை பார்த்து ஊரவர்கள் சிலர் இப்படி சொல்லும் போதெல்லாம் அந்த மனிசன் சந்தோஷத்திலை அந்த காலத்தில் நிலத்திலை கால் வைச்சு நடக்க மாட்டான் என்பதும் நொள்ளுத்தனமான ஒரு கிசுகிசுப்பு.
அந்த காலங்களில் குப்பிழான்- சொக்கர்வளவு பிள்ளையார் கோயிலில் வருடம் தோறும் நடக்கும் பத்து நாள் மகோற்சவ உற்சவ கால திருவிழாக்களில் செல்லப்பனின் திருவிழாவும் ஓன்று.
(இப்போதும் அவரின் குடும்பத்தவர்கள் எவரேனும் திருவிழா உபயகாரராக தொடர அனுமதிக்கப்பட்டார்களா? ? என்பது சரியாக தெரியாமல் கதைக்கக்கூடாது.)
செல்லப்பனின் திருவிழா நாளன்று இரவு, அவரது செலவில் நடக்கும் அந்த கேளிக்கை விழாவில் சிகரம், ஆறு சப்பரங்கள், பல கூட்டங்களின் தவில் கச்சேரிகள், சின்ன மேளம்,--------------- இப்படி செல்லப்பனின் திருவிழாவில் பல களை கட்டும்.
மின்னொளிகளால் ஆலயத்தின் பகுதிகள் எல்லாம் அன்றைய இரவு பிரகாசிக்கும்.
திருவிழா நடக்கும் அந்த இரவு முழுவதும் புது வேட்டி கட்டிக் கொண்டு, விழாவின் கதாநாயகன் மாதிரி பகிரங்கத்துக்கு காட்டிக் கொண்டாலும், அந்த விழாவின் உபயகாரனாகிய செல்லப்பன் கோயிலுக்கு வெளியிலைதான் நிற்க வேண்டும் என்பதும் மரபு ரீதியான, மனித நேயத்தினை தொலைத்த எழுதப்படாததொரு சட்டமாக அந்த காலத்தில் இருந்தது.
செல்லப்பனின் உறவுக்காரர்கள் என ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லாம் ஒன்றாக வந்து, வேலி கரையோரமாக ஒதுங்கி பயத்தோடு நின்று இது நம்ம செல்லப்பனின் திருவிழா என மகிழ்ச்சிப்பட்டுக் கொண்டு பார்ப்பது யாழ்ப்பாணத்தின் தேச வழமை சட்டத்தின் பிரிவோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் எவரும் கோயில் வாசல் படியினை தாண்டி ஒரு சுவடும் உள்ளுக்குள் வைக்க முடியாது. விழா மேடைக்கு அருகிலும் மற்றவர்களுடன் சமனாக இருந்து விழாவினை பார்க்கவும் முடியாது.
(அடக்கு முறையாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்றைய காலங்களில் அடக்கப்பட்டவர்களாக, இந்த விடயத்தில் தம்முள் அடக்கி வாசிப்பதனை கிராமத்தின் ஆலயங்களில் பார்த்தால் இதுவல்லவோ கர்மாவின் ஒரு கட்டளை என்ற மாதிரி தோன்றும்.)
சரி. கதையினை தொடர முன்பு "செல்லப்பன்" என்பவர் யார்? என்பதனை சொல்லிப்போட்டு கதையினை தொடர்வோம்.
நம்ம கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, கல்வியறிவு வாசனையினை நுகரும் வாய்ப்புகள் என்பதும் சமூக ஒடுக்குமுறையின் காரணமாக தடை செய்யப்பட்ட நிலையில் வளர்ந்து, பனை மரமேறி கள்ளு சீவி இறக்கி, அதனை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, தான் வசிக்கும் அந்த சிறு ஓலை குடிசை வீட்டுக்குள் இருக்கும் மர பெட்டகத்தினுள் பேணி பாதுகாத்து வைத்திருக்கும் ஓர் கடினமாக உழைக்கும் தொழிலாளி.
அந்த காலங்களிலெல்லாம் வங்கியில் பணம் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற பக்கங்களினை பெரும்பாலான கிராமத்தவர்கள் திரும்பி பார்ப்பதில்லை என்பது இங்கு சொல்லத் தேவையிருக்காது.
"உவங்கள் எல்லாம் காசுக்காரராகினால் நாளைக்கு எங்களை மதிக்கமாட்டாங்கள். உதுக்கு ஏதேன் வேலை பார்க்கத்தான் வேணும்"
செல்லப்பனின் கள்ளு கொட்டிலில் உள்ள மர குத்தியிலிருந்து பனை ஓலை பிளாவினுள் அந்த சோமபானத்தினை வாயினுள் விட்டு ஏப்பம் விட்டு கொள்ளும் மேற்குடியினை சேர்ந்த கிராமத்து வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாக ஒரு கள்ள சிரிப்போடை கதைப்பதும், திட்டங்கள் போடுவதும் அந்த அப்பாவி சீவல் தொழிலாளிக்கு எங்கே புரியப்போகுது?
இது அவர்களின் அந்த கால, கள்ளு கொட்டிலில் நடக்கும் மகா புத்திசாலித்தனமான ராணுவ இரகசியம்.
"செல்லப்பர்"
"கள்ளு சீவலில் காசு உனக்கு அள்ளிக்கொண்டு வருகுது என்றால் அது பிள்ளையார் அள்ளி தாறார்"
"பிள்ளையாரை கைவிட்டுடாதை. அடுத்த வருஷ திருவிழா இன்னும் கூட களை கட்ட வேணும்".
இது கடவுளை வைத்து மிரட்டும் சோமபான பிரியர்களின் அடுத்த கட்ட ஆத்மீக போதனை.
ஒருவருக்கொருவர் என போட்டி போட்டுகொண்டு செல்லப்பனை உசுப்பேத்தாமல் விடமாட்டோம் எனத்தான் நிற்பார்கள். அதனை ரசிப்பதற்கு பலர் நிற்பார்கள். இதுவே தங்கள் வாழ்வின் மகா புத்திசாலிதனமென நினைத்து தங்களுக்கு தாங்களே விருதும் வழங்கி கொள்வார்கள்.
கிராமத்தின் எல்லையினை கடந்து ஒன்றுமே தெரியாத அந்த மரமேறும் சீவல் தொழிலாளிக்கு, அவரது காசில் இந்த உசுப்பேத்தும் கூட்டங்கள்தான் திருவிழாவினை நடாத்தி கொடுக்கும் நிர்வாகிகள் என்பதனையும் சொல்லாமல் இங்கு கதையினை தொடரக்கூடாது..
இறுதியில் என்ன நடந்தது?
அந்த சோமபானத்தின் பிரியர்கள், அவர்களோடு சேர்ந்த ஊரவர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியோ உசுப்பேத்தி செல்லப்பனின் மர பெட்டகத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாக பனை மரமேறி சேகரித்து வைத்திருந்த காசினை ஒரு நச்சு சிரிப்போடை படிப்படியாக ஒவ்வொரு வருடமும் ஆடம்பர கேளிக்கை திருவிழா செய்யப்பண்ணி கரைத்து போட்டார்கள்.
தொடர்ந்து ஓலை குடிசை வீட்டு மர பெட்டகத்தினுள் சேகரித்து வைத்திருந்த காசுகளும் கரைந்து போனதால் செல்லப்பனின் இரவு நேர ஆடம்பர கேளிக்கை விழாவும் அவரால் தொடரமுடியாது போய் விட்டது.
தொடர்ந்து, தர்மத்தின் நியதியோ என்னவோ?
ஓர் உண்மையினை இரகசியமாக சொல்கின்றேன்.
ஒருவருக்கும் பகிரங்கப்படுத்த மாட்டேன் என்ற உறுதி மொழியுடன் கேளுங்கள்.
உசுப்பேத்தியவர்களின் சந்ததிகள் வறுமைக்கோட்டினை கடந்து வர பல வருடங்கள் எடுத்திருந்தது என்பதனையும் தர்ம சாஸ்திரங்களினை அடிப்படையாகக் கொண்டு அமைதியாக பார்ப்பவர்களுக்கு இலகுவாக புரிந்திருக்கும்.
இவைகள் எல்லாம் புத்திசாலித்தனமோ அல்லது நியாமான ராஜதந்திரமோ அல்ல என்பதனை எத்தனை பேர் "கர்மா" என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம்ம கிராமத்திலிருந்து புரிந்து கொண்டார்கள்?
Post a Comment