கிராமத்தின் கதைகள் 13 - தெல்லிப்பழை ஆஸ்பத்திரி வாசலில் சைக்கிள் திருடிய சந்தேகத்தில் கைதான D.M.O

 

(கோப்புப்படம்)

ஊர் சந்தியிலிருக்கும் தலைமையாசிரியரின் மகன் கைலாசநாதனின் சைக்கிள் ஓன்று அன்று ஒருநாள் தெல்லிப்பழை ஆஸ்பத்திரியில் களவு போய்விட்டது.

இந்த சம்பவம் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் நடந்தது.

"எதுக்கும் கவலைப்படாதே கைலாசநாதா.

இரண்டு நாளுக்குள் சைக்கிள் திரும்பி வரும்."

"எனக்கு தெரியாமல் தெல்லிப்பழை ஆஸ்பத்திரி எல்லைக்குள் ஒன்று நடக்குமா? எனக்கு இருக்கிற செல்வாக்கினை பயன்படுத்தி சைக்கிளை எடுத்தவன் யார் என்பதை கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்".

தெல்லிப்பழை ஆஸ்பத்திரியில் பல வருடங்கள் ஊழியராக பணிபுரியும் நம்மூரவர், D.M.O என்ற அந்த மனிதன் ஆஸ்பத்திரி வாசலில் வைத்து கூட்டமாக நின்ற மக்கள் மத்தியில் விலாசமாய் தம்பட்டம் அடித்துப் போட்டார் .

கதையினை தொடர முன்பு யார் அந்த D.M.O ? .

ஏன் அவருக்கு பெயர் இல்லையா?

அது என்ன பெயருக்கு பதிலாக "D.M.O" என்ற சொல் ?  

என நம்ம இளைய தலைமுறையினர் நிச்சயம் கேட்பார்கள்.

ஆனபடியால் அவை பற்றிய அறிமுகத்துக்கு முதலில்  வருகின்றேன்.

D.M.O என்பதனை ஆங்கிலத்தில் "District medical Officer" என சொல்லப்படும். ஆஸ்பத்திரியில் அது ஓர் அதி உயர் பதவி. (Highly executive position within hospital)

பல வருடங்களாக அங்கு பணி புரியும் நம்மூரவர் ஒருவருக்கு  தெல்லிப்பழை ஆஸ்பத்திரியே நம்ம கையில் என்று தம்பட்டம் அடிப்பதால், அந்த செல்வாக்கினை பல இடங்களிலும் காட்டுவதால், கிராமத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து கௌரவமாக அந்த பதவியினை அவருக்கு அந்த காலத்தில் வழங்கியிருந்தனர்.

ஊரவர்கள், தெரிந்தவர்கள் என எவராவது ஆஸ்பத்திரிக்கு போனால் அவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் என்றும் அவர் பின் நிற்பதில்லை என்ற உண்மையினையும் இங்கு சொல்லியியாக வேண்டும் .

அவர் தம்பட்டம் அடிப்பார்.

தடுமாறுவார்.

"மதுபானம்" என்ற அற்புதமான அந்த "சோமபானம்" நாக்கில் பட்டால் வார்த்தைகளில், செயல்களில் அவர் தடமும் மாறுவார்.

அவரது அந்த சுபாவங்கள் அவரை தெரிந்தவர்களுக்கு என்றும் ஓர் நகைச்சுவை.

இனி கதையின் அடுத்த கிளைமாக்ஸ் என்ற நிலைக்கு வருவோம்.

சுமார் ஒரு கிழமையின் பின்பு நம்மூரவரான "Banker" கணேசலிங்கம் என்பவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமது தொழில் நிமித்தம் போன போது அங்கு D.M.O என்ற நம்ம கிராமத்து மனிதன் , தெல்லிப்பழை ஆஸ்பத்திரியில்  சில நாட்களுக்கு முன்பு  சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறை கூண்டுக்குள் நிறுத்தப்பட்டிருப்பதனை பார்த்த போது திகைத்து போயிருந்தார்.

அவருக்கு அந்த இடத்தில், அந்த கோலத்தில்  D.M.O வின் நிலைமையினை பார்த்ததும் கண்களும் கலங்கிவிட்டது. 

இது பொதுவாக அந்த காலங்களில் வாழ்ந்த நம்ம கிராமத்தவர்களின் மறுபக்க சுபாவம்.

எந்த கட்டத்திலும் இப்படியொரு சைக்கிள் திருட்டினை அவர் செய்திருக்கமாட்டார் என்பது அவரை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியானதொரு குடும்பத்தில் அவர் பிறந்தவருமல்ல. 

 "Banker" கணேசலிங்கம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் வங்கியில் பணி புரிந்தவர். தினமும் வங்கியோடு சம்பந்தப்பட்ட அலுவல்களாக பொலிஸ் நிலயத்தோடு தொடர்பில் இருந்தவர். இப்போது கனடாவில் வசிக்கின்றார்.

கிராமத்தில் நடந்த பல்லவர் காலத்து நகைச்சுவையான கதைகளினை சொல்ல தொடங்கினால் அவர் பிரேக் பிடிக்கவே மாட்டார். இந்த கதையினையும் அவரேதான் சொல்லியிருந்தார்.  

"Banker" கணேசலிங்கத்தாருக்கு பொலிஸ் நிலையத்தில் உண்மை நிலைமை என்னவென புரிந்துவிட்டது.

இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை என்பவர் அந்த நேரம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பதவியில் இருந்தவர்.

"தண்ணி முசுப்பாத்தியில் வந்த உளறல்" 

என்பதனை "Banker" கணேசலிங்கம் தெளிவு பண்ணிய போது அதுவே நடந்திருக்கலாம் என்பதனையும் இன்ஸ்பெக்டர் ஊகித்துக் கொண்டார்.

ஏனெனில் நியாயமான திருடனாயிருந்தால் திருட்டுப் போன பின்பு ஆஸ்பத்திரி வாசலில் நின்று சைக்கிள் தன்னுடைய செல்வாக்கில் திரும்பி வரும் என விலாசக் கதையாக உளறியிருக்கமாட்டான் என்பதும் இன்ஸ்பெக்டரின் துப்பறியும் பார்வையில் புரிந்திருக்காமல் இருந்திருக்காது.

மதுபானம் என்ற சோமபானத்தினை  நாவில் நனைத்தால் நாவால் கெட்டொழியும் அந்த மனிதன் அதிர்ஷ்டவசமாக சிக்கலிலிருந்து தப்பி சிறை மீண்ட செம்மலாக அன்று வெளிவந்தார்.  

(கிராமத்தின் சில பழைய கதைகள், சம்பவங்களினை ஓர் படிப்பினைக்காக மற்றும் அதில் உள்ள சில ரசனைகளுக்காக கிராமம் என்ற எல்லைக்குள்ளிருந்து பகிர்ந்து கொள்கின்றோமே தவிர எவர் மனத்தினையும் நோகடிக்கவல்ல)

குப்பிழான் றஞ்சன்- 

Post a Comment

Previous Post Next Post