கிராமத்தின் கதைகள் 12 - இரவு நேரம் கள்ள கோழி பிடித்து கறி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்

அன்று அந்த காலை நேரம்.

மையமாக கொண்ட குப்பிழான் சந்தியிலிருந்து நான்கு பக்க வீதிகளிலும் கொஞ்ச தூரம் பரபரப்பாகவே இருந்தது.   வீடுகளில் இருப்போர் எல்லோரும் தெருவோரமாகவுள்ள படலையடிக்கு வந்து கூடி நின்று ஏதோ ஏதோ எல்லாம் ஆரவாரமாக  கதைகளை பரிமாறிக் கொள்கின்றனர். 

அப்படி என்ன பரபரப்பு?

"கொஞ்ச பெடியள் ராத்திரி கள்ள கோழிகள்  பிடிச்சு, உரிச்சு, பள்ளிக்கூட மண்டபத்துக்குள் கறி சமைச்சு சாப்பிடைவையாம். பொலிஸ் அவரவர் வீடுகளுக்கு தேடி வந்து ஒவ்வொருவரையும் பிடிக்கிறாங்களாம். இரண்டு பேர் பிடிபட்டு விட்டினம். மற்றவங்கள் வளவுகளுக்கால் பாய்ஞ்சு தப்பி ஓடுகின்றாங்களாம்"

 அதிலும் இன்னொரு மர்மம்.

"அவர்கள் கோழிக்கறி சமைத்த நெருப்பு தணல் அங்கிருந்த பாடசாலை அலுமாரி ஒன்றையும் எரித்து விட்டதாம்"

படலையடியிலும், வீதிகளிலும் நின்று பார்ப்பவர்களுக்கு அன்றைய தினம் இது ஓர் பரபரப்பான செய்தி.

அந்த கோழிகளின் உரிமையாளருக்கு ஓர் விசுவாசமான தொழிலாளியாக ஓர் பையன் இருந்தான்.

அந்த பையன் பரபரப்போடு பாடசாலைக்கு அருகில் அங்கும் இங்கும் ஏன் அந்த அதிகாலை நேரம்  ஓடி திரிந்தான்?  என்பதும் கோழிகளை பறி கொடுத்தவருக்கும் உடனடியாக தெரிந்திருக்காத கருத்தில் கொள்ள வேண்டிய மர்மமான ஒரு துப்பு.

அந்த துப்பு என்னவாகவிருக்கும்?

அது கிளைமாக்ஸ்.

1978 ஆம் ஆண்டின் ஓர் நாள் இந்த சம்பவம் நடந்தது. 

இந்த பழைய கதையில் ரசிக்கக் கூடிய கிளைமாக்ஸ் என்ன தெரியுமா ?

சமைச்ச கோழிக் கறியில் அவர்கள் பங்கு வழங்க, வாங்கி சாப்பிட்ட ஒருவன் அந்த அதிகாலை நேரம், பொழுது விடிய முன்பே கோழி உரிமையாளரிடம் போய் முழு விசயங்களினையும் போட்டு கொடுத்துட்டான்.

கோழிகளின் உரிமையாளர் என்ன சும்மாய் இருப்பாரா? 

குற்றவியல் தடங்களின் துப்பறியும் நிபுணர் என்ற பெயரோடு அதனை பகிரங்கப்படுத்தி ஊரில் விருது ஓன்று எடுக்காமல் விடுகிறதில்லை என்ற இலட்சியத்தில் கிளம்பி விட்டார்.

("பூனைக்கு மணி கட்டுவது யார்?" என தெரியாமல் ஊரில் இருந்த பலர் அவரை கொஞ்சம் உசுப்பும் ஏத்தி இருக்கின்றார்கள் என்பதும் மறைக்கப்பட்ட ஒரு செய்தி. ஆனால் பின்பு கிராமிய மக்களின் உணர்ச்சிகள் தலைகீழாக மாறும் போது உசுப்பியவர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாறியிருந்த காட்சிகள் இன்னுமோர் தந்திரோபாயத்தின் அடுத்த நகர்வு.)

அவர் தனியாக கிளம்பவில்லை.

போட்டு கொடுத்த ஆசாமியினையும் குற்றவியல் தடங்கலுக்குள் பங்கு கொண்ட நேரடி சாட்சியாக (Approver of criminal investigation)  கையோடு அழைத்துக்கொண்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அந்த அதிகாலை நேரம்  போய் விட்டார். 

அத்துமீறி பாடசாலைக்குள் புகுந்து கோழி கறி சமைச்சத்துடன் அங்கு உள்ள அலுமாரியினையும் எரித்துள்ளார்கள் என்ற முறைப்பாட்டினை பாடசாலை நிர்வாகத்தில் உள்ளவர்களும் பொலிஸ் நிலையத்தில் சேர்ந்து போய்  வழங்கிருந்தனர். 

இதில் இன்னொரு கிளைமாக்ஸ்.

பிடிபட்டவர்களில் ஒரு சிலர் கிராமத்து ஆசிரியர்களின் மைந்தர்கள்.

"பள்ளிக்கூடத்தினை தளமாக வைத்து ஒரு குற்றச்செயல் நடந்தால் பொலிஸில் முறைப்பாடு கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. அதைத்தான் நாங்கள் செய்தோம். ஆனால் குற்றவாளிகள் யார் என்பதனை நாங்கள் எங்கடை வாயால் சொல்லவேயில்லை." 

ஆரம்பத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும் என உசுப்பு ஏத்தியவர்கள், ஒன்றாக முறைப்பாடு செய்வதற்காக சேர்ந்து போனவர்கள் மக்கள் கொந்தளிப்புகள் தொடர்ந்து  திசை திரும்ப அவர்கள் பாதை மாறி  சுழர தொடங்கி விட்டனர்.   

ஊரோடு ஊராக வாழ தெரிந்த புத்திசாலிகள்.

சுன்னாகத்தில் வாடகைக்கு கார் ஓட்டுபவனுக்கும் அன்று காலை நேரம் ஓர் உழைப்பு கிடைத்துவிட்டது.

குப்பிழானுக்கு சிவில் உடையில் காரில் அழைத்து வரப்பட்ட பொலிஸாருக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவரின் வீடு முதலில் காட்டபட்டது.

"எங்கே உங்க பையன் ?"

"அந்த சையிற் அறையில் படுத்திருக்கின்றான். ராத்திரி பிந்தி வந்து படுத்தது. இன்னும் எழும்பவில்லை."

எவரோ நண்பர்கள் என நினைத்து கள்ளம் கபடமில்லாமல் வெளி விறாந்தையோடு சேர்ந்திருந்த அந்த அறையினை தந்தையார் கையால் சுட்டி காண்பிக்கின்றார்.

அவர் உடனடியாக கைது.

 இன்னுமொருவன் கைது செய்யப்பட்டான். ஆனால் இரண்டாவது அந்த சந்தேகநபர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட விதம் ஓர் புதுமையானது. அந்த புதுமையினை இந்த கதையில் தணிக்கை செய்வோம்.

ஏனையோர் செய்தி அறிந்ததும் வீடுகளில் நிற்காது அந்த வேலிகளை தாண்டி வளவுகளுக்கால் பாய்ந்து ஓடி தப்பி விட்டார்கள்.

 இந்த  பரபரப்பான செய்தியோடை கொஞ்சம் தமாஷ் கலந்த ஒரு செய்தியினையும் சொல்ல வேண்டும் போல் உள்ளது.

அதிகாலை நேரம் சந்தைக்கு போன அந்த கிராமத்து விவசாயி ஒருவர் பஸ்சில் திரும்பி வந்து சந்தியில் இறங்கிய போது என்ன பரபரப்பு என விசாரித்து நிலைமையினை மிக ஆவலுடன் அறிந்து கொள்கின்றார்.

"இதுதான் சரியான வேலை. இனிதான் ஊர் திருந்தும்.

எத்தனை பேரின் கோழிகள் இரவு நேரம் இதுவரை காலமும் களவு போயிருக்குது.?"

"போன கிழமை உப்பிடித்தான் பப்பர் வீட்டிலை இரவு மூன்று கோழிகளை பிடிச்சிருக்கினம். 

"ஆறு மாதத்துக்கு முதல் பொன்னர் வீட்டிலை மனிசியின் பிள்ளை பேற்றுக்காக வளர்த்த சின்ன கோழிகள் கொஞ்சம் காணவில்லையாம்."

சேட்டுக்கு பதிலாக மடிச்சு கட்டிய வேட்டிக்கு மேல் சால்வை துண்டு ஒன்றை போட்டு கொண்டு வெளியூர் போய் வரும் அந்த மனிதன் வீதியில் போகும் ஒவ்வொருவருக்கும் புள்ளி விபரங்களோடு கதை சொல்லிக்கொண்டு பிரதான வீதியால் நடந்து வந்தவர் தனது வீட்டு  ஒழுங்கைக்குள் திரும்புகின்றார்.

"என்ரை பிள்ளையாயிருந்தால் நானே பிடிச்சு பொலிஸிலை கொடுத்திருப்பேன்.

 "எளிய நாய்கள். சீவியத்திலை திருந்தாதுகள்".

சுட்டி விரலை கொஞ்சம் உயர்த்தி காட்டி, கடுப்போடை காண்பவர்கள் எல்லோருக்கும்  நியாயம் சொல்லிக்கொண்டு அந்த ஒழுங்கையினூடாக அவர் பாத சுவடுகள் வீட்டினை நோக்கி நகருகின்றது. 

வீட்டுக்கு போய் சேர்ந்தால் அங்கு அவரின் ஒரேயொரு பையனும் வேலிகள் கடந்து இப்பதான் தப்பி ஓடி விட்டான் என்ற பதட்டமான நிலைமை.  . 

அவர் அந்த கணமே அடக்கி வாசித்துக் கொண்டு பையனை எப்படி பொலிஸாரின் பிடியிலிருந்து காப்பாற்றுவது? ஊரின் மானத்திலிருந்து காப்பாற்றுவது? என கிளம்பி விட்டார்.

"நாங்கள் கோழிகள் பிடிச்சு பள்ளிக்கூடத்து கட்டிடத்தினுள் கறி காய்ச்சி சாப்பிட்டது உண்மை. ஆனால் அலுமாரிக்கு நெருப்பு நாங்கள் வைக்கவில்லை. வைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை."

அந்த இளைஞர்கள் சத்தியமடித்து சொல்லுகின்றார்கள்.

 கோழிக்கறி அடுப்பு மூட்டி காய்ச்சியது ஒரு இடம். அலுமாரியில் நெருப்பு எரிந்தது சற்று தொலைவில் உள்ள இன்னொரு இடம் என்ற ஒரு சிறு துப்பு, சாதகமானதொரு சான்றாக அவர்களின் வார்த்தைகளுக்கு  அமைகின்றது.

ஓர் கிராமியத்தின் கொந்தளிப்புகளும், உணர்ச்சிகளும் அங்கு தலை கீழாக சுழன்று அடித்த போது பலரின் இரட்டை நாக்குகளும் நேரத்துக்கு நேரம் புத்திசாலித்தனமாக மாறிக் கொண்டிருந்தது என்ற ஒரு விடயத்தினை கூர்மையாக பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.  

என்னதான் பிடிபட்ட பரபரப்பு  நிகழ்ந்தாலும்  தொடர்ந்து இதே மாதிரியான கோழி களவுகள் ஊரில் தொடர்ந்து நடக்காமல் விடுபட்டது  என்ற நல்ல செய்தி வந்ததாகவும் தெரியவில்லை. கிராமத்து இளைஞர்களின் அந்த வயதுக்குரிய இத்தகைய விளையாட்டு தனமான திருட்டுக்களினை பொலிஸில் மாட்ட வேண்டும் என இவரை தவிர வேறு எந்த கிராமத்தவரும் ஓடியதாகவும் செய்திகள் இல்லை. 

(கிராமத்தின் பழைய கதைகளினை பகிர்வது ஓர் ரசனைக்கு, அந்த ரசனையில் ஊடறுக்கும் சில நகைசுவைகளுக்காக மட்டுமே தவிர எவரையும் நோகடித்து  குற்றவாளியாக்கவல்ல.)

குப்பிழான் றஞ்சன்- 

Post a Comment

Previous Post Next Post