பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குப்பிழான் கிளை காரியாலய அலுவலகத்தினை இரவு எவரோ தீ வைத்து கொளுத்தி போட்டார்கள் என்பது அன்று காலை ஊர் முழுவதும் ஓர் பரபரப்பான செய்தி.
அங்கு இருந்த மேசைகள், வாங்குகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் உட்பட முன் கதவும் எரிந்து சாம்பலாக இருந்தது.
நெருப்பு கொளுத்தியவர்கள் யார் என்பது கிராமம் முழுவதும் மர்மமாகவே இருந்தது.
சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே முரண்பட்டுக் கொண்டு நிர்வாகத்திலிருந்து விலகியவரை இரவோடு இரவாக தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரித்த நிர்வாகிகள் இருவரின் செயல்பாடு அங்கு சிறு சச்சரவினையும் உருவாக்கியிருந்தது.
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சி காலமான 1971- 1972ம் ஆண்டு காலங்களில் ஓர் நாள் இந்த சம்பவம் நடந்தது.
அரசாட்சியில் இருக்கும் கட்சியோடு சேர்ந்தால் ஊருக்கு, ஊர் மக்களுக்கு, தங்கள் தங்கள் குடும்பங்களுக்கு எல்லாம் நன்மை பயக்கும் என்ற அவர்களின் நன்னோக்கு சிந்தனைகளில் எழுந்த துளிர்கள் காரணமாக கிராமத்து மக்கள் சிலர் ஓர் நிர்வாகசபையினை அமைத்து, வாசிகசாலைக்கு அருகிலிருந்த பாணர் பொன்னம்பலத்தின் கட்டிட அறை ஒன்றில் இவ் கிளை அலுவலத்தினை ஆரம்பித்து கட்சியின் பிரசாரங்களினை செய்து வந்தனர்.
அந்த காலங்களில் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் திரு.கு. விநோதன் அவர்களின் தொடர்புகள், வழிகாட்டல்கள் இந்த மாதிரியான கிளை திறப்புகளுக்கு உத்வேகமாக அமைந்திருந்தன.
இதே காலங்களில் ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசே ஏற்கனவே பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலங்களில் இருந்த சோல்பரி அரசியல் திட்டத்தினை மாற்றி தமிழின அடையாளங்களினை பூண்டோடு இல்லாதாக்கும் புதிய அரசியல் சட்ட திட்டங்களினை உருவாக்கியதோடு மட்டுமல்லாது அதனை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய ஏராளமான தமிழ் இளைஞர்களை பிடித்து சிறை வைத்திருந்தனர். இவற்றினை எல்லாம் எதிர்த்து தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து சிங்கள அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலமாகும்.
இத்தகைய இன ஒடுக்குமுறை என்ற கொடிய காலங்களில் சிங்கள அரசியல் கட்சி ஒன்றுக்கு தமிழரசு கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் குப்பிழான் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் செய்து ஆட்களை சேர்ப்பது என்பது பார்வைக்கு கொஞ்சம் சிரமமான விடயமாகவே அன்றய கால மனநிலையில் இருந்தது.
இனிதான் அந்த சம்பவத்தின் அடுத்த கதையின் கிளைமாக்ஸ்.
முறைப்பாடு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஊரில் மாற்று அரசியல் கட்சியினர் யார்? தங்களுக்கு யார் மீது சந்தேகம்? என்பதே முறைப்பாட்டின்போது பொலிசார் எழுப்பிய கேள்வி.
* தம்பு தர்மலிங்கம்
* துரைசிங்கம்
* சிவ- மகாலிங்கம்
* குருநாதி கணேசன்
* முத்தையா - தர்மபாலன்
* எரிப்பதற்கு ரயர்கள் வழங்கியதாக அருகில் சைக்கிள் திருத்தும் கடை நடத்திய அப்புதுரை .
இன்னும் சிலர் பெயர்கள் நினைவுக்கு வருகுதில்லை.
கிராமத்தில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களாக இருந்ததை தவிர, நெருப்பு கொளுத்தியவர்கள் யார் என்பது இவர்களுக்கும் மர்மமமாகவே இருந்தது.
ஆனால் இன்று இவர்கள் சந்தேக பேர்வழிகள்.
எல்லோரும் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு இன்னொரு ரசனையான நினைவுகள்.
பொலிஸ் விசாரணைகள் முடிந்து விடுதலையாகிய கிராமத்து விசாரணை கைதிகள் யாவரும் குப்பிழான் சந்திக்கு திரும்பி வந்து சேர்ந்த நேரம் சற்று பொழுது மங்கலாகி இருட்டாகி விட்டது..
ஒவ்வொரு விசாரணை கைதிக்கும் உரிய உறவினர்கள், பெற்றோர், நண்பர்கள் என சந்தியில் அவர்களை வரவேற்க ஆவலுடன் திரண்டிருந்தனர்.
ஒன்றுமறியாத நிரபராதிகளான இவர்களை பொலிசில் மாட்டியவர்களை வார்த்தைகளால் சொல்லி சொல்லி சகிக்க முடியாத திட்டுகள். ஏச்சுகள் என்பது எல்லையில்லாமல் போய்க்கொண்டிருந்தது.
இதற்கிடையில் நிறைய கிளைமாக்ஸ்கள்.
சொல்லிக் கொண்டு போனால் இந்த அத்தியாயத்தின் கதை பாரதம், ராமாயணம் மாதிரி போய்விடும்.
எனவே நிறுத்திக் கொள்வோம்.
ஆனால் சில கிளைமாக்ஸ்கள் கதைகளினை மட்டும் சொல்லிவிட்டு கதையினை முடிப்போம்.
நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து சுமார் ஒரு கிழமையின் பின்பு அதே விசாரணை கைதிகள் எல்லோரும் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
"ஊருக்குள்ளை இனிமேல் காலங்களில் வாயை மூடிக்கொண்டு உங்கடை பாட்டிலை உங்கடை வேலையோடை மாத்திரம் இருந்திடவேணும்".
"இந்த சம்பவம் முடிஞ்சுது".
"ஒருவரை ஒருவர் முறைக்கிறது. வார்த்தைகளை வீசுறது ஒண்டும் இருக்கப்படாது. ஏதாவது கதை வளர்ப்புகள், கொந்தளிப்புகள் என கேள்விப்பட்டால் எல்லாரையும் பிடிச்சு உள்ளை போட்டுடுவோம் -".
"ஊருக்குள்ள சீ.ஐ.டி பொலிஸ் அனுப்பிதான் இரகசியமாக பார்ப்போம். ஜாக்கிரதை"
பொலிஸாரின் இப்படியானதொரு எச்சரிக்கையினை தொடர்ந்து எல்லாரும் அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.
முன் பின் தெரியாத எவராவது ஒருவர் ஊருக்குள் வந்தாலே சி.ஐ.டி பொலிஸாக இருக்குமோ ? என்றதொரு கலக்கமும் சாதுவாக பலருக்கும் வரத் தொடங்கியிருந்தது.
ஏனென்றால் பொலீஸ், சி.ஐ.டி என்றால் அந்த காலங்களில் அடங்காதவரும் அடங்கி விடுவார்.
அன்றிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஊரிலிருந்து காணாமல் போய்விட்டது.
(சில வருடங்களின் பின்பு திரு.கு.விநோதன் அவர்களின் முயற்சியால் திரு மயில்வாகனம் - சடார்ச்சரம் அவர்களினை தலைவராக கொண்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊரில் சாதுவாக உயிர் பெற்று எழ முயன்றது என்பதும் காலம் கடந்ததொரு செய்தியாகும்.)
ஆனால் நெருப்பு கொளுத்தியவர்கள் யார் என்ற மர்மம் தொடர்ந்தும் இன்று வரை மர்மமாகவே தொடர்கின்றது. .
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment