கிராமத்தின் கதைகள் 09 - அந்த காலத்தில் பிள்ளையார் ஊர்வலம்


"பத்து நாட்களாக தம்மை நாடி வந்த பக்தர்களை தேடி எம்பெருமான் விநாயக பெருமான் உங்கள் இல்லங்கள் தோறும் இதோ வந்து கொண்டிருக்கின்றார்".

"விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப் பெருமான் உங்கள் வினை தீர்க்க இதோ உங்கள் வீட்டு வாசலில் எழுந்தருளுகின்றார்"

"சிவத்தமிழ் வித்தகர்" சிவ மகாலிங்கம் அவர்களின் சிவத்தமிழோடு சேர்ந்த முன்னறிவிப்பு, ஊர்ந்தபடி செல்லும் வாகனத்திலிருந்து ஒலிபெருக்கியினூடாக காற்றலையில் ஒலித்துக்கொண்டு செல்ல, பின்னால் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டு "அரோகரா" என்னும் கோஷம் எழுப்பியபடியே பக்தர்களின் தோளில் சுமந்தபடி, பஜனை பாடகர்கள் பின் தொடர, எம்பெருமான் கற்கரை கற்பக விநாயகர் கிராமத்தின் பட்டி தொட்டி எல்லாம் வீதியுலா வரும் அந்த காட்சி இருந்ததே அது கிராமத்தின் வீதிகள், ஒழுங்கைகள் எங்கும் ஆத்மீக அலையின் உணர்வுகளைனை தட்டி எழுப்பும் அற்புதமான ஓர் நாளாகும்.

இராமபிரானின் பட்டாபிகேசத்தின் போது அயோத்தி நகர் எவ்வாறு இருந்தது என கவிகரசன் கம்பர் தமது கவி நடையில் கம்பராமாயணத்தில் வர்ணித்தாரோ அதே போல் அன்றய நாள் நம்ம கிராமமும் காட்சி தரும்.

1969ம் ஆண்டு முதன் முதல், கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் பத்து நாட்களின் உற்சவ முடிவில் பதினோராம் நாள் நிகழ்வாக இவ் வீதியுலா ஆரம்பிக்கப்பட்டது.

கிராமத்திலுள்ள சகலரையும் தவறாது திரண்டு வீதிக்கு வரப்பண்ணும் எம்பெருமான் வீதியுலாவின்போது ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளை சுத்தம் செய்ய, வீதியே சுத்தமாகிவிடும். தங்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் பந்தல்கள் அமைத்து தோரணங்கள் கட்டி, நிறைகுடம் வைத்து எம்பெருமானை வரவேற்று வழிபடுவதுடன் பிரசாதங்கள் நீர் ஆகாரங்கள் வீதியுலா வரும் அடியவர்களுக்கு தாராளமாக குறைவேயில்லாது பரிமாறப்படும்.

பகல் 2 மணிக்கு கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் வீதியுலா, அயல் கிராமங்கள் எல்லாம் சுற்றி குப்பிழான் எல்லைக்குள் பிரவேசிக்கும் நேரம் இருட்டாகிவிடும். இரவு நடுநிசியின் பின்பே ஆலயத்தினை போய் சேரும். தங்கள் வீட்டு வாசலில் கோலாகலமாக செய்ய வசதியில்லாதவர்கள் கூட தங்கள் இல்ல வாசல்களில் வைத்து அர்ச்சனையாவது செய்ய தவறுபவர்கள் என எவரும் இருக்கமாட்டார்கள்.

அன்றொரு காலம் இப்படி எல்லாம் நடந்தது.

எம்பெருமான் எம் வீட்டு வாசலுக்கே வந்து எம் வினைகள் தீர்க்க அருள் பாலித்து விட்டார் என்ற அதீத நம்பிக்கையில் கிராமத்தவர்கள் வாழ்ந்த காலம்.

அந்த அதீத நம்பிக்கையே அவர்களை மன அழுத்தங்கள், நோய்கள் எவையுமில்லாது வாழப் பண்ணியது.

பிள்ளையார் வீதியுலா தொடங்கிய ஆரம்ப காலங்களினையே இங்கு சொல்கின்றேன்.

மின்சாரமே இல்லாத கிராமத்தின் அந்த இரவு நேரத்தில், பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு வரும் இயங்கு நிலையிலுள்ள மின் இயந்திரத்திலிருந்து பாய்ச்சப்படும் மின் சக்தியினூடாக மின்னொளிகளிலின் பிரகாசத்தில் வரும் எம்பெருமானின் அந்த இரவு நேர காட்சி இப்போது நினைத்தாலேயே மிக அற்புதமாகவே இருக்கும்.

ஆனால் தற்போது உள்ள நிலைமைகள்.? கிராமமே மாறிவிட்டது.

அது காலங்கள் செய்த கோலம். எவரையும் குற்றம் சொல்லமுடியாத நிலைமை.

அதனை விட்டுடுவோம்.

இனி அன்றைய கால பிள்ளையார் வீதியுலாவில் நடக்கும் நகைசுவை கிளைமாக்சுக்கு வருவோம்.

பிள்ளையார் வீதியுலாவின்போது வேப்பம் குழைகளினை கைகளில் வைத்திருந்தபடி கலையாடும் கூட்டம் ஓன்று கலையாடியபடி முன்னே சென்றுகொண்டிருக்கும்.

"பக்தி பரவசத்தின் எல்லையினை தாண்டி பரவசமாடும் பக்தகோடிகளுக்கு ஓர் பண்பான வேண்டுகோள்".

"வீதியுலா வரும் சுவாமிக்கு முன்னால் நெருக்கமாக நின்று கலையாடாது சற்று இடைவெளி விட்டு முன்னே நகர்ந்து கொண்டு ஆடுங்கள்".

இப்படி ஓர் அறிவிப்பு காற்றலையில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் போது அதுவும் அந்த நேரம் ரசனைக்குரிய சுவாரஸ்யமாகவே தெரியும்.

அந்த கலையாட்டத்தின் முக்கிய ஹீரோ எவர் தெரியுமா ?

"ஓயா அண்ணை" (சண்முகம் - வைத்தீஸ்வரன் ).

அவரோடை சேர்ந்து வேப்பம் குழைகளினை கைகைளில் வைத்துக் கொண்டு கலையாடும் ஓர் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டங்கள் என்பது பிரமதமாகவே இருக்கும்.

சில வருடங்களின் முன்பு ஓயா அண்ணை அமரராகிவிட்டார். வேட்டியினை மடித்து கட்டிக் கொண்டு, வெற்று மேலுடன் வேப்பம் குழையினை கையில் வைத்துக் கொண்டு அவர் கலையாடத் தொடங்கினால் அவரோடு சேர்ந்தாட பலர் இருப்பார்கள். மைலங்காட்டு சந்தியில் கொஞ்ச நிமிடங்கள் வீதியுலா நிறுத்தப்பட்டு ஸ்வாமிக்கு முன்பு நடந்த அவரின் ஆட்டம் மறக்கமுடியாததொரு சுவாரிஸம்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு நகைச்சுவையான நிகழ்வு ஓன்று நினைவுக்கு வருவதால் அதனையும் இங்கு சொல்லாமல் போகக்கூடாது.

"முத்தையா - இரத்தினபாலன் தலைமையில் கிராமத்து இளைஞர்கள் குழு கைகளினை தட்டியபடி ஒருமுறை பஜனை பாடல்களுடன் பிள்ளையார் வீதியுலாவினை பின் தொடர்கின்றனர்.

( திரு. முத்தையா - இரத்தினபாலன் கலைத்துவ ஆற்றல்கள் கொண்ட கிராமத்தவர். பொது இடங்களில் கூட்டங்களுக்கு மத்தியிலிருந்து பாட்டுக்கள் பாட தொடங்கினால் அந்த இடத்தினை விட்டு எவருக்குமே நகர மனம் வாராதளவுக்கு நகைசுவையினை கிளறும் குரல் வளமுள்ள ஓர் பாடகர்).

பிள்ளையார் ஊர்வலத்தில் திடீர் என ஹிந்தி, இங்கிலீஸ் பாட்டுக்கள் பாடத்தொடங்கி விட்டார்.

அவருக்கும் அந்த நேரம் பழக்க தோஷத்தில் திடீர் என உசுப்பு எழுப்பிவிடும் ஒரு "தமாஷ் விளையாட்டு".

"தம்பி இது பிள்ளையார் ஊர்வலம். வம்பு பாட்டுகள் பாடுகிற இடமில்லை"

ஏனையோர் தட்டி விட, வேகமாக அந்த இடத்துக்கு காலடி எடுத்து நடந்து வந்த "சுருளி கந்தையா அம்மான்" தோளில் போட்டிருந்த சால்வையினை அதி உச்ச கடுப்போடு எடுத்து ஒருமுறை உதறி போட்டு சத்தம் போட்டு கோபத்தில் ஏசத் தொடங்கிவிட்டார்.

"கந்தையா அம்மான்;"

"முதல் என்றை கதையினை கேளுங்கோ.

விஷயம் விளங்காமல் என்னை பேசுறியள்."

"ஆர் சொன்னது நான் வம்பு பாட்டு இஞ்சை பாடுகிறேன் எண்டு.?"

"திருப்புகழை ஹிந்தியிலும் இங்கிலீஸிலும் மொழி பெயர்த்து பாடுகிறேன். அவ்வளவுதான்."

"மொழிபெயர்த்து பாடுகிறது உங்கள் ஒருவருக்கும் பிடிக்கேல்லையென்றால் நேரே சொல்லுங்கோ.

இந்தா தமிழிலையே பாடுறேன். கேளுங்கோ "

"ஏறு மயில் ஏறு விளையாடுமுகமொன்றேன் --- ஈசனோடு பாடலொன்று பேசுமுகமொன்றேன் ----------------------"

இரத்தினபாலன் தமிழிலையே அந்த இடத்தில் உரத்த சத்தத்தில் மெய்மறந்து பாடத்தொடங்கி விட்டார்.

"அவன்கள் படிச்ச பொடியள்.

திருப்புகழை மொழி பெயர்த்து வேற பாஷைகளில் பாட இந்த சனங்கள் தேவையில்லாமல் பிழையாய் விளங்கி அவங்களை பேசுறது "

வீதியுலா முடியும்வரை கந்தையா அம்மான் நிறுத்தவேயில்லை.

(கிராமத்தின் பழைய கதைகளினை அங்கு கலந்திருக்கும் நகைசுவைகளோடு தொடர்வோம்.)

குப்பிழான் றஞ்சன்- 

Post a Comment

Previous Post Next Post