கேணியடி வைரவர் கோயில் |
"எத்தனையோ நாடக மேடைகளில் நாடக கலைஞர்களின் ஆற்றல்களினை நான் பார்த்துள்ளேன். ஆனால் குப்பிழான் கிராமத்தவர்களில் இயற்கையாக அவர்களுக்குள்ளிருக்கும் நாடக கலையின் திறன் என்பது தனித்துவமானது. இயற்கையாக அவர்களுக்குள்ளிருக்கும் அந்த அற்புதமான நடிப்பு திறமைகள்.
அது நாடக மேடையா? அல்லது நிஜமாக நடக்கும் காட்சியா? என்பது புரியாமலிருக்கும்".
கேணியடி வைரவர் கோயில் சிவராத்திரி விழா மேடையில் நடந்த அந்த நாடகத்தினை பார்த்து விட்டு இப்படியானதொரு பாராட்டினை தமது நாடகத்துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகளில் அடிக்கடி சொல்பவர் "கலை பேரரசு" ஏ.ரி. பொன்னுத்துரை மாஸ்டர்.
("கலை பேரரசு" ஏ.ரி.பொன்னுத்துரை மாஸ்டர் அயலூரான குரும்பசிட்டியினை சேர்ந்தவர். நாடக கலைத்துறைகளில் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். யாழ் நகரில் பிரபல நாடக கலைஞர் தாஸிஸ் அவர்களுடன் சேர்ந்து நாடக பயிற்சி பாடசாலையினை அந்த காலங்களில் நடாத்தி வந்த நாடக ஆசிரியர். புகழ் பெற்றதொரு கலைஞர்.)
1970 ஆம் ஆண்டுகளில் ஓர் நாள். கேணியடி வைரவர் கோயில் சிவராத்திரி விழாவில் "பிரளயம்" என்னும் நாடகம் ஒன்றினை நம்ம ஊர் இளைஞர்கள் மேடையேற்றுகின்றனர்.
எதுவிதமான நாடக தயாரிப்புமில்லை. ஏற்கனவே நாடக பயிற்சிகள் என இவர்களில் எவரும் முறையாக பயின்றவர்களுமல்ல.
சந்தியிலுள்ள மூர்த்தி அண்ணரின் தேநீர் கடைக்குள் பொழுது போக்கு விளையாட்டாக ஒத்திகை பார்த்துவிட்டு அரங்கேறிய கிராமிய சிந்தனைகளோடு ஓடும் நகைச்சுவை நாடகம்.
இன்றைக்கும் அடிக்கடி நினைவுக்கு வருமளவுக்கு அற்புதமானது.
நடிகர்கள் யார் என்பதனை சொல்வதற்கு முன்பு சுருக்கமாக அந்த நாடகத்தின் கதைக்கும் அதில் நடித்த பாத்திரங்களுக்கும் முதலில் வருவோம்.
"சொத்தி வீரசிங்கம்" என ஒருவர் தனது சொத்தி காலை இழுத்து இழுத்து நடந்து ஊர் எல்லாம் திரிந்து ஊதாரி தனமாக ஊர் வம்பு கதைத்து வருபவர். அவரோடு சேர்ந்து ஊர் வம்பு கதைப்பதற்கு இரண்டொரு கூட்டங்கள் எப்போதும் இருக்கும். அவருக்கு மனைவி இல்லை. ஆனால் வீட்டில் ஒரு அழகான இளம் வயதில் திருமணமாகாத மகள்.
"பண்ணையார் " என்பவர் நல்லாய் வயது வந்தும் கலியாணம் கட்டாத ஓர் பிரம்மசாரி. ஊருக்குள் வட்டிக்கு காசுகள் கொடுத்து காசு சேர்க்கும் காசுக்காரன்.
இனி நாடக மேடையின் காட்சிகளுக்கு வருவோம்.
* ஊர் வம்புகள் கதைத்துக் கொண்டு திரிபவர்களின் காட்சிகள்.
* இவர்களுக்கு எல்லாம் வட்டிக்கு காசு கொடுத்துட்டு அதனை வசூலிக்க முடியாமல் அவர்களை துரத்தி துரத்தி வார்த்தைகளால் ஏச்சுப்படும் "பண்ணையார்"
* பெரும் தொகை காசு. அதற்கு வட்டி என ஒன்றும் கொடுக்காது பண்ணையாருக்கு தண்ணீர் காட்டும் "சொத்தி வீரசிங்கம்". அவர்களுக்குள் வரும் வாக்குவாதங்கள் மோதல்களின் காட்சிகள் பல பல காட்சிகளாக தொடர்கின்றது.
இப்படியே மேடை காட்சிகள். அதற்குள் நகைச்சுவைகள் ஏராளம். ஏதோ பார்த்தால் உண்மையாய் நடப்பது போல் தொடர்கின்றது.
அந்த நேரம் காவி உடை உடுத்த சாமியார் ஒருவர் தமது பக்த கூட்டங்களுடன் தாளங்கள் தட்டி பஜனை பாடிக்கொண்டு நம்ம கிராமத்துக்கு வருகின்றார். பண்ணையாருக்கு சொத்தி வீரசிங்கம் கடன் காசு கொடுக்காமல் ஏமாற்றும் துரோகம் சாமியாரின் மத்தியஸ்துக்கு விடப்படுகின்றது.
ஆத்மீக பணியாக தொடர்ந்து பாத யாத்திரை செய்யும் சாமியாருக்கு கால் நோ, உடல் நோ போக்க இரகசியமாக பார்வையாளருக்கு தெரியாமலிருக்க ஒரு திரைச் சேலையினை பிடித்து மறைத்துக் கொண்டு நம்ம ஊர் காய்ச்சி சாராயத்தினை மருந்து மாதிரி பிரசாதமாக கிளாசுக்குள் சொற்பமாக ஊத்தி கொடுத்து, அவர் மேடையில் ஒழித்து குடிக்கும் காட்சி.
அதுதான் அற்புதமான நகைசுவை கிளைமாக்ஸ்.
மருந்து போல் சாராயத்தினை வாய்க்குள் இரகசியமாக விட்ட சாமியார் பண்ணையாருக்கு சொத்தி வீரசிங்கம் கொடுக்க வேண்டிய பெரும் தொகை கடனுக்காக வாயை துடைத்துக் கொண்டு ஓர் சமாதான தீர்வு திட்டம் சொல்லுகின்றார்.
"சாமியார் தீர்வு திட்டத்தினை சொல்லுங்கோ. நீங்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி"
எல்லோரும் அவர் காலில் விழுந்திட்டார்கள்.
"என் அருமை பக்தன் வீரசிங்கத்தால் பண்ணையாரின் பெரும் தொகை முதல், அதற்கு மேலால் உள்ள வட்டிகள் எதுவும் என்றுமே கொடுத்து தீர்க்க முடியாது. அவரின் வீட்டிலிருக்கும் அழகிய குமர் பிள்ளைக்கு அவரால் கலியாணமும் செய்து வைக்கவும் ஒரு சதத்துக்கும் அவருக்கு வசதியில்லை.
எனவே வயது வந்தும் கட்டை பிரம்மசாரியராகயிருக்கும் பண்ணையாருக்கு வீரசிங்கத்தின் மகளை கலியாணம் செய்து கொடுக்க வேண்டும். பண்ணையாரும் அத்துடன் அந்த கடன், வட்டி எல்லாவற்றினையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என தீர்வு வழங்குகின்றேன்"
"சாமி உங்கள் தீர்வு ஆண்டவன் வழங்கிய தீர்வு"
இரு பக்கமும் சாமியாரின் காலில் விழுந்திட்டார்கள். காலில் விழுந்த இருவரும் கொஞ்சநேரம் எழும்பவேயில்லை.
கலியாணம் முடிஞ்சு தேனிலவு பயணத்தில் தம்பதிகள் பால் பருகும் காட்சிகள் இன்னொரு நகைச்சுவை கிளைமாக்ஸ்.
அதில் அழகிய இளம் பெண் வேஷம் போட்டு, சாரி கட்டி வந்தவர் சந்திரசேகரம் (அப்பன்).
இதுவே "பிரளயம்". அதுவே நாடகத்தின் சுருக்கமான தலைப்பு.
அது மேடையில் நடந்த நாடகமா? அல்லது நியமான சம்பவமா? என்றதொரு பார்வை இருந்தது.
இனி அந்த நாடகத்தின் நடிகர்கள் யார்? என்ற விசயத்துக்கு வருவோம்.
சொத்தி வீரசிங்கம் - சொக்கலிங்க வாத்தியாரின் சோதி.
பண்ணையார் - தபால் அதிபர் சிவபாதம்.
ஊரவர்கள் என பிராக்கிரசியரின் சிறி உட்பட மேலும் சிலர்.
இதில் பிரமாதமாக சொல்லவேண்டிய இன்னொரு காட்சி.
"நாடறியும் நூறு மலை.
நானறிவேன் சுவாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ------ சுவாமி மலை----- சுவாமி மலை "
என மெய்மறந்து பாடிக்கொண்டு பக்தர்கள் புடை சூழ காவி உடையில், உருத்திராக்க மாலைகள் அணிந்து பித்துக்குளி முருகதாஸின் கோலத்தில் கையில் தாளம் தட்டியபடி சின்ன கலையாட்டத்துடன் முற்றும் துறந்த சாமியாராக மேடையில் அரங்கேறுகின்றார் கோவிந்தர் - புவனேந்திரன் (கோவிந்தரின் அம்மான்).
அவரோடே சேர்ந்த பக்தர்கள் குழாமில் சிவஞானத்தின் சிறி.
மற்றவர்கள் சிலர் நினைவுக்கு வருகுதில்லை.
சாமியாராக வந்த கோவிந்தரின் அம்மான் இப்போது கனடாவில் இருக்கின்றார்.
அந்த பழக்கதோசத்திலையோ என்னவோ இப்ப ஊரவர்களை ஏதாவது கொண்டாட்டங்களில் கண்டால் தேவாரம் ஓன்று பாடிக் காட்டி ஆசீர்வதிக்காமல் போகமாட்டேன் என்று நிற்கிறார் என ஒரு செய்தி பரவலாக ஊரவர்களுக்குள் இருக்கின்றது என்பதனையும் இரகசியமாக சொல்லத்தான் வேண்டும்.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment