(கோப்புப்படம்) |
ஊர் சந்திக்கு அருகிலிருக்கும் தலைமையாசிரியர் வீட்டு குடிநீர் எடுக்கும் கிணற்றினுள் இரவு யாரோ பொலிடோல் என்ற நச்சு திரவத்தினை ஊற்றி போட்டார்கள் என்ற பரபரப்பு செய்தி அந்த அதிகாலை பொழுது விடிய முன்பே ஊர் எங்கும் பரபரப்பான செய்தியாக பரவிவிட்டது.
1972 - 1973 ஆம் ஆண்டுகளில் ஓர் நாள் இந்த நிகழ்வு ஊரில் நடந்தது.
அந்த இனிமையான கிராமத்தின் காலை பொழுதிலேயே அவரது வீட்டு வளவுக்குள் ஊரில் சனங்கள் எல்லாம் கூடிவிட்டனர். எல்லோரும் கிணற்றினை மேலே நின்று எட்டிப் பார்க்கின்றோம். ஏதோ ஒரு பதார்த்தம் அவருடைய கிணற்று நீரினுள் கலக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரிகின்றது.
தலைமையாசிரியரும் அவரது மனைவியும் சந்தியிலும் வீதியிலும் நின்று தங்களை குடும்பத்தோடு கொல்வதற்கு ஆரோ சதி செய்கிறார்கள் என்று விடாத ஒப்பாரி கலந்த பிரச்சாரம் செய்து அனுதாபத்தினை தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
கிராமத்திலேயே ஓர் விசித்திரமான பிறவியாக வலம் வரும் அந்த தலைமையாசிரியர் பற்றியும் அவரின் குணாதிசயங்கள் பற்றியும் அந்த காலத்தில் கிராமத்திலுள்ளவர்களுக்கு சொல்லத் தேவையில்லை.
* கஷ்டப்பட்டு வயது வேறுபாடுகளில்லாமல் ஆட்களுடன் பிரச்சனைகளையும், சண்டைகளினையும் உருவாக்குவதும் அதனை தணியவிடாது வாயால் தொடர்வதும் அவரது திருத்த முடியாத சுபாவம்.
* தென் இந்திய சினிமாக்களில் வரும் பெண் வில்லர்கள் மாதிரி உடல் அசைவு, கண் அசைவு, கதை தொனிகளின் அசைவுகளுடன் நடிப்பது போல் நடித்து உண்மையினை நம்பக்கூடிய வகையில் பொய்யாக்குவர். பொய்யினை உண்மையாக்குவார்.
*முன்னர் யாழ் நகர் பேருந்து நிலையத்தில் "வைரமாளிகை" என்ற ஓர் கோமாளியினை பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர் மாதிரியே இவரும் என ஓரளவுக்கு சொல்லலாம்.
ஆனால் வேட்டி நாசனல் அணிந்து, மூன்று குறியில் நெற்றியில் திருநீறு அணிந்து அவர் கல்வி கற்பித்த புன்னாலைக்கட்டுவன் பாடசாலைக்கு நடந்து போகும் போது ஓடிப்போய் காலில் விழுந்து
"ஆசிர்வாதம் பண்ணுங்கோ வாத்தியார்"
என கேட்கவேணும் போல் தோன்றும்.
அதே மாதிரி கோயிலுக்கு அந்த மனிதன் விபூதி குறியணிந்து, அர்ச்சனை தட்டத்துடன் கிராமத்து வீதியால் நடந்து போகும் போது கையெடுத்து கும்பிட வேண்டும் போல் தோன்றும்.
அவர் தான் ஊர் சந்திக்கு அருகில் வசிக்கும் அற்புதமான தலைமையாசிரியர்.
இனிதான் கதையின் சுவையை தேடும் கிளைமாக்ஸ் ?
சுன்னாகம் பொலிசாருக்கு தலைமையாசிரியர் முறைப்பாடு செய்ததும் போலிசார் அவர்களின் ஜீப்பில் நேரடியாக களத்துக்கு வந்தனர்.
(அந்தக் காலத்தில் இப்போது உள்ளமாதிரி இல்லாமல் பொலிஸ் ஜீப் ஓன்று ஊருக்குள் வந்தாலோ அல்லது காக்கி உடையில் ஓர் பொலிஸ்காரனை கண்டாலே காணும். பயத்திலை எல்லோரும் மடங்கி விடுவார்கள் என்பது இரகசியமாக இந்த கதையில் சொல்ல வேண்டிய ஒரு தகவல்).
அந்த கிணற்றினுள் தமது கண்ணை விட்டு பார்த்த பொலிஸாருக்கு ஒருவரும் கண்டுபிடிக்காத ஓர் துப்பு துலக்கும் சைகை அவர்களுக்கு அந்த கணத்தில் ஊர்ஜிதமாகிவிட்டது.
அந்த துப்பு துலக்கும் சைகை என்ன?
கதையின் முடிவில் அந்த கிளைமாக்ஸ் என்ன என்பதற்கு வருகின்றேன்.
இப்போது கதையினை தொடர்வோம்.
சந்தியில் நிற்கும் விடுகாலிகள், காவாலிகள் என கீதம் பாடிக்கொண்டு தலைமையாசிரியர் சந்தேகத்தின் பெயரில் பின்வரும் கிராமத்து இளைஞர்கள் சிலரின் பெயரினை முறைப்பாட்டில் வழங்கியிருந்தார்.
* விநாயகரின் தெய்வம் அவரது தம்பி சோதி.
* சிவம் டீச்சரின் மனோ.
* சண்முக வாத்தியாரின் சதா.
* கனடாவில் இப்போது சுவாமியாராக இருக்கும் "திருமுறை செல்வர்"
வேறும் சிலர். நினைவில் வருகுதில்லை.
இதில் ஒருவர் கனடாவில் குப்பிழான் மக்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர்.
இது சாதாரண குற்றச்செயல் அல்ல. "குடும்பத்தோடை சேர்த்து பழி தீர்க்கும் கொலை முயற்சி " என்ற பாரிய குற்றச்செயல்.
குற்றம் சாட்டபட்டவர்கள் அனைவரும் விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையில் என்ன நடந்திருக்கும்?
அது சஸ்பென்ஸ்.??????????
அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்ளலாம்.
ஆழ கிணற்றினுள் உள்ள நஞ்சு கலந்த நீரை தங்கள் துப்பு துலக்கும் கண்களால் நோட்டம் விட்ட பொலிஸாருக்கு ஒரு துப்பு கிடைத்தது. அதனை இந்த கதையின் முடிவில் சொல்கின்றேன் என குறிப்பிட்டேன் அல்லவா?
அது என்ன என்ற விசயத்துக்கு வருகின்றேன்.
நீரினுள் பொலிடோல் என்ற நஞ்சு கலந்த போதும் கிணற்று நீரினுள் துள்ளி திரியும் தவளைகள், சிறு சிறு பூச்சிகள் ஒன்றும் சாகாமல் துள்ளி திரிந்து வழமை போல் விளையாடியதனை பார்த்த பொலிஸாருக்கு இங்கு கலக்கப்பட்டது நச்சு பதார்த்தமல்ல என்பதனை ஊகித்துக் கொள்ள கால அவகாசம் தேவையில்லை. அதுவே அவர்களுக்கு கிடைத்த துப்பு.
முதல் நாள் காலையில் பிட்டு அவிக்கவென பத்து கிலோ கோதுமை மாவினை பக்கத்து சங்க கடையில் வாங்கிய தலைமையாசிரியரின் மனைவி அடுத்த நாள் மீண்டும் சங்கக்கடைக்கு வந்திருந்தார்.
"பிட்டு அவிக்கிறதுக்கு ஒரு கிலோ கோதுமை மா வேணும்"
"ஒரு நாளில் பத்து கிலோவிலும் பிட்டு அவித்து முடிச்சாச்சா ?"
என்ற சந்தேகம் சங்கக்கடைகாரருக்கு எழுதிருக்கமால் இருப்பதற்கு நியாயமில்லை. ஆனால் தலைமையாசிரியர் வீட்டோடு கதையினை வளர்க்கவும் பயத்தில் ஒருவரும் தயாருமில்லை.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment