கோப்புப் படம் |
நம்ம ஊர் கற்கரை கற்பக விநாயகர் ஆலய தீ மிதிப்பில் அரோகரா கோஷத்துடன் இறங்கி பின்பு தெல்லிப்பழை ஆஸ்பத்திரியில் வரிசையில் படுத்திருந்து சிகிச்சை பெற்றவர்களின் கதையினை சொல்ல முன்பு, இரவு நேரம் முழுவதும் ஆலயத்தில் நடக்கும் இன்னிசை விழாக்கள் பற்றி நம்ம இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் போல் உள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ உற்சவ திருவிழா காலங்களில் 5 ஆம் திருவிழாவன்று இரவு முழு நேரமும் நடக்கும் இன்னிசைகளின் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் மறக்க முடியாத பசுமையான நிகழ்வுகளாகும்.
கோயில் கூரையின் உச்சத்துக்கும் மேலால் உயரமாக நிர்மாணிக்கப்பட்ட அலங்கார சிகரம் வாசலில் மின்னொளிகளால் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அவை தவிர மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள், மற்றும் விழா மேடை ஆகியன உட்பட அந்த இடமெங்கும் ஒளி விட்டு பிரகாசிக்கும் ரியூப் லைட் வெளிச்சங்கள் அந்த கோயில் பகுதியெல்லாம் இரவு முழுவதும் கோலாகலமாக காட்சியளிக்கும். பெட்ரோலில் இயங்கும் மின் இயந்திரத்தினை வைத்து இயக்கி மின்னொளியினை அந்த இடமெல்லாம் பிரகாசிக்க செய்வார்கள்.
உண்மையினை சொல்லப் போனால் மின்சாரம், மின்னொளி என்பதனை பார்த்திராத கிராமத்தில் பிறந்து, இரவு என வந்துவிட்டால் மண்ணெண்ணெய் விளக்கு திரியில் எரியும் வெளிச்சத்தில் மட்டும் வாழ்ந்து, ஊரை விட்டு வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்த எங்களின் சிறு வயது காலங்களில் கற்கரை பிள்ளையார் கோயிலில் வருடம் தோறும் மின்னொளியில் நடக்கும் இவ் இரவு திருவிழாவுக்கு கோயிலடிக்கு போனால் விடியும் வரை வீட்டுக்கு திரும்பி வர மனம் வராது.
தவில் மேள கச்சேரிகள், பாட்டு கச்சேரி, சின்னமேள கச்சேரி என பல களியாட்ட நிகழ்வுகள் என தொடரும். விடியும் அதிகாலை நேரம் 4 மணிக்கு பின்பு பிள்ளையாரின் எழுந்தருளி பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடக்கும்.
அதே 5 ஆம் திருவிழா இரவு நேர இன்னிசை நிகழ்வுகள் எல்லாம் முடிவடைந்து அதிகாலை சுவாமி வீதி உலா வரும் போதே தீக்குளிப்பு வைபவமும் நடைபெறுவது வழமையாகவும்.
தீக்குளிப்பு வைபவம் என்பதற்கு முன்பு அந்த நெருப்பு தணல்களின் மேடை எப்படி அந்த நேரம் உருவாக்கப்படுவது என்ற விடயத்துக்கு வருவோம்.
ஆலய வாசலிலிருந்து முன் பக்கமாக கொஞ்சம் தள்ளிய தூரத்தில் சற்று அகலமாக, நீள் செவ்வக வடிவில் சில மீற்றர் தூரத்துக்கு சுமார் ஒரு அடி ஆழத்தில் கிடங்காக உருவாக்கப்பட்டிருக்கும்.
அங்கு மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்ட ஏராளமான எரியக்கூடிய மர குத்திகள், விறகுகளால் அந்த நீள் செவ்வக வடிவ கிடங்கினை நிரப்பி இரவிரவாக நெருப்பூட்டி அந்த விறகு குவியல்களினை தொடர்ந்து எரித்து கொண்டே இருப்பார்கள். இன்னிசை நிகழ்வுகளோடு இரவிரவாக விறகுகளினை ஒரு பக்கத்தில் எரித்துக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளும் ஓர் கொண்டாட்டமாகவே எங்களுக்கு தெரியும்.
இரவு நேரம் என்பதால் எரிந்து முடிந்த தீ மேடையின் விறகுகளின் தணல்கள் எங்கள் பார்வையில் எரிமலை போல் பிரகாசிக்கும் நெருப்பின் கால்வாய் குளம் மாதிரியே தெரியும். வெப்ப தணல் அந்த பக்கமெல்லாம் வீசி அடிக்கும். பார்க்கும்போது சற்று அச்சமாகவே இருக்கும்.
வீதி உலா வரும் சுவாமி அந்த அதிகாலை இருட்டில் அந்த இடத்துக்கு வந்ததும், அந்த இடத்தில் ஐயரின் தீப ஆராதனையினை தொடர்ந்து தீ மிதிப்பு நேர்த்தி கடன் செய்வோர் அரோகரா என்ற கோஷத்துடன் நெருப்பு தணல்களில் பாதங்கள் புதைய நடந்து செல்வார்கள். தீ மிதிப்பு நேரம் மேளங்கள், மணி சத்தங்களுடன் "அரோகரா" "அரோகரா" என்ற கோஷங்களும் அமோகமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அந்த அதிகாலை இருட்டு நேரம் சில குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே தங்கள் நேர்த்தி கடன் என வேண்டி தீ மிதிப்பு செய்ததை அந்த காலங்களில் பார்த்துள்ளோம்.
தொடர்ந்து இரவு முழுவதும் நடக்கும் வேடிக்கை திருவிழாக்கள் நின்றபடியால் அதே தீ மிதிப்பு வைபவம் 10 ஆம் நாள் நடக்கும் தீர்த்தத் திருவிழாவில் பகல் நேரம் நடத்தப்படும் வழமைக்கு மாற்றப்பட்டது.
10 ஆம் நாள், தீர்த்தத் திருவிழாவன்று பகல் நேரம் நடந்த நடைபெற்ற தீ மிதிப்பு வைபவத்தில் "அரோகரா அரோகரா " என ஒருவருக்கொருவர் உசுப்பேத்த அங்கு நின்ற இளைஞர்கள் கூட்டங்கள் தமாசாக தீயினுள் நடந்தார்கள்.
உள்ளங்காலில் சூடு தாங்க முடியாது துள்ளி துள்ளி கோயில் வாசலில் கலையாடி தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் கூட்டாக அனுமதிக்கப்பட்டது இன்னொரு கிளைமாக்ஸ்.
அதனை அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்.
என்ன ? அதுவே ஆலயத்தின் இறுதி தீமிதிப்பு வைபவமாகவும் போய்விட்டது.
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment