குப்பிழான் கிராமத்தின் பழைய கால நகைச்சுவை சம்பவங்கள் சொல்லிக் கொண்டு போனால் நிறைய கதைகளாய் சொல்லிக் கொண்டே போகலாம்.
"சேர்மன் சிவகுரு" என்றால் அந்த காலங்களில் வேட்டியும் நசனலும் அணிந்து, தோளில் ஒரு சால்வையினை போட்டு வரும் முக்கிய அரசியல் பிரமுகர்.
ஏழாலை - மல்லாகம் எல்லையிலிருந்து குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை வரையுள்ள பரந்துபட்ட கிராமசபையின் தலைவர் அவர் என்றால் அவர் பெயர் கேள்விப்படாதவர்கள் என எவரும் இருக்கமாட்டார்கள்.
"தம்பி வணக்கம்".
"பிள்ளை வணக்கம்"
என ஊரின் வீதிகளில் சின்ன சிரிப்போடு நடந்து கொண்டு இரு கைகளினையும் கூப்பி, காணுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்முகம் காட்டி வணக்கம் சொல்லாமல் நகரமாட்டார்.
" தம்பி என்னை தெரியுதோ ?"
"தெரியேல்லை ஐயா "
"நான் தான் தம்பி சேர்மன் சிவகுரு"
"சிவகுரு ஐயாவோ"?
சிவகுருவருக்கு தலைகீழ் தெரியாதளவுக்கு உச்சி குளிர்ந்திடும்.
ஒருமுறை கலகலப்பான மாலை நேரம் குப்பிழான் சந்தியினை சேர்மன் சிவகுரு ஐயா இதே மாதிரி நடைபவனியில் கடந்து போறார்.
"குப்பிழான் சந்தி", "சந்தி மதவுகள்" என்றால் ஊரில் விடுகாலி காவாலிகள் கூடுற இடம் எண்ட பெயர் அந்த காலத்திலை எப்போதும் உண்டு. ஏனென்றால் சந்திக்கு வரவில்லையென்றால் இளம் ஊர் பையன்களுக்கு அந்த காலத்தில் சாப்பிட்ட சாப்பாடு செமிக்காதாம் எண்டதும் பரவலாக முணு முணுக்கிற நக்கல் வசனம் பலரின் வாயிலிருந்து வருவது வழமையாகும்.
சந்தி மதவில் இருக்கிற பையன்கள் சிலருக்கு சிவகுரு ஐயாவை கண்டால் மதவினை விட்டு இறங்கி மரியாதை கொடுக்கிறேன் என்ற நடிப்புகளும் அங்கை நடக்கும்.
"இந்த சந்தியில நிற்கிற பெடியள் எப்பவும் எனக்கு ஒரு மரியாதை"
என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கும் உச்சி குளிரும்.
அந்த மதவிலை சாரத்தை மடிச்சு கட்டிக்கொண்டு மற்ற கூட்டாளிகளோடை இருக்கிறவர்களில் ஒருவர் - மார்க்கண்டு வாத்தியாரின் விக்கி என்ற ஒருவர்.
மார்க்கண்டு வாத்தியாரின் விக்கி சந்தியிலை நின்றால் அவரோடை சேர்ந்த கூட்டாளிமாருக்கு அவர் என்னத்தினை செய்தாலும் ஒரு விழுந்து விழுந்து நையாண்டி சிரிப்புதான். காரணமில்லாத அந்த சிரிப்புகளை திருத்தவே ஏலாது.
சிவகுரு ஐயாவை கண்டால் பதறி அடிச்சுக்கொண்டு சந்தி மதவினை அல்லது சைக்கிளில் நின்றால் சைக்கிளை விட்டு இறங்கி மடிச்சு கட்டின சாரத்தையும் கீழே இறக்கிவிட்டு தன்னுடைய இரு கைகளையும் தலைக்கு மேலால் உயர்த்தி கோயில் கோபுர தரிசனம் செய்வது போல் பிடித்துகொண்டு கைகளை கூப்பி
"ஐயா வணக்கம்"
என்று எப்பவும் சொல்லுறது விக்கியின் இரத்தத்தோடு சேர்ந்த சுபாவம். சுற்றி நிற்கும் கூட்டங்களுக்கு அந்த நேரம் பிரேக் இல்லாத சிரிப்பு.
இது ஒரு நக்கல் சேட்டைகளோ என்ற சந்தேகத்தில் சிவகுருவருக்கு ஒரு நாள் கொஞ்சம் கடுப்பு ஏறியிட்டுது.
சந்தியை கடந்து ஏழாலை நோக்கி நடந்து போகும்போது அதிலே கூப்பன் கடை நடத்துகிற முத்துலிங்கத்தினை கொஞ்சம் கடுப்பு கனல் பறக்கும் முகத்தோடை றோட்டிலை நின்று கூப்பிட்டார்.
முத்துலிங்கம் குப்பிழான் சந்தியிலை கூப்பன் கடை நடத்துற முதலாளி. சிவகுருவர் ஏழாலை சந்தியிலை கூப்பன் கடை நடத்துற முதலாளி. அதன் காரணமாய் அவர்களுக்குள் ஓர் சின்ன சிநேகிதம்.
"தம்பி முத்திலிங்கம் "
முத்திலிங்கம் படபடப்போடை ரோட்டுக்கு ஓடி வந்திட்டார்.
"அந்த சந்தியிலை சாரத்தை மடிச்சு கட்டிக்கொண்டு நிற்கிறானே ஒரு நெடுவல்"
யார் அவன் ?
தூரத்தில நின்று விரலால் சுட்டி காட்டி கேக்கிறார்.
என்னய்யா? என்ன நடந்தது?
"அவனுக்கு என்னிலை எப்பவும் ஒரு நக்கல் சேட்டை"
முத்துலிங்கத்துக்கு விஷயம் புரிஞ்சிட்டுது.
"ஐயா அவன் எங்கடை மார்க்கண்டு வாத்தியாரின்ரை பெடியன். தங்கமான ஒரு படிச்ச பையன். கொஞ்ச வயது கூடின எங்களைக் கண்டாலே அவன் நிமிந்து நின்று கதைக்க மாட்டான். அவ்வளவு மரியாதை. அவன் பெரிய மனிசரை கண்டால் பயபக்தியோடு மரியாதை கொடுக்கிறவன். மரியாதையான குடும்பத்து பையன்
உந்த சுத்தி நிக்குதுகளே அஞ்சு சதத்துக்கு உதவாத விடுகாலி காவாலிகள். அதுகள் உப்படிதான் எதுக்கெடுத்தாலும் நக்கல் சிரிப்பு அவன் என்ன செய்தாலும் சிரிக்குங்கள்.
நீங்கள் அந்த தங்கமான பையனை பிழையாய் நினைச்சீட்டியள்."
முத்துலிங்கத்தின் அங்கீகாரம் முறையாய் வேலை செய்திருந்தது. சிவகுருவரும் கடுப்பு மாறி தன்னுடைய ஊரை நோக்கி நடக்க தொடங்கிவிட்டார்.
மார்க்கண்டு வாத்தியாரின் விக்கி இப்ப கனடாவிலை இருக்கிறார் என செய்தி.
டெலிபோனிலை எவராவது வீட்டுக்கு அழைத்து "வணக்கம்" என்று சொன்னாலே பழைய பழக்க தோசத்திலை பதறி அடித்துக் கொண்டு எழும்பி இரண்டு கைகளினையும் தலைக்கு மேலால் உயத்துகிற குணம் இன்னும் மாறவில்லை என்பதும் ஒரு செய்தி.
(எவர் மனதினையும் நோகடிக்காமல் கிராமத்தின் ஏராளமான பழைய நகைசுவைகளினை பகிர்ந்து கொள்வோம்)
குப்பிழான் றஞ்சன்-
Post a Comment