கிராமத்தின் கதைகள் 02 - அரச ஆதரவான அரசியவாதியுடன் ஓர் குழப்பம்

முன்னைய காலங்களில் யாழ்பாணத்திலிருந்து "சிரித்திரன்" என்றதொரு நகைசுவை சஞ்சிகை வெளிவந்தது பலருக்கும் ஞாபகம் இருக்கும்.

அதன் ஆசிரியர் சுந்தர் ஐயா அவர்கள் வீதிக்கு, வெளிக்கு என வந்தால் காணும் காட்சிகள், சம்பவங்களினை எல்லாம் ஓர் நகைசுவையாகவே பார்ப்பார். உடனடியாக ஓர் குட்டி கதை, கார்ட்டூன், கேலி சித்திரங்கள், தமாஷ் சம்பாஷணை என உருவாக்கி இலக்கிய சுவைகளோடு அவரது "சிரித்திரன்'" சஞ்சிகையில் அந்த காலங்களில் மாதமிருமுறை வெளிவரும். அப்போது அந்த பத்திரிகை படிப்பதில் எங்களுக்கு பெரிய ஆனந்தம்.

இதே மாதிரி நம்ம ஊரில், எல்லோருக்கும் அந்த காலம் நகைச்சுவையாக தெரிந்த ஓர் கதையினை சொல்லப் போகின்றேன். சம்பந்தப்பட்டவரின் பெயரினை தணிக்கை செய்யும் இந்த கதை உறவு பாலம் என்ற எல்லைக்குள் நின்று விடல் வேண்டும் என்பதில் எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

சிறிமாவோ பண்டாரநாயக்காவினை பிரதமராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சிக்காலமான 1970 ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் கிராமத்துக்கும் மக்களுக்கும் ஏதாவது நன்மை செய்யலாம் என்ற நோக்கில் கிராமத்தவர்கள் ஓர் சிலரால் அந்த கட்சியின் கிளை ஓன்று வாசிகசாலைக்கு அருகிலிருந்த பாணர் பொன்னம்பலத்தின் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தமிழரசு கட்சியின் பக்தர்களாக இருந்த ஊரில் உள்ள 90% வீதமான மக்களுக்கும் சிங்களவரின் கட்சிக்கு கிளை வைத்திருப்பது திருப்தியாக அந்த நேரம் இருக்கவில்லை.

மின்சாரம் என்பதனையே ஊரில் அறியாத அந்த கால இரவு நேரத்தில் ஒரு நாள், பெட்ரோல்மக்ஸ் வெளிச்சத்தில் அங்கு கருத்தரங்கு ஓன்று நடக்கின்றது. ஒலி வாங்கி ஒன்றுமில்லாது ஒரு மேசை, விழாவில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் இருக்கவென நான்கு கதிரைகளுடன் ஒரு சுமார் 50 -100 கிராமத்து ஆண் மக்கள் மாத்திரம் என நிலத்தில் இருப்பவர்கள், நிற்பவர்கள் என சூழ நின்று அந்த நிகழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் "கிராமியம்" என்றால் அப்போது எப்படியிருந்திருக்கும் என நான் இங்கு சொல்லத் தேவையிருக்காது.

சேர்ட்டும் அணியாது சாரத்தினை மடிச்சு கட்டிக்கொண்டு சுருட்டு பற்ற வைத்துக் கொண்டு இருப்பவர்கள், கள்ளு மாதம் என்பதால் அந்த சோமபான போதையில் இருப்பவர்கள், பொழுது போகாமல் சந்தியில் நிற்கும் இளைஞர்கள் என ஒரு கூட்டம் பார்வையாளர்களாக உரைகளை கேட்டு ரசித்த வண்ணம் இருந்தனர்.

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா

கருத்தரங்கில் முக்கிய பேச்சாளராக முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் திரு. தியாகராஜா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

சரி. முதலில் அந்த தியாகராஜா பற்றி கொஞ்சம் சொல்லிப்போட்டு விசயத்துக்கு வருகின்றேன்.

ஈழ தமிழர்களின் அரசியலில் ஓர் படித்த அத்தோடு "பனி தியாகராஜா" என்று அவருக்கு ஓர் திருநாமம் உண்டு. தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.பி ஆகிவிட்டு, சிங்கள அரசுகள் தமிழினத்தினை அழிக்கும் அரசியலமைப்பு சட்டங்களினை உருவாக்கிய காலத்தில், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக நின்று அரசுடன் போராடும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போய் சேர்ந்து தமிழர்கள் கட்சிகளை அஞ்சாமல் நின்று பகிரங்கமாக கொச்சைப்படுத்துபவர்.

இனி நான் அடுத்த தமாஷ் கிளைமாக்ஸ் காட்சிக்கு வருகின்றேன்.

அவர் உரை தொடர்கின்றது. எல்லோரும் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பார்வையாளராக பின்னுக்கு நின்ற ஒரு நம்ம கிராமத்தவர் ஒருவர் . சாரத்தினை மடிச்சு கட்டினபடி சேர்ட் போடாத கறுப்பு உடல். கண கணப்பான மது வெறியில் கம கம என வாயில் புகைக்கும் சுருட்டு.

( இங்கு பெயரினை தவிர்த்துக் கொள்வோம் )

"ஒய் ? ஒய் ?" -----------------------------------------------------------------"

கையை தட்டி அவரது பேச்சை நிறுத்தினார்.

"தந்தை செல்வாவை பற்றியோ, தமிழரசு கட்சியை பற்றியோ தயவுசெய்து இங்கை தாக்கி பேசாதையும் காணும் "

"நான் இஞ்சை பேசினால் நீ என்ன பிண்ணாக்கா புடுங்குவாய் ? "

பனியன், கொதியன், சின்ன சண்டியன், எதுக்கும் பயப்பிடாதவர் என தமிழர்கள் அரசியலில் பெயர் எடுத்த எம். பி , தியாகராஜாவும் என்ன வாயினை வைச்சுக்கொண்டு சும்மாயிருப்பார் என நினைக்கக்கூடாது.

"தண்ணி அடிச்சா போய் பேசாமல் போய் படு. இஞ்சை ஏன் வந்தனீ "?

"காசை செலவழிச்சு தண்ணி அடிக்கிறது போய் பேசாமல் படுத்து நித்திரை கொள்ளுறதுக்கில்லை.

நீ பேசு. நல்லாய் பேசு.

ஆனால் நம்ம எம்.பி தர்மலிங்கம் ஐயா, தந்தை செல்வா, தமிழரசு கட்சி பற்றி உமக்கு கதை தேவையில்லை "

"நான் பேசினா நீ என்ன பிடுங்குவாய்".

"நம்ம ஊரு தமிழரசு கட்சியின்ரை ஒரு கோட்டை". அந்த கோட்டைக்குள்ள வந்து உந்த பிண்ணாக்கு அலம்பலிருக்கக்கூடாது"

"உன்னைப்போல தம்பி நான் எத்தனையோ கோட்டைகளை கண்டுட்டு வந்தவன். உந்த கோட்டையாள இஞ்ச காட்டாதை "

"இந்தா பார் நான் காட்டுறேன் என்ரை கோட்டையை. என்ரை கோட்டையையும் இப்ப நீ பார்"

மடிச்சு கட்டின சாரத்தோடை நிற்கமுடியாமல் நின்ற அந்த ஊர் தமிழரசு கட்சி பக்தனின் சாரம் மேலை போட்டுது.

கோபக் கனல்கள் பறக்கும் போது இப்படியும் சில மனிதர்களால் எதிரியை நோக்கி பயன்படுத்தும் ஓர் சிறு ஆயுதம்.

சிரிப்பொலிகள், கூக்காட்டல்கள், விசிலடிப்புகள், முசுப்பாத்திகள் என்ற கரகோஷம் எழும்ப அந்த இரவு நேரம் படார் பட என கட்டிடத்தின் கூரை தகரத்துக்கு கல்லெறிகள் வந்து விழுந்துது.

எம்.பி தியாகராஜர் எங்கே என்றே அந்த கணம் தெரியவில்லை.

எந்த வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு குப்பிழான் எல்லையினை விட்டு பறந்தடித்தார் என்பது அந்த பரபரப்பில் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

(பழைய காலத்து கிராமத்து நகைசுவைகளினை தொடர்வோம்)

குப்பிழான் றஞ்சன்-


Post a Comment

Previous Post Next Post