கிராமத்தின் கதைகள் 01 - கிராமத்து இளைஞர்களின் நாடகம்

(கோப்பு படம்)

எனக்கு தெரிந்த நம்ம கிராமத்தின் நகைச்சுவையான கதைகள் ஏதாவது சொல்ல வேண்டும் போல் தோன்றுவதால் சொல்லுகின்றேன். கேளுங்கள்.

1970 - 1971 ஆம் ஆண்டு காலம் என நினைக்கின்றேன். குப்பிழான் - விக்னேஸ்வரா சனசமூக நிலைய நிதி சேர்ப்புக்காக நம்ம ஊர் பாடசாலையில் ஓர் நாடகவிழா நடாத்தப்பட்டது.

அதில் அந்த காலங்களில் அகில இலங்கை எங்கும் புகழ் பெற்ற "அடங்காபிடாரி" நாடக குழுவினர் அழைக்கப்பட்டு மேடையேற்றபட்டிருந்தனர். அவர்களின் நாடகக்கலை என்பது துளி நேரமும் நிறுத்துகை என இல்லாது 3 - 4 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடக்கும். மெய் மறந்து ரசிக்கலாம்.

அதே நாடக மேடையில் "உவனும் தொலைஞ்சான்" என்னும் தலைப்பில் நம்ம கிராமத்து இளைஞர்கள் ஓர் நகைச்சுவை நாடகம் அரங்கேற்றினார்கள்.

அதில் ஒரு காட்சி.

கலியாண பேச்சு ஒன்றில் பெண் பார்ப்பு படலம் நடக்கின்றது. கறுப்பு கண்ணாடி அணிந்த, நவநாகரிக உடையில் அமைந்த அழகான மணபெண்.

சீதனங்கள் பேசுவதில் பயங்கர வாக்குவாதம் வந்து அந்த மேடையில் கலியாணம் குழம்பிற நிலைமை வந்திட்டுது.

"எனக்கு சீதனம் ஒன்றும் வேண்டாம். உந்த பெண்ணை என்னோடை விட்டால் காணும் என்று அவசரப்பட்டார் மாப்பிள்ளை"

- அந்த நாடகமேடை நடிகர் "முத்தையா தர்மபாலன்". அப்போதுதான் அந்த பெண்ணை மாப்பிளை முதன் முதலில் பார்க்கின்றார்.

மண்டபம் அதிர்ந்த கரகோஷம்.

அதோடை மாப்பிளை தொலைஞ்சார். நினைத்து நினைத்து சிரிக்க கூடியமாதிரியில் அந்த காலத்தில் அந்த நாடக காட்சிகள் இருந்தது.

"தர்மபாலன் நாடகமேடையில் அவசரப்பட்ட மாதிரி தம்பி இவனும் அவசரப்படுகிறான் போல இருக்குது "

என முணுமுணுக்கும் வசனம் ஊரில் சில இடங்களில் நிஜ வாழ்விலும் தொடர்ந்தது.

(எவர் மனதினையும் புண்படுத்தாத வகையில் பழைய கிராமத்து நகைசுவை கதைகளை தொடர்வோம்.)

குப்பிழான் றஞ்சன்-

Post a Comment

Previous Post Next Post