புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குப்பிழான் தெற்கு கிராமியச் செயலகத் திறப்பு விழா இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை (20.09.2023) முற்பகல்-10.45 மணி முதல் மடத்தடி, குப்பிழான் தெற்கு எனும் முகவரியில் குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அராசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், உடுவில் பிரதேச செயலர் தவச்செல்வம் முகுந்தன் சிறப்பு விருந்தினராகவும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி கெ.இந்திரமோகன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கிராமியச் செயலகக் கட்டடத் தொகுதியின் பிரதான வாயிலை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாடா வெட்டிச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை ஆற்றினார்.
குறித்த நிகழ்வில் குப்பிழானைச் சேர்ந்த புலம்பெயர் வாழ் அன்பர்கள் நால்வரின் நிதிப் பங்களிப்பில் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 55 மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி மறைந்த தனது வாழ்க்கைத் துணைவியார் திருமதி.ஞானலஷ்மி மற்றும் துணைவியாரின் பெற்றோரான சைவபூஷணம் நல்லையா கனகாம்பிகை ஞாபகார்த்தமாக மனமுவந்து நன்கொடையாக இரண்டு பரப்பு நிலம் வழங்கியிருந்தார். இந்த நிலத்தில் குப்பிழான் தெற்கு கிராம சேவகர் அலுவலகம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம், சமுர்த்தி உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் சுகாதார அலகு என்பன ஒரே இடத்தில் அமையும் வகையில் அரசாங்கத்தின் எந்தவித நிதியுமின்றிப் புலம்பெயர் வாழ் குப்பிழான் கிராம மக்கள் மற்றும் கிராம மக்களின் சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட நிதிப் பங்களிப்பில் மேற்படி கிராமியச் செயலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னின்று செயற்படுத்திய குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா அவர்களை விழாவுக்கு வந்திருந்த பலரும் மனதார பாராட்டினர்.
செய்தி தொகுப்பு - செ. ரவிசாந்-
Post a Comment