சாந்தமும் அமைதியும் அகத்தின் உள்ளேயும், கூர்மையான விழிகளால் ஈழத்து இலக்கியத்தை யாசித்த மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் காலமானார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது.
வடமராட்சியில் திருமணமணமாகி வாழ்ந்த போதும் தனது பிறந்த ஊர் குப்பிழான் எனும் அடையாளத்தைத் தனது பெயருடன் அடையாளமாக தொடர்ந்து இட்டவர்.
ஆகஸ்ட் முதலாம் நாள் 1946 இல் சுன்னாகத்தில் பிறந்த குப்பிழான் ஐ. சண்முகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர் ஆவார். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதிய குப்பிழான் ஐ. சண்முகன் அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
குப்பிழான் ஐ. சண்முகன் முதலாவது சிறுகதை “பசி” ராதா என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு “கோடுகளும் கோலங்களும்” சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
இவரது நூல்களில் கோடுகளும் கோலங்களும் சிறுகதை தொகுதி – 1975 வெளியானது. அதன்பின்னர் சாதாரணங்களும் அசாதாரணங்களும் எனும் சிறுகதைகளின் நூல் 1983 வெளியானது. அத்துடன் அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்களின் நூல் 2003 இலும், உதிரிகளும்… சிறுகதை தொகுப்பு 2006 வெளியானது.
யாழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பின் மூலமும், அதன் பின்னர் ஐ. சாந்தன், அ. யேசுராசா போன்றோரோடு சேர்ந்து “கொழும்பு இலக்கியக் கழகம்” மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குப்பிழான் ஐ. சண்முகத்தின் ஒரு பாதையின் கதை சிறுகதைகள் நூல் 2012இல் வெளியானது.
1976இல் சாகித்திய மண்டலப் பரிசை கோடுகளும் கோலங்களும் எனும் சிறுகதைத் தொகுப்புக்காக பெற்ற குப்பிழான் ஐ. சண்முகம் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்கத்தின் “சங்கச் சான்றோர் பட்டம்” விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பிரபஞ்ச சுருதி எனும் கவிதை தொகுப்பு 2014இலும் ஒரு தோட்டத்தின் கதை, சிறுகதைகளின் தொகுப்பு 2018 இலும் வெளியாகியது.
இவ்வாரம் 24 ஏப்ரல் 2023 இல் மறையும் வரை அவரது உயிர்ப்பான எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்திற்கு உத்வேகத்தை தந்துள்ளது.
மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்களின் கவிதை ஒன்றே அவரின் வாழ்வை பிரதிபலிக்கிறது.
பூவாய் மலர்ந்து எனும் கவிதையில்..
பூவாய் மலர்ந்து சிரிக்கிறாய்
புதுப் புனலாய் குளிர்ச்சி தருகிறாய்
நோவாய் இருந்த மனத்தினில் -
ஒரு நேயக் கவிதை விதைக்கிறாய்
கண்ணில் தெறிக்கும் விண்ணங்கள்
கதை சொல்லும் மனதின் எண்ணங்கள்
விண்ணின் ஜாலம் வானில்
எண்ணில் இனிக்கும் நினைவுகள்
எழில் கொஞ்சும் உடலின் வனப்புக்கள்
கண்ணில் தெரியும் நேசத்தில்
உடல் கரைந்தே உருகிப்போவதாய்…
குப்பிழான் மண்ணின் தனிப் பெரும் அடையாளமாகவும், சிறுகதை உள்ளிட்ட பல்துறை ஆளுமையாளராகவும், அனுபவப் பெட்டகமாகவும் திகழ்ந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மரணம் கடந்தும் அவர் பெயர் எல்லோர் நெஞ்சங்களிலும் நிலைக்கும் என்பது உறுதியாகும்.
ஈழத்தின் தலைசிறந்த மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்களுக்கு அஞ்சலிகளுடன், அவரது நூல்கள் எதிர்கால சந்ததியினரும் வாசித்து பயன்பெற இலத்திரனியல் மூலமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரதும் ஆவலாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
Post a Comment