குப்பிழான் கிராமிய கீதம்

 


வாழ்க எம் தாய்நிலம் வளம்மிகு குப்பிழான்

வளர்புகழ் கொண்டென்றும் வாழியவே.

(வாழ்க)


பச்சைக் கம்பளம் விரித்திடும் பயிர்கள்

பனை மா வாழை பலாவுடன் தென்னை

இச்செகத்தினிலே எந்தையும் தாயும்

ஆண்ட எம் செம்மண் நிலமே வளமே!

(வாழ்க)


அறநெறி சிவநெறி தவநெறி நின்றவர்

அறிஞர் புலவர் நல்லாசிரியர்

நிறை தொழில் உழவினைக் கொண்டவர் வாழ்ந்திட

நீள் புகழ் கொண்டதும் எம் நிலமே.

(வாழ்க)


அருள்பொழி இறைதிருக் கோயில்கள் பலவும்

அமைதியை வாழ்வினில் சேர்த்துவிடும்.

பொருள் பொதி வாழ்வு பொன்னொளி காணும்

புலர்ந்திடு காலையின் எழில்மேவும்.

(வாழ்க)


பண்ணிசை இன்னிசை நாடகம் கூத்தெனப்

பல்கலை கண்டதும் எமஊரே

மண்ணுயர் அறிவியல் விஞ்ஞானம் இவை

மாண்புறக் கண்டவர் எம்மவரே.

(வாழ்க)


மனம் நிறை வாழ்வும் உடல் நலம் உரனும்

மருவிடு மக்களைக் கொண்டாய் – மண்ணில்

மேன்மைகள் பலவும் நீ கண்டாய்!

இனமொழி மானம் கொண்டவர் தம்மை

ஈன்றனை தாயே வாழ்க! – என்றும்

சான்றவர் போற்றிட வாழ்க!

(வாழ்க)


ஆக்கம்: கவிஞர் கலாநிதி திரு. க. கணேசலிங்கம்.

Post a Comment

Previous Post Next Post