ஏழ்மையில் வீழ்ந்த போதும் எளிமையாக வாழ்ந்தனர்!

 


"ஏழ்மையில் வீழ்ந்தபோதும் பொதுவாகத் தம்நிலையை இழக்காத எம்மக்கள் கலப்பையும் கடகமும் ஏந்தி உழவில் விளைந்தவற்றைக் கொண்டு மானத்துடன் சிறப்பாக வாழ்ந்தனர்." நேர்காணலின் ஒரு பகுதியில் இவ்வாறு கூறுகின்றார் சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம் அவர்கள்... அவரின் முழுமையான நேர்காணல் இதோ...

குப்பிழான் பதியினில் பிறந்த எங்கள் கிராமத்தின் சொத்தாக போற்றப்படுகின்ற சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம் B.Sc.(Eng), C.Eng., M.I.E.E.(Lond.), M.I.E.(Cey.), அவர்களுடனான நேர்காணல். 

வணக்கம் கலாநிதி கணேசலிங்கம் அவர்களே! 

வணக்கம்.

நீங்கள் குப்பிழான் மண்ணின் முக்கிய பிரமுகராக இருக்கிறீர்கள். சமூக சேவைகள் செய்து இருக்கிறீர்கள். குப்பிழான் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களில் நீங்களும் ஒருவர். குப்பிழான் மண்ணின் வரலாற்றோடு உங்கள் வாழ்வும் பின்னிப் பிணைந்துள்ளது. அப்படிப்பட்ட உங்களைச் செவ்வி காண்பதில் பெருமை அடைகிறோம். 

1. ஆரம்ப காலம் முதல் இன்று வரையான உங்கள் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

தனிப்பட்ட வாழ்கையென்று சிறப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. குப்பிழானில் பிறப்பு. அங்குள்ள விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி. பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மூன்று வருடப்படிப்பு. அதன்பின் எட்டாம் வகுப்புத் தொடங்கி பல்கலைக்கழகம் செல்லும்வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிப்பு. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் படித்து 1960-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியாக வெளிவந்தேன். 

ஒரு வருடம் பல்கலைக் கழகத்திலேயே ஆசிரியப் பணிபுரிந்து பின்னர் இலங்கை மின்சார சபையில் (அப்போதைய மின்சார இலாகா) மின் பொறியியலாளராகச் சேர்ந்தேன். அதில் இருபது ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றினேன். கடைசியாக வகித்த பதவி 'திட்டமிடல் முகாமையாளர்' (Project Manager). பின்னர் சவுதி அரேபியாவிலுள்ள மின்சார சபையில் எட்டாண்டுகள் உயர் பதவி வகித்துள்ளேன். அதன்பின் இந்தியாவில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுகள் வாழ்ந்தேன். இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழுகிறேன். 

மனைவி யோகேஸ்வரி, யாழ்ப்பாணக் கல்லூரியிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிள்ளைகள் மூன்று பேர். மூத்த மகன் அவுஸ்திரேலியாவில் புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணராக மருத்துவத் தொழில் பார்க்கிறார். அடுத்த மகளும் மகனும் அமெரிக்காவில் பொறியியலாளர்களாக வேலை செய்கின்றனர்.

2. குப்பிழான் கிராமத்துக்கு முதன் முதலாக மின்சார வசதியை ஏற்படுத்தினீர்கள். அந்த அனுபவங்களை விபரியுங்கள்.

குப்பிழான் கிராமம் நீண்ட காலமாக மின்சார வசதியில்லாமல் இருந்தது. இதுபற்றி ஒருநாள் உரையாடும்போது, தர்மலிங்கம் எம்பியின் முயற்சியால் குப்பிழானுக்கு ஒரு மின்சாரத் திட்டம் இருப்பதாகவும் அது அமுல்படுத்தப்படவில்லை என்றும் எம்மூர்த் தர்மலிங்கம் அவர்கள் (தருமண்ணை என்று பலராலும் அழைக்கப்படுவர்) சொன்னார். இது விடயமாக ஏதாவது உடனே செய்ய வேண்டுமெனவும் என்னைக் கேட்டார். குப்பிழானுக்கு மின்விநியோகம் செய்வதில் எனக்குத் துணைநின்று பலவகையில் உதவியவர் இவர். 

இதுபற்றி மின்சாரசபையில் நான் விசாரித்ததில் இது உண்மை என்பதை அறிந்தேன். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் செய்யப்படும் கிராமிய மின்சாரத்திட்டத்தின் கீழ் குப்பிழானைப் போல் பல கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் திட்டம் இருந்தது. பல சிங்களக் கிராமங்களுக்கும் மிகச் சில தமிழ்க் கிராமங்களுக்கும் கொடுத்திருந்தார்கள். ஆனால் குப்பிழானுக்கு கிடைக்கும்போல் தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுடன் பேசி மின்சாரம் வழங்குவதற்கு அனுமதியைப் பெற்றேன். ஆனால் பின்பும் தடங்கல் உண்டானது. மின்சாரம் வழங்கும் பகுதிக்கான படத்தில், குப்பிழான் சந்தியிலிருந்து நான்கு பக்கமும் செல்லும் தெருக்களில் மிகச்சிறு தூரத்துக்குத்தான் மின்சாரம் வழங்கப்படும் என்பது தெரிந்தது. இதனால் ஒரு சில வீடுகள்தான் பயனடையும். 

உடனே தர்மலிங்கம் எம்பியுடன் தொடர்புகொண்டு பேசினேன். அவர் தான் பல வீடுகளுக்குக் கிடைக்கும்படி செய்ததாகவும் ஏன் இப்படிச் செய்தார்களென்று தெவியவில்லை என்றும் கூறினார். மீண்டும் மின்சார சபையின் உயர் அதிகாரிகளுடன் பேசினேன். மின்சாரத் திட்டம் தொடங்கிய காலத்தில் குப்பிழானுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பல வீடுகளுக்குக் கொடுக்கப் போதுமானதாக இருந்ததாகவும், ஆனால் இவ்வளவு காலத்துக்குப்பின், விலை ஏற்றம் காரணமாக, சில வீடுகளுக்கே கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்றும் கூறினார்கள். அதிஉயர் அதிகாரியைச் சந்தித்து, மின்சாரசபை உரியகாலத்தில் செயற்பட்டிருந்தால் இந்த நிலை உண்டாகி இருக்காது என்று விளக்கி, தேவையான மேலதிக நிதியைப் பெற்று, மின்சாரம் பெற உதவினேன்.

ஆயினும் குப்பிழானின் எல்லாப் பகுதிகளுக்கும், குறிப்பாகத் தோட்டங்களுக்கு, மின்சாரம் கொடுக்க முடியவில்லை. இதற்காகச் சிலர் என்னைக் குறை கூறியதும் உண்டு. பின்னர் சிறிது காலத்துக்குள், வடமாகாணத்துக்கும் கீழ்மாகாணத்தின் ஒரு பெரும் பகுதிக்கும் புதிதாக மின்சாரம் வழங்கும் பொறுப்புள்ள பதவியை வகித்தேன். அப்பொழுது மிகுதிப் பகுதிக்கும் மின்சார விநியோகம் செய்தேன். வேறு பல தமிழ்க் கிராமங்களுக்கும் மின்விநியோகம் செய்தேன்.

குப்பிழானுக்கு மின்சார விநியோகம் செய்யும்போது அதற்கு இடஞ்சலாக நின்ற சில மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. இதில் சிலரிடம் குறைகேட்க வேண்டியும் இருந்தது. ஒரு தென்னை மரம் குலைகுலையாகத் தேங்காய்களுடன் நின்றது. அதை வெட்ட வேண்டாமெனச் சொந்தக்காரர் வேண்டினார். எனக்கும் அதை வெட்டுவது வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் அதை வெட்டுவதைத் தவிர்க்க முடியாத நிலை. வெட்டும்போது அதன் சொந்தகாரர்'அந்தத் தென்னை விழுகிற மாதிரி நீயும் குடும்பத்துடன் அழிவாய்' என்று சாபமிட்டார்! இது நினைவில் நிற்கும் சில அனுபவங்களில் ஒன்று!

3. குப்பிழான் கிராமம் போல வேறு பல கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்க நீங்கள் உதவினதாக அறிகிறேன். இதுபற்றிக் கூறுங்கள்.

தமது கிராமங்களுக்கு மின் விநியோகம் பெறுவதற்கு பொதுமக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், என்னை அணுகுவதுண்டு. இயன்றவரை உதவியுள்ளேன். என்னால் நேரடியாக மின்விநியோகம் செய்ய முடியாத நிலையில், அதனைப் பெறுவதற்கு வேண்டிய அனுமதியை தொடர்புடைய மந்திரியிடம் பெறக்கூடிய வழிவகைகளைக் கூறியுள்ளேன். நீண்ட காலமாக முயற்சித்தும் மின்விநியோகம் பெற முடியாத நிலையில் சிலர் என்னை அணுகுவதுண்டு. அளவெட்டி கிராமம் ஒரு உதாரணம். அது ஒரு பெரிய கிராமம். அதற்கு மின்விநியோகம் செய்வதற்கு மிகவும் அதிகமான பணம் தேவை. அத்துடன் போதிய வருமானமும் வராது. இதனால் அதற்கு அதிக பணம் செலவு செய்து மின்சாரம் விநியோகிக்க மின்சாரசபை விரும்பவில்லை. 

என்னிடம் வந்த அளவெட்டிப் பிரமுகர் சிலருக்கு மின்சாரம் பெறக்கூடிய ஒரு ஆலோசனையை வழங்கினேன். முதலில் அளவெட்டியின் ஒரு பகுதிக்கு மட்டும் மின்சாரம் கேட்டு விண்ணப்பிக்கும்படியும், அதனைப் பெற்றபின் மிகுதிப் பகுதிக்குக் கேட்கும்படி ஆலோசனை கூறினேன். அதன்படி செய்து மின்சாரம் பெற்றார்கள். நானே இரு பிரமுகருடன் ஒவ்வொரு ஒழுங்கைக்கும் சென்று பார்வையிட்டு அறிக்கை தயாரித்து அனுமதி பெற உதவியுள்ளேன். இப்படிச் சில கிராமங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க முடிந்தது. 

4. நீங்கள் பல சமூக சேவைகள் செய்துள்ளீர்கள். அவை குறித்த விபரங்களைச் சுருக்கமாகக் கூறுங்கள்.

சிலவற்றைக் கூறுகிறேன். 

1.குப்பிழான் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, சைவத்தமிழ் உணர்வும் ஈடுபாடும் இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம். ஒத்த கருத்துடைய இளைஞர்களும் இருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்தி, உறுதுணையாக நின்று, தமிழ் விழா போன்றவை எமது ஊரில் நடைபெற உதவினேன். கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய முன்றிலில் இவை முதலில் எனது தலைமையில் நடைபெற்றன. 

2. சைவம் வளர்க்கும் நோக்கில் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் மாதந்தோறும் சைவப்பெரியார்களை அழைத்து சைவசமய விளக்கம் பெறுவதற்கு ஒழுங்கு செய்தேன். முதல் கூட்டத்துக்கு ஏழாலை பண்டிதர் கந்தையா அவர்கள் வந்து விளக்கமளித்தார். 

3. எம்மூர் சைவ ஞானி காசிவாசி செந்திநாதையர் பெயரால், தர்மலிங்கம் போன்றோரின் பெரும் உதவியுடன், 'காசிவாசி செந்திநாதையர் ஞாபகார்த்த சபை'யை நிறுவி செயலாளராகப் பணி புரிந்தேன். இதில்; சில இளைஞர்கள் எனக்குத் துணை நின்றுள்ளனர். அவர்களுள் சிவ மகாலிங்கம், சோமசுந்தரம் (தேவன்) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இச்சபை மூலம் காசிவாசி செந்திநாதையர் ஞாபகார்த்த விழாக் கொண்டாடி, செந்திநாதையர் ஞாபகார்த்த மலரும் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் செந்திநாதையரின் திருவுருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. இவற்றை நிறைவேற்றும் நோக்கில் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றோரை அணுகி அவர்களின் ஆசியையும் உதவிகளையும் பெற்றேன். இப்பணிகளில் என்னை ஈடுபடுத்தி ஊக்குவித்து ஒத்துழைத்தவர்களில் எம்மூர்த் தர்மலிங்மமும் அமரர் துரைசிங்கமும் என்றும் மறக்க முடியாதவர்கள். 

4. செந்திநாதையரைப் பற்றி நான் ஆராய்ந்து எழுத வேண்டுமென வேண்டியவர் ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்கள். அவரின் ஊக்குவிப்பால் பல கட்டுரைகள் எழுதினேன். சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் 'சித்தாந்தம்' இதழிலும் உலகசைவப் பேரவையின் 'சைவ உலகம்' இதழிலும் செந்திநாதையர் பற்றிய எனது கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்தன. பெருமன்றத்தில் நாவலர் பற்றியும் செந்திநாதையர் குறித்தும் சில தடவைகள் சொற்பொழிவாற்றினேன். சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'ஈழத்தில் சைவசமய வளர்ச்சி' என்ற பொருளில் செந்திநாதையரின் பணிகளையும் குறிப்பிட்டுப் பேசினேன். இந்நிறுவனம் வெளியிட்ட நூலில் எனது உரை இடம்பெற்றுள்ளது. இவற்றின் பயனாகத் தமிழ்நாட்டில் செந்திநாதையர் பற்றி அறிவதற்குப் பலர் விழைந்ததைக் காணமுடிந்தது. 

5. கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத் திருத்த வேலைகள் முடிவுற்று, புனராவர்த்தன கும்பாபிடேகமும் சங்காபிடேகமும் 1973 இல் நடைபெறவிருந்தன. அப்பொழுது ஒரு மலர் வெளியிடுவது நல்லதெனச் சிலர் கருதி என்னை அணுகினர். மலரை எப்படி அச்சடிக்க வேண்டும், ஆலய பரிபாலன சபையினரின் படத்தை எப்படிப் போடவேண்டும் என்ற விடயங்களில் சபையினர் காலத்தை நீட்டினர். உருப்படியாக எதுவும் நடைபெறும் போல் தெரியவில்லை. நானே தனித்து நின்று அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் பெற்று, தேவையான விளம்பரங்களையும் பெற்று 'கற்பக விநாயகன்' என்ற மலரை வெளியிட்டேன் 

6. ஒரு காலத்தில், சாதி வேறுபாடின்றி எல்லோரும் உள் சென்று வழிபடுவதற்கு கோயிற் கதவுகள் திறக்கப்பட வேண்டுமெனச் சிலர், குறிப்பாக இளைஞர்கள், விரும்பினர். ஒருநாள் குப்பிளான் சிவ சோதிலிங்கமும் இளைஞர் சிலரும் என்னைச் சந்தித்து, 'அண்ணை நாளைக்கு மத்தியானம் கொஞ்சப்பேரை கற்கரைப் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிவரப்போகிறோம். நீங்கள் ஒருக்கால் அங்கே வந்து நின்றால் போதும்' என்றார்கள். வருகிறவர்கள் குளித்துத் தூய்மையாக வரவேண்டும் என நான் கூறினேன். அப்பொழுது நான் குடும்பத்துடன் யாழ்பாணத்தில் இருந்தேன். மறுநாள் மத்தியானம் நான் கோயிலுக்குச் சென்றதும் குருக்கள் என்னிடம் ஓடிவந்து, 'இவங்கள் வந்திட்டாங்கள் கணேசலிங்கம், என்ன செய்வதென்று தெரியவில்லை', என்றார். நான் 'இனி ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் அருச்சனை செய்து, விபூதி கொடுத்து அனுப்புங்கோ' என்று சொன்னேன். 

இதற்கிடையில் எப்படியோ இந்த விடயம் வெளியில் பரவி, அயலவர் சிலர் வந்து கூடினர். ஒருவர் 'ஆரடா உள்ளே வந்தது?' என்று உறுமிக்கொண்டு கத்தியுடன் வந்தார். நான் அங்கு நிற்பதைக் கண்டதும் அவர்கள் அடங்கிவிட்டனர். உள்ளே வந்த ஒடுக்கப்பட்டவர்களும் அமைதியாகத் திரும்பினார்கள். இந்த ஆலயப் பிரவேசத்துக்குக் காரணம் நான் தான் எனப் பலர் தவறாக எண்ணினர். இது போதாதென்று, 'பொறியியலாளர் கணேசலிங்கம் தலைமையில் குப்பிழானில் ஆலயப் பிரவேசம்' என ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. ஆலய பரிபாலனசபை உடனே கூடி ஆலோசனை நடத்தியது. நான் அச்சபையின் தலைவர் திரு நல்லையா அவர்களைச் சந்தித்து, இன்றைய சூழலில் சாதிவேறுபாடு காட்டுவதும் ஒரு சிலரைக் கோயிலுக்குள் செல்லாமல் தடுப்பதும் பண்பற்ற செயல் என்று கூறி விளக்கினேன். அவரும் எனது கருத்துக்கு மதிப்பளித்து பரிபாலனசபையை அமைதிப்படுத்தினார். 

5. நீங்கள் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். அவை பற்றிய விபரங்களைக் கூறுங்கள்.

இதுவரை கவிதை நூல்கள் மூன்றும், சமய, தத்துவ நூல்கள் பதினொன்றும் எழுதி வெளியிட்டுள்ளேன். இவை தவிர பிற அறிஞரின் தத்துவ நூல்கள் இரண்டை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளேன். இவை பிறநாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

சிறுவயதிலிருந்தே எனக்குக் கவிதையில் ஈடுபாடு அதிகம். இதற்குக் காரணம் எனது தந்தையே. யாழ். இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பில் படிக்கும்போது, கவிதை படிப்பதில் நானும் இன்னொரு மாணவனும் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து, தமிழ் படிப்பித்த ஆசிரியர் எங்களுக்கு யாப்பிலக்கணத்தின் 'அரிவரி'யைப் படிப்பித்து, கவிதை எழுத ஊக்குவித்தார். அப்பொழுதே நான் கவிதை எழுதத் தொடங்கினேன். படிக்கும் பொழுதே எனது முதல் கவிதை வீரகேசரி வார இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து பல கவிதைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. அவற்றைத் தொகுத்து 'எண்ணக் கோலம்' என்ற பெயரில், எனது திருமணத்திற்குப் பின் வெளியிட்டேன். வெளியீட்டுவிழா எமது ஊரின் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதுவே எனது முதல் நூலாகும்.

சவுதி அரேபியாவில் இருந்த காலத்திலும் பல கவிதைகள் எழுதினேன். அவற்றையும், பின்னர் எழுதிய கவிதைகளையும் திரட்டி 'உணர்வுக் கோலம்' என்ற கவிதை நூலை சென்னையில் வெளியிட்டேன். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவர் (பின்னர் துணைவேந்தராக இருந்த) பேராசிரியர் பொற்கோ அவர்கள். அவர் என்னை நேரில் கூப்பிட்டுப் பாராட்டி, 'கவிதை உங்கள் நாட்டில்தான் (ஈழத்தில்) வளர்கிறது' என்றார். பின்பு கற்கரைக் கற்பக விநாயகர் பற்றி எழுதிய கவிதைகளில் சிலவற்றையும் வேறு சில ஆன்மீகக் கவிதைகளையும் சேர்த்து 'கற்பக விநாயகன்' என்ற சிறு நூலை வெளியிட்டேன். 

சமயத்துறையில் நான் எழுதிய முதல் நூல் 'சைவத்தை அறியுங்கள்' என்பது. சைவத்தின் அனைத்துக் கூறுகளையும் அனைவரும் அறியவேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்டது இது. இந்நூலின் கணிசமான பிரதிகளை தமிழ்நாடு அரசு அதன் வாசிகசாலைகளுக்காக வாங்கியது. இலங்கையரசு பாராட்டுப் பரிசு வழங்கியது. இரண்டாது பதிப்பு வெளிவந்தபோது ஒரு கிறித்தவப் பாதிரியார் தங்களுக்கு அறுநூற்றுக்கு அதிகமான நூல்கள் தேவையெனக் கூறி வாங்கினார். இதனால் மூன்றாவது பதிப்பும் வெளியிட்டேன். இந்நூலைக் கண்ட இலண்டன் மெய்கண்டார் ஆதீனத் தலைவர் இதுபோன்ற ஒரு நூலை ஆங்கிலத்திலும் எழுதும்படி கேட்டார். ஆங்கிலத்தில் ‘An Outline of Saivism’ என்ற பெயரில் எழுதி வெளியிட்டேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இதிலும் இரண்டாவது பதிப்புப் போடவேண்டியிருந்தது. தொடர்ந்து 'சிவபுராணம் விளக்கவுரை', 'வள்ளுவம் வழங்கும் தமிழர் தத்துவம்', 'சைவசித்தாந்த வினாவிடை' போன்ற நூல்களை எழுதினேன். இறுதியாக எழுதப்பட்டது 'சிவஞானபோதச் சிந்தனை' என்ற நூல். இது 2010 பெப்ரவரியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உலகச் சைவ மாநாட்டில் வெளியிடப்பட்டது.

6. பொறியியலாளரான உங்களுக்கு சைவசித்தாந்த தத்துவத்தில் ஈடுபாடும் அறிவும் எப்படி வந்தன? 

'சித்தாந்தரத்தினம்', 'சைவசித்தாந்த கலாநிதி' போன்ற பட்டங்களை எப்படிப் பெற்றீர்கள்?

கவிதை நூல்களைப்போல் தத்துவ நூல்களைப் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. சென்னையில் வாழ்ந்தபோது அங்குள்ள பிரமஞான சபையில் (Theosophical Society) அங்கத்தவராகச் சேர்ந்தேன். அங்கு நடைபெறும் வகுப்புகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் முதலியவற்றில் பங்குபற்றி பல்சமய தத்துவங்கள் பற்றிச் சிறிது அறிவு பெற்றேன். அப்பொழுது, ஏதாவது ஒரு தத்துவத்தை ஆழமாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. அந்த வேளையில் திருவாவடுதுறை ஆதீனம் முதல்முறையாக சைவசித்தாந்தப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிந்தேன். தமிழ்நாட்டில் பத்து இடங்களில் பயிற்சி மையம் அமைத்து மூன்றாண்டுகள் சைவசித்தாந்த வகுப்பு நடத்தினர். சென்னையில் உள்ள மையத்தில் சேர்ந்து, சைவசித்தாந்தப் பயிற்சி மைய இயக்குனர் 'சித்தாந்த ஞானசாகரம்' உயர்திரு கு. வைத்தியநாதன் அவர்களிடம் படித்தேன். பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த பின் 'சித்தாந்தரத்தினம்' என்ற பட்டத்தை ஆதீனம் அளித்தது. சைவம், சித்தாந்தம் தொடர்பான எனது கட்டுரைகள், புத்தகங்கள், பேச்சுக்கள், பணிகளைப் பாராட்டி மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்ற உலக சைவ மாநாட்டில் 'சைவசித்தாந்த கலாநிதி' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

6. நீங்கள் இந்தியாவில் இருந்த காலத்தில் பெற்ற பயன்கள், செய்த பணிகள், வகித்த பதவிகள் பற்றிச் சொல்லுங்கள். 

சைவசித்தாந்தம் படித்தது, தமிழ்நாட்டு அறிஞர்கள், ஆதீனங்களின், குறிப்பாகத் திருவாவடுதுறை ஆதீனத்தின், தொடர்பு ஏற்பட்டது, பிரமஞான சங்கத்தில் சேர்ந்து பல்சமய தத்துவங்களை அறிந்தது, ஆகியவை நான் பெற்ற பயன்கள் எனலாம். சென்னைப் பல்கலைக்கழகத்து சைவசித்தாந்தத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இரத்தினசபாபதியிடம் சைவசித்தாந்தத்தை ஆழமாகப் படித்தேன. இது நான் பெற்ற பெரும் பயன்களில் ஒன்று. 

உலகத் திருககுறள் மாநாடொன்றில் பல அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளில் எனது கட்டுரை முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டது. அன்றைய தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக இருந்த டாக்டர் நெடுஞ்செழியன் அவர்கள் 'திருக்குறளின் வினைக்கொள்கை' என்ற இக்கட்டுரையைப் பாராட்டி பொற்கிளி வழங்கினார். இது ஒரு ஈழத்தவருக்கு தமிழகம் தந்த பாராட்டு என கருதி மகிழ்கிறேன்.

செய்த பணிகள் என்னும் போது, அண்மையில் அமரரான முனைவர் பண்டிதர் கா.பொ. இரத்தினத்துடன் சேர்ந்து சென்னையில் அவர் நடாத்திய உலகத் திருக்குறள் மாநாடுகள் இரண்டில் இணை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். சென்னையில் சிறிது காலம் இயங்கிய 'திருக்குறள் உயராய்வு மையம்' என்ற அமைப்பின் இயக்குனர்களில் ஒருவனாகப் பணியாற்றினேன். அறிஞருலகில் பிரபலமான 'செந்தமிழ்ச் செல்வி', 'சித்தாந்தம்' போன்ற இதழ்களுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளேன். சுருங்கச் சொன்னால் தமிழகத்து வாழ்வு அறிவு பெறுவதற்கும் ஆராய்சியில் ஈடுபடுவதற்கும் கலை பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கும் ஏற்றதாக அமைந்தது என்பேன்.

சைவசித்தாந்தம் படித்து கட்டுரைகள், நூல்கள் எழுதத் தொடங்கியபின் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத் தலைவர் சிவநந்தி அடிகள் இந்தியாவில் என்னைச் சந்தித்து அவரின் கீழ் இயங்கும் 'உலக சைவப்பேரவை'யில் சேரும்படி பணித்தார். அதன்பின் இச்சபையின் இந்தியக் கிளையின் துணைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினேன். தலைவராக இருந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவத்துறைப் பேராசிரியர் கோபாலகிருஷணன் அவர்கள். இவரை ஆசிரியராகக் கொண்ட உலக சைவப்பேரவையின் காலாண்டு இதழான 'சைவ உலகம்' சஞ்சிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் ஆதீனப் புலவராகவும் நியமிக்கப்பட்டேன்.

7. இந்தியாவைவிட வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளீர்கள். இது பற்றிச் சிறிது கூறுங்கள்.

இலங்கை மின்சார சபையில் சேர்ந்தபின் ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்பப் பிரிவின் கீழான புலமைப் பரிசில் (UNTA Fellowship) பெற்று சுவீடன் நாடு சென்றேன். இதுவே எனது முதல் மேற்கத்திய நாட்டுப் பயணம். 

இலண்டன் விம்பிள்டனிலுள்ள சைவக்கோயிலை நிறுவியவர் என்னுடன் பல்கலைக் கழகத்தில் பயின்ற (இன்று அமரரான) எனது நண்பர் இரத்தினசிங்கம் அவர்கள். பிரித்தானியா இந்துக் கோயில்கள் ஒன்றியத்தைக் கூட்டி 1998-ல் முதன்முதலாக 'உலக இந்து (சைவ) மாநாடு' ஒன்றை இலண்டனில் நடாத்தினார். அதனை ஒழுங்கு செய்யவும் அதில் சொற்பொழிவாற்றவும் என்னை அழைத்திருந்தார். அம்மாநாட்டில் எனது 'சைவத்தை அறியுங்கள்' என்ற நூலும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றியுள்ளேன், சித்தாந்த வகுப்புகள் நடாத்தியுமுள்ளேன்.

8. எமது மண்ணில் நீங்கள் பிறந்து வளர்ந்த காலம் எமது மக்களுக்கு ஒரு பொற்காலமாக இருந்திருக்கும். இக்காலப் பகுதியில் எம்மக்களின் நிலை, உங்கள் அனுபவங்கள், நினைவுகள் ஆகியவை பற்றிக் கூறுங்கள்.

செழிப்பு மிக்க செம்மண் கிராமம் குப்பிழான். அன்றும் இன்றும் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சாமி, குரக்கன், புகையிலை முதலியவை அன்றைய முக்கிய பருவகாலப் பயிர்களாக இருந்தன. கத்தரி, பாகல், புடலை, பயறு முதலியவையும் பயிர் செய்யப்படுகின்றன. வாழை, மரவள்ளி போன்றவையும் செழித்து வளர்கின்றன. இவை தரும் அழகிய சூழலும் எளிமையும் பண்பும் இணைந்த மக்களின் வாழ்வும் குப்பிழான் மண்ணுக்கு மெருகூட்டுகின்றன. 

கிராமத்திலுள்ள கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் மேற்கில் எங்கள் வீடு. வீட்டின் முன்னுள்ள தெரு கிழக்கு மேற்காக ஓடுகிறது. தெருவைத் தாண்டியதும் தோட்டப்பரப்பு நீண்டு பரந்து விரிகிறது. பொழுது புலர முன்னரே விவசாயிகள் பயிருக்கு நீர் பாய்ச்சத் தொடங்கி விடுவர். இரண்டு மூன்றுபேர் சேர்ந்து பாடிக்கொண்டே துலா மிதிப்பர். கம்பீரமான குரலில் வெளிப்படும் அவர்கள் பாடல்களில் ஒரு தனி இனிமை இருக்கும். அதிகாலைப் பொழுதில் கேட்ட அப்பாடல்களின் ஓசையும் தோட்டத்தின் பயிர் வளமும் இயற்கை எழிலும் என்றும் மறக்கமுடியாதவை.

எமது மக்கள் பலரின் அன்றைய வாழ்வு ஏழ்மை தழுவியதாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த அன்றைய காலத்தில் பலர் போதிய உணவின்றி அல்லற்பட்டதுண்டு. அரிசிக்குப் பதிலாகக் குரக்கன், சாமி, மரவள்ளி போன்றவை முக்கிய உணவாக மாறின. தாய்மார் சிலர் குழந்தைளுக்கு ஒரு நேரச் சோறு வேண்டி வருவதையும், எனது தாயார் உதவுவதையும் பலமுறை பார்த்துள்ளேன். அன்று ஏழ்மையில் வாடிய எமது மக்களின் நிலை இன்றும் துயர்தோய்ந்த நினைவாக நிற்கின்றது.

ஏழ்மையில் வீழ்ந்தபோதும் குப்பிழான் மக்கள் பொதுவாகத் தம்நிலையை இழக்கவில்லை. கலப்பையும் கடகமும் ஏந்தி உழவில் விளைந்தவற்றைக் கொண்டு மானத்துடன் சிறப்பாக வாழ்ந்தனர். கோயில் வழிபாட்டில் ஈடுபட்டனர். கூத்தும் நாடகமும் அவர் வாழ்வில் இடம்பெற்றன. சுருங்கச் சொன்னால் எமது மக்கள் அன்று ஏழ்மையைக் கண்டாலும் எளிமையும் அமைதியும் மிக்க நிறைவான வாழ்விலே நின்றனர்.

9. இசைவல்லார் செல்லத்துரை, நாடகக் கலைஞர் பீதாம்பரம் முதலியவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்துள்ளீரகள். அவர்கள் பற்றிய செய்திகள் அனுபங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் அவர்களைக் கண்டுள்ளேன். அவர்களின் நாடகங்களையும் பார்த்திருக்கிறேன். அவை கற்கரைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள கோட்டார் பனை என்ற இடத்தில் பொதுவாக நடப்பதுண்டு. நாடகத் தயாரிப்பாளராக செல்லத்துரையே பெரும்பாலும் இருந்ததாக அறிந்தேன். அந்தக் காலத்தில் பிரபலியமான நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்தரன் முதலிய கதைகள் நாடகமாகவும் நாட்டுக் கூத்தாகவும் நடிக்கப்பட்டன. 

மின்சார வசதி இல்லாத அந்நாட்களில் 'பெற்றோல்மாக்ஸ்' வெளிச்சத்தில் இவை இரவு முழுக்க நடக்கும். அயல் கிராமத்தவரும் வந்து பார்ப்பார்கள். இடையில் கல்லெறியும் நடக்கும். இசைவல்லார் செல்லத்துரையுடன் பீதாம்பரம், வேலையா, கனகரத்தினம், சொக்கன் முதலியோர் நடிப்பதுண்டு. அவர்கள் சொந்தக் குரலில் உரத்த சத்தத்தில் பேசியும் பாடியும் நடிப்பார்கள். சிலநேரங்களில் நடிக்கும்பொழுது ஒருவரை ஒருவர் கேலிசெய்வதும் உண்டு. ஒருமுறை உக்கிரன் என்ற பட்டப் பெயரையுடைய கனகரத்தினத்தைக் கேலிசெய்து ஒருவர் பாடிய பாட்டு மக்களைக் கவர்ந்தது. அந்தப் பாட்டு, 'வேலையன் சொக்கன் பீதன் பாடிய பாட்டைக் கேட்டு உக்கிரன் கனகரத்தினம் உக்கி உக்கி மாண்டான்', என்பதாகும். நாடகத்தின் பின் இது பலராலும் மெச்சப்பட்டுப் பரவலாகப் பேசப்பட்டது. 

இசைவல்லார் செல்லத்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தண்டபாணிதேசிகருடன் படித்தவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். கதாப்பிரசங்கம் செய்வதில் பெரும் புகழ் பெற்றவர் அவர். கணீரென்ற குரலில் பாடியும் பேசியும் அவர் செய்யும் கதாப்பிரசங்கம் அனைவரையும் கவர்ந்தது. கற்பக விநாயகர் கோயிலில் அவரின் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். திருவருட்பயனில் கடவுள் வாழ்த்தாக அமைந்த 'நற்குஞ் சரக்கன்று நண்ணில்' எனும் பாடலுடன் தொடங்கும்போதே பிரசங்கம் களைகட்டிவிடும். பிரசங்கம் முடியும்வரை எல்லோரும் அவர் குரலில் கட்டுப்பட்டு அமைதியாக இருப்பர். 

10. எமது கிராமத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள், அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களில் முன்னிலையில் உள்ளவர் பற்றிச் சிறிது விளக்கிக் கூறுங்கள். 

கிராமத்துக்குப் பெருமை சேர்த்தவர்களில் முன்னிலையில் உள்ளவராகக் காசிவாசி செந்திநாதையர் உள்ளார். மும்மொழிப் புலமை மிக்க அவர் சைவத்திலும் அதன் தத்துவமான சைவசித்தாந்தத்திலும் தெளிந்த அறிவு பெற்றவர். கிறித்தவத்தையும் அறிந்தவர். நூல்கள் கட்டுரைகள் கண்டனங்கள் எனப் பலவற்றை வெளியிட்டவர். காசியில் பத்தாண்டுகள் தங்கி ஆராய்ச்சி செய்தவர். நாவலருக்குத் துணையாக நின்று, அவரிடம் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். தமிழகத்திலும் ஈழத்திலும் பல பணிகள் செய்து பலரின் நன்மதிப்பைப் பெற்ற இவர் எமது பிராமத்துக்குப் பெருமை சேர்த்த பெருமகனாவார். 

கிராமிய வளர்ச்சிக்குப் பாடுபட்டுழைத்த பெருமக்களில் முன்னிலை வகிப்பவரென த. தருமலிங்கம் அவர்களைக் குறிப்பிடலாம். எம்மக்கள் மத்தியில் இன்றும் வாழும் பெருந்தகை இவர். சிறுவயது முதலே இவரின் சிந்தனையும் செயலும் குப்பிழானைப் பற்றியதாகவே இருக்கின்றன. குப்பிழான் கிராமோதயம், பலநோக்குக் கூட்டுத்தாபனம், பள்ளிக்கூடம், மின்சார விநியோகம், சங்கம், சபை, கோயில் என்று எதை எடுத்தாலும் அதில் அவரின் உழைப்பும் பங்களிப்பும் இருக்கும். குப்பிழான் வரலாற்றில் அழியாத இடம் பெறும் தன்னலமற்ற தொண்டர் அவர். 

11. குப்பிழான் கிராமோதயம் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எமது கிராமம் புதிதாக உதயமான வரலாறு என்ன? அது பற்றிச் சிறிது கூறுங்கள்.

உண்மையில் எமது கிராமம் புதிதாகத் தோன்றவில்லை. அது ஒரு பழைய கிராமம். அதன் பெயர் வந்த காரணம் குறித்தும் கிராமோதயம் குறித்தும் எழுதியுள்ளேன். நீண்ட காலமாகக் குப்பிழான் கிராமம் தனிக் கிராமசேவகரின்றி, துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு அயல் கிராமங்களுடனும் அயல் தேர்தல் தொகுதிகளுடனும் இணைக்கப்பட்டு, தன் தனித்துவத்தை இழந்து இயங்கியது. இதனால் அதன் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இதனை உணர்ந்த மக்கள் குப்பிழானைத் தனிக்கிராமமாக்கும் முயற்சியில் 1950-ம் ஆண்டளவில் ஈடுபடத் தொடங்கினர். பலவித இடையூறுகளைத் தாண்டி இறுதியில் 1961-ம் ஆண்டு தனிக்கிராமம் ஆவதற்கான அனுமதி அரசிடமிருந்து கிடைத்தது. 

12. நன்றி, கணேசலிங்கம் அவர்களே. தற்சமயம் தாங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?

இப்பொழுது நான் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் கன்பரா நகரில் வசிக்கிறேன். இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் அதன் ஆதீனப் புலவராக முன்னர் என்னை நியமித்திருந்தது. அதற்கும் அதன் கீழ் இயங்கும் உலக சைவப்பேரவைக்கும் சைவ தத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகின்றேன். பிறநாட்டுச் சஞ்சிகைகள், மலர்களுக்கு, வேண்டிய போது, சமய, தத்துவக் கட்டுரைகள் எழுதுவதும் அங்குள்ளவரின் சமயப்பணிகளுக்கு உதவுவதும் எனது பொழுது போக்காக உள்ளது. 

இன்னும் சில பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அண்மையில், மார்கழியில், இங்கே ஒரு 'திருவாசக விழா' நடத்தினேன். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் திருவாசக விழா இது. 'கன்பரா தமிழ் மூத்தோர் சங்கத்தின் (Tamil Seniors Association of Canberra)’ தலைவராகவும் இன்று பணியாற்றுகிறேன்.

13. இறுதியாக, உள்ளூரிலும் வெளியூரிலும் வாழும் குப்பிழான் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, நீங்கள் கூறக்கூடிய செய்தி என்ன? 

குப்பிழான் மக்கள் பலர் இன்று வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். குப்பிழான் வளர்ச்சிக்கு உதவப் பலர், குறிப்பாக இளைஞர்கள், விரும்புகிறார்கள். எம்மூரில் பிறந்து சிங்கப்பூரில் வாழும் கிருஷ்ணன் என்ற முதியவர் குப்பிழான் பாடசாலைக்கும், ஏழை மாணவருக்கும் நிதி உதவி செய்ய விரும்புகிறார். இதில் பிறரையும் ஈடுபடுத்தி, ஒரு அறக்கட்டளை அமைத்துச் செயற்படுவது நல்லதென்பதும் அவரின் விருப்பம். இது ஒரு சிறந்த வழி என்றாலும் இதனை முன்னெடுத்து செயற்படுத்துவதில் சில சிரமங்களை அவர் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஊரிலிலும் வெளியிலும் வேண்டியவர்களைச் சேர்த்துத் திறம்படச் செய்வது சுலபமல்லவெனக் கேள்விப்படுகிறேன். இதுபோல் கனடா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் குப்பிழானின் வளர்ச்சிக்கு உதவுவதில் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அறிகிறேன். இந்த நிலை மாற வேண்டும். குப்பிழானிலுள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படித்தவர்களாகத் திகழவேண்டும். இதற்கும் குப்பிழானின் வளர்ச்சிக்கும் உழைப்பதில் அனைத்து மக்களும் ஆர்வம் காட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை எங்கள் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளீர்கள். குப்பிழான் மக்கள் சார்பில் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். வணக்கம்.

செவ்வி கண்டதற்கு நன்றி. வணக்கம்.

செவ்வி கண்டவர் - ந.மோகனதாஸ் 

Post a Comment

Previous Post Next Post