அங்கு! கற்கள், முட்கள் மற்றும் சிறு பற்றைகளைக் கொண்டஒரு சிறுமலைக் குன்று!
(இந்த மலைக் குன்றினைச் சுற்றிவர இருந்த கலட்டி நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நோக்கில் கிளறி வெளியே எடுத்த கற்களையும், கற்கள் கலந்த மண்களையும் ஒரே இடமாக குவித்த படியாலேயே அங்கு ஏற்கனவே இருந்த குன்று நிலம் மேலும் உயரமான ஒரு குன்றாக அந்த இடத்தில் உருவாகியிருந்தது என்பது கிராமத்தின் மூதாதையர்கள் குறிப்பிடும் ஒரு கதையாகும்.)
அந்த மலைக்குன்றில் கற்களினால் பூரணமாக முடிக்கப்படாத நிலையில் ஒரு அறையினை மட்டும் கொண்ட கைவிடப்பட்ட ஒரு சிறு வீடு!
அந்த வீட்டின் சிறு அறையில் முருகப் பெருமானின் வேல் வைத்து பூஜைகள், வழிபாடுகள், பஜனைகள் செய்து வந்தவர் “மந்திரவாதி” என்ற பெயரினையும் பெற்ற சங்கரலிங்கம் சாமியார் என்பவர்!
“சங்கரலிங்கம் சாமியார்” பற்றி அன்றைய கால கட்டத்தில் அங்கு வசித்த மூதாதையர்களிடம் வினவிய போது பல சுவாரசியமான ஏராளமான கதைகள் சொல்வார்கள்.
இணுவிலைப் பூர்விகமாகக் கொண்ட இவர் கிராமத்தில் தனியே இருந்து தமது ஜீவனோபாயத்திற்காக சுருட்டுத் தொழில் செய்து வந்தவர். மக்களுக்கு ஏற்படும் நோய்கள், பிணிகளை மலைக் குன்றில் உள்ள தமது பூஜை அறையில் வைத்து, வேப்பம் இலைகளினால் மந்திர உச்சரிப்புகளுடன் விபூதி தடவி குணமாக்குவது என்பது அவரது பணியாக இருந்தமையால் பலரும் அவரை அணுகுவார்களாம்.
தொடர்ந்து சிறிது காலங்களின் பின்பு குப்பிழானிலிருந்து அவர் காணாமல் தலைமறைவாகி விட்டிருந்தார் என்பது ஒரு செய்தியாகும். அவர் வழிபாடு செய்த கட்டிடமும் கவனிப்பாரில்லாது தொடர்ந்து பூட்டப்பட்டிருந்தது.
கல்லும், முள்ளும், சிறு சிறு புதர்களும் சூழ இருக்கும் அந்த சிறுமலைக்குன்றில் கவனிப்பாரில்லாது கைவிடப்பட்ட அந்த சிறுகட்டிடத்தில்1978 ஆம் ஆண்டு, ஓர் நீளமான மேசை அதில் இரு பக்கங்களில் இருந்தும் பத்திரிகைகள் படிக்கக் கூடிய இரு வாங்குகளுடன் மட்டும் ஆரம்பிக்கப்பட்டதே“குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையம்” ஆகும்.
முருக வழிபாடு நடந்த குன்றின் மேல் இருந்த சிறுகட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் “குறிஞ்சிக் குமரன் சனசமூகநிலையம்” என்னும் பெயரில் 1978 ஆம் ஆண்டு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டது.
இதன் ஆரம்ப செயல்பாட்டாளர்களாக செயல்பட்டவர்களில் பின்வரும் இருவரின் பெயரினை குறிப்பிட்டேயாக வேண்டும்.
(1) திரு. தம்பிமுத்து கணேசலிங்கம்
(2) திரு. செ.அப்புதுரை
இவர்களுக்கு அனுசரணையாக குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூகநிலைய ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.வ.பண்டிதர் மற்றும் அவரது மைத்துனர் “கிளாக்கர்” திரு.சிவசுப்பிரமணியம் ஆகியோரும் செயல்பட்டனர். இவர்களை முன்னணியாக வைத்து முதல் நிர்வாகசபை உருவாக்கப்பட்டது.
இவர்களின் நிர்வாகம் இருந்த ஆரம்ப காலங்களில்1979 ஆம் ஆண்டு, கிராமத்தின் பிரபல்யமான சமூக பணியாளர்களாகிய,
திரு.தம்பு – தர்மலிங்கம்
திரு.செ.துரைசிங்கம்
ஆகிய இருவருக்கும் அவர்களின் முதுமைக் காலத்தில் கடந்த பல வருடங்களாக கிராமத்தில் பணியாற்றிய அவர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்ட நிகழ்வு அந்த இடத்தில் அந்த இரவு சிறப்பானதொரு கோலாகலமான விழாவாக நடந்தேறியது.
அன்று இலங்கை அரசின் எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு.அ. அமிர்தலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக தமது துணைவியாருடன் வருகை தந்து சேவையாளர்களை பாராட்டியதோடு நாட்டின் பொருளாதாரத்தில் கிராமத்தின் வளர்ச்சியும் பங்களிப்பும் எப்படியிருக்க வேண்டும் என்ற தலைப்பில் நீண்டதொரு உரை ஆற்றியிருந்தார்.
“குறிஞ்சிகுமரன் சனசமூகநிலையம்” தொடர்பான ஆரம்பகால நினைவுகளை தொடரும் முன்பு இதனோடு தொடர் நிலைகளாக்கப்பட்டு பின்னிப் பிணைக்கப்பட்ட பின்வரும் நினைவுகளையும் இங்கு இடையில் குறிப்பிட்டேயாக வேண்டும்.
அம்மன் குடியிருக்கும் இடம் என்ற நம்பிக்கையில் வழிபாடு செய்யப்பட்ட நிழல் தரும் ஆலமரம் அதனோடு சேர்ந்த ஒரு சிறுவேப்பமரம், அந்த சிறுமலைகுன்றின் அருகில் அமைதி தரும் ஓர் இடமாக சற்று பரந்திருந்தது.
அந்த ஆலமரத்தின் கீழ் “கன்னிமார் அம்மன்” குடியிருக்கும் இடம் என்றதொரு நம்பிக்கையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கற்பூரம் கொளுத்தி மனமுருகி வழிபடும் இடமாக பேணி வந்தனர்.
அங்கு சுற்றிவர உள்ள விவசாயிகள் தங்களின் பயிர் செய்கைகளின் ஆரம்பநாள் அந்த இடத்தில் கற்பூரம் கொளுத்தி வழிபாடு செய்த பின்பு தங்களின் தொழிலை முன் எடுக்கும் போது விளைச்சல் அதிகமாக இருக்கும் என்றதொரு நம்பிக்கை அங்கு வலுவடைந்திருந்தது.
1969 ஆம் ஆண்டு, குப்பிழான் – கற்கரை கற்பக விநாயகப் பெருமானின் வீதிஉலா வைபவம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
வருடம் தோறும் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆலயமகோற்சவ திருவிழாக்கள் முடிவடைந்து மறுநாள் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் வீதி உலா சுமார் இரவு இரண்டு மணியின் பின்பே முடிவடையும்.
பல நூற்றுக்கணக்கான கிராமத்தவர்கள் புடைசூழ, மேளதாள வாத்தியங்களுடன் கிராமத்தின் மூலை முடுக்குகள், ஒழுங்கைகள் எல்லாம் பக்தர்களில் தோளில், வானைப் பிளக்கும் “அரோகரா” என்ற கோஷங்கள், கூட்டான பஜனை பாடல்களுடன் எம்பெருமான் எழுந்தருளி பவனி வரும் காட்சியும், அதனை தொடர்ந்து தங்கள் தங்கள் வீடுகளின் முன்னால் தோரணங்கள் கட்டி பந்தல்கள் அமைத்து பொதுமக்கள் வழிபடும் அந்த நிகழ்வுகளை, இராமரின் முடிசூட்டு வைபவத்தில் அயோத்தி நகரின் கோலாகலம் பற்றி கம்பராமாயணத்தில் கவியரசன் கம்பர் விவரிப்பது போல அழகுற விபரித்துக் கொண்டே போகலாம்.
வீதி உலா வரும் விநாயக பெருமான் கரடு, முரடான பாதைகளினூடாக வீரமனையில் “கன்னிமார் அம்மன்”என்ற நம்பிக்கையில் வழிபடும் ஆலமரத்தடிக்கு அன்றைய நாள் அந்த இரவு நேரம் வந்து சேரும்.
கற்பக விநாயக பெருமானின் வீதி உலா வருகையில் எழுந்த ஆத்மீக அலைகள், உற்சாகங்களிலிருந்து கன்னிமார் அம்பாள் ஆலயமும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஆலமரத்தின் கீழ் உருவமில்லாது வழிபடப்பட்ட அம்மனுக்கு உருவம் அமைத்து சிறுகட்டிடம் உருவாக்கப்பட்டது.
வீரமனைப் பகுதி மக்களின் கடின முயற்சியினால் அந்தப் பகுதி மலைக்குன்றின் ஒரு பகுதி உடைத்து தரைமட்டமாக்கப்பட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டது.
தமது உறவுகள் மற்றும் அந்த பிரதேசத்தில் வாழ்பவர்கள் பலரையும் ஒன்று சேர்த்து இப்படியொரு புனரமைப்பினையும் மாற்றத்தினையும் முன்னெடுத்த பெருமை ஆரம்ப காலங்களில் திரு. தம்பிமுத்து-கணேசலிங்கம் அவர்களுக்கே வந்து சேரும்.
அம்மனுக்கு ஆலயம் அமைத்து தினமும் வழிபாடு செய்து பத்து நாட்கள் உற்சவ காலங்களாக திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சமய பிரசங்கங்களும் நடத்தப்பட்டன.
ஆலயத்தின் வளர்ச்சியும் அங்கு எழ தொடங்கிய ஆத்மீக அலைகளும் அந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களிலும் வளர்ச்சிகளை உருவாக்கியது.
வீரமனைப் பிரதேசத்தில்
கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய நைவேத்திய, நித்திய பூஜைகள், உற்சவகால திருவிழாக்களின் ஆரம்பங்கள், தொடர்ச்சிகள்
1978 ஆம் ஆண்டில் சனசமூக நிலைய ஆரம்பம்
இவற்றினை தொடர்ந்து கரடுமுரடாக, கல்லும் முள்ளுமாக இருந்த பிரதேசத்தினை இணைக்கும்பாதை அரசு உதவியுடன் தார் போட்ட வீதியாக புனரமைக்கும் பணி செய்யப்பட்டு “குறிஞ்சி குமரன் வீதி” என்னும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது.
தார் போட்ட வீதியாக உருவாக்குவதற்கு கற்கள் யாவும் கொண்டு வந்து வீதியின் ஓரமாக பல இடங்களிலும் குவித்து வைத்திருக்கப்பட்ட நிலைமையில் தொடர்ந்து புனரமைப்பினை நிறைவேற்ற முடியாமலிருந்த தடைகளை நீக்கி வேலைத் திட்டத்தினை முன் எடுப்பதற்காக நமது கிராமத்து சமூகசேவையாளர், பெரியவர் திரு. தம்பு தர்மலிங்கம் அவர்களை எனது சைக்கிளில் பல தடவைகள் அழைத்துச் சென்று அவருக்கிருந்த தொடர்புகள், செல்வாக்குகளை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை சந்தித்து வீதியின் புனரமைப்பினை 1979 ஆம் ஆண்டில் முடித்ததுஎனது 19 ஆவது வயதில் ஓர் சிறு அனுபவமாகும்.
1982 – 1983 ஆம் ஆண்டு திரு. ப.வசந்தகுமார் அவர்களை தலைவராகவும் திரு.நடராஜா-லோகநாதன் அவர்களை பொருளாளராகவும் கொண்ட குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலைய நிர்வாகத்தில் சிலகாலம் செயலாளராக பணிபுரியும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. அந்த காலம் சனசமூக நிலையத்திற்காக ஒரு சட்ட ஒழுங்குகளை கொண்ட யாப்பு விதிகளையும் எழுதி வைத்தோம்.
திரு.ப.வசந்தகுமார் இல்லற வாழ்வினூடாக எமது கிராமத்துடனும் மக்களோடும் இணைந்து கொண்ட, சமூக, பொதுப்பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு சேவையாளர்.
இன்று டென்மார்க்கில் வசிக்கும் என் இனிய நண்பர் திரு.நடராஜா-லோகநாதன் அவர்கள் பிறந்த காலம் தொட்டு இன்று வரை குப்பிழான் தெற்கு வீரமனை பிரதேச மக்களுடனும், அங்கு இயங்கும் சமூக பணிகளுடனும் என்றும் பின்னிப் பிணைந்து தமது வாழ்வினை தொடர்பவர் ஆவார்.
அன்றைய கால கட்டத்தில் குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்தின் செயல்பாடுகளில் எங்கள் உடல் உழைப்புகளை வழங்க நாம் யாவரும் தயார் நிலைமையில் இருந்த போதும், நிதி, பணம் என்பது இல்லாத நிலைமையில் ஒழுங்காக தினசரி பத்திரிகைகளே பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை இருந்தது. இன்றைய கால கட்டங்கள் போன்ற வசதி வாய்ப்புகளோ அல்லது வெளிநாட்டு பணங்கள் எதுவுமே வந்து கிடைப்பதில்லை.
தலைவர் திரு.வசந்தகுமார் ஒவ்வொரு ரூபாவாக நகரங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ரிக்கற் விற்று நன்கொடையாக பணம் வசூலிக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தும் பணியினை ஆரம்பித்தார்.
எங்களில் சுமார், ஏழு, எட்டுப் பேர் கொண்ட குழுவொன்று அவரது தலைமையில் யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் எல்லாம் ஏறி இறங்கி ரிக்கற் விற்று சனசமூகநிலையத்திற்காக சிறுகசிறுக நிதி சேகரித்தோம்.
குறைந்தது ஒரு ரூபாவேனும் தாருங்கள் என நாங்கள் கூட்டாக சேர்ந்து போய் தயவாக கேட்ட போது பல வர்த்தக நிறுவனங்கள் தந்து உதவினார்கள்.
அந்த நிதியினை மூலதனமாக சுன்னாகம் இலங்கை வங்கியில் (BANK OF CEYLON) கணக்கு ஒன்று சனசமூக நிலையத்தின் பெயரில் ஆரம்பித்து, அதில் பணத்தினை வைப்புச் செய்து அதிலிருந்து கிடைக்கும் சிறுவட்டி வருமானத்தில் தினசரிப் பத்திரிகைகள் தொடர்ந்து படிப்பதற்கு பெற முடிந்தது.
அருகிலிருந்த கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தின் அபிவிருத்தியில் மலைக் குன்று போல் இருந்த மண் குன்றின் ¼ பகுதி அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட போதும் மிகுதி ¾ பகுதி தொடர்ந்தும் மலைக் குன்றாகவே இருந்தது.
அந்தக் குன்றின் மேலிருந்த அதே பழைய கட்டிடத்தில் சனசமூக நிலையம் தொடர்ந்து இயங்கியது.
தொடர்ந்து மாதா மாதம் வெளியூர்களிலிருந்து துறைசார்ந்த அறிஞர்களை வரவழைத்து அறிவியல் ரீதியான கருத்தரங்குகள் நடத்தப்பட்டது.
அந்தப் பிரதேசத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் அங்கு நடத்தப்பட்டது. இவை யாவும் குன்றின் மேலிருந்த அதே பழைய கட்டிடத்தில் நடந்தது.
1983 ஆம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இனக் கலவரம் ஓய்வடைந்து சில மாதங்கள் முடிவடைந்த பின்பு சனசமூக நிலையம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் நிறைவெய்தியதன் நினைவாக ஐந்தாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக பேச்சுப் போட்டிகள், மரதன் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து அன்றைய இரவு பரிசளிப்பு விழாக்களுடன் ஓர் அற்புதமான கலை விழாவாக அங்கு கொண்டாடப்பட்டது.
அந்த விழா நடந்த நாள் அந்தப் பிரதேசமே முதன் முதல் அதன் வரலாற்றில் கலைவிழாக் கோலம் கொண்டிருந்தது. அந்த சிறு மலைக்குன்று தான் அன்றைய விழா மேடை ஆகும்.
இயற்கையாக அமைந்த அந்த மலைக்குன்று, மின் ஒளிகளினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு விழா மேடையாக அன்றைய கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தின் இன்றைய தலைவர் திரு.சோ.பரமநாதன் தலைமையில் கிராமத்து இளம் கவிஞர்களை ஒன்று சேர்த்து நடத்தப்பட்ட அற்புதமான கவியரங்கம் ஒலி பெருக்கியில் வானைப் பிளந்து கவிமுழக்கம் செய்யப்பட்டது மனதில் என்றும் நினைவு கொள்ளும் ஒரு நிகழ்வாகும்.
கிராமிய மக்களின் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொழிலாளர்களின் பிரச்சனைகளை வெளியே கொண்டு வரும் புரட்சிகரமான சிந்தனைகளை விதைக்கும் நாடகங்கள் அந்த மலைக்குன்று மேடையில் அரங்கேறியது.
1982 – 1983 ஆம் ஆண்டு காலத்தில் சனசமூக நிலையத்துடன் சேராது “தமிழ்குமரன் மன்றம்” என்னும் பெயரில் தொடர்ந்து ஒரு சில வருடங்கள் விளையாட்டுப் போட்டிகளை படித்துக் கொண்டிருக்கும் சில மாணவ இளைஞர்கள் குழு நடத்தினர்.
அந்த விளையாட்டு போட்டியில் மலை குன்றினைச் சுற்றி சுற்றி அந்த கரடு முரடான பாதையினூடாக ஓடுவது தான் விளையாட்டுப் போட்டிகளின் ஓடு பாதையாக உபயோகிக்கப்பட்டது என்பது நினைவில் வரும் விடயமாகும்.
1984 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் எனது வாழ்வில் கடைசியாக அங்கு நான் வசித்த இறுதி ஆண்டு.
“குறிஞ்சி நிலம்” கொண்ட அற்புதமான அந்த விளைநில பிரதேசங்களை விட்டு இடம்பெயர்ந்த மாதம். அன்றிலிருந்து என் நிரந்தர வாழ்வு இப்புவியின் மறுபக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.
அத்துடன் சனசமூக நிலையத்துடன் இருந்த செயல்பாடுகள் ரீதியான என் தொடர்பும் நின்று விட்டது என்பதனை நான் நேர்மையாக, கண்ணியத்துடன் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
தொடர்ந்து தாயக மண்ணின் போர் மேகங்கள் சூழ்ந்த காலங்கள் எல்லாம் கடந்து, இன்று “குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையம்” புதியதோர் பரிணாம பாதையில், சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு அப்பிரதேசத்தில் வாழும் இளையதலைமுறைகளின் தலைமையில் விரிவடைந்து சென்று கொண்டிருப்பது ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும்.
“குறிஞ்சிகுமரன்” பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சனசமூக நிலையம் தொடர்ந்து, இன்று “குறிஞ்சிநிலகுன்று” சீரமைக்கப்பட்டு இதன் பெயரில் சாதனை படைக்கும் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுகழகம், குறிஞ்சிக் குமரன் சிறுவர் கழகம் உட்பட பல அமைப்புகள், நிறுவனங்கள் உருவாகி செயல்பட்டு வருவது, என்பது எங்கள் யாவரையும் ஓர் ஆனந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் ஓர் பரிணாம மாற்றமாகும்.
தொடரும் எமது புலம்பெயர் நாடுகளின் வாழ்விலிருந்து, சில நாட்கள் விடுமுறை எடுத்து, நீண்ட பல வருடங்களின் பின்பு தாயக மண்ணில் கால் பதித்து, செம்மண் வளம் கொழிக்கும் அந்த விளைநிலங்களினால் சூழ இருக்கும் குப்பிழான்-தெற்கு “வீரமனை” என்ற பிரதேசத்தில் பழைய நினைவுகளை மீள மனதில் நிறுத்தி அங்கு நடந்து திரிந்து கற்பனை உலகில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றேன்.
மலைக் குன்றின் பழைய கட்டிடத்தில் முன்னொரு காலம் நிதிநிலைமைகளின் சிக்கல்களுடன் நடத்திய சனசமூகநிலையம் இன்று புதிய கட்டிடத்தில் இயங்குகிறது.
ஓர் ஆலமரம், அதனுடன் சேர்ந்த வேப்பமரத்தின் கீழ் நம்பிக்கையுடன் வழிபாடு செய்யப்பட்ட இடம் இன்று பிரமாண்டமான உயர்ந்த கோபுர தரிசனத்துடன் தேர், தீர்த்த கேணிகளுடன் அமைந்த அற்புதமானதொரு ஆலயமாக அருள் பாலிக்கின்றது.
இவைகளை அடைய கல்லும், முள்ளும் குத்தும் இந்தப் பகுதியில் சுகமான முறையில் சுதந்திரமாக நடந்து திரிந்த நினைவுகள்.
இப்படியே அற்புதமான அந்த நினைவுகள் என் மனதில் தொடர்கின்றன. அந்த நினைவுகளுடன் ஓர் ஆத்மீக அலை வீசும் அந்தப் பிரதேசத்தில் அற்புதமான ஆலயம், சன சமூக நிலையம் மற்றும் சில பொது நிறுவனங்கள், அழகிய வீடுகள், சூழவுள்ள விளைநிலங்கள் இவற்றினை சுற்றி சில மணி நேரங்கள் நடக்கின்றேன். அதில் கிடைக்கும் அற்புதமான ஆனந்தம் எல்லையற்றது.
{குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் வெளிவரவுள்ள ஆண்டு மலருக்காக நிர்வாகத்த்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அன்று சனசமூக நிலையத்தின் செயலாளராக இருந்த சிவ. பஞ்சலிங்கம் (கனடா) அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையே இதுவாகும்}
Post a Comment