ஈழ மணித்திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ் மாவட்டத்தில் வலிகாமம் தெற்கில் தெய்வ மணம் கமழும் புண்ணிய இடமாக விளங்குவது குப்பிழான் பதியாகும். சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிளாய் என்னும் ஒரு வகைப்பூண்டு இவ்விடத்தில் அடர்த்தியாய் வளர்ந்தமை குப்பிழான் என்னும் நாமம் வரக்காரணமாயிற்று. இவ்வழகிய கிராமத்தின் மத்தியில் இருதயம் போல் விளங்குகிறது சொக்கவளவு. இங்கு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களின் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான் கோயில் கொண்டருளி அருள் பாலிக்கும் தலம் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயமாகும். இவ்வாலயம் சுமார் 12 பரப்பு நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இவ்வாலய வரலாறு நல்லை நகர் நாவலரின் கல்விமரபு வழித்தோன்றல் காசிவாசி செந்திநாத ஐயரின் முறை சந்ததியினர் காலத்தில் ஆரம்பமாகிறது. முற்காலத்தில் அவ்வாலயம் அமைந்துள்ள இடம் தெய்வீக விருட்சங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. இவ்வாலயத்தைச் சூழ, சைவத்தமிழ்க் குடிகளும், நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வேத சிவாகம ஒழுக்க நெறியிலும் தலைசிறந்த அந்தணர்களும் வாழ்ந்தனர். அக்காலத்தில் இவர்களின் அறிவு மேம்பாட்டால் திண்ணைப் பள்ளிகள் அமைத்து ஊரறிஞர் சைவத்தையும் தமிழையும் போதித்து வந்துள்ளனர். இவர்களில் காசிவாசி செந்திநாத ஐயர் முக்கியஸ்தராக ஆரம்பத்தில் விளங்கினார். தெய்வீக மரங்களின் நடுவே கனிதரும் மரமாகிய பலாமரத்தின் கீழ் விநாயகப் பெருமானுக்கு மண்ணாலாகிய மடாலயம் அமைத்துப் பூசித்து வந்தார்கள். அக்காலத்தில் சொக்கவளவு கற்பக விநாயகர் என்ற நாமம் வழங்கிவந்துள்ளது. சிறிய விநாயகராக இருந்தாலும் கீர்த்தி உள்ள விநாயகராக எல்லோருக்கும் அருள் பாலித்து எல்லாவித செல்வங்களையும் வாரிவழங்கி வந்தார் கற்பக விநாயகர்.
ஞானத்தால் மோட்சத்தைக் கொடுக்கும் தலைவராக உள்ள பரப்பிரம்ம சொரூபியாக உள்ள கற்பக விநாயகரை வழிபட்டு வருபவர்களுக்கு அவர் விக்கினங்களைத் தீர்ப்பார் என்ற உண்மையினை உணர்ந்து கொண்ட காலஞ்சென்ற பொன்னையர் குடும்பம், சுந்தரசர்மா குடும்பம், மாந்திரீக வைத்தியர் சிதம்பரநாத ஐயர் (தடி ஐயர்) குடும்பம் முதலானோர் ஆலய அருகாமையில் குடியமர்ந்து விநாயகரைப் பூசித்துவரலாயினர். குப்பிழான் ஊரில் வடபால் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பூசை கருமங்களையும் இடைக்காலங்களில் சொக்கவளவு ஆலய ஆரம்பகால பூசகர் திரு. சி. பொன்னையரும் அவரது சந்ததியினரும் சிறப்புற ஆற்றியதுடன் அவ்வாலய உயர்வுக்கும் மகத்துவத்துக்கும் உதவி வந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே.
விநாயகர் என்பதன் பொருள் மேலான தலைவர் என்பதாகும். அப்பெருமானை நினைத்து எக்கருமத்தைத் தொடங்கினாலும் அதில் வெற்றி நிச்சயமாகும். புத்தியையும், சித்தியையும், முத்தியையும் தருபவனாகிய விநாயகனின் திருவருள் கடாட்சத்தினால் குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த பக்தியும் அன்பும் அறிவாற்றலும் மிக்க வைத்திலிங்கம் தம்பிராசா, வைத்திலிங்கம் கந்தையா, வைத்திலிங்கம் பொன்னம்பலம், குட்டித்தம்பி பொன்னம்பலம், சின்னத்தம்பி பொன்னம்பலம், சங்கரப்பிள்ளை செல்லையா, சங்கரப்பிள்ளை துரையப்பா, கதிர்காமர் தம்பு, அம்பலவாணர் சம்பந்தர், சின்னத்தம்பி இளையதம்பி, வைத்தியர் கைம்பெண் சின்னாச்சிப்பிள்ளை, சுவாமிநாதர் சுப்பையா, நாகமுத்து தம்பையா, வைத்தியர் நாகலிங்கம், கதிர்காமர் நாகமணி, காசியர் மூத்ததம்பி, பொன்னர் சீனியர், கார்த்திகேசு வல்லிபுரம், தாமர் பொன்னம்பலம், பொன்னையர் சுந்தரசர்மா, வீரவாகு வைத்திலிங்கம், இளையதம்பி தம்பிமுத்து, இராசிங்கர் நாகமணி, வல்லிபுரம் நல்லதம்பி, சண்ணர் (சண்முகம்) சின்னத்தம்பி முதலான 25 பேர்கள் அடங்கிய தர்மகர்த்தாக்கள் சபை விநாயகர் ஆலயத்தில் உருவானது. இவர்களால் 1927ம் ஆண்டு இறுதியில் தென்னங்கீற்றிலான கூரையும், கற்சுவரில் பொண்ட மடாலயமுமாயிற்று. விநாயகரை வழிபட்டும் தர்மநெறி வழுவாமல் வாழ்ந்த பொன்னையா சுந்தரசர்மா அவர்களின் முகதாவில் ஆசிரியர் வைத்தியர் சுப்பையாவை தர்மகர்த்தரவாகவும் சட்டத்தரணி வைத்திலிங்கம் தம்பிராசாவை தலைவராகவும் கொண்டு மேற்கூறிய 25 பேர்கள் அடங்கிய தர்மகர்த்தாக்கள் சபை ஆலய வளர்ச்சிக்காக தீவிரமாக செயற்படலாயிற்று. இவர்களுக்கு பக்கத்துணையாக காரியதரிசிகள் அம்பலவாணர் சம்பந்தரும், பொன்னையா சுந்தரசர்மாவும் இருந்து அரும்பணியாற்றினர்.
தும்பிக்கையானின் நம்பிக்கையோடு செயலாற்றியய இவர்கள் கணபதிக்கு ஆகம விதிப்படி கற்கோயில் எழுப்புவதற்கு பேரார்வம் கொண்டெழுந்தனர். திருப்பணி திருப்தியோடு நடைபெறலாயிற்று. கருவறை, அர்த்தமண்டபம் என்பன பொழிகற்களால் பலமாக ஆசிரியர் திரு. வைத்தியர் சுப்பையாவின் பெருந்தொகைப் பண உதவியினால் கட்டி எழுப்பப்பட்டன. சுவாமிநாதர் சுப்பையா அவர்களால் திருமஞ்சனக்கிணறு தாபிக்கப்பட்டது. இவ்வேளை விநாயகனுககு மெய்யன்போடு பணிசெய்த தர்மகர்த்தா ஆசிரியர் வைத்தியர் சுப்பையா அவர்கள் இறைவன் திருவடிநிழலை அடைந்தார். மைந்தன் மறைவின் பின் அவரது அன்னை வைத்தியர் சின்னாச்சிப்பிள்ளை அவர்கள், ஆரம்பித்துவிட்டுச் சென்ற ஆலயப்பணியை பூர்த்தி செய்யும் வகையில் ஆலய தர்மகர்த்தா சபையுடன் இணைந்து செயற்படலாயினர். நம்பி வந்தோர்க்கு உதவும் விநாயகனின் கற்கோயில் பணிகள் செவ்வனே நிறைவுபெற்று வரும் வேளையில் வைத்திலிங்கம் பொன்னம்பலம் அவர்களால் எழுந்தருளிப் பிள்ளையார் செய்து கொடுக்கப்பட்டது. 1940ம் ஆண்டு பொரும் சாந்தி எனப்படுகின்ற மகாகும்பாபிஷேகம் ஆலய அர்ச்சகர் பொன்னையா சுந்தரசர்மா அவர்களின் தலைமையில் ஊரெழு சிவஸ்ரீ ச. சோமசுந்தரக்குருக்களால் இனிதே நிறைவேற்றப்பட்டது. இக்காலத்தை பொற்காலமாக நினைவு கூரும் வகையில் 12-02-1940 ல் தர்மகர்த்தா சபை மேலும் விரிவுபடுத்தப்பட்டு பரிபாலன சபையாக உருவெடுத்தது. இச்சபையின் தலைவராக வைத்திலிங்கம் தம்பிராசா அவர்களும், செயலாளராக அம்பலவாணர் சம்பந்தர் அவர்களும் ஆலய வளர்ச்சி கருதிச் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்று உண்மையினை சட்டத்தரணி வைத்திலிங்கம் தம்பிராசா அவர்களின் அறிக்கை வாயிலாக இன்றும் அறியக்கூடியதாக உள்ளது. அக்காலத்தில் வரலாற்றுக்குரிய தர்மகர்த்தாக்களின் கூட்டு முயற்சியின் பலனாகத் தொடர்ந்து தங்கள் உற்றார் உறவினர்களையும் உள்ளடக்கி ஆலயத்தின் திருப்பணிகள்இ திருவிழாக்கள்இ அலங்கார உற்சவங்கள் மற்றும் விஷேட உபயங்கள் செயற்படுத்தி வந்துள்ளனர் என்பது முன்னோர் அறிக்கை மூலம் அறியக்கிடக்கின்றது. குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஊரங்குணை, கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான் ஆகிய கிராமங்களில் வாழ்ந்தவர்களில் ஒரு சிலர் மேற்படி ஆலயத்துக்குத் தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் ஆரம்பகால தர்மகர்த்தாக்கள் பரிபாலன சபை அறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இன்றும் பரந்த அடிப்படையில் திருவிழா, அலங்கார உற்சவங்கள், விசேட உபயங்கள், சதுர்த்திகள் போன்ற ஆலய உபயங்கள் உரிமைகோரி அவை தங்கள் உபயங்கள் என்பதை உணர்ந்து தற்போது அயல் கிராமங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்தபோதும் பக்தி உணர்வுபூர்வமாக விழாக்களைச் செய்துவருவது சோதி விநாயகப்பெருமானின் திருவருட்கடாட்சத்தால் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாகும். அக்காலத்தில் சுந்தரசர்மாவின் பெரிய மாமன் ஊரெழுவைச் சேர்ந்த தம்பையா கிருஸ்ண ஐயர் அவர்களும், சிதம்பரநாத ஐயர் மகன் சோமசுந்தரசர்மா அவர்களும் ஆலயக் கிரியைகளுக்கு உதவியாக இருந்தனர்.
சுந்தரசர்மாவின் பெரியமாமன் தம்பையா கிருஸ்ணஐயர் சிவபதம் எய்தியபோது பூசை கருமங்களை செய்வதற்கு உதவியாக தையிட்டியை சேர்ந்த விஸ்வநாத ஐயர், சுப்பிரமணிய ஐயர் 1947 ம் ஆண்டில் இருந்து 1952 ம் ஆண்டு வரை பூசைக்கருமங்களை ஆற்றிவந்தார்.
இக்காலத்தில் கோணேஸ்வரப் பெருமான் எழுந்தருளி வடபால் வந்தவேளை இவ்வாலயத்திற்கும் எழுந்தருளிய சிறப்பும் உண்டு. அந்த நாள் தொடக்கம் விநாயகப் பெருமான் சோதி வடிவமாக அர்ச்சகர் பொன்னையா சுந்தரசர்மாவிற்கு தென்பட்டமையால் சோதி விநாயகர் என்ற நாமம் உருவெடுத்தது. இக்காலகட்டத்தில் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய பூசகர் காளிகோவில் பூசையையும், கேணியடி வைரவர் கோவில் பூசையையும் ஏற்றுச் செய்யவேண்டுமென அன்றுள்ள கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்பேதும் பூசாகாரியங்கள் நடைபெற்றுவருகின்றன. தைலங்கடவை வைரவர் கோவிலும் சோதி விநாயகர் ஆலய பூசகரே செய்வேண்டுமெனவும் அப்போதுள்ள நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பூசை நடைபெற்று வருகின்றது.
1953ம் ஆண்டில் இருந்து 1956 ம் ஆண்டுவரை தையிட்டியைச் சேர்ந்த பொன்னையர் சிவசாமிக் குருக்கள் பூசகராகக் கடமையாற்றினார். இக்கால கட்டத்தில் சுந்தரசர்மா சிவபதமடைந்தார். இவரது இழப்பு பேரிழப்பாகியது. 1957ம் ஆண்டு திருமதி அ. சுந்தரசர்மா அவர்களும், அவர்களின் மகன் பிரேமசம்புவுமாக இருவரின் மேற்பார்வையில் விஸ்வநாத ஐயர், சுப்பிரமணிய ஐயர் பூசகராக நியமிக்கப்பட்டனர்.
ஆலய பரிபாலனசபை ஒரு பலமான சபையாக விளங்கலாயிற்று. இவ்வடிப்படையில் திரு. நன்னித்தம்பி வேலுப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும், திரு. சின்னத்தம்பி சொக்கலிங்கத்தை (கோபாலு) முகாமையாளராகவும் இவர்களுக்குத் துணையாக திரு. சம்பந்தர் தம்பிராசா அவர்களை ஆலோசகராகவும் கொண்டு ஆலய பரிபாலனசபை மேலும் சிறப்புடன் செயல்பட்டு அலங்கார உற்சவங்கள் காலந்தவறாமல் நடைபெற்றது. இவர்களின் தலைமைத்துவத்தில் ஆலய திருப்பணிகளும் செவ்வனே நடைபெற்றன. திரு. சுப்பையா கனகரத்தினம் குடும்பத்தினரால் ஆலய மணிக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. திரு. சின்னத்தம்பி சொக்கலிங்கம் (கோபாலு), திரு. சின்னத்தம்பி சிவஞானம் அவர்களும், திரு.சுப்பையா சிவலிங்கம் அவர்களும் சேர்ந்து பூசகரின் வீடும் வெளிமண்டபமும் அமைத்துக்கொடுத்தனர். அதேகாலத்தில் திரு. சுப்பையா பொன்னம்பலம் (கணேசா மில் முகாமையாளர்) சபாமண்டபத்தின் முகப்புச் சுவரிலும், தரிசன மண்டபத்தின் முகப்பச் சுவரிலும் தனித்தனி இரு பிள்ளையார் பதுமைகளை அமைத்து வர்ணங்களைத் தீட்டிக்கொடுத்தனர். சிங்கப்பூர் அப்புக்குட்டியர் கந்தையா அவர்களால் நவக்கிரகமும், டாக்டர் சின்னப்பு செல்வநாயகம் குடும்பத்தினரால் முருகன் படிமனையும் (பரிவார மூர்த்தியாக), அமரர் திரு. அப்பாப்பிள்ளை காசிப்பிள்ளை (ஆலய ஓதுவார்) அவர்களால் பஞ்சமுக விநாயகர் உருவச்சிலையும் அன்பளிப்பாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் வேண்டும்போது அவர்களின் உள்ளக்கருத்தறிந்து அவர்களின் முன் தோன்றும்போது எவ்வாறு தோன்றினால் அவர்கள் முகம் மகிழ்வார்களோ அவ்வண்ணமே தோன்றி அருள்பாலிப்பவன் அழகன் முருகன். ஓருதரம் முருகா என்றால் போதும் அவன் வேல் தாங்கி வள்ளி தெய்வயானை சமேதரராக மயிலேறி வந்துவிடுவான். இவ்வருங்காட்சியை இவ்வாலய பக்தர் குழாமும் கண்டுகளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இவ்வாலய பூசகராக கடமையாற்றிய சிதம்பரநாத ஐயரின் (தடி ஐயர்) புதல்வர் பிரம்மஸ்ரீ சோமசுந்தரசர்மா அவர்கள் வள்ளி தெய்வயானை சமேதரராகத் தோன்றும் முருகமூர்த்தி படிமத்தை செய்து வழங்கினார். இவரது இச்செயலானது இவ்வாலய வரலாற்றிலேயே ஒரு மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
இவ்வகையிலே இக்காலப்பகுதியில் சோதிவிநாயகர் அடியார்களின் அன்பளிப்புகளும், உதவிகளும் ஆலய பரிபாலன சபையினருக்கு கிடைக்கப் பெற்றமையால் திருப்பணிகள் துரிதகதியில் நடைபெற்றது. 1962ம் ஆண்டு கும்பாபிஷேகம் இணுவில் இராமநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அக்காலத்தில் தையிட்டி விஸ்வநாத ஐயர், சுப்பிரமணி ஐயர் அவர்களும் தொடர்ந்து பூசை செய்தனர். 1964ம் ஆண்டு புன்னாலைக் கட்டுவன் வடக்கைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ ச. சபாரத்தினக் குருக்கள் பூசகராக கடமையாற்றினார். ஆவர் 1973, 1974 ம் ஆண்டளவில் ஆலயத்தை விட்டு விலகிவிட்டார். அதன்பின் கீரிமலை நடேசசர்மா பூசையை ஏற்றார். ஆதன்பின் கொழும்புத்துறையைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் பூசகராகக் கடமையாற்றினார். அதன்பின் கைதடி அரியாலையைச் சேர்ந்த சிவஸ்ரீ குமாரசாமிக்குருக்கள் பூசகராகச் சேவையாற்றினார்.
இதே போன்று திருவாளர்கள் கதிரித்தம்பி ஆனந்தன், சம்பந்தர் தம்பிராசா, என்பவர்களுடன் உதவியுடன் திரு. கந்தையா நடேசபிள்ளையைத் தலைவராகக் கொண்டு இயங்கிய பரிபாலனசபைக் காலத்தில் ஆதிமூல பண்டிகை மூன்று தலமாகக் கட்டப்பட்டது. அத்துடன் யாகசாலை தரிசன மண்டபம் முன்பக்க சுருக்குக்கேட் சுற்றுக்கொட்டகைத் தூண்கள் என்பன நிறுவி கூரைகளின் முன்பகுதிகள் செய்யப்பட்டன. திரு.சீ. பொன்னம்பலம் (வீ. எஸ்.பி) அவர்களின் அன்பளிப்பினால் தீர்த்தக்கிணறும், திரு. தம்பையா சதாசிவம் அவர்களின் அன்பளிப்பினால் உயரமான தண்ணீர்த்தொட்டியும் அதனைத்தொடர்ந்து அருளம்பலம் சிவஞானசுந்தரம் அவர்களினால் பைப்பு லைன் வேலையும், திரு. சின்னத்தம்பி சின்னையா அவர்களினால் பூசகரின் வீட்டுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டது.
இவ்வகையில் திருப்பணிகள் நிறைவுற்று 1976ம் ஆண்டு அரியாலை சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்களினால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அவரே இரு ஆண்டுகள்வரைஆலய அர்ச்சகராகவும் இருந்து கடமை புரிந்தார். பின்னர் பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் ஆலய அர்ச்சகராகக் கடமையாற்றினார். அதன்பின் 05-05-1999 முதல் கிரியாகலாபமணி பிரம்மஸ்ரீ சிதம்பர கிருஸ்ணசாமிக் குருக்கள் ஆலய பூசகராக கடமையாற்றிவருவது போற்றுதற்குரியது.
காலத்திற்குக் காலம் பரிபாலன சபை நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டதற்கு அமைய திரு. வீரசிங்கம் பொன்னம்பலம் தலைவராகவும், டாக்டர் சின்னப்பு செல்வநாயகம் மனேஜராகவும், திரு. நாகலிங்கம் செல்லத்துரை மார்க்கண்டு பொருளாளராகவும் இருந்து ஒரு கட்டத்திற்கு சிறந்த சேவையாற்றியுள்ளனர். பொன்னம்பலத்தைத் தொடர்ந்து திரு.க.இ. ஆறுமுகம் அவர்களும் தலைவராக இருந்து சிறந்த சேவையாற்றினார். இவரின்பின் காலஞ்சென்ற திரு. கந்தையா சிவலிங்கம் அவர்கள் மூன்றாண்டு காலமாக தலைவராக இருந்தவேளை திரு. நாகையா இராமலிங்கம் அவர்கள் செயலாளராகவும், திரு. அ. சி. சொக்கலிங்கம் பொருளாளராகவும் பரிபாலனசபையில் இருந்து சிறந்தமுறையில் நிர்வகித்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் திருமதி. இராசம்மா சுவாமிநாதன் அவர்களினால் கொடித்தம்ப கவசம் செய்வித்து கொடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். மேலும் இவர்கள் காலத்தில் மிகுதியாக இருந்த மேற்குப்பக்க கொட்டகை இரும்பு கேடராலான தீராந்தி ஊசிக்கால் வேலை செய்து கோப்புசம் அமைக்கும் அதே நேரத்தில் நாட்டுப் பிரச்சினையால் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமை உருவாகியது. பின் கந்தையா சிவலிங்கம் அவர்களைத் தொடர்ந்து திரு. சின்னத்தம்பி சிவஞானம் ஆசிரியர் அவர்கள் தலைமை வகித்தார். மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்ற மகத்துவத்தை விளக்கிச் சோதி வடிவமாக நின்று தம்மை நாடிவரும் அடியார்களிற்கு கனவிலும் நனவிலும் அருள் பாலிக்கும் சோதி விநாயகர் நாமம் தழைத்தோங்கியது.
சோதிவிநாயகர் கடைக்கண் அருளினால் ஆகாத காரியம்தான் என்ன? காணி நிலம் வேண்டும், பராசக்தி காணிநிலம் வேண்டும், என்ற பாரதி பாடலுக்கு அமைய விநாயகப் பெருமானுக்கு 1976 ல் காலஞ்சென்ற திரு. பொன்னையா சுந்தரசர்மாவின் பிள்ளைகள் ஆலயத்திற்கு கிழக்குப் பக்கமாகவுள்ள காணியை அன்பளிப்பாக கொடுத்தனர். சிங்கப்பூரில் வாழ்ந்த காலஞ்சென்ற திரு. காசிப்பிள்ளை நாகலிங்கம் என்பவர் 1984 ம் ஆண்டு ஆலயத்திற்குத் தென்மேற்கே உள்ள காணியைத் தர்மசாசனமாக ஆலயத்திற்கு வழங்கினார். ஆரம்ப தர்மகர்த்தாவாகவும், பரிபாலனசபைச் செயலாளராகவும் இருந்த சம்பந்தர் அவர்களின் மகன் தம்பிராசா ஆசிரியர் அவர்கள் தந்தையின் வழி நின்று ஆலய காப்பாளராகவும், மனேஜராகவும் இருந்து ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று பணியாற்றியதுடன் துனது தோட்ட நிலத்தை ஆலயத்துக்கு தர்மசாசனமாகக் கொடுத்து அதன் குத்தகைப் பணத்தில் இருந்து ஆண்டு தோறும் வரும் பங்குனி மாதப் பூசையை தனது உபயமாக செய்யும்படியும் ஆலயத்துக்கு வழங்கினார். காலத்திற்கு காலம் நாட்டில் ஏற்படும் அழிவுகள் போன்று 1995 ல் இராணுவ நடவடிக்கை இடம்பெற்று மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட காலத்தில் ஆலயத்திற்குரிய பொருட்கள் வாகனங்கள் யாவும் சேதமடைந்தும் சூறையாடப்பட்டும் போயின. அத்துடன் ஆலயம் பலத்த சேதமடைந்தமை சைவத்தமிழ் மக்களின் தவக்குறையாகும்.
ஆற்றரு நோய்மிகும் அவனி மழைகுன்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான் திருக் கோயில்களானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் தானே.
என்னும் திருமூலர் வாக்கிற்கமைய சைவ தர்ம நெறி தவறாது வாழும் குப்பிழான் குடியினர் குடியமர்ந்தவுடன் முதற்கண் முப்புரத்திற்கு அந்தணர்களை அழைத்து அனுக்கிரகிக்கும் பொருட்டு போர்க்கோலம் பூண்டு புறப்பட்ட சிவனே விநாயகனை முதலில் வழிபடாது முற்பட்டமையால் அவரேறிய தேரின் அச்சு முறிந்து இடர்படுத்திய விநாயகர் கதையுணர்ந்து திரு. ஆ. மகாலிங்கம் (வலி. தெற்கு பிரதேச செயலர் உடுவில் ) அவர்கள் தம் பகுதியில் வடபால் அமைந்துள்ள குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் முதலில் தெய்வாலயங்கள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கருத்துடன் குப்பிழான் வடக்கு, தெற்கு கிராம அலுவலர்களின் பெருமுயற்சியின் பலனாகவும் சோதிவிநாயகப் பெருமானின் திருவருள் கடாட்சத்தினாலும் குப்பிழான் வடக்கு கிராம அலுவலர் திரு. செ. ஞானசபேசன் அவர்களின் அயராத பெரு முயற்சியினாலும் அனைவரும் ஒன்றுபட்டு திரு. ச. பொன்னம்பலம் அவர்கள் தலைமையிலான பரிபாலனசபைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பூசை வழிபாடு என்பவற்றை ஆரம்பித்தனர்.
1998 தை மாதம் இவ்வாலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. திரு. ச. பொன்னம்பலம் அவர்களுக்கு ஏற்பட்ட கஸ்டங்கள் காரணமாக அடுத்து நிர்வாகத்தில் நீண்ட காலமாக அரும்பணியாற்றிய திரு. தம்பு தர்மலிங்கம் அவர்கள் 1998 ஆனி மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தலைமையிலான பரிபாலன சபையில் திரு. நாகையா இராமலிங்கம் அவர்களும், திரு. நா. பஞ்சலிங்கம் அவர்களையும் இணைச்செயலாளராகவும், திரு. வ. குமாரசாமி, திரு வீ. பொன்னம்பலம் ஆகியோர் உப தலைவர்களாகவும், திரு. அ. சி. சொக்கலிங்கம் அவர்களை பொருளாளராகவும், நிர்வாகசபை உறுப்பினர்களாகத் திருவாளர்கள் ச. பொன்னம்பலம், (முன்னாள் தலைவர்) மற்றும் வே. மகாலிங்கம், சி.சிங்கராசா, சி. விசித்திரன், தி. சாம்பசிவம், இ.லோகநாதன், நா. இராசலிங்கம், செ. நவரத்தினராசா, சி.சுகிர்தராசா, த. ரவிராஜ், மு.கெங்காதரன், சொ. சுரேஸ்கரன், ந.குகதாஸ், ஆகியோரும், போஷகர்களாக உடுவில் பிரதேச செயலாளர் திரு. ஆ. மகாலிங்கம், கவிஞர் சித்தாந்த இரத்தினம் க.கணேசலிங்கம் (பொறியியலானர்), திரு. செ. புவிராசசிங்கம் (பொறியியலானர் சீமெந்துக் கூட்டுத்தாபனம் கொழும்பு), ஆகியோரும் திருப்பணிச் சபை உறுப்பினர்களாக திருவாளர்கள் க.சின்னத்துரை, க.நடேசபிள்ளை, செ. நவரத்தினராசா, வை.குமாரசாமி, ச.குணரத்தினம், தி.சாம்பசிவம், சி.விசித்திரன், சி. சிங்கராசா, ச.சத்தியமூர்த்தி, முதலானோர்களின் அங்கத்துவத்துடன் பரிபாலனசபை துரிதமாக செயற்பட்டமையால் திருப்பணி நிறைவுபெற்றது.
இவர்கள் ஆரம்பித்துவைத்த மூலஸ்தானம் பழுது பார்த்தல் வசந்த மண்டப அலங்கரிப்பு, ஆலயத்தின் மேற்குப் பக்கத்தில் போடப்படாதிருந்த கொட்டகைக்கு மேல்கோப்பிசம், முன்பிருந்த கேடர்கள் ஊசிக்கால்கள் மேல் ஏற்றப்பட்டு மரவேலைகள் செய்யப்பட்டும், பெரும்பகுதிக்கு ஓடுகளும் போடப்பட்டதுடன் மேற்குப்பகுதி சிலவேலைகள் சந்தான கோபாலர், சண்டேஸ்வர மூர்த்திகளுக்கு தனித்தனி கருவறைகள் அமைத்தல், மூடு மண்டப நிறைவுப்பணிகள், மகாமண்டப நிலவேலைகள், புதிதாக மூஷிக, யானை வாகனங்கள் செய்விக்கப்பட்டமை, ஆலயம் பூராகவும் வர்ணம் தீட்டுதல், போன்ற பல பணிகளும் எவ்விதமான தடங்கலுமின்றி இனிதே நிறைவேறியது. இத்திருப்பணிச்சபை இப்பணிகளை துரித கதியில் பூரணப்படுத்துவதற்கு தேவையான நிதி பொருள்கள் போன்றவற்றை வாரி வழங்கிய சோதி விநாயகனின் அடியவர்களின் பணி மகத்தானது.
ஆலயத்தின் வடக்கு வீதியை விஸ்தரிக்கும் வேலையை முன்பிருந்த பரிபாலன சபையினர் தமது சொந்தப்பணங்களைச் செலுத்தி அருகாமையிலுள்ள ஒரு பகுதி ஆதனத்தை விலைக்கு வாங்கி தர்ம சாசனமாக்கியது பாராட்டுதற்குரிய விடயமாகும். இவ்வாலயத்தில் திருமுறை ஓதுவாராக நீண்டகாலம் பணியாற்றிய திரு. அப்பாப்பிள்ளை காசிப்பிள்ளை அவர்கள் இடம் பெயர்வின் போது 1997ல் வன்னி மண்ணில் இறையடி சேர்ந்து விட்டார். இவரது அரும்பணிகள் எமக்கு நீங்காத நினைவுகளாகும்.செத்துங் கொடுத்தாள் சீதக்காதி என்பதற்கு அமைய இவரது இறப்பின் பின் இவரது துணைவியார் இவரது பெயரால் ஓம் பிரணவ என்னும் தார்மீக மந்திரம் சோதி விநாயகர் மேனியில் என்றென்றும் அழியாச் சொத்தாக மிளிரும் வண்ணம் நான்கு பவுணிலே தங்கச் சங்கிலியாக வடித்து வழங்கியமை பெரும்பணியாகும். சந்தான கோபாலருக்கான அறையை திரு. ந. செல்லத்துரை (இலண்டன்) அவர்களும், சண்டேஸ்வரருக்கான அறையை முன்னாள் மனேஜர் திரு. வைத்திலிங்கம் தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பேரனான திரு. மகாலிங்கம் அன்னராசா அவர்களும் கட்டுவித்துள்ளமை சோதி விசாயகனின் திருவருட்பயனாகும்.
பூத கணங்களுக்கு அதிபதியான கணபதி வீதிவலம் வர மூஷிக வாகனம் திரு. சுப்பையா நடராசா அவர்களும், யானை வாகனம் இராசரத்தினம் பவளம் அவர்களும், செய்வித்து வழங்கி திருவிழாக்கள் சிறப்புற நல்ல வாய்ப்பினை அளித்துள்ளனர். ஆலய உள்வீதி மேற்குப்பக்கத்து நிலவேலையை திரு. சி. சொக்கலிங்கம் அவர்கள் புதிதாக அமைத்துக் கொடுத்துள்ளமையும் பாராட்டுக்குரியனவாகும். உள்வீதி மதில், மேலும் உயர்த்திக்கட்டுவதற்கு வேண்டிய கெங்கறீற் கற்களை ஊரெங்குணையைச் சேர்ந்த சிவபதமடைந்த திரு. திருமதி வைரமுத்து அவர்களின் நினைவாகத் தந்துதவியமை போற்றத்தக்கது. ஆலய பரிபாலன சபையால் பூசகர் குடும்பத்துடன் இருப்பதற்கென கட்டப்பட்ட வீடு இராணுவ நடவடிக்கையின் போது சேதப்படுத்தப்பட்டமையால் குப்பிழானைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திருமதி கமலாதேவி இராசேஸ்வரன் அவர்கள், பூசகரின் வீடு திருத்தம் செய்யும் வரை பூசகர் இருக்கக் கொடுத்தமை விநாயகப் பெருமானின் திருவருள் துணையாகும்.
ஆலய திருப்பணி வேலைகளுக்காக கடல் கடந்து வெளிநாடுகளில் வாழும் இப்பகுதி வாழ் மக்கள் சோதி விநாயகரை இதயக் கமலத்தில் இருத்தி என்னென்றும் உன்னை மறவாமை வேண்டும் என்ற நோக்குடன் கொழும்பில் இருந்து திருமதி கண்மணி செல்வநயகம் அவர்களும் தனிப்பட்ட முறையில் பெருந்தொகை உதவியதுடன், வேறு பலரும் தங்களால் இயன்ற பண உதவியையும் புரிந்துள்ளனர். இலண்டனில் இருந்து திரு. நாகலிங்கம் செல்லத்துரை அவர்களும், தம் பங்குடன் குப்பிழானைச் சேர்ந்த விநாயகப் பெருமானின் மெய்யடியார்களுடன் சைவ அபிமானிகளிடமும் பணம் சேகரித்து திருப்பணிக்கு வழங்கியமை விநாயகனின் திருவருளே.
இறைவன் மற்றைய இடம் போல் அல்லாமல் திருக்கோயிலில், திருமேனியில் இருந்து விசேட அருள் செய்வது மந்திர சாந்தித்தியத்தினாலேயாகும் இறைத் திருமேனியில் உண்டாகச் செய்வதே பெரும் சாந்தி ஆகும். சிறப்பான இக்கைங்கரியம் நிறைவு பெற ஆரம்ப தர்மகர்த்தா ஆசிரியர் வைத்தியர் சுப்பையாவின் பேரன் நடராசா ஸ்ரீஸ்கந்தராசா இலண்டனில் இருந்து அனுப்பிய பெருநிதி ஒரு வரப்பிரசாதம். கணபதி பூசை கைமேற்பலன் எனப் போற்றல் போல் ஆலய நவகுண்ட மகா கும்பாபிஷேகம் கடந்த 01-07-1999 ல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பரகிருஸ்ணசாமி குருக்களின் முகதாவில் நீர்வேலி கந்தசுவாமி கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சுவாமிநாத இராசேந்திரக்குருக்களின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இம் மகத்தான பணியினை நிறைவேற்ற நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்ட இளைஞர்கள் புரிந்த சரீரப் பணிகள் அளப்பரியவும் போற்றுதற்குரியனவுமாகும்.
சித்தியும், புத்தியும் தந்து எம்மைப் பக்திவசப்படுத்தி ஈற்றிலே முத்தியை அருளவல்ல வித்தகப் பெருமான் விநாயகனின் திருவடி துணைகொண்டு அவரின் அளவற்ற அற்புதப் பெருமைதான் பல கோடி. அவனருளாலே அவன்தாள் வணங்கி இவ்வாலயத்தில் அவசியம் நடைபெற்றாக வேண்டிய திருப்பணிகள் மேலும் பல. இவற்றுள் கொடித்தம்பம் நாட்டி மகா உற்சவம் நடத்துதல், புதிய சித்திரத்தேர் அமைத்தல், தேரோடும் பாதை அமைத்தல், தேர் முட்டியை அமைத்தல், அந்தணர் இல்லம் அமைத்தல், இராஜகோபுரம் கட்டி அமைத்தல், தீர்த்தக்கேணி, திருநந்தவனம் அமைத்தல், மகாமண்டபம், அலங்கார மண்டபம் திருத்தியமைத்தல், முதலாய வேலைகள் நிறைவு செய்யப்பட வேண்டியவையாகும். இவற்றுள் கோபர தரிசனம் கோடி புண்ணியம் என்பதை விளங்கி காலஞ்சென்ற ஆசிரியர் வைத்தியர் சுப்பையாவின் பேரன் நடராசா ஸ்ரீஸ்கந்தராசா இதனைச் செய்ய முன் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இவர்கள் பணிக்கு வேழமுக வித்தகன் துணைநின்று உதவுவானாக.
பாவப் பிணிகளில் உழலும் ஆன்மாக்களின் விக்கினங்களை வேரறுக்கவல்ல சோதிவிநாயகப் பெருமானால் அரசு, வில்வம், மா, வன்னி, மருது, கடம்பு, வேம்பு, நெல்லி ஆகிய விருட்சங்கள் சூழ்ந்த சொக்கவளவில் கோயில் கொண்டருளி அருளாட்சி புரியும் காட்சியைக் காண இம்மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே.
வாயுவேகம்இ மனோவேகம் எனப் பேசிய காலம் மலையேறிவிட்து. இன்று சிந்தனைவேகம் ஏவகணை வேகத்தில் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கேற்ப இன்றைய மனிதன் தன்னை உணராது, தன்னிலை புரியாது கணணியின் வேகத்தில் மூழ்கி நிற்கிறான். இந்த நிலை அவனுக்கு எவ்விதத்திலும் உயர்வு தராது. தன்னைத்தானே உணரவும், தன்னிலும் மேலான தெய்வ சக்தியைப் புரியவும் வைக்கும் வகையில் இப்பகுதி வாழ் மக்களில் திரு. கந்தையா கணேசலிங்கம் அவர்களின் பெருமுயற்சியினால் காசிவாசி செந்திநாதையரின் ஞாபகார்த்த சபை உருவெடுத்தது. இச்சபை இவருக்கு மணிமண்டபம் அமைக்க முயற்சி செய்ததுடன் இவரது வாழக்கை வரலாறு பற்றிய நூல் ஒன்றும் வெளியிட்டு வைத்தமை சிறப்பம்சமாகும். இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி திரு. கந்தப்பு வைரவநாதன் தலைமையில் உருவான சைவ மகா சபை, திரு. சிவசுப்பிரமணியம் முத்துலிங்கம் மேற்கொண்ட முயற்சியுடன் ஆசிரியர் சிவ மகாலிங்கம் அவர்களின் வழிநடத்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உருவாக்கிய, இவ்வூரில் அவதரித்தவரும், இவ்வாலய ஆதிகர்த்தாவும் ஆகிய சித்தாந்த ஞான பானு காசிவாசி செந்திநாதையர் அவர்களின் உருவச்சிலை, சிற்பி திரு. சிவப்பிரகாசம் அவர்களினால் வடிக்கப்பட்டது. 28-08-83 ல் பேராசிரியர் சிவஸ்ரீ கா. கைலாசநாதக் குருக்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இச்சிலை இவ்வாலய முன்றலில் உருவானது சைவத்தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் பெரும் வரப்பிரசாதமாகும். இத்தலத்தின் அர்ச்சகராக இருந்து பூசித்த இவர்களது மரபினரின் தியாகப்பணிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தொடர்ந்து வாழையடி வாழையாக இவ்வாலயத்து அர்ச்சகர்களின் பணி தொடரவும்இ பரிபாலனசபையின் பணி தொடர்ந்து வளரவும், அடியார்களின் தரிசனமும், தர்மப்பணிகளும் பெருகவும் இவ்வாலய பரிபாலன சபையால் உருவான வாடா மலராய் அறிவுத்தேன் பிலிற்றும் இம் மலரானது என்றும் உறுதுணையாக நின்றுதவ எல்லாம் வல்ல சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் திருவருள் பாலிப்பாராக.
மேற்கூறிய வரலாற்றுக்குரிய தகவல்கள் பின்வரும் சாதனங்களில் இருந்து பெறப்பட்டன.
1) 1927 ம் ஆண்டுக்கு முன்பாக எழுதப்பட்ட பரிபாலன சபை அறிக்கை ஒன்று.
2) 1964ம் ஆண்டு வெளியாகிய குப்பிழான் கிராமோதய மலர்.
3) 20-01-1978 ல் திரு. க. கணேசலிங்கம் செயலாளர், காசிவாசி செந்திநாதையர் ஞாபகார்த்த சபை குப்பிழான், சார்பில் வெளியாகிய காசிவாசி செந்திநாதையர் நூல்.
4) ஊரெழுவைச் சேர்ந்த திரு. ச. து. ஜெகதீஸ்வரன் அவர்களின் உதவியுடன் பெறப்பட்ட ஊரெழு தம்மையா சிவசுப்பிரமணியக் குருக்களின் வாய் மொழிகள்.
5) குப்பிழான் கிராமத்தின் ஆரம்ப கிராமசேவையாளர் முதல் முதலாக நியமனம் பெற்ற பண்டிதர் இ. சுப்பிரமணியம் அவர்களின் வாய் மொழிகள்.
6) புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய அந்தணர் பரம்பரையைச் சேர்ந்த பூசகரும், சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயச் சூழலில் பிறந்து வளர்ந்த மனோன்னணியம்மாவின் மகன் பிரம்மஸ்ரீ பாலகிருஸ்ண ஐயர் அவர்களிடமிருந்தும், நம்மூர் பெரியோர்கள் வாயிலாகவம் அறிந்தவைகள்.
ஆதாரம் - குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் திருக்கோயில் நவகுண்ட பட்ச மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர். | 29-10-2000.
Post a Comment