குப்பிழான் அறிமுகமும் குறிப்புக்களும்



 01. எல்லை வரையறை

“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து

பயிர்கள் விளைந்திட

ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன

இருந்தன தோள்கள் என்று

கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்

ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.”

   என்ற தெல்லிப்பளைக் கவிஞன் மஹாகவி (உருத்திரமூர்த்தி)யின் கூற்றுக்கு யாழ்ப்பாணத்தின் எந்தக் கிராமமும் விதிவிலக்கல்ல.

    1. கூழாறு :- இது வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கின்றது

    2. உப்பாறு:- இது தென்மராட்சியையும் தீவகத்தையும் பிரிக்கின்றது.

    3. தொண்டமானாறு :- இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்றது.

    4. வழுக்கியாறு :- இது வலிகாமத்தையும் தீவகத்தையும் பிரிக்கின்றது

இப்படியாக யாழ்ப்பாணத்தை நான்கு இயற்கையான ஆறுகள் நான்கு பிரிவுகளாக பிரித்து நிற்கின்றன. ஆனால் இதில் எந்தவொரு ஆறும் நன்னீர் ஆறுமல்ல. மலையில் இருந்து விழவுமில்லை. பயிர் விளையப் பயன் தரவுமில்லை.

எனவே மஹாகவி கூறியது போல மலை போன்ற தோள் வலிமையால் முன்னேறிய சிறிய குடாவாம் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் “குப்பிழான்” கிராமமும் ஒன்று.             

வலிகாமம் பகுதியில் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய ஐந்து பிரிவுகள் உள்ளன.

இதில் வலிகாமம் வடக்கில் உடுவில் பிரதேச செயலகத்துக்கும் தெல்லிப்பழை மற்றும் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரிவில் வடக்கே குரும்பசிட்டி மற்றும் கட்டுவனையும், தெற்கே புன்னாலைக் கட்டுவனின் ஒரு பகுதியையும் ஊரெழுவையும், கிழக்கே புன்னாலைக்கட்டுவனையும், மேற்கே ஏழாலையையும் எல்லையாகக் கொண்டு வனப்பும் வளமும் பெற்று விளங்கும் சிறிய கிராமம் “ குப்பிழான்” ஆகும்.

யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக் கிராமத்துக்கு கிழக்கே பலாலி (B 75 ) நெடுந்தெருவும் மேற்கே காங்கேசன்துறை ( B75 AB16) நெடுந்தெருவும் நுழைவாயில்களாக உள்ளன.

1964 ஆம் ஆண்டு வெளியாகிய குப்பிளான் கிராமோதய மலரில் இருந்து....

02. பெயர் பெறக் காரணம் 

    “குப்பிழான்” என்பது காரணப் பெயரா? அல்லது  இடுகுறிப் பெயரா? என்பதில் இன்று வரை தெளிவற்ற தன்மையே நிலவுனின்றது. “குப்பிழான்” என்பது காரணப் பெயர் என்பதற்கு வாய்வழியாக வழங்கி வரும் ஆதாரங்களாக முன்வைக்கப்படுபவை இரண்டு.

1.    மேலைத் தேசத்தவர்களின் வருகையின் போது விவசாய பூமியான குப்பிழானில் எந்தவிதமான நவீன தொழிநுட்பமும் இருக்கவில்லையாம். ஆதனால் விவசாயிகள் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு “சூத்திரக் கிணற்று முறை” யினைப் பயன்படுத்தினராம்.

சூத்திரக் கிணறு என்பது மாட்டின் மூலம் தண்ணீர் இறைக்கும் ஒரு செயல்முறையாகும். கப்பி, பட்டை, கயிறு, மாடு , குறிப்பிட்ட தொலைவில் நாட்டப்பட்ட வட்ட மற்றும் சதுர வடிவிலான இரண்டு தூண்கள் என்பவற்றின் துணையுடன் ஒரு சீரான முறையில் நீர் இறைப்பதாகும். சூத்திரக் கிணறுகள் மிகவும் ஆழமானவையாக இருக்கும்.

கிணற்றின் மேற்பகுதியில் கம்பி போடப்பட்டு கம்பியில் இரும்புச் சங்கிலி கொழுவப்பட்டிருக்கும். சங்கிலியின் இரு முனைகளிலும் இரு பாரிய வாளிகள் பிணைக்கப்பட்டிருக்கும். வாளியின் விளிம்பில் நீர் தானாக ஊற்றக் கூடியவாறு செவி பொருத்தப்பட்டிருக்கும். வாளி தானாக சரிந்து நீரைச் சரித்து வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள சிறிய தொட்டியில் ஊற்றும்.

கிணற்றிலிருந்து சற்றுத் தூரத்தில் இரு மாடுகள் நுகத்தடியில் கட்டப்பட்டிருக்கும். நுகத் தடியும் கப்பியும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். மாடுகள் கிணற்றைச் சுற்றிச் சுற்றி வரும். அப்போது இரு வாளிகளும் மாறிமாறி மேலும் கீழும் சென்று நீரை இறைக்கும். அவ்வேளையில் ஒரு வாளி  சுமார் 100 லீட்டர் தண்ணீர் வரை இறைக்கும்.

இம்முறை மூலம் நீர் பாய்ச்சும் போது தண்ணீர் கட்டுவதற்கு மட்டும் தோட்டத்தில் ஒருவர் நின்றால் போதும். கிணற்றடியில் யாரும் தேவையில்லை. இதனைக் கண்ணுற்ற வெள்ளையர்கள் “குட்பிழான்” (Good plan) என்று கூறி வியந்தனராம். இதுவே காலப்போக்கில் மருவி “குப்பிழான்” ஆனதாக ஒரு செவிவழிக் கதையுண்டு.

2.    நோய் தீர்க்கும் மூலிகைச் செடியான “கும்பிழாய்” செடி இங்கு வளர்ந்ததாகவும் அதன் காரணத்தால் கும்பிழாய் பின்னர் மருவி வலித்தல் விகாரப்பட்டு (உதாரணம் :- சிலம்பூஅதிகாரம் என்பது எப்படி சிலப்பதிகாரம் என வலித்தல் விகாரப்பட்டதோ அதுபோல) ஆனது என்று கூறுவோரும் உள்ளனர்.

ஆனால் இவ்வூர் மக்களின் நீண்ட பாரம்பரியத்தைக் கருத்தில் கொள்கின்றபோது குப்பிழான் என்பது இடுகுறிப் பெயராக இருக்கலாம் என்பது தெளிவாகின்றது.

03. பிரிவுகள்

குப்பிழான் கிராமமானது குப்பிழான் வடக்கு கிராம சேவகர் பிரிவு, குப்பிழான் தெற்கு கிராம சேவகர் பிரிவு என இரண்டு பிரிவுகள் கொண்டது.

04. குறிச்சிகள்

இந்தச் சிறிய கிராமத்தில் சிறு குறிச்சிகளாகப் பல சிற்றூர்கள் உள்ளன. கேணியடி, சமாதி கோயிலடி, ஊரங்குணை, வீரமனை, கோட்டார் மனை, தயிலங்கடவை, மயிலங்காடு, பூவிராயன் கலட்டி, மதவடி, கொலனி போன்றவை குறிப்பிடத்தக்க சில எடுத்துக்காட்டுகள்.

05. தொழில்கள்

குப்பிழானில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இங்கு புகையிலை, வாழை, வெங்காயம், பீட்றூட், கரட், மரவள்ளி, கத்தரி, மிளகாய், பாகல், புடோல், போஞ்சி, பயிற்றை, பயறு போன்ற பல பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

வயது வித்தியாசமின்றி தொழில் வேறுபாடின்றி அரச உத்தியோகத்தர்கள்கூட விவசாயத்தையே இங்கு முதன்மையாகக் கொண்டிருக்கின்றனர். இங்கு புகையிலை விளைவித்தலே பிரதானமான விவசாயம் ஆகும். அதிகாலை முதல் இரவுவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது தோட்டங்களில் தாம் தம் குடும்பத்துடன் சென்று வளம் பெருக்குவதென்பது இவ்வூர் மக்களின் இயல்புகளில் முதன்மையானது.

புகையிலை விளைவதனாலோ என்னவோ இங்கு சுருட்டுக் கைத்தொழில் குடிசைக் கைத்தொழிலாக விளங்கி வருகின்றது. ஒரு காலத்தில் முதன்மைக் கைத்தொழிலாக இருந்த சுருட்டுக் கைத்தொழில் இன்று சற்றுப் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அரச உத்தியோகத்தில் சாதாரண பதவிகளில் இருந்து உயர் பதவிகள் வரை இக் கிராமத்தவர்களின் பங்களிப்பு இன்றுவரை தொடர்கின்றது.

06. நீர்வளம்

நீர் வளத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத இவ்வூரின கிணறுகளட பெரும்பாலும் வற்றாதவை. தோட்டங்களில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை நான்கு புறமும் வாசல்கள் கொண்டவை. நான்கு வாசல்களிலும் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவார்கள்.

 நிலத்தடி நீர் அதிகம் உள்ள சுண்ணாம்புக் கல் பூமியில் இக் கிராமம் அமைந்துள்ளமையினால் நீர் எப்போதும் தெளிந்த தன்மையுடன் காணப்படும். பெரும்பாலான வீடுகளில் குழாய் கிணறுகள் உள்ளன.

 பல தோட்டக் கிணறுகளுக்கு பெயர்கள்கூட உள்ளன. ஐயற்றை கிணறு, பூசாரி கிணறு, சின்னக் கிணறு, பெரிய கிணறு ஆகியன குறிப்பிடத் தக்கன.

07. நிலவளம்

“பொன் விளையும் செம்மண்” எனச் சிறப்பிக்கப் படும் சிவந்த நிறமுடைய, விவசாயத்துக்கு மிகவும் உரித்தான மண்வளம் உடைய கிராமம் இதுவாகும். நிலத்துக்கு அடியில் பெரிய கற் பாறைகள் காணப்படும். நிலத்தைப் புடைத்துக் கொண்டு மேற் தெரியும் பாறைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இது கற்பூமி எனவும் அழைக்கப் படுகின்றது. எனினும் தமது தோள் வலிமையினால் கடுமையான நிலத்துடன் நிதம் போராடி வியர்வை சிந்தி கடும் உழைப்பினால் முன்னேறிய மக்கள் இந்த ஊரவர்கள்.

08. விலங்குகள்

இக் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சிலர் கோழி வளர்ப்பதனைத் தொழிலாகவும் வேறு சிலர் பொழுதுபோக்காகவும் கொண்டுள்ளனர். ஆடு வளர்ப்போர் எண்ணிக்கையும் இவ்வூரில் அதிகம். சிலர் மாடு வளர்க்கிறார்கள் பட்டி பெருக்குதல், இறைச்சி பெறுதலை நோக்காகக் கொண்டில்லாமல் ‘பால்’ பெறுவதை நோக்காகக் கொண்டே இங்கு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. நாய், பூனை முதலிய விலங்குகளும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

09. மரங்கள்

கற்பக தருக்களான பனைமரம் இவ்வூரில் எங்கும் நிறைந்திருக்கும். வாழை மரம், தென்னை மரம், மாமரம், புளியமரம், வேப்பமரம், ஆலமரம், அரசமரம், மஞ்சள் விண்ணா, கடுகு நாவல் (பூ நாறி), கோவை (கொவ்வை), முசுட்டை, பூவரசு, கிழுவை, போன்ற எண்ணற்ற மரங்கள் இக் கிராமத்தில் நிறைந்துள்ளன. பெரும்பாலான வீடுகளில் கிழுவை, முள் முருங்கை, முருங்கை போன்றவற்றின் கதிகால்களினால் எல்லையிடப்பட்டு வேலி போடப்பட்டிருக்கும்.

10. கோயில்கள்

குப்பிழானில் சைவ சமயமே பெருஞ் சிறப்புப் பெற்றது. பெரும்பாலானவர்களின் நெற்றியில் எப்போதும் திருநீறு இருக்கும். அந்தளவுக்கு சைவநெறி வேரூன்றிய கிராமம் இது. இக் கிராமத்தில் பெரியதும் சிறியதுமாகப் பல கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் ஆகம முறைப்படியான வழிபாட்டு மரபுகளும் வேறு சில கோயில்களில் ஆகம முறையுடன் கிராமிய வழிபாடு இணைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இன்னும் சில கோயில்களில் இன்றும் முற்று முழுதான கிராமிய மணம் கமழும் வேள்விகள், பூசைகள் முதலியன நடைபெறுகின்றன.

1.    ஆகம முறையில் அமைந்த ஆலயங்கள்

1.    கற்கரைக் கற்பக வினாயகர் ஆலயம் :- இது குப்பிழானில் உள்ள மிகப் பழமை வாய்ந்த ஆலயமாகும். இவ்வூரில் உள்ள மிகப் பெரிய கோயிலும் இதுவாகும்.

2.    சொக்கர்வளவு சோதி வினாயகர் ஆலயம் :- இக்கோயில் குப்பிழான் மத்தியில் அமைந்துள்ளது. குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்துக்கு அருகில் இவ் ஆலயம் இருப்பதனால் சிறப்புப் பெறுகின்றது.

3.    கன்னிமார் கௌரி அம்மன் ஆலயம் :- இக்கோயில் குப்பிழான் தெறிகில் வீரமனைக் குறிச்சியில் அமைந்துள்ளது.                     

4.    காளி கோயில் :- இக்கோயில் குப்பிழான் மத்தியில் அமைந்துள்ளது.

5.    கேணியடி ஞான வைரவர் ஆலயம் :- காளி கோயிலுக்கு மிக அருகில் உள்ள ஆலயம் இது. ‘கேணியடி’ என அழைக்கப்படக் காரணம் அங்கிருந்த கேணியாகும். இன்று அக்கேணி கவனிப்பற்று பாழடைந்து விட்டது.

6.    நாச்சிமார் கோயில் :- குப்பிழான்-வடக்கு புன்னாலைக் கட்டுவன் எல்லையில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற ஆலயம் இது.

2.    ஆகம மற்றும் கிராமிய வழிபாட்டு மரபுடன் கூடிய ஆலயங்கள்

1.    தயிலங்கடவை ஞானவைரவர் ஆலயம் :- இது குப்பிழான் தெற்கே தயிலங்கடவைக் குறிச்சியில் அமைந்துள்ளது.

2.    மயிலங்காடு ஞானவைரவர் ஆலயம் :- இங்கும் ஆகம மரபுடன் கூடிய பூசை முறைகள் இருந்தாலும் கிராமிய முறையிலான வழிபாட்டு மரபுகளும் உள்ளன. தெற்குப் புன்னாலைக்கட்டுவன் செல்லும் வீதியில் இவ் ஆலயம் உள்ளது.

3.    கிராமிய வழிபாட்டு மரபுகள் பின்பற்றப்படும் ஆலயங்கள்

1.    முனியப்பர் ஆலயம் :- இது குப்பிழான் தெற்கில் உள்ளது. இங்கு முன்னர் வேள்வி செய்யும் வழக்கம் இருந்தது. இன்று அவ்வழக்கம் இல்லையாயினும் கிராமிய முறைப்படியே பூசைகள் நடைபெறுகின்றன.

2.    அண்ணமார் கோயில் :- குப்பிழான் தெற்கே அமைந்துள்ள இக் கோயிலில் இ;ன்றும் வேள்வி செய்யும் வழக்கம் உள்ளது. இக் கோயிலில் நாகதம்பிரான் வழிபாடும் சிறப்புப் பெற்றது.

3.    படபத்திர காளி கோயில் :- இக் கோயில் கோட்டார் மனைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ளவர்களின் கிராமிய நேர்த்திக் கடன்கள் இங்கு நிறைவேற்றப்படுகின்றன.

4.    புனரமைக்கப்பட வேண்டிய கோயில்கள் :-

1.    குப்பிழான் வடக்கே குரும்பசிட்டி வீதியில் அமைந்துள்ள வைரவர் ஆலயம்

2.    இந்த வைரவர் ஆலயத்துக்கு எதிர்த் திசையில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயம்

3.    குப்பிழான் வடக்கு ஊரங்குணையில் அமைந்துள்ள சமாதி கோயில் என்பன புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இன்றுள்ளன.

இன்னும் சொல்லப்படாமல் பல கோயில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் சொந்தக் கோயில்களாக தனிப்பட்ட காணிகளில் அல்லது தனிப்பட்ட வீடுகளில் உள்ளன.

11. சமூக மாந்தர்களும் சமூக ஒழுக்கமும்

1.    சைவ  வழிபாட்டு மரபுகளைப் பின்பற்றுதல்

2.    பெரும்பாலும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மற்றும் ஊர்க் கோயில்களின் திருவிழாக் காலங்களில் மாமிசம் உண்ணாதிருத்தல்.

3.    நெற்றியில் நீறணியும் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுதல்.

4.    எப்படிப்பட்ட பெரிய தொழிலில் உள்ளவர்களும் விவசாயத்தை மதித்து தாமும் அத் தொழிலில் ஈடுபட்டு மனத்திருப்தி கொள்ளுதல்.

5.    கூட்டுணர்வுடன் செயல்படும் தன்மை.

6.    துன்பம் மற்றும் இழப்புகள் வரும்போது ஊர் கூடித் தோள் கொடுக்கும் பழக்கம் உடையவர்கள் இவ்வூர் மக்கள்.

7.    திருவிழாக் காலங்களில் ஆலய புனரமைப்பு, சிரமதானப் பணிகளில் மக்கள் ஒன்று கூடி கூட்டாகச் செயற்படுவர்.

8.    உறவுமுறை பாராட்டல் ( பெரும்பாலும் இங்குள்ள மக்கள் தமக்குள் தாம் உறவுமுறையைச் சொல்லியே அழைப்பர்.)

9.    வீடுகளில் செல்லப் பிராணிகளாக ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்றவற்றை வளர்க்கின்றனர்.

10.    வந்தாரை வரவேற்கும் பண்பும், இன்முகத்துடன் உபசரிக்கும் குணவியல்பும் உடையவர்கள் இக் கிராம மக்கள்.

11.    பெரும்பாலான குப்பிழான் கிராம வாசிகளின் பெயர்களில் பட்டப்பெயர் ஒட்டியுள்ளதைக் காணலாம். இவர்களின் பட்டப் பெயர்கள் காரணப் பெயர்களாகவும், பட்டத்துக்குரியவர்களின் ஊர்ப் பெயர்களாகவும், அவர்களின் பண்புகள், குணவியல்புகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைவதைக் காணலாம்.

12.    புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஊரவர்கள் திருவிழாக் காலங்களில் மற்றும் உறவினர்களின் விசேசங்களுக்கு ஊருக்கு வந்து செல்வர்.

12.    கலைகள்

ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் மற்றும் சிவராத்திரி போன்ற சிறப்பு விழாக் காலங்களில் ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகளை ஊரிலுள்ள இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து அரங்கேற்றுவது வழக்கம். பரதநாட்டியம், நாடகங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்விழாக் காலங்களில் மேடையேற்றப்படுவது வழக்கம். அதேவேளை பாடசாலையிலும் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருடா வருசம் பரிசில்கள் வழங்கப்பட்டு மாணவர்களை ஊக்குவிப்பர்.

13.    விளையாட்டுக்கள்

கிட்டிப்-புள்ளு, கள்ளன்-பொலீஸ், கெந்தித் தொட்டு, எட்டுப் பெட்டி, யாடு மறித்தல் (கிளித்தட்டு, கிளிக்கோடு), கால்ப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், பட்டம் விடுதல், போளை அடித்தல் (மார்பிளில் செய்யப்பட்ட உருண்டை வடிவிலான உருவை உருட்டி அடித்து விளையாடுதல்) போன்ற பல விளையாட்டுக்கள் இவ்வூரில் விளையாடப்பட்டாலும் துடுப்பாட்டம், கால்ப்பந்தாட்டம் (உதைபந்தாட்டம்) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு அணியினரும் பிரதேச, மாவட்ட அளவில் பேசப்படுமளவிற்கு சிறப்புப்பெற்றதுடன் பல பரிசில்களும் பெற்று குப்பிழானுக்குரிய சிறப்புத் தேடித் தந்துள்ளனர். அத்துடன் இவ் விளையாட்டுக்கள் இவ்வூரில் நிறுவன ரீதியிலான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

14.    சமூக நிறுவனங்கள்

குப்பிழானில் சமூக நிறுவனங்கள் என்ற நிலையில் பல நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

1.    குப்பிழான் கிராமிய அபிவிருத்திச் சங்கம்

2.    மாதர் சங்கம்

3.    லெனின் சனசமூக நிலையம்

4.    குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம்    

5.    விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்  

6.    வளர்மதி சனசமூக நிலையம்

7.    ஞானகலா சனசமூக நிலையம்

8.    விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்

9.    குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம்

10.   ஞானகலா விளையாட்டுக் கழகம்

11.  குறிஞ்சிக்குமரன் சிறுவர் கழகம் 

என்பன குப்பிழானில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஆகும்.

15.    கல்வி

குப்பிழானில் உள்ள பெரும்பாலான மக்களின் அடிப்படைக் கல்வி குப்பிழான் விக்கினேஸ்வரா மாகா வித்தியாலயத்தில் தான் கட்டியெழுப்பப்பட்டது, கட்டியெழுப்பப்படுகின்றது. இன்றும் பலநூறு மாணவர்கள் இப் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

குப்பிழானில் விக்கினேஸ்வரா ஆரம்பப் பாடசாலையும் முக்கியமானது. விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஒரு அங்கமாக இப்பாலர் பாடசாலை செயற்படுகின்றது. அத்துடன் இணைந்த நிலையிலுள்ள விரிவு படுத்தப்படாத சிறிய நூலகமும் முக்கியமானது.

குப்பிழான் கிராமத்தின் மாணவர்கள் உயர்நிலைப் படிப்புக்காக யாழ் மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் படித்து அதியுச்சப் பெறுபேறுகள் பெற்று பல்கலைக்கழகம் செல்கிறார்கள். ஆண்டுதோறும் இக்கிராமத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையினர் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுச் செல்கின்றனர்.

16.    சுடலை

குப்பிழானில் உள்ள ஒரேயொரு சுடலை பெரியளவில் சுமார் 22 பரப்புக்கு மேல் விஸ்தீரணமானது. சுடுகாடு, இடுகாடு முதலிய இரண்டும் இணைந்த நிலையில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்குப் பொதுவாக இச் சுடலை அமையப்பெற்றுள்ளது. இச் சுடலையில் பொதுக்கிணறு, சுற்றுமதில், சுடுகாட்டுக் கொட்டகை என்பன அமையப்பெற்றுள்ளன.

17.    அரச நிறுவனங்கள்

குப்பிழானில் உள்ள அரச சார்புடைய நிறுவகங்கள் மூன்று அவையாவன.

1.    குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்

2.    குப்பிழான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்

3.    குப்பிளான் உப தபாலகம்

ஆகியனவாகும்.

18.    இவ்வூரின் சிறப்புக்கள்

1.    காசிவரை சென்று சைவநெறி வளர்த்த தொண்டர்கள் வாழ்ந்த  கிராமம் இது.

2.    தேவாரம் வளர்த்த சிறப்புப் பெற்றவர்களை திருவாவடுதுறை ஆதீனம் அழைத்து விருது கொடுத்த போது இவ்வூரிலுள்ள தேவார காவலரையும் சிறப்பித்தமையினால் ஊரும் சிறப்புப் பெறுகின்றது.

3.    மிகச் சிறந்த நிலவளம், நீர்வளம் பெற்ற விவசாயக் கிராமம் இது.

4.    பல கல்விமான்கள் பிறந்து வளர்ந்த கிராமம் இது.

5.    மீண்டும் மீண்டும் உயிர்க்கும் “பீனிக்ஸ்” பறவை போல எத்தனை இடப்பெயர்வுகள், இடர்களைச் சந்தித்த போதிலும் திரும்பத் திரும்ப தன்னை உயிர்ப்பித்த கிராமம் இது.

6.    வற்றாத பல கிணறுகளையும் பழமையான கேணியையும் கொண்டு அடையாளப்படுத்தப்படும் இக் கிராமத்தில் இன்றும் அழிவடையாத நிலையில் உள்ள சூத்திரக் கிணறுகளின் எச்ச சொச்சங்கள் குப்பிழானின் பழமையான மரபு பேணும் தன்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

19.    புலம்பெயர்வின் தாக்கம்

குப்பிழானில் புலம்பெயர்வின் தாக்கம் பெரியளவில் உணரப்படுகின்றது. கிட்டத்தட்ட 1980 களின் பின்னர் நாடு சொல்லமுடியாத இனச் சிக்கலில் மாட்டித் தவித்த போது நாட்டிலுள்ள மக்களில் சொற்ப விழுக்காட்டினர் மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய, அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற மேலைத் தேசங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இதற்கு இக் கிராமம் மட்டும் விதிவிலக்கா என்ன?

குப்பிழானில் இருந்தும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் பயணப்பட்டனர். பின்னர் காலப்போக்கில் பணத் தேவை அதிகரிக்க ஐரோப்பா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்றனர். ஆரம்பத்தில் தனிமையில் சென்ற குடும்பத் தலைவர்கள் பின்னர் தமது குடும்ப உறவுகளையும் தாம் வாழும் நாடுகளுக்கு அழைத்துக் கொண்டனர்.

இன்று குப்பிழானில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் ஒருவரேனும் புலம்பெயர்ந்து வாழ்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான புலம் பெயர்ந்த இவ்வூரின் இளைஞர்கள் தமது சொந்த ஊரில் திருமணம் செய்ய விரும்புகின்றமையினையும் அவதானிக்க முடிகின்றது.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள இவ்வூர் மக்கள் பெரும்பாலும் ஊர்க் கோயில் திருவிழாக் காலங்களில் அல்லது தமது உறவினர்களின் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமது சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.

20.    நிறைவாக…

“நிறைவாக” என்ற இந்த உப தலைப்பு தேவையற்றது என நினைக்கின்றேன். எனினும் இக்கட்டுரையின் பூரணத்துவத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்து உங்கள் கருத்துக்களினையும் உங்களுக்குத் தெரிந்த குப்பிழான் கிராமம் பற்றிய தேடல்களையும் எம்முடன் பகிர வருமாறு அன்புடன் அழைப்பதற்கு இத்தருணத்தில் ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்வடைவதுடன், எனது தேடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு களம் கிடைத்ததையிட்டு பேருவகை கொண்டு இச் சிறு பகிர்வை நிறைவு செய்கிறேன்.

என்றும் அன்புடன்…

இரா.காண்டீபன்      B.A (Hons) , Dip.in.s.w.eng , ADMP , PGDCA , M.Phil.

Post a Comment

Previous Post Next Post