இப்புவியில் வாழ்ந்துக் கொண்டு கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்கள் 90 தடவைகள் சூரியனை சுற்றி வலம் வந்து விட்டார்.
பிறந்த காலம் : 08.02.1932
1969 ஆம் ஆண்டு ஆடி 9 ஆம் திகதி!
சந்திரனில் மனிதன் தடம் பதித்து நடந்த நாள்.
[“A SMALL STEP FOR MAN, BUT
A GIANT STEP FOR MAN KIND”]
[மனிதனின் ஒரு சிறு கால் தடம்! மனித வர்க்கத்தின் பேராற்றல் வாய்ந்த ஒரு படி”]
என்ற ஆங்கில மொழியின் வாசகங்களுடன் உலகமே வியந்து நின்று, ஆர்வமுடன் எதிர்கொண்ட நாள். ஆனால், விஞ்ஞான உலகமும் விண்வெளி ஆய்வுகளும் தொடரும் சாதனைகளும் இன்று பல பரிணாமங்களை கடந்து வந்துவிட்டது.
அந்த காலங்களை சற்று நேரம் என் மன கண் முன் நினைத்துப் பார்க்கின்றேன்.
சந்திரனுக்கு மூன்று நபர்களை அந்த காலம் அனுப்பி வைத்த அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் கூட்டாக பணிபுரிந்த விஞ்ஞானிகளில் ஒரேயொரு ஈழத் தமிழன், இன்று அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு தமது 90 ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடும் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி அவர்கள்!
ஈழ மண்ணில் குப்பிழான் என்னும் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர்.
[குப்பிழானில் இன்று சிவபூமியினால் நடத்தப்படும் சிவஞான ஆச்சிரமமாக உள்ள இல்லமே அவர் பிறந்து வளர்ந்த அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட மனையாகும்.
தாம் பிறந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் அமெரிக்காவில் பிறந்து, இன்று அங்கு வசிக்கும் தமது கடைசி பிள்ளையின் நடுப்பெயரினை [Middle Name] அவர் பிறந்தபோது “குப்பிழான்” என வைத்து அதுவே இன்றும் பேணப்படுகின்றது. அதாவது அவரது பெயர்
Mr. GANESH K THURAISAMY [திரு. கணேஷ் – குப்பிழான் - துரைசாமி] என்பதாகும்.
கலாநிதி – வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களின் தந்தை தமது இளமை காலத்தில் தாயக மண்ணிலிருந்து கடல் கடந்து சென்று 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு இரு அக்காமார். ஒரு தங்கை என கூட பிறந்தவர்கள் ஆவார்கள்.
குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை மற்றும் [இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்] புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடங்கி தொடர்ந்து சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி அதனை தொடர்ந்து, யாழ் – மத்திய கல்லூரியில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc… [Hons.] in Maths) பெற்றார்.
மாணவ பருவ காலங்களில் குப்பிழான் கிராமத்தில் தமது தந்தையின் விவசாய விளைநிலங்களில் இரவு பகலாக வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு தினமும் கால்நடையாகவும், ஓட்டமுமாக சென்று படித்து வந்ததும் இவர் வாழ்வின் சுவையான காலங்களாகும்.
அந்த ஓட்டம் அவரை அந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் பல இடங்களில் வீரனாக்கியது.
இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு, அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த நேரம், அவர் ஏற்கனவே கல்வி கற்ற யாழ் – மத்திய கல்லூரி நிர்வாகம் இவரது பல்கலைக்கழக பேராசிரியர் ஊடாக தங்கள் கல்லூரியில் விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தது.
தொடர்ந்து தமது வாலிப வயது காலங்களில் யாழ் – மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புகளுக்கு கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்து வந்தபோது, தமது கல்விதுறை சார்ந்த தகைமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இங்கிலாந்து சென்று “பட்டவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்விதுறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இவரது யாழ் – மத்திய கல்லூரியின் வெற்றிடமான ஆசிரியர் நியமனத்திற்கு குப்பிழானை சேர்ந்த அவரது உறவினரும் நண்பருமான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதே யாழ் - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்கள் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பௌதிகவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.
1958ம் ஆண்டு!
கடல் கடந்து அந்நிய நாடு ஒன்றுக்கு செல்பவரை ஒரு ஹுரோவாக பார்க்கும் காலம்.
விமான பிரயாணம் என்பது மிக செலவானதாகவும், அருமையானதாகவும் இருந்தமையால், கடல் மார்க்கமாக கப்பல் பிரயாணத்தின் மூலமே பலரும் பிரயாணம் செய்வார்கள்.
இவரது பிரயாணமும் கொழும்பு துறைமுகத்திலிருந்து, அந்த காலத்திற்குரிய 100 இங்கிலாந்து பவுண்ஸ் கப்பல் கட்டணத்துடன் ஆரம்பித்து மூன்று கிழமையின் பின்பு, ஐந்து நாடுகளின் துறைமுகங்களில் அவர் சென்ற பிரயாண கப்பல் தரித்து நின்று நின்று,
[Bombay,
Port of City of Aden in Arab Country,
Suez in Egypt,
Beirut Labanon,
Marsailees in France]
இறுதியில் இங்கிலாந்து நாட்டின் “சவுதம்ரன்” [Southamton] கப்பல் துறைமுகத்தினை போய் சேர்ந்தது.
குப்பிழான் கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்து சென்ற முதல் நபர் என்ற சான்று இன்றும் இவருக்கே உரித்தானதாகும்.
லண்டனில் “கணக்காய்வு அலுவலகம்” [Small Chartered Accountancy Firm] ஒன்றில் அலுவலக பணியாளர் தொழில் கிழமைக்கு ஐந்து பவுண் ஊதியத்தில் உடனடியாக அந்த நேரம் கிடைத்தது.
அதே துறையில் பணி புரிந்துகொண்டு பட்டய கணக்காளர் கல்வியினை தொடர்வதே அடுத்த அவரது நோக்கமாகவிருந்தது.
“கணக்காளர்” தொழில் என்பது ஒரு சிறு கௌரவமான அலுவலக உத்தியோகத்தர் மட்டுமே என்றதொரு பார்வை முதல் ஐந்து மாதத்தினுள் அவர் மனதில் எழுந்தால் தமக்கு தமது எதிர்கால வாழ்வில், தமது ஆற்றல், திறமைகளை வெளிகொணர இது உகந்ததல்ல என்ற எண்ணங்கள் அவரது மனதில் அந்த நேரம் பல குழப்பங்களை உருவாக்கியிருந்தது.
லண்டன் நகரின் நூலகம் ஒன்றுக்கு சென்றபோது, அந்த காலம் [1958ம் ஆண்டு] பிரித்தானிய காலணித்துவ நாடுகளில் ஒன்றான “ஜீமன்” [அராபிய நாடுகளில் Aden என்ற பெயரில முன்பிருந்தது.] நாட்டில் ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார்.
உடனடியாக அவர் பாதை மாறியது. அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு லண்டனில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பிரித்தானியாவின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த அந்த அராபிய நாட்டில் ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது.
லண்டனில் தொடரவிருந்த பட்டய கணக்காளர் கனவினை நிறுத்திவிட்டு அராபிய நாடான ஜீமன் சென்று அங்கு ஆசிரிய தொழில் செய்தார்.
1960ம் ஆண்டு!
தாயக மண் திரும்பி வந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
Ms. யோகராணி! இவரது இல்லத்தரசி! யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்ற கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி! இவர்கள் இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரகாஷ் பல் மருத்துவர். மகள் கல்பனா மருத்துவர். இளைய மகன் கணேஷ் தகவல் தொழில்நுட்பவியலாளர். தற்போது மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
திருமணத்தின் பின்பு மீண்டும் ஜீமன் நாடு சென்று தமது ஆசிரிய பணியினை தொடர்ந்தார்.
1961ம் ஆண்டு!
அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரது பல்கலைக்கழக கால நண்பன், பௌதிகவியல் நிபுணர் [Physist] கலாநிதி. அருணாசலம் அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களை ஏற்று அமெரிக்கா சென்று அங்குள்ள மசாசசு செற்ஸ் பல்கலைக்கழகத்தில் [University of Massachusetts] கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டம் பெற்றார்.
தொடர்ந்து அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில்” (University of Maryland) பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டம் (Ph.D.) பெற்றார்.
“கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல்யமான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கம்பனியின் நுண்பரிசோதனை கூடத்தில் (Bell Comm Laboratory) தொழில்நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி பல்கலைகழகமான அமெரிக்க நாசா பல்கலைக்கழக (NASA – International University) விண்வெளி ஆய்வுகளுக்கு தொலைதொடர் தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாக சேர்ந்து பணிபுரிந்தது.
இந்த காலங்களில் கூட்டாக இயங்கிய நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிந்து, தமது கல்வி, புலமைகள், ஆளுமை திறமைகளை விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்கு வழங்கி பல வெற்றிகரமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூட்டான கை கொடுப்பாக செயல்பட்டது அவர் வாழ்வில் ஒரு சாதனைமிகுந்த காலமாகும்.
1969ம் ஆண்டு! யூலை 9ம் திகதி!
உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை கண்ட தினம்.
சந்திரனில் மனிதன் கால் பதித்த நாள். திரு. நீல் ஆம்ஸ்ரோங்க் (Mr. Neil Armstrong) என்ற விண்வெளி விஞ்ஞானி முதல் நபராக சந்திரனில் கால் பதித்து நடந்து அமெரிக்காவின் தேசிய கொடியினை சந்திரனில் நாட்டுகின்றார்.
இவரை தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்து நடக்கின்றார் திரு. புஷ் ஆல்றின்! (Mr. Buzz Aldrin)
மூன்றாவது விண்வெளி விஞ்ஞானியாக சந்தரனில் நின்றவர் திரு. மைக்கல் ஹொலின்ஸ் (Mr. Michael Collins). உலகநாடுகள் தொலைக்காட்சிகள் மூலம் இவ் சாதனைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
சந்திரனில் கால் பதிக்கும் இவர்களை தளத்திலிருந்து நாசா விண்வெளி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தூக்கமேயின்றி வழி நடத்துகின்றனர்.
அவ் விஞ்ஞானிகள் குழுவில் தொடர்புகளை தொடரும் தொழில் நுட்பவியலாளர்களுள் (Communication Scientist) முக்கியமானவராக கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களும் செயல்பட்ட வண்ணமேயிருக்கின்றார்.
“நாசா அப்பலோ சாதனை விருது” (The Nasa Appollo Achivement Award) அமெரிக்க நாசா விண்வெளி மையத்தினால், யூலை|20|1969 யில் இவருக்கு வழங்கப்பட்டது.
சந்திரனில் மனிதன் தடம் பதித்த அந்த காலம்!
அவர்களை வெற்றிகரமாக தடம் பதிப்பதில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவில் நமது தாயக மண்ணைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்தனர்.
ஒருவர் கலாநிதி சிறில் பொன்னம்பெருமா (Dr. Cyril – Ponnam Peruma) என்ற சிங்கள இனத்தினை சேர்ந்த இரசாயனவியல் நிபுணர். நாசா விண்வெளி ஆய்வு பல்கலைக்கழகத்தின் இராசயன கூர்ப்பு துறையின் பொறுப்பாளராக அந்த நேரம் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.
சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யும் விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார்.
மற்றவர் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி விண்வெளியில் சுற்றி சந்திரனில் தடம் பதித்து நிற்கும் வீரர்களுடன் தொலை தொடர்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவில் இயங்கியவர்.
இங்கு இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவர் தங்கள் நாட்டினை சேர்ந்தவர் கலாநிதி சிறில் – பொன்னம்பெருமா என பெருமையுடன் அன்றைய இலங்கை அரசு அந்த காலங்களில் பறைசாற்றி கௌரவித்தது.
ஆனால், அதே குழுவில் பணிபுரிந்து சாதனை படைத்த இலங்கை தேசத்தினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களை தமிழன் என்ற காரணமாகவோ என்னவோ இலங்கை அரசு பெரிதாக திரும்பிப் பார்த்ததாக செய்திகள் எவையுமில்லை.
ஆனால், தொடர்ந்து தமது விடுமுறை காலங்களில், அவர் தாயக மண் திரும்பியபோது அவரது பிறந்த ஊரான குப்பிழான் கிராமம் சிறுவிழா கோலம் கொண்டு அவரை கௌரவித்த நிகழ்வுகள் எனது சிறு வயதில் அங்கு நான் கண்ட காட்சிகளாகும்.
அதே நேரம் கிராமத்திலிருந்து முதன்முதல் Ph.D. பட்டம் (கலாநிதி) பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அமெரிக்காவில் ஓய்வு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை சில வருடங்களின் முன்பு கனடாவில் இயங்கும் சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தங்கள் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர்.
சந்திரனில் மனிதர்களை தடம் பதிக்க வைத்த அந்த கால தங்கள் அனுபவங்களை விழா மேடையில் தமது நீண்ட உரையின்போது தெளிவு பண்ணியிருந்தார்.
கனடாவில் இயங்கும் CTR என்னும் தமிழ் வானொலியும் அவரும் ஒருவராக நின்று சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி தடம் பதித்த அனுபவங்கள் தொடர்பாக அவரிடம் நேரடி செவ்வி கண்டது.
கனடாவிற்கு அவர் வருகை தரும் காலங்களில் எங்கள் இல்லங்களில் நடக்கும் சந்திப்புகள், விருந்துபசாரங்களில் அவரின் கடந்தகால கல்விதுறை, விண்வெளி ஆராய்ச்சி துறைகளின் சாதனைகள் பற்றிய அனுபவங்களின் சம்பாஷணைகள் என்றும் எமக்கு மிக ஆர்வமாகவும், பல விடயங்களை கற்றுக் கொண்ட உணர்வுகளாகவும், எமது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும்.
1990ம் ஆண்டு எதிர்பாராத நிலையில் அவரது அன்பு மனைவியின் மரணம் என்பது துயரங்களோடு சேர்ந்த அவர் வாழ்வில் தொழில்துறைகளின் பாதையினை மாற்றி ஓய்வுபெறும் நிலைமைக்கு எடுத்துச் சென்றது.
தொடர்ந்து அவர் இல்லற வாழ்வின் துணையாக வாழ்வில் ஒன்றிணைந்த ருக்மணி என்னும் மனையாளின் கரம் இணைப்புடன் மகிழ்வோடு அவர் வாழ்வு மீண்டும் தொடர்ந்தது.
ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழும் கடந்த 30 ஆண்டுகளில் தனி தனி மாணவர்களுக்குரிய விசேட கணித ஆசிரியராக நல்ல வேதனத்தில் பணிபுரிந்தார். (Private Maths Tutor) தமது பெயரில் பங்குகள் வாங்கி விற்பனை செய்யும் கம்பனி (Stock Trading Company) ஒன்று சட்டரீதியாக பதிவு செய்து, அவ் தொழில்துறையில் பல புதிய அனுபவங்களை எதிர்கொண்டார்.
ஓட்ட போட்டிகள் போன்ற விளையாட்டு துறைகளில் பங்கு பற்றுவது தமது முதுமை காலங்களிலும் அவருக்கு அலாதி பிரியமானதொன்றாகும்.
08.02.2022 அன்று 90வது அகவையினை காணும் அவரது வாழ்வு என்றும் உடல் ஆரோக்கியங்களுடன் தொடர்ந்து நூற்றாண்டு விழாவினையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே, என்றும் எங்கள் பிரார்த்தனையாகும்.
- கனடாவிலிருந்து சிவ - பஞ்சலிங்கம்.
Post a Comment