குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி புதன்கிழமை (30.9.2015) காலை 9 மணிக்கு சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவரும், முன்னாள் சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளருமான எம்.சிவலிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சைவப் புலவர் -விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார், வலிகாமம் கல்வி வலய முன்பள்ளி இணைப்பாளர் ஜெ -வடிவாம்பிகை ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் எம்.சிவலிங்கம் குறித்த கண்காட்சியை நாடா வெட்டிச் சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
மேற்படி கண்காட்சி முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்தும் வகையிலும், கற்றல்-கற்பித்தலை விருத்தி செய்யும் நோக்குடனும் ஏற்பாடு செய்து நடாத்தப்படுவதாகவும் முன்பள்ளிப் பொறுப்பாசிரியர் திருமதி-மலர்விழி காசிஆனந்தன் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் பல்வேறு ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகமாக இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள், கழிவுப் பொருட்கள் கொண்டு பல உருவங்கள் ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னம் கோம்பை, செம்மண் கொண்டு உருவாக்கப்பட்ட யானை உருவங்கள், ஐஸ் பழத் தடியால் உருவாக்கப்பட்ட புத்தர் வழிபாட்டுத் தலம், குறுந்தகடு கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் உருவம், மரப் பலகையால் உருவாக்கப்பட்ட மிருக காட்சிச்சாலை, பனம் பழத்தின் மேற்பகுதியில் மூடியிருக்கும் பகுதி கொண்டு உருவாக்கப்பட்ட பூ, பொலித்தீன் பைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பூ, மயில்களின் உருவம் என்பன பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கண்காட்சியை முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். முன்பள்ளிப் பொறுப்பாசிரியருடன் கடமையாற்றும் சக ஆசிரியர்கள் இருவரும் கண்காட்சி ஒழுங்கமைப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் காலை-9 மணி முதல் பிற்பகல்-2 மணி வரை இடம்பெறுமெனவும், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட முடியுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செ .ரவிசாந்-
Post a Comment