குப்பிழான் தெற்கு வீரமனை குறிஞ்சிக்குமரன் முன்பள்ளி (கன்னிமார் கௌரி அம்பாள் அறநெறிப் பாடசாலை) திறப்புவிழா நிகழ்வு இன்று 08.02.2020 சனிக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
முன்னதாக தவில், நாதஸ்வரம் முழங்க ஊர் மக்களினால் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் இருந்து சுவாமிப்படங்கள் எடுத்து வரப்பட்டு ஆலய பிரதமகுருவால் முன்பள்ளியினுள் உள்ள சுவாமியறையில் வைக்கப்பட்டது.
மொறட்டுவ பல்கலையின் இயந்திரவியல் துறை முன்னாள் பேராசிரியர் திரு. க. பாலசுப்பிரமணியம், கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய தலைவர் சோ. பரமநாதன், இராமநாதன் மகளிர் கல்லூரி ஆசிரியர் இ.மகேஸ்வரராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பாலசுப்பிரமணியம், பரமநாதன் ஆகியோர் இணைந்து முன்பள்ளியினை திறந்து வைத்திருந்தனர். தொடர்ந்து பால் காய்ச்சும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் சனசமூக நிலைய தலைவர் கிரிசாந், செயலாளர் செந்தூரன், பொருளாளர் உதயகுமார் மற்றும் அங்கத்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
சனசமூக நிலைய உபசெயலாளர் செ.சசிகாந் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து "இன்றைய சமூகத்தின் போக்கும் சனசமூக நிலையங்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் உரையாடல் இடம்பெற்றது.
குறித்த முன்பள்ளிக் கட்டிடம் அமைவதற்கான கோயிலின் பின்பக்க காணியினை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் மனமுவந்து வழங்கியிருந்தனர்.
2015 ஆம் ஆண்டு அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி உதவியில் இருந்தும் புலம்பெயர் உறவுகளின் சனசமூக நிலைய நிதியில் இருந்தும் இந்த முன்பள்ளி கட்டப்பட்டிருந்தது. அன்றைய சனசமூக நிலைய நிர்வாகத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் மயூரன், பொருளாளர் நெடுமாறன் மற்றும் அங்கத்தவர்கள் முன்பள்ளி கட்டிடம் அமைவதற்கு தங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
கட்டிடம் அமையப்பெற்று இருந்தாலும் கட்டிடத்துக்கு வர்ணம் பூசுதலும், மின் இணைப்பு வேலைகளும் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன.
இந்த ஆண்டு தைப்பூசத்தினை முன்னிட்டு திறந்து வைப்பதென தீர்மானிக்கப்பட்டதனை தொடர்ந்து வர்ணம் பூசுதலும், மின் இணைப்பு வேலைகளும் பொருளாளர் உதயகுமாரின் கண்காணிப்பில் வேகமாக இடம்பெற்றதை தொடர்ந்து இன்று கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் முன்பள்ளிக்கு தேவையான விளையாட்டுப் பொருள்களை கொள்வனவு செய்ய வேண்டி உள்ளதுடன், முன்பள்ளியின் முன்றலில் சிறார் விளையாட்டு முற்றம் ஒன்றினையும் அமைக்க வேண்டி உள்ளது. அத்துடன் முன்பள்ளிக் காணியின் முன்பக்கம், பின்பக்கம் வேலியிடவும் வேண்டி உள்ளது. இதற்கான நிதியுதவி ஒத்துழைப்பினை புலம்பெயர் உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
இன்றிலிருந்து மிருதங்க வகுப்பும், நடன வகுப்பும் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. தொடர்ந்து கணிதம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய வகுப்புக்களும் முன்பள்ளியில் ஒழுங்கு செய்யப்பட உள்ளன.
மாணவர்கள் கற்பதற்காக மரத்தினாலான மூன்று செட் வாங்கு, மேசைகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முன்பள்ளியை சூழ நிழல்தரு மரங்களும் நாட்டப்பட உள்ளன.
முன்பள்ளியை அமைக்க கட்டிடம் வழங்கிய கன்னிமார் கௌரியம்பாள் ஆலய நிர்வாகத்தினருக்கும் திட்டத்தை செயற்படுத்திய அன்றைய சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கும் நிதியுதவிகளை வாரி வழங்கிய தாயக, புலம்பெயர் வாழ் குப்பிளான் மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சமூகம், பொருளாதாரம் சார்ந்த கலந்துரையாடல்களும் இடம்பெற உள்ளன.
கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தை சூழ சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம், முன்பள்ளி, பொதுநோக்கு மண்டபம், மாதர் சங்கம், சிறுவர் கழகம் போன்ற சமூக நிறுவனங்கள் உருவாகி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் குப்பிளான் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
Post a Comment