காசிவாசி செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிழான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது.
அத்தகு குப்பிழான் மண்ணில் வீரமனைக் குறிச்சியில் எழுந்தருளி வீற்றிருந்து அருள் பாலிக்கும் கன்னிமார் கௌரியம்பாளுக்குப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று புதன்கிழமை (29.04.2015) காலை 11 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்றது.
தேரடியில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேருக்கு முடி சூட்டும் நிகழ்வும், ஏனைய கிரியை வழிபாடுகளும் ஆகம விதிமுறைகளுக்கமைவாக முறைப்படி இடம்பெற்றது.
தேரடி வைரவர் தேர் பீடத்தில் வீற்றிருக்க, தேர் நிர்மாணம் செய்த ஸ்தபதி ரதகலாசூரி செல்லையா பாலச்சந்திரன் தேர்ப் பீடத்தின் அருகில் நின்றிருக்க இரதம் மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதமானது.
இந்த வெள்ளோட்ட நிகழ்வில் குப்பிழான் பிரதேசத்தைச் சேர்ந்த அடியவர்கள் மாத்திரமன்றி அயற்கிராமங்களைச் சேர்ந்த அடியவர்கள், புலம்பெயர் அடியவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் மறுபுறமும் தேர் வடம் தொட்டிழுத்தனர்.
இந்த அழகிய சித்திரத் தேர் குப்பிழானைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த திரு.திருமதி.பொன்னையா நாகலிங்கம் குடும்பத்தினரின் பல இலட்சம் ரூபா நிதியுதவியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்: ரவி
Post a Comment