காலத்தின் கோலம் (கதைக் கவிதை)



அலைபேசியில் அழைத்தேன் அப் பேதையை 
ஹலோ என்றாள் 
முன்னைய அதே இனிய குரலில்... 
லண்டன் ஈஸ்காம் தமிழினி கடையில் 
இன்று உன்னைக் கண்டேன் நான். 
கண்டும் காணாது சென்றாயே 
என்னைத் தெரிகிறதா? 
என் குரல் புரிகிறதா? என்றேன் நிதானமாக... 
 
குரல்வளை நெரிக்கும் வேலைப்பழுவில் 
எவர் குரலும் எனக்கு ஞாபகம் இல்லை 
பட்டெனப் பதிலுரைத்தாள் படபடப்பாக.... 
முன்பொருகாலம் உன் பின்னால் 
வருவதையே முழுத் தொழிலாகக் 
கொண்டிருந்தேனே மறந்து போனதா உனக்கு 
அன்று படிப்பது எனக்கு தொழிலாக இருந்தால் 
வேறு யாதொன்றும் செய்வார் 
பழக்கமில்லை காண்… 
 
முன்பொரு காலம் கன்னிமார் கோயில் 
மொண்டியடியில் உனக்காகக் 
காத்திருப்பேன் நீண்ட நேரம்…. 
கன்னிமார் கோயிலில் வேண்டுதல் அதிகம்....
அதனால்… வேண்டுதல் தவிர 
வேறு எதையும் நான் பார்த்தது இல்லை… 

ஊரெழு ரியூசன் போவாய் நீயும் 
நானொரு நிழல் போல் நாளேழு நாளும் 
தொடர்வேனே ஞாபகம் வருகிறதா? 
பிள்ளைகள் நாங்கள் போகும் போது 
ஆளுக்கு நாலு என்று வாலுக்கு பட்டம் போல 
வந்துதான் போவார்கள். 
யாருக்கும் அவர்கள் பெயர்கள் 
ஞாபகம் வருவதில்லை… 

அன்றொரு நாள் மாலை அன்னமார் கோயிலடியில் 
அன்பே என்.. ஆருயிரே…. என்று ஒரு கடிதம் 
உனக்கு நான் தந்து சென்றேனே 
ஞாபகம் இருக்கிறதா? 
வந்தது வருவது எல்லாம் வாங்கி 
நான் சேமிக்க வங்கி அல்ல 
உன் ஞாபகம் எனக்கு இல்லை? 

பின்பொரு இடம்பெயர்வு பெரிதாக வந்த போது 
உன் பொருள் எல்லாம் நான் சுமந்து 
மட்டுவிலில் இடம் பிடித்து நான் தந்தேன் 
ஞாபகம் வருகின்றதா? 

உயிர் பிடித்து ஓடும் போது 
உள் நினைவில் ஒன்றும் நிலையாக நிற்பதில்லை... 
அதனால் எனக்கு அன்றென்ன நடந்தது 
என்று இன்று வரை தெரியவில்லை... 
 இருக்கட்டும்.... பிறிதொரு நாள் 
கிளாலி கடற்கரையில் பெரிதான சனக் கூட்டம் 
படகேறி நாங்கள் வன்னி செல்ல 
வந்த சனம் பசியேறி நீ மயக்கத்தில் 
விழுந்து விட்டாய் 
உன் அம்மா அலற எனக்கான பணத்தில் 
உன் பசியாற்றி விட்டேன் 
உனக்கு அது ஞாபகம் வருகிறதா? 

பசி மயக்கம் என்று நீயே உரைத்த பின்னர் 
அந்த மயக்கத்தில் அன்று என்ன நடந்தது 
என்று இன்று எனக்கு எப்படி தெரியும் சொல்? 
வந்தது பதிலுரை கடுமையாக.... 

என்னதான் நீ இறுமாப்பாய் பேசினாலும் 
அன்றொரு நாள் ஆவணி திங்கள் 
பின்பொரு இடப்பெயர்வு 
வட்டகச்சியில் இருந்து வாடி வந்தாய் நீ...
ஒட்டிசுட்டானில் இருந்து ஓடி வந்தேன் நான் 
என் அம்மாவோடு உன் அம்மா....
என் அப்பாவோடு உன் அப்பா.... 
கண்ட இடத்தில் கதைத்து அளவளாவினார் 
நீ என் கண்ணோடு மட்டும் 
கதை பேசி மகிழ்ந்தாய் 
என் நெஞ்சோடு இது இன்று வரை இருப்பதால் 
தான் உன்னொடு பேச இயந்தேன் நான்... 

 ஹலோ! ஹலோ!! ஹலோ!!! துண்டிக்கப்பட்ட 
அலைபேசியின் ஒரு முனையில் 
அவள் அழுது புலம்பினாள் ஐயோ கடவுளே 
இன்னும் அவன் என்னை மறக்கவில்லையே 
 மறுமுனையில் அவள் என்னை மறந்து போனாளே 
என்று அரற்றத் தொடங்கினான்.

கவியாக்கம் - அச்சுதபாதம் ரவியன் - வீரமனை குப்பிளான்

Post a Comment

Previous Post Next Post