வயது போனால் சாகத்தானே வேணும்.....
வளைஞ்சு கால் அகட்டி நடக்கும் அந்த கிழவியா?
இழுக்காமல் போய் விட்டது......
மனிசி கடைசி வரைக்கும் தன் வேலையை தானே செய்தது...
அண்டைக்கு கூட நல்ல மாதிரித்தான் பேசினது
அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சப் பேர் சேர்ந்துட்டினம்
பிரேதம் இன்றைக்கு எடுத்து விடுவார்கள்.......?
சல சல என பெண்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்கள்...
அத்தர் எடுத்து வந்து கிழவியின் உடம்பெல்லாம் பூசினார்கள்...
எந்த சலனமும் இல்லாமல் ஒரு ஓரமாய் குந்தியிருந்தார்...
சுந்தரம் கிழவன்...
வள்ளியாச்சியின் புருசன்
இந்த கிழவனிடம் இருந்து அந்த கிழவி தப்பிவிட்டார்...
என்ன வீராப்பு...
போன கிழமை கூட அடிக்க போய்விட்டார்......
அங்காலை இங்காலை கிழவி போகக்கூடாது..
வள்ளி ... வள்ளி என்று உயிரை எடுப்பார்...
அந்த நாள் தொடக்கம் இந்த நாள் வரை கிழவிக்கு கஸ்டம் தான்...
சோத்திலே கொஞ்சம் உப்பு கூடினாலே
சுந்தரம் கிழவனுக்கு
மூக்கு நுனியில் கோபம் வரும்...
சுந்தரம் கிழவனுக்கு எண்பது வயசாகிவிட்டது...
எதுவுமே கேட்காது
நல்லாய் காது கேட்கும் ....
ஆனால் யார் சொல்வதையும் கேட்பதில்லை என
கங்கணம் கட்டி அலைகின்றார்.
வெள்ளை கிப்ஸ் சாரம் தான்
சுந்தரம் கிழவனுக்கு எப்போதும்.
இந்த வயதிலும் வள்ளியாச்சி
தனக்கு ஏலாட்டிலும் முக்கி முக்கி தோய்ச்சு
கிழவனுக்கு வெள்ளே வெளிரென கட்ட கொடுப்பார்...
வடிவாய் தோச்சு குடுக்காவிட்டால் அடிச்சுடுமோ
மனுசன் என்ற பயமாக கூட இருக்கலாம்...
இரண்டு ஆண்பிள்ளைகள்...
மூத்தவன் குடும்பத்தோடு கொழும்பில்
இளையவன் லண்டனில்....
இளையவன் மனிசி பிள்ளைகளோடு தான்
கிழவனும் கிழவியும் இருக்கினம்...
மருமகளோடு கிழவன் பேசுவதில்லை.....
ஏன் என்று கிழவன் யாருக்கும் சொன்னதும் இல்லை..
இன்றைக்கு கிழவி செத்துட்டாள்...
கிழவன் திமிர் அடங்கி விடும்
நடக்க கூட முடியாத கிழவி ....
ஏலாமல் இருந்தால் கூட கக்கூசுக்கு கூட
கிழவனுக்கு தண்ணி எடுத்து வைக்க வேண்டும்...
முந்த நாள் காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு
போக முன்பும் வள்ளியாச்சி கிழவனுக்கு
சமைச்சு வைச்சுட்டுதான் போச்சுது...
"இஞ்சை பாருங்கோ அங்காலை இங்காலை போகாதீங்கோ...
வந்துடுவேன் சும்மா ஆட்களோடு ஏறிப்பாயதீங்கோ...
சாப்பாடு கோப்பைக்குள்ளே போட்டு வைச்சுருக்ககேன்...
எடுத்து சாப்பிடுங்கோ... பின்னேரத்துக்கள்ளே வந்துடுவேன்''.
கிழவி சொன்னவுடன் கிழவனுக்கு மூக்கிலே கோபம் வந்துவிட்டது...
"மகாராணி ஆளப்போறேன் புருசனை கவட்டுக்கை வையுங்கோ''
எப்போதும் பழமொழிதான் கிழவனுக்கு
நக்கல்,
நாலாந்தர பேச்சு, திமிர் கிழவிக்கு பழகிவிட்டது...
அறுபது வருட குடும்ப வாழ்க்கையை
கிழவி எப்படி கொண்டிழுத்ததோ......
கிழவிக்கு எழுபத்தியந்து வயதாம் ....
எழுபத்தியஞ்சு வருட அநுபவம் சலனமற்று கிடந்தது...
கிழவன் எங்கேயோ வெறிச்சு பார்த்தபடி இருந்தார்...
தனக்காக வாழ்ந்தவள் என்று ஒரு சொட்டு கண்ணீர்.....
ம்.........ம்
சும்மா ஊருக்காவது ஒரு சொட்டு கண்ணீர்...
அப்படி அழுதாலாவது கிழவிக்கு கொஞ்சம்
நன்றி கடன் தீர்ப்பது போல இருக்கும்...
அவரவர் அவரவகள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
பூவரசம் மரம் வெட்டி..
கயிரோடி..
வெள்ளை வேட்டி கட்டி பந்தல் அமைத்து..
கதிரை போட்டு வெத்திலை ,பொயிலை சமாச்சாரம் வைத்து...
ஒரு மரத்தில் ஒரு கயிறு கட்டி கீழ் நுனியில் நெருப்பு வைச்சு...
அந்த நெருப்பை அணைச்சு சுடராக்கி பக்கத்தில் சுருட்டு வைத்து....
ஒப்பு வைச்சு.....
ஐயோ என்று அவரவர் அவர்களை நினைத்து அழுது....
வரமுடியாத பிள்ளைகளுக்காவும் மற்றவர்களுக்கவும்
வீடியோக்காரனை மருமகள் ஏற்பாடு பண்ணியிருந்தாள்...
அவனும் சுற்றி சுற்றி எல்லாவற்றையும் படம்பிடித்தான்...
இதுக்கெல்லாம் தனக்கு தொடர்பு இல்லாத போல
கிழவன் எங்கேயோ பார்த்தபடியே இருந்தார்...
அந்த கிழவிக்கு பக்கத்தில் போகவே இல்லை...
மருமகள் வீடியோக்காரனை கொஞ்சம் கண்யாடை செய்தாள்...
வீடியோவும் சும்மா அந்த பக்கம் வீடியோவை திருப்பியது தான்..
சுள்ளென்று கிழவனுக்கு கோபம் வந்து விட்டது...
ஏண்டா என்னை போட்டோ எடுக்கின்றாய் நானா செத்தேன் வடுவா.....
என்று கிழவன் துள்ளிய போது ஒரு புது சலனம்
தோன்றி மின்னலாய் மறைந்தது...
அதற்கு பிறகு யாருமே சுந்தரம் கிழவனுக்கு
பக்கத்தில் போகவில்லை...
"செத்த வீட்டை அசிங்கப்பட யாருக்கு என்ன தலைவிதி.''
மானம் கெட்ட கிழவன் இடம், ஏவல், பொருள் அறியாதவர்...
அந்த கிழவி எப்படித்தான் இவ்வளவு காலமும் காலம் தள்ளினதோ...
முணுமுணுப்புக்கள் ஒப்பாரியாக வந்து தேய்ந்து கொண்டிருந்தது...
கிழவி செத்து விட்டாள் இனி கிழவன்
பொல்லாப்பை ஊரோடுதான் முறிப்பார்.
பேச்சுக்கள் ஒப்பாரியை எல்லாம் கிழித்து
அன்னம் இடிக்கின்றவர்கள் எல்லாம் வாருங்கள்....
செத்தவீட்டுக்கே உரித்தான தொனி...
கிழவன் போனது தான் ஏதோ ஆயுள் எதிரி போல
கிழவியின் முகத்தையே பாராமலே சுண்ணம் இடித்து விட்டு
தன் கதிரையை
ஆக்கிரமித்தார்...
என்னா கங்கணம்
இவ்வளவு திமிர் மனிசருக்கு ஆகாது...
இவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்த மனிசி
சே.....
ஓரளவுக்கு என்றாலும் மனிசர் அன்பு பாசம் வைக்க வேண்டும்...
வாய்க்கரிசி போடுபவர்கள் போடுங்கள் அதே வெண்கல குரல்...
குரல் வந்தவுடன் இதற்க்காவே எதிர்பார்த்த மாதிரி
கிழவன் விறு விறு என நடந்து சென்று
தூரத்தில் எங்கேயோ பார்த்த படி எறிந்தார்...
அதே வேகத்தோடு திரும்பி வந்தார்...
ஒரு நிமிடம் ஒரு செக்கன் கிழவன் அந்த கிழவியின்
முகத்தை பார்த்து இருக்கலாம்
ஏனோ தானோ என்று....
ஏன் இப்படி மனிதருக்குள் ஏன் இந்த குணவியல்பு....
யாருக்கும் விளங்கவில்லை...
இதை யாருமே கவனத்தில் எடுக்கவில்லை...
பிரேதம் வீட்டை விட்டு போனால் சரி....
இன்னும் பதினைந்து நிமிடத்தில் எடுத்து விடலாம்....
எல்லோரும் அவரவர் கடமையை செய்த படி இருந்தார்கள்....
அழுபவர்.....ஒப்பாரி வைப்பவர்கள்...
கிழவன் எழுந்து வெளியே வந்தார்
கக்கூசுக்கு போல...
ம்... அதுக்குத்தான்
வந்த கிழவனுக்கு
வாளியிலே தண்ணி இல்லாதது மூக்கிலே கோபம் வந்தது...
''சனியன் தண்ணி எடுக்காமல் சாவதற்கு
அப்படி என்னா அவசரம் ''
இனி மருமகள் தான் பாவம்....
முதியோர் இல்லத்தில் விட வேண்டியதுதான்..
இந்த கிழவனோடு மல்லு கட்ட மருமகளுக்கு என்ன விதியா..?
கிழவனுக்கு கோபம் குறையவில்லை...
அதே கோபத்தோடு கிணத்தடிக்கு போனார்...
விறு விறு என தண்ணீரை அள்ளி அள்ளி
வாளியிலை நிரப்பினார்...
ராசாத்தி ராணி போனால் ராஜா என்ன கூஜா ஆகிவிடுவேனா...,?
சீ... நாயே உன்ரை கோத்திரம் தெரியாதா...?
கிழவனுக்கு கோபம் அடங்கவில்லை...
இப்படி ஏசி ஏசித்தான் கிழவியை வேலை வாங்கியிருக்கிறார்...
நாயே விட்டு விட்டு போய்விட்டியாயே
சிமிட்டி சிமிட்டி நல்லாய் கதைப்பாய்....
நீ தானப்பா என்ரை மூத்த மகன்...
சீ... சி... நாயே... நாயே.....
இந்த பின்னேரம் வாறேன் என்று தானே போனனீ....
அப்படியே போய் விட்டியே..... எடியே நாயே....
என்ன கிழவன் இவர் இப்படியா இருக்கிறது....
கதவை சத்தமாய் சாத்திவிட்டு கக்கூசுக்கு போனார்......
அங்கே போன பிறகும் மனிசன் திட்டிற
சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது...
நாய் மாதிரி உழைத்து தந்தேனே தின்னுவதற்கு.....
ஒரு சுடுதண்ணி கூட வைச்சு பழக்கம் இல்லையே...
நாயே நாயே மடிக்கை வைக்கிறேன்....
மடிக்கை வைக்கிறேன்....
என்று சொன்னது
என்னை நடுத்தெருவில் விட்டுப்போகவா....
ஏமாத்திவிட்டு போட்டியே....
படார் படார் என சத்தம் கேட்டபடியே இருந்தது...
தன்ரை தலையிலே கிழவன் அடிக்கிது போல....
பிரேதம் தூக்கின்ற நேரம் அந்த அமளியில்
கிழவனின் குரல் அடங்கி வந்தது....
கவியாக்கம் : அச்சுதபாதம் ரவியன் - வீரமனை குப்பிளான்
Post a Comment